Sunday, June 5, 2016

குருவி சாமியார் [சிறுகதை]


பெண் பித்தன் குருவி சாமியார் ஆன கதை பெரிய கதை. அதைச் சொல்லும் முன் அவர் எப்படி சாமியார் ஆனார் என்பதைச் சொல்லியாக வேண்டும். அதைவிட முக்கியம், சக்தி வாய்ந்த சித்த புருஷர் என தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களுக்கே எப்படி அவர் இன்னுமொரு போலிச் சாமியார் என்று ஆனார் என்பதைச் சொல்லியாக வேண்டியது. ஆனால் இவையனைத்தையும் விட முக்கியமானது அவர் முக்தியடைந்த சம்பவம்.

அவர் ஒன்றும் பிறவி சாமியாரில்லை. நம்மைப் போலவே இளம்பிராயத்தில் அவரும் அடிக்காத லூட்டியில்லை. உருப்பிடுவாயா நீ நாசமாப் போவே என அவரை ஆசீர்வதிக்காத பெண்களே இல்லை என்கிற அளவுக்கு பெயர் பெற்றவர். ரிஷிமூலத்தில் அவர் இந்துவாக இருந்திருந்தால் கூட எந்த கோபிகையும் அவரை கிருஷ்ணனாக எண்ணிப் புளகாங்கிதப் பட்டிருக்க மாட்டாள். அவரோ முஸ்லீமாக வேறு பிறந்து தொலைத்திருந்தார். ஆனாலும் அவர் மத பேதம் பார்த்ததில்லை குறிப்பாகப் பெண்களிடம். தன் வீட்டுப் பெண்களிடம் வயது வித்தியாசம் பாராமல் சீண்டி விளையாடுபவனை எந்த மதத்துக்காரன்தான் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பான். ஆகவே ஊருக்குள் அவருக்கு எல்லோரிடமும் அப்படியொரு கெட்ட பெயர்.

பொறுக்கி என்று கூப்பிடாத பெண்களே கிடையாது என்றாலும் அவரோ அதை செல்ல வசவு பிரியமான திட்டு என்றே எடுத்துக் கொண்டார். இத்தனைக்கும், தம் பால்ய பருவத்திலிருந்தே அவர் எந்தப் பெண்ணிடமும் கையைக் காலை நீட்டியதில்லை. ஆனால் வாடி போடி என கண்ணடித்தும் ஜாடைமாடையாய் இரட்டைப் பொருளில் பேசியும் எவளையாவது வம்புக்கு இழுக்காமல் ஒரு நாளும் கழிந்ததில்லை.

பாலியல் துன்புறுத்தல் கடுமையான தண்டனைக்குள்ளாகும் சட்டமாக அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே திடீரென்று ஒரு நாள் அவர் அமைதியாகிவிட்டார். அமைதி என்றால் மயான அமைதி. இருக்குமிடம் தெரியாத அளவுக்கு, பேச்சு மூச்சே இல்லை. எப்படி இப்படியொரு மாற்றம் அவரிடம் நிகழ்ந்ததென்று யாருக்கும் புரியவில்லை. வீட்டில் இருக்கிற நேரம் குறைவென்றாலும் அந்தக் கொஞ்ச நேரத்திலும் இந்தப் பையனைப் பற்றியா உலகம் இப்படிச் சொல்கிறது என்கிற அளவுக்குப் பரம சாது. எனவே, வீட்டில் இருந்தவர்களுக்கு முதலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஊரே கரித்துக் கொட்டினலும் ஐந்து வேளை மசூதித் தொழுகைக்கு செல்லத் தவறாத பையன் என்பதால் அவர் நடத்தைக்காக ஏரியாக்காரர்களும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. சொந்த ஏரியாவில் அவர் எந்த பிரச்சனையும் வைத்துக் கொள்ளாத அளவுக்கு புத்திசாலி என்பதும் இன்னொரு காரணம். இந்தப் பொறுக்கிக்கு என்ன ஆயிற்றென்று பக்கத்து ஏரியா பெண்கள் விநோதமாகப் பார்க்கத் தொடங்கினர். அவர் வம்பிழுக்காமல் போனதில் இளம் பெண்கள், யாரிடமும் சொல்லிக்கொள்ளா விட்டாலும் தனக்கு முக்கியத்துவம் குறைந்து போனதாய் மனதார உணரத் தொடங்கினார்கள். 

அமைதியை அடைந்ததும் அவர் செய்த முதல் காரியம் அசைவம் உண்பதைக் கைவிட்டது. அடுத்த காரியம் மசூதிக்குச் செல்வதைக் கைவிட்டது. கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திய கொஞ்ச காலத்தில் வீட்டில் உண்பதைத் தவிர்க்கத் தொடங்கி வீட்டுக்கு வருவதையே நிறுத்திக் கொண்டுவிட்டார். ஒரு நாள் திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறினார். அன்று தற்செயலாக அணிந்திருந்தது கருப்புச் சட்டை. வேறு வழியின்றி அதைக் கழற்றாமல் இருக்கத் தொடங்கவே அதுவே நிரந்தரமாகிவிட்டது. நீல நிற கால்சாராய் நீர் பாரா காரணத்தால் நாள்பட்ட அழுக்கில் கருக்கத் தொடங்கிற்று. குளிக்காமல் கண்டகண்ட இடத்தில் உட்காரத் தொடங்கியதில் பார்வைக்குப் பைத்தியம் போல காட்சியளிக்கத் தொடங்கினார். பதறிப்போன பெற்றோர்கள் ஏர்வாடிக்கு அழைத்துச் சென்றனர். வழியில், சிற்றுண்டிக்காகவும் சிறுநீர் கழிப்பதற்காகவும் வண்டி நிறுத்தப்பட்டது. எல்லோரையும் போல் இறங்கியவர் வண்டியில் திரும்ப ஏறவே இல்லை. தேடிச் சலித்த, பிள்ளைகளும் பெண்களுமாய் ஏழெட்டைக் கொண்ட பெரிய குடும்பம் ஏர்வாடி போகாமலே ஊர் பார்க்கத் திரும்பி அவர் நினைவை மெல்ல ஒழித்தது.

வாலிபத்தின் வசீகரம் புற அழுக்குகள் அனைத்தையும் தாண்டி அவர் முகத்தில் ஜொலித்துக்கொண்டு இருந்தது. அவர் இருந்த ஊர் எதுவென்றோ அது அவரது ஊரிலிருந்து எத்தனை தூரமென்றோ அவருக்கு எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ளும் அக்கறையும் அவருக்கு இருக்கவில்லை. வந்து சேர்ந்த ஊரில் வாயைத் திறந்து அவர் பேசியதே இல்லை என்றாலும் அவப்போது வந்து பார்த்து உண்ண பழம் பால் என்று எதையேனும் யாரேனும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். கிடைக்கும்போது சாப்பிடுவது கிடைத்த இடத்தில் படுத்துக் கொள்வது என்று அவர் பாட்டுக்கும் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு வேளை இருந்த இடத்தில் மறு வேளை இருப்பதில்லை என்கிற உள்ளூர் செய்தி மெல்ல மருவி ஒரு நேரம் தெரிந்த இடத்தில் மறு நேரம் தெரிவதில்லை என்று ஊர் தாண்டிப் பரவத் தொடங்கிற்று. வெளியூரிலிருந்தெல்லாம் ஆட்கள் வரத் தொடங்கினார்கள். வந்து போனவர்கள், ஒரு முறை பார்த்துவிட்டு வந்ததில் தமக்கு நடந்ததாய் நம்பிய திருப்பங்களைச் சொல்லப்போய் அவரைப் பற்றிய அச்சடிக்காத புராணங்கள் ஊர் ஊராய் புழங்கத் தொடங்கின.

அவர் யார் இன்னார் என்பதே தெரியாத காரணத்தால் எல்லா தரப்பிலிருந்தும் ஏகப்பட்டபேர் குவியத் தொடங்கினர். எங்கிருக்கிறார் என அவரைத் தேடி அலையவேண்டி இருப்பது ஒன்றே, பார்க்க வரும் பக்தர்களுக்கு அவரிடம் தீராத குறையாய் இருந்துகொண்டு இருந்தது. கூட இருந்தவர்கள், ஒரு கொட்டகை போட்டு, அவரை எப்படியாவது ஒரு இடத்தில் நிரந்தரமாக உட்கார வைத்துவிட வேண்டும் என அவர் அருகில் ஒரு உண்டியலை வைத்தனர். எவ்வளவு பேர் எவ்வளவு பணம் போட்டாலும் மர்மமான முறையில் உண்டியல் காலியாகவே இருந்தது. அதைப் போலவே அந்த ஊரில் இருந்தவர் வந்தவர் போனவர் என்று தினந்தோறும் யாராவது ஒருவருக்கு எங்காவது ஒரு இடத்தில் புதையல் போல பணம் கிடைத்துக் கொண்டே இருந்தது. ஒருவருக்குக் கூட இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கத் தோன்றவில்லை. இரண்டும் அவரது மகிமை என்று எல்லோரும் வாய்க்கு வாய் சொல்லி புளகாங்கிதப் பட்டுக்கொண்டனர். அவரைப் பார்க்கப் போனால் புதையல் கிடைக்கும் என்பதற்காகவே பெருங் கூட்டம் அலைமோதத் தலைப்பட்டது.

வெளியூர் பக்தர்களின் கூட்டம் நெரியத் தொடங்கியதில், கொஞ்சம்கொஞ்சமாக கடைகண்ணிகள் பெருகி பெரிய வர்த்தக ஸ்தலமாகி வசதியாகி வீடுகள் உயரத் தொடங்கின. அந்த ஒரு காரணத்துக்காகவே ஊரின் சொத்தாக உள்ளூர்க்காரர்களால் உள்ளூர அவர் போற்றப்பட்டார்.

தரிசிக்க வந்து செல்வோர் கும்பிட்டாலும் காலில் விழுந்தாலும் திருப்பிக் கும்பிடவோ ஆசி வழங்கவோ செய்யாமல் தம் பாட்டுக்கும் அவர் எங்கோ பராக்கு பார்த்தபடி இருந்தார். அதற்கெல்லாம் வாய்க்குவந்தபடி அவரவர்களே ஆன்மீகமாய் விளக்கமளித்துக் கொள்வதில் தேர்ச்சி பெறத் தொடங்கிவிட்டிருந்தனர் பக்தர்கள். பக்தகோடிகளின் கும்பல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு செல்லத் தொடங்கி காற்றோட்டமின்றி இரண்டு மூன்று முறை அவர் மயங்கி விழ நேர்ந்தது. அவ்வப்போது மூச்சுப் பேச்சின்றி அவர் விழுந்து கிடப்பதை, புதையல் கிடைப்பதைப் போன்ற அவரது அட்டமா சித்து வேலைகளில் அதுவும் ஒன்று என மெய் சிலிர்த்தது கூட்டம்.

ஒரு நாள், எதிரில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண்மணியின் தலையில் திடீரென கை வைத்துக் இமைமூடினார். அந்தப் பெண்ணின் கணவரும் பிள்ளைகளும் பக்திப் பிரவாகத்தில் கண்மூடி பிரார்த்தித்தனர். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் என சுற்றியிருந்த அனைவரும் மயிர்க்கூச்சம் அடைந்தனர். கொஞ்ச நேரத்துக்குப் பின்னர் தலையில் அகல வைத்திருந்த கையைக் கண்களைத் திறக்காதபடியே, முன் தலை நெற்றி வழியே மூக்கு மோவாய் கழுத்து மார்பு என்று வயிறு வரை மெல்ல இறக்கித் தடவி விட்டார். பெருத்த மார்பகம் கொண்டிருந்த அந்தப் பெண்மணியோ மெல்ல நெளிந்தாள் கணவனைக் கண்ணோரம் பார்த்தபடி. கணவனோ பரவசத்தில் இருப்பதைப் போல் கண்டுகொள்ளாமல் இருந்தான். அன்றுமுதல் ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவரையும் அடிவயிறுவரை தடவி ஆசீர்வதிக்க ஆரம்பித்தார்.

விஷமிகளால் இவை யூடியூப் விடியோக்களாகின. உலகமெல்லாம் பார்த்துப் பொதுவெளியில் துப்பிற்று. வீட்டின் தனியிருட்டில் கணினியில் மற்றவர் வீட்டுப் பெண்களைப் பார்த்து ரசிப்பவர்களின் பிரத்தியேகக் கேளிக்கையாயின இந்த வீடியோக்கள். விதவிதமான பெண்களின் கழுத்துக்குக் கை வந்ததும் நிறுத்தி நிறுத்தி பார்க்கத் தொடங்கினர். பக்தர்களும் பகுத்தறிவாளர்களும் இணையம் டிவி என்று கிடைத்த இடங்களிலெல்லாம், அவர் செய்கை சரியா தப்பா என்று கத்திக் கத்தி ரத்தம் கக்கும் அளவுக்கு விவாதிக்கத் தொடங்கினர்.

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண்பதற்காகவே பெருங்கூட்டம் முடியடித்தது. அவரோ எப்போதும் போல இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே இருந்தார் என்றாலும் செல்போன்களும் வீடியோ கேமராக்களும் அவரை விடாது துரத்தின. ஏதோ ஒரு விசேஷ தினத்தன்று இதை அரசியல் செல்வாக்குள்ள தொலைக்காட்சியொன்று நேரலையாகக் காட்டுவதாய் அறிவித்தது.  டிவியில் நன்றாகத் தெரிவதற்காக பவுடரை அப்பிக்கொண்டு முதலாவதாக வந்து உட்காரக் காத்திருந்தாள் கட்டுமஸ்தான இளம் பெண்ணொருத்தி. தலையிலிருந்து கையால் ஆசீர்வதித்துக் கொண்டே வந்தார். அதுவரை பட்டும்படாமல் தடவி ஆசீர்வதித்துக் கொண்டிருந்தவர், டிவி வழியாக உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் அன்றைய தினம் பார்த்து, மார்புக்கு வந்ததும் கையை எடுக்காமல் அங்கேயே வைத்து அழுத்திக்கொண்டு இருந்தார். கேமாரா அதை ஜூம் செய்தது. அந்தப் பெண் கலவரப்பட்டு அழத் தொடங்கினாள். தற்காலிகமாய் பொருத்தப்பட்டிருந்த பிருமாண்டமான திரைகளில் பல்லாயிரம் பேர் பார்க்க அந்தக் காட்சி தெரிந்தது. கூட்டம் இரண்டுபட்டுக் கொந்தளித்தது.  கலவரம் மூண்டது. எல்லோரும் எல்லோரையும் தாக்கிக்கொண்டனர். ஒரு கும்பல் அவர் மீது விழுந்த அடிகளைத் தம் முதுகில் தாங்கி ரணமாக்கிக் கொண்டது. பாதுகாப்பிற்காக நின்ற போலீஸ் தடியடி செய்தே கலவரத்தை அடக்கவேண்டியதாயிற்று. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

போலி சாமியாரை பாலியல் வன்கொடுமையின் கீழ் கைது செய், குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே வை, என நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. அரசு அவருக்குப் பாதுகாப்பாக, துப்பாக்கி ஏந்திய ஆயுதம் தரித்த நான்கு தனிப்படைக் காவலர்களைப் போட்டது. மனம்போன போக்கில் அவர் திரியும் காட்டு மேட்டுக்கெல்லாம் துப்பாக்கியும் கையுமாக அவர் பின்னாலேயே அலைய நேர்ந்தமைக்காக அவர்கள் தம் விதியை நொந்து கொண்டனர். நால்வரில் ஒருவனுக்கு இப்படியோர் அபூர்வ புனிதப் பயணம் மேற்கொள்ள நேர்ந்ததில் அபார திருப்தி, எப்படியும் தனக்கொரு சந்ததி கிடைத்துவிடும் என்று.

அவர் வாழ்க்கை அகழ்வாராய்ச்சிக்கு உள்ளாகிற்று. அவருடைய சொந்த ஊரின் இடதுசாரி பகுத்தறிவு அறிவுஜீவி ஒருவர், பால்ய பருவத்திலிருந்தே அவர் எப்பேர்ப்பட்ட பொம்பளைப் பொறுக்கி என்பதைக் கண்டுபிடித்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாகப் போட்டார். அது ஏகப்பட்ட லைக்குகளுடன் எண்ணிறைந்த முறை ஷேர் செய்யப்பட்டது. அதன் ட்விட்டர் சுட்டி எக்கச்சக்கமாய் ரிட்விட் செய்யப்பட்டது. #பொம்பளைப்_பொறுக்கி_போலி_சாமியார் என்கிற இணைப்பு டிரெண்டிங்கில் வந்து இரண்டாவது உச்சத்தைத் தொட்டது. தமிழுக்கு இது ஓர் உலக சாதனை என்றனர் ட்விட்டர் ஆட்டிகள்.

கலவரம் ஓய்ந்த இரண்டாவது நாளே கமுக்கமாய் அவருக்கான பாதுகாப்பை விலக்கிக் கொண்டது அரசு. இந்தப் பரபரப்பு மெல்ல ஒயத் தொடங்கிய சமயத்தில் ஒரு நாள் திடீரென அவரைக் காணவில்லை. முற்போக்கு ஊடகங்கள் அவர் தலைமறைவாகித் தப்பி ஒடிவிட்டார் என்றன. அவரது எக்கச் சக்க சொத்துக்கள் எங்கே யாரிடம் உள்ளன என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தன. ஆன்மீக ஊடகங்கள், அவரது செய்கை ஆட்சேபத்துக்கு உரியதாய் இருந்தாலும் அவரது சக்தி அளப்பரியது என்பதில் சந்தேகமில்லை, இது அவரது இன்னொரு சித்து விளையாட்டு என்று புதையல் கிடைத்த சிலரின் நேர் காணல்களை ஒளிபரப்பின. 24 X 7 இணையத்துக்கும் ஊடகங்களுக்கும் அடுத்தடுத்துப் பேச பல்வேறு திசைகளில் இருந்தும் எதாவதொன்று வந்துகொண்டே இருந்ததில் கொஞ்ச நாளில் ஒரு வழியாய் எல்லோரும் பேசி வைத்துத் தீர்மானம் போட்டது போல அவரை மறந்தே போயினர்.

பற்பல ஆண்டுகள் உருண்டோடின. டிவிக்களில் ஆவேசமாய் பிறாண்டிக்கொண்ட தலைமுறை முடியுதிர்ந்து பல் போய் சதை தொங்கி வயோதிகமேறி தடியூன்றித் தள்ளாடத் தொடங்கிற்று.

எழுதுகோலும் தாளுமாய் யாருமற்ற கடற்கரையில் காவிக் கோவணத்துடன் அமர்ந்திருந்த அவர் கனிந்த பழம்போலக் காட்சியளித்தார்.

நடுங்கும் விரல்களுக்கிடையில் கெட்டியாய்ப் பிடித்திருந்த பேனாவைப் பேப்பரில் வைக்கப் போவதும் எடுப்பதுமாய் இருந்தார். எவ்வளவு நேரமாகியும் பேப்பரைப் பேனா தொடவே இல்லை.

எதிரில் ஏதோ அசைவதுபோல் தெரிய வரவே, கன்களை இடுக்கிக் கையை வெளிச்சத்துக்கு மறைப்பாக்கிப் பார்த்தார்.

குருவி.

சற்றுத் தூரத்தில் ஒரு குருவி, கடலுக்குப் போவதும் கரைக்கு வருவதுமாய் இருப்பது தெரிந்தது.

மெல்லிய வியப்புடன் அதன் செய்கையைக் கூர்ந்து பார்த்தார். கடல் அலையில் போய் தொபுகடீரென விழுந்தது. பிறகு குடுகுடுவென்று கரையில் இருக்கும் உலர்ந்த மணலில் வந்து விழுந்து புரண்டு உடல் முழுக்க மண்ணாக்கிக் கொண்டது. பின்னர் கடலை நோக்கி ஒடி நீரில் விழுந்து குளித்து உடலை உதறிக்கொண்டது. திரும்ப கரையை நோக்கி குடுகுடுவென ஒடி வந்தது. அவர் ஒருவர் அங்கே அமர்ந்திருக்கிறார் என்கிற பிரக்ஞையேயின்றித் திரும்பத் திரும்ப இதையே செய்துகொண்டிருந்தது

என்ன செய்கிறாய் என்றார் தன்னிச்சையாக.

பல்லாண்டுகாலமாகப் பேசாதிருந்து பேசியதில், அவர் குரல் அவருக்கே அசரீரி போல ஒலித்தது.

குருவியோ தன் பாட்டுக்கும் தன் வேலையில் மும்முரமாய் இருந்தது.

திரும்ப அவர் கேட்டார், என்ன செய்கிறாய் என்று.

யாரைக் கேட்கிறீர் என்னையா.

ஆமாம்.

அவரைக் கண்ணெடுத்தும் பாராது கடலை நோக்கி ஓடியபடியே, பேச நேரமில்லை தலைக்கு மேல் வேலை கிடக்கிறது. நான் செய்துகொண்டிருக்கும் அரும் பணியாம் திருப்பணிக்கு ஒரு ஆயுள் போதாது, என்றது.

அப்படி என்னதான் தலைபோகிற வேலையை செய்துகொண்டிருக்கிறாய் என்று தெரிந்துகொள்ளலாமா என்றார் கோணல் முறுவலுடன்.
அது கிடக்கட்டும். இந்தத் தள்ளாத வயதில் செத்தால் சீந்த நாதியற்ற இங்கே வந்து உட்கார்ந்து நீர் என்ன ஓய் செய்துகொண்டிருக்கிறீர். அதைச் சொல்லும் முதலில் என்று ஒடாடியபடியே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கேட்டது.

நான்… நான்… என்று தடுமாறினார். அவருக்கு சொல்லத் தயக்கமாக இருந்தது.

குருவி சிரித்தது. நம் இருவரைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே சும்மா சொல்ல வேண்டியதுதானே நானோ வெறும் குருவிதானே என்றது.

கடவுள் என்கிற மர்மத்துக்கு விளக்கம் எழுதி வைத்துவிட்டு செல்லத்தான் இங்கே வந்தேன் என்றார் கூச்சத்துடன்.

நல்ல விஷயம்தான். செய்ய வேண்டிய காரியம்தான். ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன் என்றது குருவி.

அவருக்கு திக்கென்றது.

சரி போகட்டும். எவ்வளவு தூரத்தில் இருக்கிறது உம் வேலை என்றது.

இன்னும் ஆரம்பிக்கவே இல்லை…என்றார் வெட்கத்துடன்.

உமக்கு நான் பரவாயில்லை ஓய். எண்ணி வந்த வேலையை ஆரம்பித்துவிட்டேன். உப்பு கரித்து வீணாய்ப் போன இந்தக் கடலை இங்கிருக்கும் மணலைக் கொட்டி தூர்த்துவிட்டால் உலகம் முழுக்க நிலமாகி மனித குலத்துக்கு எவ்வளவு உபயோகமாய் இருக்கும். உம்மைப் போலவே என் ஜென்மமும் சாபல்யம் அடைந்துவிடும் என்றது குருவி.

கூனிக் குறுகி உட்கார்ந்த நிலையில் அப்படியே சமாதியடைந்தார் அவர். குருவி அவர் தலையில் உட்கார்ந்து கீச் கீச்செனக் கத்தி ஊரைக் கூட்டத் தொடங்கிற்று.

10 ஏப்ரல்
நன்றி: உயிர்மை (ஜூன் 2016)