Sunday, March 27, 2016

வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பவர் - தி இந்து கலை ஞாயிறு பத்தி 27.03.16 (அசல் வடிவம்)


ஒரு கதை என்பது இதையிதைச் சொல்ல வேண்டும் இதையிதைச் சொல்லக்கூடாது இப்படியிப்படிச் சொல்லவேண்டும் இப்படியிப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று எவ்வித சட்டதிட்டமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், எழுதப்படுவதெல்லாம் கதை என்கிற அந்தஸ்தைப் பெற்றுவிட முடியுமா என்றால், அதுவும் இல்லை.

கதை அல்லது புனைவு என்பது, அரிய தத்துவங்கள், நீதி சாஸ்திரங்கள், உயரிய சிந்தனைகள், கொள்கைக் கோட்பாடுகள், செய்திகள் என இத்யாதி இத்யாதிகள் எல்லாவற்றையும் அல்லது இவற்றில் ஏதாவதொன்றையேனும் வைத்து எழுதப்பட்டிருக்க வேண்டுமா என்றால் அதுவுமில்லை. அப்படியென்றால் எழுதப்பட்ட ஏராளமானவற்றில் ஒரு சில மட்டும் எப்படி உயர்ந்த இலக்கியம் என்று ஆகின்றன. அல்லது இலக்கியவாதிகளால் அவை மட்டும் ஏன் எப்படிக் கொண்டாடப்படுகின்றன.

இதைப் படித்தபோது நன்றாக இருந்தது இதைப் பொலவே அதைப் படித்தபோதும் நன்றாகத்தானே இருந்தது அதை ஏன் இலக்கியம் என்கிறார்கள் இதை ஏன் இலக்கியமில்லை என்கிறார்கள் என்பது பல வாசகர்களின் மனதை அரிக்கும் கேள்வி.

இதற்கு, எவ்வளவு பக்கங்கள் எழுதி விளக்கினாலும் விளங்காது. ஏனென்றால் இலக்கியம் படித்துப் புரிந்துகொள்ளக் கூடியது மட்டுமன்று உணர வேண்டியது. உணர்த்தக் கூடியது. மெத்தப் படித்தவர் எழுதிய கதைகள், கட்டுரைகள் போல் தங்கிவிடுவதும், படிப்பு வாசனையே இல்லாதவர் எழுதும் கட்டுரைகள்கூட கதைகளைப் போல், கனமான கருத்துக்கள் இருந்தும்கூட சுவாரசியப் பாகாய் வழுக்கிக்கொண்டு செல்வதும் நிகழ்கிறது அல்லவா.

மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி, அப்படி ஒதுங்கிய போதும் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டவர் கி. ராஜநாராயணன்.

எந்த சிரமமும் இல்லாமல் எல்லோராலும் செய்யக்கூடிய எளிய காரியம் வேடிக்கை பார்ப்பது. நாம் எல்லொரும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடிதான் வாழ்கிறோம். எழுத்தாளன் வாழ்க்கையையே சற்றுத் தள்ளி நின்று வேடிக்கையாகப் பார்த்தபடி வாழ்கிறான்.

கி. ராஜநாராயணன் 1960ல் எழுதிய மின்னல் கதையிலும் வேடிக்கைதான் பார்க்கிறார். ஆனால் அதை எழுத்தாக்கும்போது எப்படியெல்லாம் வேடிக்கை காட்டி விடுகிறார்.

இந்தக் கதையில், கதை என்று பெரிதாக எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால், வாசகப் பெரும்பான்மையை ஈர்க்கும்படியான சுவாரசியங்களோ திடுக்கிடும் திருப்பங்களோ ஏதுமற்ற கதை. இன்னும் சொல்லப்போனால் கதையின் 80 சதவீதம், அசுவாரசியம் பற்றியதே ஆகும். கதை என்று பொதுவாக அறியப்படும் பொருளில் இதைக் கதை என்று சொல்ல முடியுமா என்பதேகூடச் சந்தேகம்தான். இந்தக் கதையின் கதையின் சிறப்பு அம்சமே போரடித்துக் கொண்டிருப்பதை சுவாரசியமாகச் சொல்வதுதான்.

வெய்யிலில் நிறுத்தப்பட்டு புறப்படக் காத்திருக்கிறது, கரிசல்காட்டு கிராமத்துப் பேருந்து. உள்ளே வெக்கையில் தவித்தபடி இருக்கின்றனர் பயணிகள். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவே அசூயைப் படுமளவுக்கு சகிக்கவொண்ணாச் சூழல். வண்டி புறப்பட்ட பின்னரும்கூடப் பெரிய மாற்றமில்லை. ஒரு நிறுத்தத்தில், கைக்குழந்தையுடன் இளம் தாயொருத்தி மெல்லிய பூங்காற்றைப் போல வண்டியில் ஏறுகிறாள். பஸ்ஸுக்குள் சோம்பி எரிச்சலுடன் இருந்த எல்லோரிடமும் புத்துணர்ச்சி பிறக்கிறது.  ஒட்டுமொத்த பேருந்திலும் குழந்தையின் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. இவர்கள் இருவரும் பயணம் செய்துகொண்டிருக்கும்வரை கலகலப்பும் அழகும் அனைத்துப் பயணிகளையும் புதிய மனிதர்களைப் போல மாற்றி விடுகிறது. கொஞ்ச நேரத்தில் இருவரும் இறங்கிவிடுகின்றனர். பஸ்ஸில் இருந்த பயணிகள் திரும்பவும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றனர்.

இதுதான் கதை. ஆனால், இதைப் படிக்கையில் மேலே சொல்லப் பட்டிருப்பதல்ல கதை. அது வெறும் கூடு மட்டுமே என்று ஒவ்வொரு வார்த்தையிலும் உங்களை உணர வைப்பதே கி. ராஜநாராயணன் என்கிற கதை சொல்லியின் வெற்றி.

இந்தக் கதையில் வரும் குழந்தையை எல்லோரும் கொஞ்சுகிறார்கள். கண்டக்டர் கொஞ்சுவதை ஒரே ஷாட்டில் கவிதையாக்கிவிடுகிறார் கி. ரா.

//டிக்கெட் கிழித்து கண்டக்டர் அந்தக் குழந்தையிடம் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்கி ஜன்னல் வழியே காற்றோடு விட்டது குழந்தை//

கம்யூனிஸ்ட் கட்சிக்காரராய்ப் போராடி சிறைக்கெல்லாம் சென்ற ஒருவர் எழுதிய கதை என்று நம்ப முடிகிறதா. இந்தக் கதையின் மூலம் என்ன பெரிய தத்துவத்தை கொள்கையை கருத்தைச் சொல்லிவிட்டார். அவற்றையெல்லாம் எகப்பட்டபேர் ஏற்கெனவே தலையணை தலையணையாய் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். அவற்றை நகலெடுப்பதல்ல கலைஞனின் வேலை.

சோர்வுறச் செய்யும் தருணங்களைப் போலவே புத்துணர்வூட்டும் தருணங்களையும் கொண்டதுதான் வாழ்க்கை. வெக்கையும் புழுக்கமும் போலவே காற்றும் சுகந்தமும் கூட வீசக்கூடிவைதாம். அசூயை எரிச்சல் உண்டாக்குவைதைப் போலவே அழகு மனதை ரம்மியமாக்கக் கூடியது. இதெல்லாம் எவருக்கும் தெரியாத புதிய விஷயமா என்றால் இல்லை. ஆனால் எழுதப்பட்டிருக்கும் விதத்தில் கரைந்து நம்மை மறந்து சில தருணங்களை சில காட்சிகளை அற்புதம் என நெகிழ்ந்து மனதை விகாசமாக்கி அதில் அன்பைத் ததும்ப வைப்பதுதான் கலை. அதிலும் குறிப்பாக இப்படியான அதீத வார்த்தைப் பிரயோகங்கள் எவையுமின்றி இதை சாதிப்பதே கலையின் பூரண வெற்றி. ஒரு மின்னல் வெட்டாகத் தோன்றி மறையும் அற்புதத்தை, அன்றாடக் காட்சிபோல் இயல்பாகக் காட்டுவது அப்படியொன்றும் சாதாரண விஷயமில்லைதானே.


கி. ராஜநாராயணன் இன்று 94 வயது தாத்தாவாக இருக்கிறார். ஆனால் இந்தக் கதை எழுதியபோது அவருக்கு 38 வயதுதான். எழுத்தாளனின் முதிர்வு வயது காரணமாக வருவதன்று. அது வயதைத் தாண்டிய மனத்தின் முதிர்ச்சி. 


நன்றி: தி இந்து 27.03.2016