Sunday, February 21, 2016

நுட்பத்தின் மொழி பேசும் நாகராஜன் - தி இந்து கலை ஞாயிறு பத்தி 21.02.16 (அசல் வடிவம்)


நாளேட்டைத் திறந்தாலே கொலை தற்கொலை என்று வாழ்க்கையில் ஒரு முறையேனும் சலித்துக் கொள்ளாதவர்களே இருக்க மாட்டார்கள். காரணம். இழப்பைக் குறித்த அசூயை. அதை நம்முடன் பொருத்திப் பார்த்துக் கொள்வதில் உண்டாகும் அணிச்சையான பயம். 

சமூகப் பொறுப்புள்ள செய்தித் தாள்களில், இப்பொதெல்லாம் தற்கொலைச் செய்தி முடிந்தபின் தற்கொலைத் தடுப்புக்கான ஆலோசனைக்கு என்று தொடர்பு எண்ணும் கொடுக்கப்படுகின்றன. இலக்கியம்இதைச் செய்யுமா அல்லது இலக்கியத்தில் இதற்கு இடமுண்டா என்றால் முடியும் என்கிறது ஜி நாகராஜனின் டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் என்னும் கதை.

நேரடியாக செய்தியைச் சொல்லாத, இலக்கியத்தரமான கலைஞர்களை, கலை கலைக்காகவேக்காரர்கள் என்று பெரும்பாலான முற்போக்காளர்கள் முத்திரை குத்தி விடுகின்றனர். இந்தச் சொற்றொடரை வார்த்தையளவில் பார்த்தால், இத்தகைய எழுத்தாளர்கள் ஏதோ வானம் பூமி நிலா நட்சத்திரம் நுட்பம் தரிசனம் என்று கதைவிடும், மனிதனைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறையற்ற தான்தோன்றிகள் என்கிற மாயை உருவாக்கப்படுகிறது. இது போக இவர்கள் எழுதும் கதைகள் வேறு ஒரு புள்ளியில் தொடங்கி நேர்க்கோட்டில் சம்பவங்களாய் அடுக்கப்பட்டு பளிச்சென்று இதுதான் முடிவு என்று முடிவதும் இல்லை என்பதால், சட்டெனப் புரிவதில்லை. ஆகவே ஆமாம் இவர்கள் எழுதுவது மட்டுமே இலக்கியம் கலை என்று சொல்லிக்கொள்வார்கள் என்று வெகுஜன ரசனையால் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள். இதனால் நட்டம் கலைஞனுக்கு இல்லை சமூகத்துக்குதான் என்பது எவருக்கும் உதவாத வெற்று வீம்பு.

கலைஞர்களின் பிரச்சனைதான் என்ன. ஏன் அவர்கள் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் புரியும்படியாய் சொல்லிவிட்டுப் போகக்கூடாது என்பது நியாயமான கேள்விதான். ஆனால் மனித மனத்தின் நுட்பங்களை அதன் சிக்கல்களை மைக் வைத்துச் சொல்ல முடியுமா என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். காதலியிடம் கைபேசியில் பேசலாம், அன்பைத் தெரிவிக்க மெகாபோனைப் பயன்படுத்த முடியுமா. இதுதான் இலக்கியத் தரமான கதைகள் தவிர்க்க முடியாமல் பூடகமாகிவிடுதன் அடிப்படைக் காரணம்.

இதை எழுதலாம் இதை எழுதக் கூடாதது என்று இலக்கியத்தில் எதுவுமே இல்லை. ஆனால் எப்படி எழுதப்படுகிறது, எழுதாளனின் பார்வை எங்கே குவிகிறது என்பதை வைத்தே ஒன்று வாரந்திரக் கிளுகிளுப்புக் கேளிக்கையாகவும் பிறிதொன்று இலக்கியமாகவும் ஆகிறது. நோக்கமும் வெளிப்பாடுமே கேளிக்கையாளனிடமிருந்து கலைஞனைப் பிரித்து உயர்த்தி நிறுத்துகின்றன.

இது ஒரு பாலியல் தொழிலாளி பற்றிய கதை. இதில், அவள் வாழும் அல்லது அவளுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் ’இந்த’ வாழ்க்கை அவலமானது என்று எதுவுமே சொல்லப்படவில்லை.  பாலியல் தொழிலாளியான கதையின் நாயகி ஒரு வார்த்தை கூட அதைப் பற்றிப் பெரிதாக குறைபட்டுக்கொள்ளக்கூட இல்லை. நம் எல்லோரையும் போலவே அவளுக்கும் இந்த வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நன்றாகவும் இன்னும் கொஞ்சம் ரசிக்கத் தக்கதாகவும் இருக்கலாமே. யந்திரத் தனமாகத் தான் பயன்படுத்திக்கொள்ளப் படுவதற்கு பதிலாக, தானும் ரசிக்கப்படக் கூடியவளாக, அன்பாகவும் கெளரவமாகவும் நடத்தப்படக் கூடியவளாக இருக்ககூடாதா என்கிற ஏக்கம் இருக்கிறது. அவளது பேச்சாகவோ எண்ணமாகவோக் கூட இவற்றைச் சொல்லாமல் நிகழ்வாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். அப்படி ஒரு தருணம் கிடைக்கும்போது அதை மனமுவந்து அவள் துய்க்கிறாள்.

ஆனால், அப்படி ஒரு தருணம் அதுவரை அவளுக்கு வாய்க்கவே இல்லை என்பதுதான் கதையில் நேரடியாய் வார்த்தைகளில் சொல்லப்படாத அவலம். அதனால்தான் அவள் தற்கொலைக்கே முயற்சிக்கிறாள்.

கதையின் மூன்றில் ஒரு பங்கு, அவள் தற்கொலை செய்துகொள்ள செய்யும் ஆயத்தங்களைத் தொடக்கத்திலேயே விரிவாக விவரிக்கிறது. ஆனால், அவள் அந்த முடிவுக்கு வர என்ன காரணம் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஏன்.

வாழ்க்கையில், நேரடியான வெளிப்படையான காரண காரியங்களோடு எல்லா நேரமும் நடப்பதில்லை. அதற்கு அர்த்தம் ஒட்டுமொத்த வாழ்வே காரண காரியமற்றது என்பதல்ல. நம்மை வாட்டி எடுக்கும் அழுத்தம் ஒற்றைக் காரணதால் உண்டாவதில்லை. பூடகமாகப் பல்வேறு காரணிகள் இருக்கக்கூடும். ஆனால் அந்த அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி தற்கொலையே என்கிற முடிவுக்கு வர ஒரு கணமே போதுமானதாய் இருக்கிறது.

அந்த அசுர கணத்தை மட்டும் தவிர்க்க முடிந்தால் தப்பித்துவிடலாம். ஆனால் அப்படி அந்த கணத்தைத் தவிர்த்துத் தப்பித்துக் கொள்வது யார் கையில் இருக்கிறது. நம்மிடம் தான் என்று சொல்லாமல் சொல்கிறார் ஜி நாகராஜன். 

சிரமப்பட்டு தூக்குக் கயிற்றை மாட்டித் தயார் நிலையில் இருக்கையில், டெரிலின் சட்டையும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் அவளிடம் வருகிறார். பார்க்க கெளரவமாக இருக்கிறார். அது மட்டுமின்றி அவளைக் கெளரவமாகவும் நடத்துகிறார்.

அவளை விடுங்கள். நம் வீட்டுப் பெண்களுக்கே சின்ன சின்ன ஒத்தாசை செய்தாலே உச்சி குளிர்ந்துவிடுவதில்லையா. எல்லோருக்கும் பரிமாறிவிட்டு அவர்கள் தனியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு டம்ளர் நீர் எடுத்து அருகில் வைத்தாலே என்னவோ பெரிதாகக் கிடைத்துவிட்டதைப் போல மருகிவிடுவதில்லையா. இது போன்ற யதார்த்த கவனிப்புகள் கலை நுட்பத்தின் அடையாளம்.

ஆனால் இது போன்ற சின்னச் சின்ன நகாசுகளை நுண்ணுணர்வுடன் செவதே ஒருவரை கலைஞனாக்கிவிடுவதும் இல்லை. ஏனெனில் வாசகிகளை விழுத்தாட்டி வசியம் செய்யவே மதாந்திர வயிற்றுவலியைத் தத்ரூபமாய் காட்டும் எழுத்தாள ருத்திராட்சிரப் பூனைகள்தான் ஏராளமாய்க் கிடக்கின்றனவே. நுட்பங்களை எந்த இடத்தில் எப்படி வெளிப்படுத்துகிறான் அது ஒட்டுமொத்த கதைக்கும் எந்த விதத்தில் மெருகூட்டுகிறது என்பதை வைத்தே எழுத்தாளன் கலைஞனாகிறான்.

இந்தக் கதையில் தேவயானைக்கு தண்ணீர் தவிக்கிறது. அந்த டெரிலின் சட்டைக்காரர் எழுந்து போய் அறையின் மூலையில் இருக்கும் பானையிலிருந்து டம்ளரில் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்கிறார்.

உடலாகவும் சதையாகவும் மட்டுமே பார்க்கப்பட்டவளின், தானும் ஒரு மனிதப் பிறவியாக நடத்தப்படுவோமா என்கிற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் கலைஞனால் மட்டுமே இவ்வளவு நாசூக்காக வெளிக்கொண்டுவர முடியும்.

கீழ்த்தட்டு விளிம்புநிலை மக்களின் மீது இல்லாத பொல்லாத நற்குணங்களை எல்லாம் ஏற்றி அவர்களைக் கடவுளின் அவதாரம் போல அலங்கரித்து எழுத அமோக முற்போக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் எளிய மனிதர்களின் எதிர்பார்ப்பு என்னவோ என்னையும் உன்னைப் போல் எண்ணி நடத்தேன் என்பதுதான்.

நாம் அன்றாடம் சந்திக்கும் நம் வீட்டுப் பெண்களில் ஒருத்தியைப் போல் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் தேவயானையை தற்கொலைக்குத் தூண்டுவது அவள் மனதில் உண்டாகி இருக்கும் அழுத்தம் என்றால் அதிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பையும் அவள் மனமே உண்டாக்கிக் கொடுக்கிறது.

கதை முடியும் போது அவளைப் பொலவே வாசகனையும் விக்கித்து நிற்கவைத்து விடுகிறான் கலைஞன். 


நன்றி: தி இந்து 21.02.16