Friday, January 1, 2016

வரிக் குதிரைகள் [சிறுகதை]

வரி வசூலிப்பதற்காகவும் வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காகவும் என்றே, வெள்ளைக்கார துரைகள் ஆண்ட காலத்திலேயே பிரத்தியேகமாய் உருவாக்கப்பட்டிருந்தது அந்த அரசுத் துறை. நகரத்தின் மத்தியில் இருந்தது அதன் பிரதான அலுவலம். 

தலையில் கைவைத்தபடி தம் அறையில் அமர்ந்திருந்தார் பஞ்சநாதன். பல பெயர்கள் எழுதப்பட்டு அவை பற்பல அடித்தல் திருத்தல்களுக்கு உள்ளாகி போர்க்களம் போல் காட்சியளித்தது அவர் மேசை மீது இருந்த காகிதம். எப்படிப் போனாலும் இடித்து அது ஏற்படுத்திய தலைவலி, பஞ்சநாதனைத் தெறிக்க வைத்துக்கொண்டு இருந்தது. 

அவரது நீண்ட பணிக்காலத்தில், நேர்மையான அதிகாரி என்பதாக மட்டுமின்றி நல்ல மனிதர் என்றும் எல்லோரிடமும் எடுத்திருந்த நற்பெயரை, அந்தப் பட்டியல் தயாரிப்புப் பணி தரை மட்டமாக்கிவிடப் போகிறது என திடமாக நம்பினார். எல்லாம் விதி. விதி, புதிய ஆணையர் ரூபத்தில் தம் வாழ்வில் பகடை உருட்டிக்கொண்டு இருப்பதாய் அவருக்குத் தோன்றியது.

புதிய ஆணையர், நாட்டின் வட கோடியிலிருந்து அந்த அலுவலகத்துக்கு மாற்றலாகி வந்து பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளே, மூன்று அமைப்புகளிடமிருந்து, மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டிருந்த புகார்களின் நகல்கள், அவர் மேசைக்கு வந்து சேர்ந்திருந்தன. வேறு ஒருவராய் இருந்திருந்தால் ரத்த அழுத்தம் எகிறி இருக்கும். ஆனால் வட நாட்டு ஆணையரோ யானை காண்டா மிருகங்களை எல்லாம் பார்த்து விட்டு வந்திருந்த அனுபவஸ்தர். அந்தப் புகார்களைப் பார்த்ததும், அந்தப் பிராந்தியத்தின் சூட்சும முடிச்சு பிடிபட்டவராய் முறுவலித்துக்கொண்டார். 

முதல் வேலையாய், தம் உதவியாளரை அழைத்து, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் பட்டியலைக் கேட்டார். அவரவர் பெயருக்கு எதிரில் பதவி மற்றும் ஜாதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார். எதிர்பார்த்ததைப் போலவே, உதவியாளர் அவர் கேட்ட பட்டியலைத் தயாரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. நெடுங்காலமாய் அங்கேயே பிஏவாக இருக்கும் அவர் நினைவிலேயே அந்த அலுவலக ஊழியர்களின் ஜாதிப் பட்டியல் தயார் நிலையில் இருந்திருக்கும் என்ற தமது எண்ணம் ஊர்ஜிதப்பட்டதில் உள்ளூர சிரித்துக்கொண்டார்.

முதல் நாள் என்பதால், கீழ் மட்ட ஊழியர் முதல் அடுத்த நிலை அதிகாரிவரை, கையில் எலுமிச்சைப் பழத்துடன் அவரைப் பார்க்க அனைவரும் வந்திருந்தனர். ஆணையராய் அவர் பதவியேற்றதை வாழ்த்த வந்தவர்களில், அவரை வசீகரித்த முகங்களிடம் மட்டும், பார்வையாளர் நேரத்தில் தனியே வந்து தம்மைச் சந்திக்கும்படிக் கூறிக் கை குலுக்கி வைத்தார். அழைக்கப்பட்டவர்களுக்கு தலை கழுத்தில் நிற்கவில்லை. அன்றைய பார்வையாளர் நேரம் ஊழியர் மற்றும் அதிகாரிகள் வரிசையால் நீண்டிருந்தது. அதி முக்கிய வேலை காரணமாய் ஆணையர் அடுத்த நாள் சந்திப்பார் எனக் கூறி,  அவரைக் காண வந்தத் தொழில் அதிபர்கள் வரவேற்பறையிலேயே,   பவ்வியமாய் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாரிகளும் ஊழியர்களும் தமக்கு அளிக்கப்பட்டிருந்த தனித்துவம் குறித்து, நல்ல மனிதர் ஒருவர் தமக்கு ஆணையராய் வந்திருக்கிறார் என உள்ளூரப் பூரித்துக்கொண்டு இருந்தனர். 

தனித்தனியாய் சந்தித்த அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் விசாரித்தது ஒரே ஒரு விஷயத்தைதான். 

பணியிலும் சரி மனிதராகவும் சரி, அந்த அலுவலகத்திலேயே நேர்மையானவர் என்று அவர்கள் எண்ணும் மூன்று நபர்களைக் குறிப்பிடும்படிக் கேட்டார். 

தம்மிடமிருந்த பட்டியலில் அவரவர் பெயருக்கு நேராக அவர்கள் குறிப்பிட்ட மூவரின் பெயர்களைக் குறித்துக்கொண்டார். முடிவில், எல்லோரும் ஒருவர் பெயரைத் தவறாமல் குறிப்பிட்டிருந்தது தெரிய வந்தது. ஆனால் அந்தப் பெயருக்கு உரியவர் எவ்வகையிலும் வசீகரித்திராத காரணத்தால், ஆணையர் அவரைத் தனிச் சந்திப்புக்கு ஆழைத்திருக்கவில்லை. தம் கணிப்பின் துல்லியம் அவருக்கு நிறைவை அளித்தது. 

அந்த அதிகாரி அதுவரை ஏற்றிருந்த பொறுப்பு வரலாற்றைக் கேட்டு வாங்கினார். எல்லோரும் குறிப்பிட்டிருந்த பஞ்சநாதன், புள்ளிவிவரம் சட்டம் லஞ்ச ஒழிப்பு  போன்ற எவ்வித கவர்ச்சியுமற்ற பிரிவுகளிலேயே நெடுங்காலமாய் திரும்பத் திரும்ப உழன்றுகொண்டு இருந்தார். அழைப்பு மணியை அழுத்தி, பஞ்சநாதனை அழைத்துவரச் சொன்னார். 

உள்ளே வந்தவரை, ஏறிட்டுகூடப் பார்க்காமல் உட்காரச் சொன்னார் ஆணையர். தமக்கு வந்திருந்த, மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பப் பட்டிருந்த புகார்களின் நகல்களை அவரிடம் கொடுத்தார். ஒரு சில வார்த்தைகள் முன் பின்னாய் மாறியிருந்ததைத் தவிர, அவரவர் ஜாதிகளுக்கு பிரதான பொறுப்புகள் அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்படுவதாய் ஒரே மாதிரியாய் அவை புகார் வாசித்தன. 

அதிகாரிகளுக்கான அந்த ஆண்டின் வருடாந்தரப் பணி மாற்றல், அதற்கு முந்தைய ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு, பணம் விளையாடிவிட்டதாய் புகார்களுக்கு உள்ளாகி பலத்த அதிருப்தி ஏற்பட்டு இருந்தது. எனவே குறைந்த பட்சம் அந்தத் துறையின் ஆதாரப் பிரிவான வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவின் ஆணையிலேனும் எவராலும் எவ்வித ஆட்சேபணையும் எழுப்ப முடியாதவண்ணம் எல்லா பிரிவினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். அதற்காகவே அந்த அலுவலகத்தில் நியாயமானவர் என்று அனைவரும் கூறும் அவரிடம் அந்தப் பிரிவின் ஐந்து குழுக்களுக்குமான பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை அளிப்பதாகவும் கூறி அனுப்பி வைத்தார். 

ஏழரை நாட்டுச் சனி பிடித்துவிட்டதாய் உள் மனத்தில் உணர்ந்தாலும் எஸ் சார் என்று மட்டும் கூறி, கொடுக்கப்பட்ட பெயர்ப் பட்டியலைப் பேண்ட் பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொண்டு வெளியேறினார் பஞ்சநாதன். 

ஐந்து குழுக்களுக்கான ஐந்து மூத்த அதிகாரிகளையும் ஒவ்வொரு குழுவுக்குமான ஐந்து உதவி அதிகாரிகளையும் ஜாதி வாரியாய் குறித்துப் பிரித்து வைத்துக் கொண்டார். ஒவ்வொரு குழுவிலும் ஆண்ட ஜாதி தாழ்த்தப்பட்ட ஜாதி இடைநிலை ஜாதி கடைநிலை ஜாதி ஆதிக்க ஜாதி ஆட்சியில் இருக்கிற ஜாதி என்று எல்லோருக்கும் இடத்தை ஒதுக்கி பெயர்களை மறைத்து நிர்தாட்சண்யமாய் ஒரு வரைவை உருவாக்கி, அடுத்த அரை மணி நேரத்தில் ஆணையரிடம் சமர்ப்பித்தார். 

இல்லையில்லை. இவர் இந்தக் குழுவில் இருந்தாக வேண்டும் என்று ஏற்கெனவே மந்திரியின் பிஏ கூறியுள்ளார் என்று அடித்துத் திருத்தினார் ஆணையர். பஞ்சநாதன் முகத்தில் தெரிந்த கவலையின் சுருக்கங்களைக் ஓரப்பார்வையாய் கவனித்தவர், 

ஏன். என்ன விஷயம் என்றார்.  

ஒன்றுமில்லை. 

நியாயமாய் இருப்பது மட்டுமின்றி நியாயமாக இருப்பதாக மற்றவர்கள் நினைக்கும்படியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாய்க் கூறுங்கள். 

இல்லை. அவரை அந்தக் குழுவில் சேர்க்க முடியாது சார். 

ஏன். ஒருவரைச் சேர்ப்பதில் அப்படி என்ன பெரிய பிரச்சனை வந்துவிடப்போகிறது. 

இல்லை. அவரை அங்கு சேர்க்க முடியாது சார். குறிப்பிட்ட ஜாதியை அதீதமாய் ஆதரிப்பதாகக் குற்றச்சாட்டு எழும். மன்னியுங்கள். 

அரே பாபா. அவர் மதமே வேறு. சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டையும் அமல்படுத்தியதாக சொல்லிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு ஆயிற்றே.  அதை நான் பார்த்துக் கொள்கிறேன் இதற்கெல்லாம் அநாவசியமாய் நீர் தலையைக் கெடுத்துக் கொள்ளாதீர்.

சாரி சார். ஒரு குழுவில் ஒரே ஜாதியில் இருவர் இருப்பது ஆட்சேபணைக்கு உள்ளாகும் சார். அவர் வேற்று மதத்தவர் என்றாலும் இரண்டு தலைமுறைக்கு முன்பாக, இந்தக் குழுவில் இருக்கும் மூத்த அதிகாரியின் ஜாதிதான் சார் அவரும். 

அப்புறம் எப்படி இவரை மந்திரியின் சொந்தக்காரர் என்கிறார் அவரது பிஏ. 

எந்த மதமாக இருந்தாலும் ஜாதி அதேதான் என்பதால் அவர்கள் சொந்தக்காரர்கள்தான் சார். அது போக இந்த உதவி அதிகாரி இந்த மாநிலத்தின் எதிர்க்கட்சியில் நமது துறையின் மந்திரியை எதிர்த்து நின்று தோற்றவரின் சகலையும்கூட. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி என்ன இருந்தாலும் ரத்த சொந்தம் வலுவானது அல்லவா. எனவேதான் இருவரையும் ஒரே குழுவில் இருக்க வைக்க இவ்வளவு அழுத்தம் அளிக்கிறார்கள். 

எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. மதமும் வேறு அரசியலில் கூட எதிரெதிர் கட்சி ஆனால்…

மன்னியுங்கள் சார். மதம் வித்தியாசப்பட்டாலும் ஜாதி வேறுபடாமல் இருக்க பல உதாரணங்கள் உண்டு சார். எங்கள் ஊரில் எப்போது வேண்டுமானாலும் மதத்தை மாற்றிக்கொள்ளலாம் ஆனால் ஜாதி எப்போதுமே மாறாது சார். குறிப்பிட்ட ஜாதியினர் வட நாட்டில் குறிப்பிட்ட மதங்களுக்கு மாறுவது சகஜம் இல்லையா. மதம் மாறிய பின்பும் சட்டப்படி சலுகைகள்கூட மாறுவதில்லை அல்லவா அது போலத்தான் இதுவும். எங்கள் ஊரில் ஜாதிதான் சார் எழுதப்படாத சட்டம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிகள் உருவாக்கப்பட்டதாய் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குக் கூறிக்கொண்டு இருப்பதில் எல்லோருக்கும் பல செளகரியங்கள் இருக்கின்றன சார்.

மந்திரியின் பிஏவுக்கு பதில் சொல்லியாக வேண்டியவர் அவர். ஆகவே அதை மாற்ற முடியாது. வேறு எப்படியாவது எதையாவது செய்து சமாளித்துக்கொள்ளவும் என முகத்திலடித்தார் போலச் சொல்லி பஞ்சநாதனை அனுப்பிவிட்டார் ஆணையர். 

தாம் கொஞ்சம் அதிகம் பேசிவிட்டோமோ அதனால்தான் ஆணையர் தம்மைப் பட்டென அனுப்பிவிட்டாரோ என்று பஞ்சநாதனுக்கு உள்ளூரக் குடைந்தது. 

வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவின் குழுக்களை அமைக்கும் பொறுப்பு பஞ்சநாதனிடம் அளிக்கப்பட்டிருக்கும் விஷயம் மெல்ல கசியத் தொடங்கியதும் அதிகாரிகளின் படையெடுப்பு தொடங்கிற்று. 

என் குழுவில் இவர் வேண்டும். இவர் வேண்டவே வேண்டாம். 
இவன் எந்த வேலைக்கும் ஆக மாட்டான் எனவே இவனை என் குழுவில் தயவு செய்து போட்டுவிட வேண்டாம். 
இவனைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் எனவே இவன் கட்டாயம் என் குழுவில் இருந்தே ஆக வேண்டும். 
அண்ணன் பையன். அவனை எங்கே வேண்டுமானாலும் போடுங்கள் ஆனால் தயவுசெய்து அவரிடம் மட்டும் போட்டுவிட வேண்டாம். மிகவும் சிரமப்பட்டு வாங்கிய போஸ்ட்டிங் இது மொத்தமும் பாழாகிவிடும். எனவே பார்த்து செய்யுங்கள். 
ஒன்றுவிட்ட அக்காள் பையன் அவனை, கொஞ்சம் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவரான அவர் குழுவில் போடுங்கள், என்று யார் யாரிடமிருந்தோ கெஞ்சல்கள் கொஞ்சல்கள் அழுத்தங்கள். 

சரி சரி என்று எல்லோருக்கும் பணிவோடும் பண்போடும் தலை அசைத்த பஞ்சநாதன் ஆளுக்கொன்றாய் அவரவர் சொன்ன எதையும் சட்டை செய்யவில்லை. ஆணையர் அடித்துக் கொடுத்திருந்த தலைவலியே ஒரு ஜென்மத்துக்குப் போதுமானதாய்த் தோன்றியது. மந்திரி பிஏவின் சிபாரிசு காரணமாய் உருவான ஆணையரின் அடித்தலை சரிக்கட்ட எல்லாக் குழுவிலும் ஏதாவது ஒரு ஜாதிக்கு இரண்டிரண்டு பேர்களாகப் போட்டு நிரவப் பார்த்தார். இரண்டு குழுக்களில் ஜாதிக்கான சம ஜோடி கிடைக்காமல் அல்லாட நேர்ந்தது. அடித்துப் பிடித்து, ஒரு குழுவில் இருந்த ஒரு ஜாதியின் முற்றிலும் மணவினைகள் கூட செய்யத் தயங்கும் உயர் பிரிவிலிருந்து ஒருவரைப் போட்டு இரண்டும் ஒன்றுதான் என்பது போல ஒப்பேற்றினார். ஒரு குழு எப்படியும் சரி செய்ய முடியாதபடி உதைத்தது. அந்தக் குழுவில் இரண்டாவது ஆளை தம் ஜாதிக்குக் கொடு என்று எல்லோரும் கூப்பாடு போடுவார்கள். அதை எப்படி சமாளிப்பதென்று மலைப்பாய் இருந்தது. இதற்காகவென்று புதிதாய் மாற்றல் ஆணை பிறப்பித்து வரி ஏய்ப்புப் பிரிவுக்கு ஆட்களைக் கொண்டு வருவதும் முடியாத காரியம். ஏற்கெனவே அந்த ஆணையில் பணம் விளையாடிவிட்டதாய் எழுந்திருந்த புகைச்சலை அது நெருப்பாக்கிவிடும். போகவும் பதிலுக்கு, இருப்போரில் எவரையும் மாற்றவும் முடியாது. மாற்றினால், சங்கிலித் தொடராய் ஒட்டுமொத்த அலுவலகத்துக்கும் வருடாந்தர மாற்றல் ஆணையையே புதிதாய்ப் போட வேண்டி வரும். புதிய இழுபறியில் மேலும் இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. அதுவரை எல்லோருக்கும் நல்லவராய் இருந்த பஞ்சநாதன், என்ன இருந்தாலும் தம் ஜாதி புத்தியைக் காட்டத் தொடங்கிவிட்டார் என்கிற அரசல் புரசலான பேச்சுக்கு ஆளாகத் தொடங்கியிருந்தார்.  

தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் வரி ஏய்ப்புப் பிரிவுக்கான குழுக்கள் அமைக்கப்பட்டால், தங்கள் இனத்துக்கான நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டால், உயர் நீதி மன்றத்தில் ரிட் போட்டு தடை வாங்கவும் தயங்க மாட்டோம் என்று ஜாதிவாரி சங்கங்கள் நேரடியாக ஆணையரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. 

அவர் பஞ்சநாதனை அழைத்தார். 

ஜாதி சங்கப் பிரதிநிதிகளின் எதிரிலேயே வைத்து விஷயத்தை சுமுகமாய் முடிக்கப் பார்த்தார்.

தாம் பலிகடா ஆகாமல் தப்பித்தால் போதும் என்கிற பயம் பஞ்சநாதனைத் தொற்றிக்கொண்டது. 

தம் கையில் இருந்த காகிதங்களை அப்படியே ஆணையரிடம் நீட்டினார். 

ஐந்து அதிகாரிகளும் இருபத்து ஐந்து உதவி அதிகாரிகளும் யார் யார் என்பது, முந்தைய ஆணையரால் போடப்பட்ட ஆணை என்பதால் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனவே நீங்களே காட்டுங்கள் பஞ்சநாதன் என்றார் ஆணையர்.

ஒவ்வொரு நாளும் அடித்துத் திருத்தி மாறிய வண்ணம் இருந்துகொண்டிருந்த,  தேதிவாரியாய்க் குறிப்பிடப்பட்டிருந்த ஜாதிவாரி அதிகாரிகளின் அத்தனைப் பட்டியல் வரைவுகளையும் அப்படியே மேசை மீது வைத்தார். 

அதிக உறுப்பினர் பலம் கொண்ட முக்கியமான மூன்று ஜாதி சங்கங்களும் பட்டியலை மும்முறமாய் பரிசீலிக்கத் தொடங்கின. ஆணையரின் தனியறையில் இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் தாழ்ந்த குரலில் கண்ணியமாய்த் தொடங்கிய விவாதம், கொஞ்ச நேரத்திலேயே குரல் உயர வார்த்தைகள் ஒருமையில் தடிக்க, விவகாரம் ஆகத் தொடங்கிற்று. அது ஆணையர் அறை என்பதை பஞ்சநாதனைத் தவிர அனைவரும் மறந்துவிட்டிருந்தனர். பஞ்சநாதன் அறையில் போய் விரிவாக விவாதித்து முடிவெடுக்கும்படி அவர்களிடம் கூறினார் ஆணையர். அவர்கள் ஒருமித்து எடுக்கும் முடிவை அப்படியே ஆணையாக்கித் தாம் கையெழுத்திடத் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தார். 

அரை மணி நேரத்துக்குள் பஞ்சநாதனை அழைத்தார். 

என்ன ஆயிற்று ஏன் இன்னும் வரைவு முடிவாகவில்லை என்றார். இவ்வளவு சர்வீஸ் போட்ட சீனியரான உமக்கு இதைச் செய்ய இவ்வளவு நாட்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து அவமானமாக இல்லையா என்று கேட்டார்.

கூனிக்குறுகி தலை கவிழ்த்து பஞ்சநாதன் கொஞ்ச நேரம் நின்று பார்த்தார். அதற்கு மேல் ஆணையரிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. இவர் பக்கம் அவர் திரும்பவுமில்லை. விடைபெற்றுக் கொள்வதாய்த் தெரிவித்துவிட்டு நேராகத் தம் அறைக்கு வந்தார். 

என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. 10:30 – 12:00 ராகு காலம். அது முடிந்தததும் வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் ஆணையை வெளியிட்டாக வேண்டும். அன்று அமாவாசை நல்ல நாள். என்ன ஆனாலும் அன்றே வேலை ஆரம்பித்தாக வேண்டும் என்பது ஆணையரின் கட்டளை. அன்றைய தினத்தைத் தவறவிட்டால் அடுத்த அமாவாசைதான் ஆணை வெளியிட நல்ல நாள் என்கிறார் ஆணையர். அப்புறம் உங்கள் இஷ்டம் என்றார் பஞ்சநாதன். 

இருப்பதே பன்னிரண்டு மாதங்கள். அதுவரையிலேயே கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து நாட்கள் அந்த மாதத்தில் போய்விட்டன. இன்னும் ஒரு மாதம் காத்திருப்பது எல்லா ஜாதி உறுப்பினர்களுக்கும் பெரும் இழப்பு என்பதால் ஜாதி பேதமின்றி அனைத்து சங்கங்களும் உடனடியாய் உள்ளது உள்ளபடி இருந்துவிட்டுப் போகட்டும் என்று அந்தப் பட்டியலை ஒரு மனதாய் அப்படியே ஒப்புக்கொண்டன. ஆணையர் கையொப்பமிட உடனே வெளியாயிற்று வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவுக்கான அதிகாரிகளின் ஆணை. குழுக்களின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த மூத்த அதிகாரிகள் ஐவரும் 12:05க்கு ஆணையரை நேரில் சந்தித்து நன்றி கூறினர். 

எல்லோரது செல் போன்களையும் மேசை மீது வைத்து முற்றாக அணைக்கச் சொன்னார். அதற்குப் பின் பேசத் தொடங்கினார் ஆணையர். 

இது சென்ற ஆண்டின் வரி வசூலுக்கான அரசு அளித்த இலக்கு. இதற்கு மேல் பத்து சதமானம் வைத்தால் இந்த ஆண்டிற்கான டார்கெட். அப்போதைக்குக் ரொம்பக் கேவலமாய் இருந்தாலும் பொருளாதார ஆண்டிறுதியில் இலக்கைக் கிட்டி முட்டி எட்டி விடலாம். அது எப்படியும் வசூலாகிவிடும். 

அவர்கள் எல்லோரும் சீனியர்கள். எல்லோருக்கும் பத்து மாத மருத்துவ விடுப்பு இருக்கும். எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டில் உட்கார்ந்தால் சம்பளம் தானாக வந்துவிடும். சம்பளத்துக்காக அலுவலகம் வரவேண்டும் என்று அவர்களுக்கு என்ன முடை. கைக்காசைச் செலவழித்து பெட்ரோல் போட்டுக்கொண்டு அன்று அலுவலகம் வந்ததற்கு என்ன பயன் என்று பார்க்க வேண்டாமா. அவர்களுக்குள் எவ்வளவு பிரிவுகள் பிரிவினைகள் இருந்தாலும் எல்லோருக்கும் குறிக்கோள் ஒன்றுதான் இல்லையா. எல்லோரும் அதில் கவனத்தைக் குவிக்க வேண்டும். அவருக்கும் அவர்களுக்கும் இடையில் எந்த பேதமும் இல்லை. அவர் படித்தார் பரிட்சை எழுதிப் பாஸானார் ஆகவே ஆணையர் மேசையின் இந்தப்புறம் அமர்ந்திருக்கிறார். அதே பரிட்சையை அவர்கள் அவருக்கு முன்பாக எழுதிப் தேர்வாகியிருந்தால் அவர்களைப் போலவே அவரும் அந்தப் புறம் உட்கார நேர்ந்திருக்கும். அதிகாரம் என்பது அவ்வளவு தற்செயலான ஒரு விஷயம். ஆகவே அடக்கம் அனைவருக்கும் அவசியம். அடக்கொம் அமரருல் வைய்க்கூம் என்கிறார் அல்லவா திரூபல்லபர்.

அவர் தமிழ் பேசக் கேட்டதும் அதிலும் திருவளுவர் பெயரை அவர் உச்சரித்ததும் பலத்த கைத்தட்டல் எழுந்தது. முறுவலுடன் அதை ஏற்றுக்கொண்டு ஆணையர் தொடர்ந்தார். 

தனித்தனிக் குழுவாய்ச் சென்றாலும் அவரையும் அவர்களில் ஒருவனாய், ஒவ்வொரு குழுவுடனும் கூட வராத இன்னொரு குழுவாய் எண்ணிக்கொள்ளுபடிக் கேட்டுக்கொண்டார். கிடைப்பதைப் பகிர்வோம். பெயராத இடத்தை சடுதியில் கடப்போம் என்பதே பிரச்சனையில்லா பெருவாழ்வுக்கான தாரக மந்திரம் என்றார்.

ஊர் கெட்டுக் கிடக்கிறது. ஆடியோவும் வீடியோவுமாய் ஆளாளுக்கும் செல் போனிலேயே எடுக்கத் தொடங்கி விட்டார்கள். அசம்பாவிதம் ஏதும் நேர்ந்துவிடாமல் பார்ட்டிகளைப் பக்குவமாய்க் கையாள வேண்டும். அப்படி ஏதும் நடந்துவிட்டால் முதலில் உருளப்போவது அவர் தலைதான். ஆகவே, ஏதும் அசம்பாவிதம் நடந்த பிறகு, சம்பவம் நடப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக, நெஞ்சு வலி என்று நேராகப் போய் எதாவது மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுவது அப்படி ஒன்றும் முடியாத காரியமில்லை அவருக்கு. இவர் இப்படி இவர் நல்லவர் நம்பிக்கையானவர் என்று எவரையும் நம்ப முடியவில்லை இந்தக் காலத்தில். அவர்கள் அனைவருமே மூத்தவர்கள் அனுபவஸ்தர்கள் எனவே அதிகம் சொல்லத் தேவையில்லை என்றாலும் போகிற இடத்தில் பார்த்து எச்சரிக்கையாய் நடந்து கொள்வது அவசியம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டு இருந்தார் ஆணையர். 

அவரது அறைக்கு வெளியில் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. 

01 செப்டெம்பர் 2015
கணையாழி ஜனவரி 2016