Sunday, May 29, 2016

போதை ஏற்றாத கதை - தி இந்து கலை ஞாயிறு பத்தி 29.05.16 (அசல் வடிவம்)

மேலோட்டமான பொழுது போக்கு எழுத்தைத்தாண்டி கொஞ்சம் ஆழமாகப் படிக்கத் தொடங்கும் ஆரம்ப வாசகனைக் கவரக் கூடியதாக இருப்பது உணர்ச்சிகரமான நெகிழ வைக்கும் எழுத்து. ஆனால் சிறந்த இலக்கியவாதிகளாக அறியப்படும் பெரிய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உணர்ச்சிக் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விதத்தில் எழுதுவதில்லை. இதன் காரணமாகவே தொடக்க வாசகர்களுக்கு இலக்கியம் சுவாரசியமானதில்லை என்கிற எண்ணம் தோன்றிவிடுகிறது.

மனதை விம்மச் செய்வதற்கும் விரியச் செய்வதற்குமான வித்தியாசமாக இதைப் பார்க்கலாம்.

கதையின் உயிர் கருவில் இருக்கிறது. உணர்வுபூர்வமாய் ஒன்றை அனுபவித்த கலைஞன், வாசகனை உணர்ச்சிபூர்வமாய்த் தூண்டுவதைவிட உணர வைப்பதையே முதன்மையான காரியம் எனக் கருதுவான். அதன் காரணமாகவே அதீத நாடகீயமாய் விவரிக்கும் அணுகுமுறையைத் தவிர்த்துவிடுகிறான்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் சுந்தர ராமசாமியின் பள்ளம் கதையைக் கூறலாம். இந்தக் கதையை, இடதுசாரி வங்கித் தொழிற்சங்கத்தில் தீவிரமாக இயங்கத் தொடங்கியிருந்த நண்பரொருவருக்கு 80களில் படிக்கக் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்துவிட்டு, என்ன கதை என்றார். சினிமா என்றேன். ஒரு கணம் அசைவற்று நின்று, சினிமா பள்ளம் இது போதும். இதுவே பல விஷயங்களைச் சொல்லிவிடுகிறதே என்று பிரமித்தார். 80கள், அரசியலில் கோலோச்சி தமிழ்நாட்டின் தலைவிதியை சினிமா தீர்மானிக்கத் தொடங்கியிருந்த காலம். இந்தக் கதை 1979ல் வெளியாகி இருக்கிறது.

எழுத்தாளரின் அடையாளங்களுடன் தன்மை ஒருமையில் சொல்லப்பட்ட கதை. துண்டுதுண்டான பல காட்சிகளை கொலாஜ் எனும் இணையொட்டுப் படமாக விவரிக்கப்படும் கதை.

என்னதான் முதலாளி மகன் என்றாலும் ஓய்வு தினத்தன்றும் கடையைத் திறக்க வேண்டியாதாக இருக்கிற அலுப்பு. ஓய்வு நாளைக் கூட தனக்கென்று அனுபவிக்க முடியாத வருத்தம். வெள்ளிக்கிழமை விடுமுறை விடும் துணிக்கடை.

கைக்குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி புதுப் படத்தின் முதல் காட்சிக்காக சந்ததிகளாக வெள்ளியன்று வெயிலில் விரையும் பெண்கள்.

கறாரான அப்பாவின் தினப்படிகள். கடையின் அலுவலக அறையில் அவர் உணரும் பாதுகாப்பு. 

பழைய அரசு அலுவலகக் கட்டிடம். அங்கே அபினுக்காகக் காத்திருக்கும் போதைக்கு அடிமைகளான முதியவர்கள்.

கதையின் இறுதியில் வரும், உதவியாளன் கைக்குழந்தையாய் இருக்கையில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம்.

ஆரம்ப வாசகனுக்கு, இதைப் படிக்கையில், கதை ஆற்றொழுக்காக இல்லாது தொடர்பற்றது போல் தோற்றமளித்து இடைமறிக்கும் விவரிப்புகள் எதற்காக என்று தொடக்கத்தில் தோன்றக்கூடும். ஆனால் கதையில் சொல்லப்படும் ஒவ்வொன்றும் எதற்காகச் சொல்லப்படுகிறது என சற்றே யோசிக்கத் தொடங்கினால் பள்ளம் நிரம்பிவிடும். 

இந்தக் கதை ஏன் இந்த வடிவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

சினிமாக் கொட்டகைக்குள் உலகை மறந்து ஒன்றிவிடும் பெண்களையும் -

ஓய்வு நாட்களில் நண்பனுடன் பகலில் இலக்கியம் பேசத்தொடங்கி இருட்டியபின்பும் விளக்கு போடக்கூட மறந்து ‘வெறியுடன்’ விவாதித்துத் துய்த்துக்கொண்டு இருப்பதையும் –

அப்பா தம் அலுவலக அறையில் சகலத்தையும் மறந்து வேலையில் சந்தோஷமாக மூழ்கிவிடுவதையும் –

போதைக்கு அடிமையாகி வயதான காலத்தில் அபினுக்காகக் காத்திருக்கும் வயசாளிகளையும் -

ஒரே சரடில் இணைத்துப் பார்த்தால், வாசக மூளையின் இடுக்குகளில் தொந்தரவு செய்துகொண்டிருக்கும் இருட்டுத் திட்டுகள் அடுக்கடுக்காய்த் திறந்துகொண்டு வெளிச்சப்படக்கூடும்.

மனிதர்கள் அனைவருக்குமே எதிலாவது மூழ்கி தம்மைக் கரைத்துக்கொள்வது என்பது பெருமகிழ்வைத் தரக்கூடியது. அவரவர்க்கு அவரவர் போதை அத்யாவசியம். வாழ்வின் யதார்த்தக் குரூரத்திலிருந்து கொஞ்ச நேரமேனும் தப்பிக்கக் கிடைத்த இருட்டில் கிடைக்கும் ஆனந்தத்தின் மிடக்கு அளப்பரியது. அதுதான் அவர்கள் வாழ்வதற்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கிறது.  கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு சினிமாவுக்கு விரையும் பெண்ணுக்கும் தந்தையின் கெடுபிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது பிரத்தியேக இலக்கிய உலகில் நண்பனோடு உலவும் இளைஞனுக்கும் ஒருபோலத் தேவைப்படுகிறது. ஒரு போதை விழிப்பிலிருந்து கிறக்கத்துக்கும் மற்றொன்று உறக்கத்திலிருந்து விழிப்புக்கும் எதிரெதிர் திசைகளில் இட்டுச் செல்கிறது.

கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்

என்கிற கவி ஆதங்கத்தின் கதை வடிவம் இக் கதை.

வெகுஜன எழுத்து வியாபாரியின் கையில் இந்தக் கதை கிடைத்திருந்தால் வாசகனைப் பிழியப் பிழிய அழ வைப்பதிலேயே குறியாய் இருந்திருப்பான் - அதைத்தானே நாயக வழிபாட்டுச் சினிமாக்களும் செய்கின்றன என்கிற சுரணையே இல்லாமல். ஆனால் இந்தக் கதையின் குவி மையம் போதையைக் குறித்த தெளிவான ஆழமான அணுகல். பல்லாயிரம்பேரை கவர்ந்திழுக்கும் சினிமாவின் போதையை விமர்சிக்கப் புறப்பட்டு கதையின் இறுதிக் காட்சியை நாடகீயமாய் கதறக் கதற விவரித்து எழுதுவதன் மூலம் எழுத்தில் மற்றொரு போதையை ஊட்டுவதல்ல கலைஞனின் நோக்கம்.

பார்வையாளனுக்கு எவ்விதத்திலும் சிந்திக்கும் சிரமத்தைக் கொடுக்காமல், கருப்பு வெள்ளை நல்லவன் கெட்டவன் என்கிற இருமைகளை ஆற்றொழுக்காய் சொல்லிச் சென்றுகொண்டிருந்த சினிமா, மக்களின் மீது ஏற்படுத்திகொண்டிருந்த தாக்கத்தைச் சொல்ல வரும் சுந்தர ராமசாமி நேர்க்கொட்டில் கதை சொல்லும் பாணியை இதில் தவிர்த்திருப்பது தற்செயலல்ல.

கதை சொல்லி, சினிமாவுக்கு ஓடும் பெண்களைப் பராக்கு பார்த்தபடி கடை திறக்கத் தாமதமாய் வந்து சேருவதும் அந்தத் தாமத கால அவகாசத்தை சினிமாத் தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதில் கடைப்பையன் செலவிடுவதும் எவ்வளவு இயல்பாய் வந்து உட்கார்ந்திருக்கின்றன.

கதையின் கிளைமாக்ஸை எப்படியெல்லாம் நாடகீயமாக்கி நம்மைக் கதறவைக்கலாம் என்பதிலல்ல, சினிமாவின் போதை இந்த அளவுக்குப் போகிறதென்றால், அது எந்த அளவுக்கு மக்களின் நாடி நரம்புகளில் காலங்காலமாய் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் நம் கவனத்தைக் குவிப்பதே சுந்தர ராமசாமியின் நோக்கம்.

எந்தக் கதையிலும் எழுத்தாளனின் கவனம் குவியுமிடம் எது என்பதே அவனது நோக்கத்தைத் தீர்மானிக்கிறது. நோக்கமே அவனைக் கேளிக்கையாளனிடமிருந்து பிரித்துத் தனியே நிறுத்துகிறது. சொல்கிற விதமே அதைக் கலையாய் உயர்த்துகிறது.

நன்றி: தி இந்து