Friday, January 15, 2016

கோடு [சிறுகதை]

காலையிலிருந்து, துளியூண்டு கழிப்பறையில் மேற்கத்திய கழிப்பானைப் பொருத்தும் வேலையில் மும்முரமாய் இருந்தார் இப்ராஹிம்.

வேலையுடன், பாலவாக்கத்தில் இருந்து பெஸண்ட் நகருக்கு, அறுபதைத் தாண்டிய வயதில், சைக்கிள் மிதித்து வந்த களைப்பும் சேர்ந்துகொண்டது. பையன் பேச்சைக் கேட்டு கொஞ்சம் முன்னரே கிளம்பியிருந்தால், பஸ்ஸிலேயே வந்திருக்கலாம். மகன் நேரடியாய் உணரா வண்ணம், வண்டி நேரத்தை வேண்டுமென்றே தவற விட்டு, இப்போ நடந்து போனால் பஸ்ஸைப் பிடிக்க முடியாதுப்பா என்று சொல்லி சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். தம் காரியங்களைத் தாமே செய்வதில் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிப்பதற்காகவே கஷ்டப்படத் தயாராய் இருக்கும் சுதந்திரத்துக்கு முந்தைய  தலைமுறை.

பெஸண்ட் நகர் பஸ் ஸ்டாண்ட்டை அடுத்து இருந்தது அந்த மத்திய அரசுக் குடியிருப்பு. பார்க்கப் போனால், இரண்டொரு முக்கியமான தடங்களில் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடம்தான் அது என்றாலும் வெறும் கடல் மண் பரந்து கிடக்கும் இடத்திற்கு எப்படி டெப்போ என்கிற அந்தஸ்தை அளிக்க முடியும். எதிர்காலத்தில் நிறைய வண்டிகள் நிற்கவும் புறப்படவுமான அளவுக்கு விஸ்தரிக்கக்கூடிய விஸ்தாரமான பரப்பளவுடன் இருந்தது. பிரதான சாலையிலிருந்து பார்த்தாலே தொலைவில் தெரிந்த கடல், வெயிலில் கண்கூச மினுமினுத்தது. பத்து மணிக்கே உச்சி வெயிலாய் சூரியன் தகித்தது. உச்சாணி தண்ணீர் தொட்டிக்குப் பக்கத்தில் கடல் மண்ணில் போடப்பட்டிருந்த மேடையில் தனிக்கட்டையாய் அமர்ந்திருந்தார் பிள்ளையார். நிழலுக்காக சிறிய கூரை அவர் தலைக்கு மேல் போடப்பட்டிருந்தது. அது போல ஒரு கூரையை சைக்கிளுக்கும் போட முடிந்தால் ரொம்ப சவுகரியமாக இருக்கும் எனத் தோன்றியது இப்ராஹிமுக்கு.

பிள்ளையாருக்கும் கடலுக்கும் இடையில் அரை கிலோமீட்டராவது இருக்கக்கூடும். வெட்டவெளிப் பொட்டலில் சாலைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான ஆரம்பகட்ட வேலைகள் அங்குமிங்குமாய் நடந்துகொண்டு இருந்தன. மாநில அரசின் இந்த திட்டத்தில் தினந்தோறும் பிளம்பிங் வேலை கிடைத்தால்கூடப் போதும் மகன்களின் கையை எதிர்பார்க்காமல் ஆயுளை ஓட்டிவிடலாம் எனும் அளவுக்கு வீடுகள் வரவிருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. வீடென்றால் வெறும் நான்கு சுவர்களா கக்கூசும் பைப்பும் குழாய்களும் இல்லாமலா. மிதிவண்டியிலிருந்து இறங்கி, பெருந்து நிறுத்தத்தின் மணலில் தள்ளிக்கொண்டு வந்தார். நீட்டிக்கொண்டிருந்த மட்டப்பலகையும் கொல்லுறுகளுமாக கேரியரில் இருந்த காக்கிப் பை, மணல் நெகிழ்ந்திருந்த இடங்களில் குழந்தை போல கூடுதல் கவனத்தைக் கோரியது. மேஸ்திரி கிறுக்கிக் கொடுத்திருந்த  விலாசத்துடன் இரண்டு மாடி ஏறி, அந்த வீட்டுக் கதவைத் தட்டினார்.

ஐயிரு ஆபீசர். பாத்து ரொம்ப மருவாதியா நடந்துக்கனும். உங்குளுக்கு சொல்லத் தேவையில்லை பாய். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன் என்று சொல்லி இருந்தான் காண்ட்ராக்ட்டு மேஸ்திரி.

இந்த வீடுகள் எல்லாம் கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும்போதே பிளம்பிங் வேலை பார்த்தவர் இப்ராஹிம். அப்போது இருந்த காண்ட்ராக்டர் வேறு ஆள். இவனை விடவும் கறார் பேர்வழி. இந்த மேஸ்திரி சொன்னதைக்கூட அவர் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. அது சரி காண்ட்ராக்ட்டுக்காரர்கள் என்ன நம்மைப் போல அன்றாடங்காய்ச்சிளா. அவர்களுக்கு ஆபீசர்களுடன் ஆயிரம் இருக்கும். அதனால் மேஸ்திரி கொஞ்சம் கூடுதலாய் எச்சரிக்கிறான் என்று சகஜமாய் எடுத்துக்கொண்டார். கதவு திறக்கப்பட்டதும் சாவி கொடுத்த பொம்மை போல நேராகக் கக்கூசைப் பார்க்க நடந்தார் இப்ராஹிம்.

*****

ராமர் போட்ட கோடெல்லாம் நிலைச்சி நின்னுடுத்துங்கறதுதான் ஹிஸ்டரி. சேது பந்தனம் கட்டினப்போ தனக்கு ஒதவி செஞ்சதுக்காக அணிலை வாஞ்சையோட ஸ்ரீ ராமர் தடவிக் கொடுத்தார். அதனாலதான் அணில் முதுகுல கோடு வந்துதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.

ஆனா வாழை இலை நடுல ஒரு கோடு இருக்கே அது எப்படி வந்ததுனு உங்கள்ள யாருக்காச்சும் தெரியுமோ.

இராவண சம்ஹாரம் முடிஞ்சுடுத்து.  விபீஷண பட்டாபிஷேகமும் முடிஞ்சுடுத்து.  லங்கைலேந்து சீதை ஹனுமன் இளையவர் இலட்சுமணனோட எம்பெருமான் ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிண்ட்ருக்கார். வனவாசத்துல இருந்தப்போ பரத்வாஜ ரிஷி ராமபிரானை தன் ஆசிரமத்திற்கு ஏந்தருளும்படிக் கேட்டுண்டார்.  இப்போ நான் பிக்னிக் வரலை. வனவாசம் முடிச்சு அயோத்திக்கு திரும்பச்சே கண்டிப்பா உங்க ஆஸ்ரமத்துக்கு வரேன்னு வாக்களிச்சார். அதுக்குள்ள என்னென்னமோ நடந்து முடிஞ்சுடுத்து. ஆனாலும் கொடுத்த வாக்கைக் காப்பாத்தலைனா அவர் எப்டி ஸ்ரீ ராமரா இருப்பார். ஆதனால அயோத்திக்கு திரும்பர்ச்சே ஞாபகமா பரத்வாஜரோட ஆஸ்ரமத்துக்கு வந்தார். அவா எல்லாரையும் ஒன்னா சேர்த்து குரூப் போட்டோவாட்டம் பார்த்ததும் பரத்வாஜ ரிஷிக்கு குஷி தாளலை. இருந்து சாப்டாதான் ஆச்சுனு அவா எல்லாருக்கும் போஜனம் ரெடி பண்ணினார்.

வாழை இலைல ஏகப்பட்ட அயிட்டம்ஸைப் பரிமாறினார் பரத்வாஜர். பெரியவாள்லாம் சாப்டட்டும் நாம அடுத்த பந்தில ஒக்காரலாம்னு ஒரு ஓரமா பவ்யமா நின்னுண்ட்ருந்தார் ஆஞ்சநேயர்.  அனுமனைப் பார்த்து ஓய் இங்க வாரும்னார் ராமர். எதுர வந்து நின்னார் ஸ்ரீ ஆஞ்சநேயர். ஓய்! அப்படியே ஒக்காரும் நாம இன்னைக்கு ஒரே இலைல சாப்டப் போறோம்னார்.

ஒரே எலைல மனுஷா எப்ப சாப்டுவா. எப்ப சாப்புடுவானு கேட்டா என்ன பேச்சு மூசையேக் காணோம். என்ன எல்லாரும் ட்ரீம் சாங்கு சீக்குவென்ஸுக்குப் போய்ட்டேளா. ஒரே எலைல ரெண்டு மனுஷா ஒன்னா சாப்பட்ற சந்தர்ப்பம் எப்போ… கல்யாணத்துல. ஆமாம். ஆம்படையானும் ஆத்துக்காரியும் ஒரே எலைல ஒன்னா சாப்பட்றது கல்யாணத்துல மட்டும்தான். புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏற்றத் தாழ்வு இல்லே. எச்சல் இல்லே. அன்னியோன்யம் உண்டாகணும்னு புரிய வைக்கிறதுக்காகதான் கல்யாணத்தன்னைக்கு அவாளை ஒரே இலைல சாப்ட வெக்கிறது. பெரியவா எதையும் சும்மா சொல்லி வைக்கலே. ஓவ்வொரு சம்ப்ரதாயத்துக்கும் ஒரு அர்த்தமிருக்கு நம்ம இந்து மதத்துல. இதையெல்லாம் விட்டுட்டு சில புத்தி கெட்டதுகள் லவ்வுங்கற பேர்ல இங்கையும் அங்கையுமா தாவி கவுனை மாட்டிக்கிறதுகள். நன்னா மாட்டிண்டுடறதுகள்.

எத்தனை உபகாரம் செஞ்சிருக்கே ஹே ஹனுமா என் உயிருக்கும் மேலான சீதையைக் கண்டுபிடிச்சிக் குடுத்தே சஞ்சீவி ஔஷதம் கொண்டாந்து என் உயிருக்கு உயிரான உடன்பிறப்பைக் காப்பாத்தினே. நீங்க எதையோ நெனச்சு சிரிச்சா பாகவதர் பொறுப்பில்லே. இது ராமாயணம். தீ பரவினாலும் புயல் அடிச்சாலும் மழை பேஞ்சு லோகமே மூழ்கினாலும் ராமாயண பாரதத்துக்கு ஒன்னும் ஆகாது. காலாகாலத்துக்கும் எலச்சு நிக்கும். உண்மையான உடன்பிறப்புனா அது சாக்ஷாத் லக்ஷ்மணன்தான்.   இராவண சம்ஹாரத்துல இந்த ராமச்சந்திரனுக்கு உதவினே. நீங்கள்ளாம் எதை நெனச்சு சிரிக்கிறேள்னு நேக்குத் தெரியலை. ராமாயணத்துல ராமச்சந்திரன்னா ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி. இதுக்குலாம் மேல, மனுஷாளாட்டம் கட்சி தாவாம என் மேல பரிபூர்ண பக்திய வெச்சுண்டு என் கூடவே இருக்கறவாளை நான் எப்படி ரக்ஷிப்பேன்னு ஒலகத்துக்குக் காட்டவும் - மந்திரி பதவி குடுத்து இல்லே - மனசுல வெச்சுண்டு எப்படிக் காப்பாத்துவேன்னு உலகுக்கு உணர்த்தவும் தனக்குப் போட்டிருந்த அதே இலைல எதிர்ல, விலங்கினத்தை சேர்ந்த ஆஞ்சநேயரை ஒக்கார வெச்சுண்டார் மனுஷனா பிறவியெடுத்த கடவுளான ஸ்ரீ ராமர்.

கொழந்தே உன்னைத்தான். கொரங்கு பாத்திருக்க இல்லையோ. சரி கொரங்குக்கு என்ன பிடிக்கும்.

ம்… ம்… வாதபதம்… ம்…

தேங்கா

தேங்கா

நீங்க செத்த இருங்கோ மாமி கொழந்தயே சொல்லுவன். சொல்லுடா கண்ணா

ம்… சிப்ச்சு.

பேஷ் அப்டிப்போடு.

இப்டி இப்டியா காய்கறிகள் பழம் இத்யாதி இத்யாதிகளையெல்லாம் தமக்குப் போடப்பட்ட வாழை எலைல எதிர்பக்கமா ஆஞ்சநேயருக்கா நகர்த்தி வெச்சு நடுல நீட்டமா ஒரு கோடு கிழிச்சார் ஸ்ரீ ராமர். அதுலேந்துதான் வாழை இலை நடுல கோடோட வெளைய ஆரம்பிச்சுது.

ஸ்ரீராம மூர்த்திக்கு ஜெய மங்களம்
கல்யாண ராமனுக்கு சுப மங்களம்
ஜே ஜே ராம
ராம ராம

*****

சிலோன் போய்வந்தபோது, சீச்சு கொண்டுவந்து கொடுத்திருந்த, மரவட்டை நாய் போல் நீளமாய் இருந்த டேப் ரெக்கார்டரை அணைத்துவிட்டு அடடா பிரமாதம் என்று புல்லரித்தார் ஸ்ரீனிவாச ராகவன். கை பரபரத்தது. போனைப் போட்டார் மருமானுக்கு.

நீ நேர்ல கேட்டையோ. குடுத்து வெச்சவண்டா நீ. பெரிய புண்ணியம். ரொம்ப தேங்ஸ்டா. பகவான் க்ருபைல காலக்ஷேபத்தை டேப் பண்ணனும்னு நோக்குத் தோணித்தே. என்னமா பேசறார். என்னா கொரல் என்ன கொரல் அருவியாட்டம் ஹோனு அமர்க்களமா இருக்குடா. காண்டெம்ரரி விஷயத்தையெல்லாம் கலந்து ஜனரஞ்சகமா ஜமாய்க்கறார். அற்புதம் என்று சிலாகித்துக்கொண்டே போனார் ஸ்ரீனிவாச ராகவன். இடையிடையில் டக்கு முக்கு லொட்டு லொட்டு என கக்கூசில் இப்ராஹிம் ஏற்படுத்திக்கொண்டிருந்த சத்தம் பேச்சின் சுவாரஸித்துக்கு இடையூராய் இருக்கவே நா அப்பறம் பேசறேன்… அது ஒன்னுமில்லை கொஞ்சம் டாய்லெட் வேலை நடந்துண்டுருக்கு அதான் என்று எரிச்சலுடன் போனைத் துண்டித்து கருப்பு ரிசீவரை டொக்கென்று வைத்தார்.

ராகவனுக்கு இன்றைக்கெல்லாம் இருந்தால் ஐம்பதைத் தாண்டாது. நிறம் ஒன்றும் பெரிதாய் சொல்லிக்கொளும்படியானது இல்லை என்றாலும் புஷ்டியின் காரணமாய் மினுமினுத்த தேகத்தில் பெரியமனுஷக்களை அப்பிக்கொண்டு இருந்தது. நாக்கு எடுத்துக்கொண்ட சுதந்திரம் காரணமாய்  உட்கார்ந்து அலம்பிக் கொள்வது சிரமமாக ஆரம்பித்திருந்தது. ரெண்டு நிமிஷத்துக்கு மேல் குத்துக்காலிட்டு உட்காரவும் முடியவில்லை. எழவு இன்னும் என்ன இல்லாதவனைப் போல உட்கார்ந்து போயிண்டு என்று ஒரு நாள் தோன்றிவிட்டது. குவார்ட்டர்ஸ் ஆபீசில் ஹெல்த் கிரவுண்ட் என்று எழுதிக் கொடுத்து சொந்த செலவில் வெஸ்டர்ன் வைத்துக்கொள்ள அனுமதி வாங்கிவிட்டார். குடியிருப்பு கட்டி, அப்படியொன்றும் அதிக காலம் ஆகிவிடவில்லை என்றாலும், இதய நோயாளிகள் இருக்கும் வீடுகளுக்கு, அரசாங்க செலவிலேயே இந்திய கழிப்பானை எடுத்துவிட்டு கம்மோடை வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். செலவுக்காக பார்க்கப்போய் இருதய நோயை வரவழைத்துக் கொள்ள முடியுமா என்று மேஸ்திரியை அழைத்து வேண்டியதை வாங்கிவரச் சொல்லி பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

வீட்டு உருப்படிகள் எல்லாம் சம்மர் லீவுக்கு வெளியூர் போயிருந்தன. இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனாவசியமாய் லீவும் வீணாகாது என்பதால்தான் அன்றைய தினத்தில் இந்தப் பாடாவதி வேலையை வைத்துக் கொள்ள முடிவெடுத்து இருந்தார்.

வேலை செய்ய ஆள் வருவதற்கு முன்பாகவே இருக்கிற இரண்டு ரூம்களையும் பூட்டிவிடும்படி பண்ணிப் பண்ணி சொல்லிவிட்டுப் போயிருந்தாள் அகமுடையாள். தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்கிற அளவுக்கு தன்னம்பிக்கை கொண்ட தைரியசாலிதான் என்றாலும் தப்பித்தவறி எதாவது காணாது போய்விட்டால் தன் தலையில்தான் பழி விழும் என்கிற ஜாக்கிரதை உணர்வில், கதவைத் திறக்கும் முன்பாகவே இரண்டையும் பூட்டி சாவியை வேட்டி உருட்டுக்குள் செருகி இருந்தார்.

டைனிங் டேபிளிலேயே நெடுநேரம் உட்கார்ந்திருந்ததில் கால் மரத்துவிட்டு இருந்தது. இந்தத் துலுக்கன் எப்படித்தான் இவ்வளவு நேரமாய் குத்துக்காலிட்டு உட்கார்ந்து வேலை பார்க்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது. ஒற்றைநாடி உடம்பு. தின்பதெல்லாம் தாடிக்கே போய்விடும் என்பதுபோல மீசை மழித்த நீள வெள்ளை தாடி.

அவர் இடத்திலிருந்து டாய்லெட்டின் ஒரு பகுதிதான் தெரிந்தது. அப்படித் தெரிந்த சட்டகத்துக்குள், அவனுடைய குத்துக்காலிட்ட பின்பக்கம் மட்டுமே முன்னும் பின்னுமாய் நகர்ந்து தெரிந்துகொண்டு இருந்தது. ஸீர்ய்க்கு ஸீர்ய்க்கு என்று சிமெண்டு தரையை சீவி சீவி மெழுகிக்கொண்டு இருந்தான். உள் வேலை முடிந்துவிட்டிருக்க வேண்டும். குத்துக்காலிட்ட வாக்கிலேயே பாதி எழுந்தவண்ணம் வெளியே வந்து வாயிற்படிக்கு இந்தப்பக்கம் அமர்ந்தபடி சீர்ய்க்கு சீர்ய்க்கு.

பின்புறத்தைப் பிடித்துக் கொண்டபடி மெல்ல நிமிர்ந்தான். வாசலில் பார்த்தபோது இருந்ததைவிட இன்னும் வயதானவன் போலத் தோன்றினான். எப்படிப் பார்த்தாலும் அறுபதுக்குக் குறையாது. இடை வழியில் சிமெண்ட்டையும் மணலையும் குமித்துக் கரைத்ததன் மிச்சம் மீதி ஈஷிக்கொண்டு இருந்தது. பக்கத்திலேயே கொட்டப் பட்டிருந்த பழைய சில்லுகள் வேறு. இவற்றையெல்லாம் இவனே எடுத்து இடத்தை சுத்தப்படுத்திவிட்டுப்போனால் நல்லது என எண்ணிக் கொண்டு இருக்கும்போதே, வாஷ் பேசின் அடியில் இருந்த குப்பை பக்கெட்டில் எல்லாவற்றையும் கையாலேயே அள்ளிப் போட்டுக்கொண்டான். நல்ல பாரமாய் இருக்க வேண்டும். பக்கெட்டைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு கீழே இறங்கிப் போனான்.

திரும்பி வந்தவன் துடைப்பம் கேட்டான். அலம்பிவிடாத குறையாய் இடைவழியை சுத்தமாக்கி அதை வாஷ் பேசின் அடியில் சாய்த்து வைத்தான். பாவம், அவனுக்குக் கூட எதாவது போட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

கழிப்பறைக்கும் குளியலறைக்கும் இடையில் இருந்த வாஷ் பேசினில்  கையைத் தேய்த்து தேய்த்து விரல் விரலாய் அலம்பிக்கொண்டான். கொல்லுறு மட்டப்பலகை இத்யாதிகளுடன் பாத்ரூமுக்குள் போனான். டேங்கை காலி பண்ணிவிடுவானோ என நினைக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் நிதானமாய்க் கழுவிக்கொண்டான். சரியாக அலம்பிக்கொள்ளவில்லை என்றால் சனி உட்கார்ந்துவிடும் என்கிற பயத்தில், கர்ம சிரத்தையாய் காலைத் திருப்பிக் குதிகாலுக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கும் சிரேஷ்ட ஸ்மார்த்தன் கெட்டான் எனும் அளவுக்குத் தேய்த்து அலம்பிக் கொண்டான்.

வெளியில் வந்தவன், பாத்ரூமுக்கு முன்னால் கீழே போடப்பட்டிருந்த பழைய துணியில் ஈரம் போக பாதங்களைத் துடைத்துக் கொண்டான். தன் சாமான்களைக் காக்கிப் பையில் வைத்துக்கொண்டபடி, சாமி குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுங்க என்றான்.

 ராகவன் எழுந்து பாத்ரூமுக்குள் போனார். எவர் சில்வர் செம்பில் நீரைப் பிடித்து அவனிடம் நீட்டினார்.

சார் ஒன்னு கேட்டா கோச்சிக்க மாட்டீங்களே.

என்ன.

இல்ல நீங்க இதுலதான் குடிப்பீங்களா.

ஏம்ப்பா. இதே மாதிரி பாத்திரம்தான்பா உள்ள இருக்கறதும்.

இல்ல குடிக்கத் தண்ணி கேட்டா பாத்ரூம்புலேந்து குடுக்கறீங்களே சாமி.

விஷயம் தெரியாத ஆளா இருக்கியே. இதுவரைக்கும் இந்த குவார்ட்டர்ஸுக்குள்ள மெட்ரோ வாட்டர் லாரியே வந்ததில்லை தெரியுமா. இங்க எல்லாமே கிரவுண்ட் வாட்டர்தான். எல்லா எடத்துலையும் வரது ஒரே தண்ணிதான்.

சமைக்கவும் இங்க இருந்துதான் எடுக்கறீங்களா சாமி.

அட என்னப்பா நீ. சமைக்க, சமையக் கட்டுல இருக்குற கொழாயில இருந்து புடிச்சிக்கிறோம். தண்ணி எல்லாம் ஒன்னுதான். எடுத்துக்கோ என்று நீட்டினார்.

பரவாயில்ல சார்.

இப்ப என்ன சமையக் கட்டுலேந்து புடிச்சி குடுக்கணும்கறையா புடிச்சிக் குடுத்தா போச்சு அவ்ளதானே என்று அதே பாத்திரத்துடன் சமையற்கட்டுக்குள் போனார்.

இந்தா

பரவாயில்ல சார் விடுங்க.

என்னப்பா இது. உனக்கு என்னதான் வேணும்.

ஒன்னுமில்லை விடுங்க.

வேண்டாம்ப்பா. தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்காத பாவம் என்னை சுத்தும். இந்தா குடிச்சுக்கோ. நாங்க குடிக்கிற தண்ணிதான்.

ஆனா தேக்சா இது இல்லியே சார்.

இதப் பாருப்பா நீ வயசுல பெரியவன். இப்பிடிலாம் சின்னப் பையனாட்டம் அடம் பிடிக்கக்கூடாது. பாத்தரத்துல என்ன இருக்கு.

இல்லை சார் விடுங்க. தாகமாயில்லை. 

இன்னும் வேலை ஏதும் பாக்கி இல்லியே.

நீங்களே வந்து பாத்துக்குங்க சார் என்றபடி வாஷ் பேசின் அருகிலிருந்து ஹாலுக்காய் நகர்ந்தான்.

எட்டிப் பார்த்தார். கச்சிதமாய் இருந்தது.

சிமிட்டி பால் நல்லா காயணும். காஞ்சாதான் கெட்டியா பிடிச்சிக்கும். நாளைக்கு வரைக்கும் யூஸ் பண்ணாதீங்க. ஈரம் காஞ்ச பிறகு தரைல லைட்டா தண்ணி தெளிங்க. அதுவும் காஞ்ச பெறகு நல்லா தண்ணி ஊத்துங்க. நாளன்னைக்கி கிளீனா செட்டாயிரும்.

பேசிய கூலியுடன் சேர்த்து இன்னும் ஐந்து ரூபாயை இனாமாக நீட்டினார்.

எண்ணிப்பார்த்து விட்டு தாஸ்தியா இருக்குது சார் என்று ஐந்து ரூபாயை டைனிங் டேபிள் மீது வைத்தான். தமிழ் பேசும் துலுக்கனுக்கு எங்கிருந்து வந்தது இந்த வெளுப்பு. 

ஜாஸ்தி இல்லே. தெரிஞ்சிதான் குடுத்தேன் வெச்சுக்கோ.

வேணாம் சார்.

இப்ப உனக்கு என்ன வேணும் நாங்க குடிக்கிற அதே டம்ளர்ல தண்ணி குடுக்கணும் அவ்ளதான. நாங்கள்ளாம் எச்சை பண்ணிக் குடிக்க மாட்டோம். நீ எச்ச பண்ணிடுவியோன்னுதான் குடுக்கலை போதுமா. உன்னை ஒன்னும் மட்டமால்லாம் நினைக்கலை. கொஞ்சம் இரு டம்ளர்லயே குடிச்சுட்டுப் போ. என்ன குடியா முழுகிடப்போறது.

எங்க வீட்லையே கடிச்சி குடிக்கிற பளக்கமில்ல சார். பச்ச கொளந்தைலேந்தே தூக்கிக் குடின்னுதான் சொல்லி வளப்போம்.

என்னைய்யா இது ஆச்சரியமா இருக்கு. நீங்கள்ளாம் எச்சை பாக்காம ஒரே தட்ல சாப்படறவங்க இல்லையா.

ஆமா சார் ஒரே தட்லதான் சாப்புடுவோம். மனுசங்களுக்குள்ள ஒஸ்தி மட்டம் பாக்காம சமமா நடத்தறதுக்காக வந்த பளக்கம் சார் அது. கும்பலா துன்ன ஒக்காந்துருக்கும்போது, அதுல ஒருத்தன் எச்சி பாத்து, சோத்துல ஒரு பங்கைத் தனக்கானதுனு தனியா ஒதுக்கி வெச்சாலே, அது மத்தவங்களை இளிவு படுத்தறதா அர்த்தம் எங்குளுதுல.

என்ன இருந்தாலும் ஒரே தட்டுல எல்லாரும் எச்ச பண்ணி எப்டி சாப்பட்றது.

எச்சினா என்ன சார். எல்லாரும் கையைக் களுவிட்டுதான சாப்புட ஒக்காரறோம். எடுத்துத் திங்கறதுல ஏது சார் எச்சி. தட்டுல இருந்து எடுத்துத் துன்னாம, துப்பவா செய்யிறோம்.

நீ என்னதான் சமாதானம் சொன்னாலும். கேக்கவே என்னவோ மாதிரி இருக்கு.

பளக்கம் சார் எல்லாம் பளக்கவளக்கம். அவ்ளோ ஒதவி செஞ்ச அனுமாரை என்னதான் ஒன்னா ஒக்கார வெச்சி தன் எலையிலையே துன்ன வெச்சாலும் எலைக்கு நடுவுல ஒரு கோட்டைப் போட்டு ஆயிரம் இருந்தாலும் நீ கொரங்கு கொரங்குதான்டானு சொல்லாம சொல்லீட்டாருல்ல ராமரு.


வாசல் கதவைத் தாள் கூட போடாமல் அப்படியே பிரமை பிடித்தவர் போல உட்கார்ந்திருந்தார் ஸ்ரீனிவாச ராகவன். இப்ராஹிமுக்காக சமையல் கட்டிலிருந்து கொண்டு வந்த டம்ளர், நீருடன் டைனிங் டேபிளின் மீது அப்படியே இருந்தது. அருகில் இப்ராஹிம் திருப்பிக் கொடுத்த ஐந்து ரூபாய் நோட்டு படபடத்துக்கொண்டு இருந்தது. 

நவம்பர் 2015
தி இந்து பொங்கல் மலர் 2016