Sunday, March 13, 2016

போலிகளைப் பகடி செய்யும் மெளனி - தி இந்து கலை ஞாயிறு பத்தி 13.03.16 (அசல் வடிவம்)

இலக்கியமா, அதெல்லாம் நமக்குப் புரியாது. இலக்கியம் என்பது புரியாமல் எழுதப்படுவது. சமூக அக்கறையும் இல்லாமல் சமூகப் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதவர்கள் எழுதுவது இலக்கியம். தனிமனிதப் பிரச்சினைகளைத் தங்களுக்கு மட்டுமே புரியும்படியாக ஒரு சிறு குழுவினர் எழுதி, அதைத் தாங்களே மெச்சிக்கொள்வதுதான் இலக்கியம். இது போன்ற கருத்துகள், படித்துப் பார்க்க சிறிதுகூட முயலாத இன்றைய ஆரம்ப வாசகர்களிடையே பரவலாக நிலவுகின்றன.

அதிலும் குறிப்பாக மெளனி மனவெளி மனிதராகவே பார்க்கப்படுகிறார். இவர் பெயரைக் கேட்டதுமே கலை கலைக்காகவே என்று எதிர்மறை எண்ணத்துடன் ஒதுக்கி ஒதுங்கி விடுபவர்களே ஏராளம். 

மெளனியிடம் புரியாமல் போக என்ன இருக்கிறது. மெத்தப் படித்த பண்டிதர் போல புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதி வைத்துள்ளாரா. ஒவ்வொரு வார்த்தையும் புரிகிறது. ஒவ்வொரு வாக்கியமும் புரியும்படியாகவே உள்ளது. ஒவ்வொரு பத்தியும் புரிகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகக் கதைதான் புரியவில்லை. 

முப்பதுகளிலேயே ’கதை’ என்கிற அம்சத்தை நீக்கிவிட்டு கதை எழுத முயன்ற முன்மாதிரியற்ற முன்னோடி மெளனி. அன்றாட நிகழ்வுகளின் வழியாக மனித வாழ்க்கையை அவர் ’பார்த்த விதம்’ இன்றைக்கும் புதிதாக இருப்பதுதான் படித்தவுடன் புரியாதது போன்ற பிரமையை உண்டாக்குகிறது. 

மேடை போட்டு மைக் வைத்து ஒலிபெருக்கியில் செய்தால்தான் சமூக விமர்சனம் என்றில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தக் கதை. இது வெளியான வருடம் 1938. சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். தேசபக்தர்கள் என வெளிப்படையாய் பிரகடனப் படுத்திக் கொண்ட எழுத்தாளர்களால் நடத்தப்பட்ட மணிக்கொடி பத்திரிகையில் வெளியான கதை. இதை வெளியிட்ட மணிக்கொடியின் சகிப்புத்தன்மையை இன்றுகூடக் காண்பது அபூர்வம்.

எழுத்தாளன் என்பவன் தீவிர தேச பக்தனாகவோ அல்லது எழுத்தாளன் என்பதற்காகவே தீவிர தேச விரோதியாகவோ இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அவன் எல்லாவற்றையும் எட்டி இருந்து பார்க்கக் கடமைப் பட்டவன். அகலாது அணுகாது தீக்காய்வார் போல எதையும் கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்பதே அதன் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்வதற்கான எளிய அணுகுமுறை என்கிற முதிர்ச்சி உடையவன். 

அவ்வளவு சமூக விழிப்புணர்வுடன் சாட்டையைச் சுழற்றி சமூக விமர்சனம் செய்த புதுமைப்பித்தன் கூட சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாக வைத்து பெரிதாக எதையுமே எழுதவில்லை என்பது அவரிடம் சிலருக்கு இருக்கும் குறை. ஆனால் அன்றைய சமுதாயத்தின் அத்தனைப் பிரதிபலிப்பும் அவர் கதைகளில் விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம். எதை எப்படி எழுதவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி உரிமை எழுத்தாளனுடையது. தொடர்கதை எழுத வேண்டிய நிர்பந்தம் இல்லாததால், சுதந்திரப் பின்னணியை வைத்துக் கதை பண்ண வேண்டிய அவசியமும் புதுமைப்பித்தனுக்கு இல்லாது போயிருக்கலாம். 

புதுமைப் பித்தனைப் போலவே, ஆனால் சாட்டை சவுக்கை சொடுக்காமல், அமைதியாய், தேச பக்தியின் பெயரால் போலித்தனம் எப்படி விரவிக் கிடந்தது என்பதைப் பகடி செய்யும் கதை. மெளனியிடமிருந்து இப்படி ஒரு கதை என்பது இலக்கியவாதிகளுக்கே சற்று அதிர்ச்சிகரமானதுதான். இதே காரணத்தால், அவர்களாலும் இந்தக் கதை சுமாரானது என்று பார்க்கப்படுகிறது. எழுத இதை எடுத்தால்தான் இலக்கியமாகும் இதெல்லாம் ஆகாது என்கிற முன் முடிவுடன்கூடிய மூட நம்பிக்கை, துரதிருஷ்டவசமாக இலக்கிய உலகிலும் நிலவுகிறது என்பதே யதார்த்தம். 

கதையின் இரண்டாவது பத்தியிலேயே, 

”அநேகமாக ஊரின் ‘பொறுக்கிகளை’ (பொறுக்கி எடுத்த பிரமுகர்கள்)” என்று எழுதுகிறார். 

கதை சொல்லியின் நெருங்கிய நண்பன், அந்த ஊரில் பெரிய மனிதர்கள் பலருக்கும் வணக்கம் வைக்கும் அளவுக்குக் கொஞ்சம் பிரபலமானவன்.  தெருவில் யாராவது யாரையாவது கைதட்டிக் கூப்பிடுவது நாகரிகமில்லை என்று எண்ணுகிற அளவுக்கு மத்தியதர வர்க்க கனவான். கையில் கிடைத்த உடையான சில்க் சட்டையை அணிந்து வெளியில் செல்கிறான். யாரோ ஒரு ‘நாட்டுப்புறத்தான்’ கைதட்டி இவனை அழைக்கிறான். சில்க் சட்டை போட்டிருப்பார் என்று அடையாளத்தைச் சொல்லி அவரிடம் அந்தக் கடிதத்தைக் கொடு என்று ரயிலில் ஒருவர் கொடுத்தார் எனச் சொல்லி, சில்க் சட்டை போட்டிருக்கும் இவனிடம் கொடுக்கிறான். அந்தக் கவரில் இருக்கும் முகவரி அவனுடையதன்று. முகவரிக்கு உரியவர் சமுக அந்தஸ்துள்ள வக்கீல். எப்போதும் சில்க் சட்டை போடுபவர் என்கிற அடையாளம் கொண்டவர். ஆனால் அன்று இவனைத் தவிர ஊரில் எவருமே சில்க் சட்டை போட்டிருக்கவில்லை. காரணம் ஊர் மைதானத்தில் அன்று நடந்துகொண்டு இருக்கும் கூட்டம். கூட்டத்திற்கு வந்திருப்பவரோ முக்கியப் பிரமுகரான ‘ஜவகர்’. எனவே ஊரே சீருடை போல் கதராடை அணிந்திருக்கிறது. இதுதான் இந்த ‘மாறாட்டம்’ எழுதப்படுவதற்கான காரணம். இதில் இன்னும் சிறப்பு கதையின் இறுதிப் பகுதி. 

மெளனியிடம் வளவளப்பு எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. ஏனெனில், எழுதிய கதையைப் பலமுறை திரும்ப எழுதி திருத்தி எழுதி கவனமாய் செப்பனிடுபவர். 

கதையின் பாத்திரம் கைக்குக் கிடைத்ததை எடுத்து அணிந்தது என்கிற தகவல் சும்மா சொல்லப்படவில்லை. அன்றைய தினம், ஊரே யூனிபார்ம் போல் கதராடை அணிந்திருப்பதுடன் இதைக் கோர்த்துப் படித்துப் பாருங்கள். 

எது அநாகரிகம். யாரோ யாரிடமோ கொடுக்கச் சொல்லி, ரயிலில் கொடுத்த கவரை, உரியவரிடம் சேர்த்துவிட வேண்டும் என கர்ம சிரத்தையாய் முயலும் ‘பட்டிக்காட்டான்’ தெருவில் கைதட்டி அழைப்பதா அல்லது என்றைக்கும் சில்க் அணியும் ஷோக்குப் பேர்வழியான ஊரின் பெரிய வக்கீல், ஜவஹருடன் மேடையில் அமர்வதற்காக அன்று மட்டும் கதாராடை அணிவதா. பொதுவெளிப் போலிமுகங்கள் மேடையில் தியாக தீபங்களாக காட்சியளிப்பது இன்றுவரை தொடரும் கதைதானே.

எதிலும் புனிதத்தைத் தூக்கி தூர வைத்துவிட்டு அதன் மையத்தை ஊடுருவிப் பார்ப்பவனே உண்மையான கலைஞன். ஆகவேதான் அவனால் காலத்தை வென்று நிற்க முடிகிறது.

மாறாட்டம் https://archive.org/stream/orr-11363_Marattam#page/n0/mode/2up
நன்றி: தி இந்து