Wednesday, April 27, 2016

எழுத்துக் கலை - ஆகாத்தியமும் ஆத்மார்த்தமும்

தெய்வ மிருகம் - ஜெயமோகன் 

//அப்பா நேராக இறங்கி வெளியே செல்ல அம்மா கதவை மூடிவிட்டு வந்து என்னருகே அமர்ந்து என் தலையைக் கோதிவிட்டுக்கொண்டு ஆறுதல் சொன்னாள்.// 

அன்பையன் வைத்தியரைப் பார்க்க, தனியாகத்தானே சென்றார் அப்பா. மறுநாள் மதியம்தானே வைத்தியரை அழைத்து வருகிறார். 

//மறுநாள் மதியம்தான் அப்பா வந்தார். அண்டுகோட்டு அன்பையன் வைத்தியரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்.// 

அப்பாவும் வைத்தியருமாக அவர்கள் இருவர் மட்டும்தானே வருகிறார்கள் என்றுதானே ஆரம்பத்தில் எழுதியிருக்கிறார். அப்புறம் எப்படி உச்சகட்டக் காட்சியில் இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் வர முடியும்.

//அம்மா சொன்னாள் ”நீ சொல்லுவே…உனக்கு என்ன தெரியும்? நீ கைவாதம் வந்து முருங்கையிலையும் சோறும் தின்னு கிடந்த காலத்திலே அவர் ஒரு துண்டு மீனு வாயிலே வைச்சிருப்பாரா?” அன்று அன்பையன் வைத்தியர் வீட்டுக்குப் போன அப்பா அவர் கதவைத்திறந்ததும் அப்படியே முகம் தரையில் அறைபட்டு உதடு கிழியும்படியாக அவர் கால்களில் குப்புற விழுந்து பாதங்களைப் பற்றிக்கொண்டு ”என் மகனை ரெட்சிக்கணும் வைத்தியரே”என்று கதறி அழுதார். அவருடன் வைத்தியர் கிளம்பி வந்தார்.// 

கூடச் செல்லாத அம்மாவுக்கு இது எப்படித் தெரியும். அப்பா, வைத்தியர் வீட்டில், தான் செய்ததை அம்மாவிடம் தானே சொல்லிக்கொண்டாரா. அவர் கேரெக்டர் பில்டப் படி அது சாத்தியமே இல்லையே. அன்பையன் வைத்தியரோ அம்மாவிடம் ஓரிரு வார்த்தைகள் தாண்டிப் பேசுபவரில்லை. போக, உன் புருசன் என் காலைப் பிடித்து எப்படியாவது என் மகனைக் காப்பாற்று எனக் கூறினான் என்று வாழ்வில் எப்பொதாவது ஒருமுறை அம்மாவிடம் அன்பையன் கூறியிருக்கக்கூடும் என்று ரொம்ப தாராளமாய் நாமாகக் கற்பனை செய்துகொண்டாலும்கூட, வைத்தியர் அற்பத்தனமாக, ஜெயமோகன் போலத் தம்பட்டம் அடித்துக் கொள்பவர் என்றாகி இவ்வளவு தூரம் கட்டியெழுப்பிய அன்பையனின் கேரெக்ட்டரைசேஷனும் காலியாகிவிடாதா. 

ஆரம்பத்தில், ஜெயமோகன் பாலகனாக உள்ளறையில் இருக்கிறான். 

//வைத்தியர் சட்டையைக் கழற்றி ஆணியில் தொங்கவிட்டார். குடையையும் மாட்டினார். நல்ல தொப்பை. மாநிற உடலெங்கும் சுருள்முடி. முன்வழுக்கை. மீசை கிடையாது. வெற்றிலைக்கறைபடிந்த பற்கள். பெரிய தங்கச்சங்கிலி அணிந்திருந்தார். அதன் நுனியில் சிலுவை ஆடியது.// 

எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் தெரிகிற இவ்வளவு டீட்டெய்ல், என்னதான் கருவிலேயே திருதிருவென திணிக்கப்பட்டு இருந்தாலும், பார்க்கும் முன்னரே எப்படி பாலகன் ஜெயமோகனுக்கு நுனியிலாடும் சிலுவை உட்படத் தெரிந்திருக்க முடியும் என்கிற கேள்வியைப் பின் வரும் வரி எழுப்பவில்லையா. 

//”எங்க கொச்சன்?” என்றார். அம்மா ”அகத்து கிடப்புண்டு”என்றாள்// 

இல்லை எனில் நாமெல்லாம் எதை வாசித்து என்ன கிழித்துக்கொண்டு இருக்கிறோம் என்று யாருக்கேனும் இதைப் படித்தபின் தோன்றுமேயானால் ஆகாத்திய எழுத்திலிருந்து ஆத்மார்த்த எழுத்தை நோக்கி அவர் பயணப்படக்கூடும். 

பலஹீனமான இலக்கிய ஹிருதயர்களைக் கிளைமாக்ஸில்  கண்ணீர்விட்டுக் கதறியழுதபடி திரும்பத்திரும்பப் படித்துப் பாராயணம் செய்யவைக்க இப்படித்தான் எழுத வேண்டும் என்று மனித தெய்வமாகப் போற்றப்படும் ஜெயமோகனுக்குத் தெரிந்திருப்பதே எழுத்து மிருகமாக அவரது வெற்றி.

ஜெகம் புகழும் புண்யகதை ஜெயமோகனின் கதையே

//இந்தக் கொச்சனுக்க ஜாதகம் பாத்திருக்கேன். கீர்த்திமானாக்கும். அதனால ஒரு கொறையும் இருக்காது.”என்றார் அன்பையன் வைத்தியர்//

மணிரத்னம் கமல் படங்களேல்லாம் பண்ணப்போவதுகூட ஜாதகக் கட்டத்தில் ஜெய்மோகன் நாலாப்பு படிக்கும்போதே வைத்தியருக்குத் தெரிந்திருக்கும் ஆனால் பாவம் எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் தெரியாதாதால் 2010ல் எழுதிக்கொள்ளாமல் அடக்கமாக இருந்தாகவேண்டி இருந்திருக்கிறார்.  

//அன்பையன் வைத்தியர் ”கொச்சனுக்க ஜாதகம் நான் பாத்தேன். சரஸ்வதி கடாட்சம் உண்டு…”என்றார் .

தான், பத்து வருட மகாபாரதம் எழுதப் போவது 2010ல் எழுத்தாளருக்குத் தெரியாமல் போயிற்றே பாவம்.

அறம் கதையில் வரும் பெரியவர்தான், 20-25 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிச் சொல்லியிருப்பாரா,

//பெரியவர் என்னைப்பார்த்து சிரித்து ’இவரு வேற மாதிரி ஆளு. இவருக்கு கதவெல்லாம் தானா தெறக்கும். இல்லேன்னா மனுஷன் ஒடைச்சிருவார்.சில ஜாதகம் அப்டி…’ என்றார்.//

அந்தப் பெரியவர், எம்.வி.வெங்கட்ராம் என்பதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்திவிட கதை எழுதிய கையோடு ஜெயமோகனும் ஜெயமோகர்களுமாகச் சேர்ந்துகொண்டு விக்கிப்பீடியாவில் அறம் கதையைச் செருகியது வரலாறில்லையா

சில ஜாதகம் இப்டி.