Wednesday, September 14, 2016

ஆப் பாயில் லாலிபாப் செய்துவரும் அவதூறு

சரக்கடித்தபடி சாராய எதிர்ப்பை ஆதரித்ததோடு மட்டுமின்றி, மகான் போல போஸ்கொடுத்துக் கொள்ளும் மனநல மருத்துவர், குடியை எப்படி சிலாகித்து ஆராதிப்பவர் என்பதை அவர் எழுத்தையே ஸ்கிரீன்ஷாட் சாட்சியமாக்கியதும், தம் போலித்தனம் பொதுவெளியில் அம்பலமாகிவிட்டதே என பதறிப்போய் என்னை அவர் கழுவி ஊற்றுவது நியாயமான காரியம். ஜனநாயகத்தில் அதற்கு அனுமதியும் உண்டு. அதைச் செய்ய அவருக்கு உரிமையும் உண்டு. 

அதே போல அவரது மனைவிக்கும், சீனியர் சிடிசனான தம் கணவருக்கு உறுதுணையாய் உதவியாய் என்னைக் கழுவி ஊற்றுவது உரிமை மட்டுமன்று கடமையும் கூட. 

ஆனால், என்னை அவமானப்படுத்தும் நோக்கில், ஆப் பாயில் அம்மையார் குறிப்பிட்ட அந்த சம்பவத்தைத் தாம் ஏதோ நேரில் கண்ட சாட்சியைப் போல எகத்தாளமாய்க் கூறுவது, திருவாளர் மனநலம் அவர்கள் தமது உருவ ஒப்பனையில் மட்டுமின்றி, அங்க அசைவுகளிலும் விரல் முத்திரைகளிலும் ஓஷோவைப் போல தம்மைக்  காட்டிக்கொள்வதற்கு ஒப்பானது. 

இதை நேர்செய்து என் வாசகர்களுக்குத் தெரிவித்தாக வேண்டியது, ஒரு எழுத்தாளனாக என் கடமையாகும் எனவே இதை எழுத நேர்கிறது. 

என்னை அவமானப் படுத்த அடிக்கடி திருவாளர் மனநலம் பயன் படுத்தும் ஒரு மொக்கை ஆயுதமே இந்த அடிதடி சம்பவம். ஆனால் இந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த நண்பர்கள் ஞாநியும் பிரபஞ்சனும் இன்றும் இருக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்குப் பின், பிரபஞ்சனுக்கு டிரைய்னில் பரீக்‌ஷா குழுவினருடன் பயணம் சென்றது மட்டுமே நினைவுள்ளது.

20 வயதுப் பையனாக, பச்சையப்பன் கல்லூரியின் கடைந்தெடுத்த பொறுக்கியாக ஸ்டிரைக்கென்றால் கல்லெறிவதிலும் முன்னணியில் நிற்பவனாக இருந்தும், ஒரு தடிமாடிடம் எந்த எதிர்வினையும் செய்யாது நான் அறை வாங்கிக் கொண்டதை வைத்து தம்பதி சமேதராக இந்த அரைகுறைகள் என்னை ஓட்டிக் கொண்டு இருக்கின்றன.

என்ன நடந்தது என்பதை சும்மா  விவரித்தாலே போதும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதைப் போல, போலித்தனத்துக்கு எதிராய் சமரசமற்று சமர் புரிவது என் இயல்பிலேயே இருப்பது என்பது எளிதாய் விளங்கிவிடும். பொதுவாகவே என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவனான எனக்கு இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அந்த ஆப் பாயில்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 

அப்போது நந்தனம் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் அக்கினிபுத்திரன் என்பவர். 

பெயரும் பொருந்தியது;
’அக்கினியின் புத்திரன்கள்’
அத்தனையும் சாம்பல்.

- என்று பிரமிளால் கவிதையில் காறி துப்பப்பட்ட அதே அக்கினிபுத்திரன்தான், ஏதோ இஸ்கூல் வாத்தி போல என் கன்னத்தில் அறைந்தார். 

பிரமிளின் ஒரு வானம்பாடிக் கும்பலுக்கு என்கிற கவிதையைப் படிக்க விரும்புவோருக்கு, பிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை.

1972ல் வெளியான கவிதையைப் பற்றி, 1980ல் எனக்குக் கூறியவர் சுரேஷ்குமார இந்திரஜித்.

இப்போது, எதுவும் கிடைக்கிற கூகுளில் கூடத் தேட முயலாமல் எதற்கெடுத்தாலும் சுட்டி இருக்கா என்று கேட்பதைப் போல அவ்வளவு சுலபமில்லை அந்தக் காலம். பரந்தாமனின் அஃ பத்திரிகையில் இந்தக் கவிதை வந்தது என்று சுரேஷ்குமார இந்திரஜித் கூறியதைக் கேட்டு எவ்வளவு நாட்கள் எவ்வளவு பேரிடம் கேட்டுத் கேட்டுத் தேடியிருப்பேன் என்று இன்றையத் தலைமுறையால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. 

திருவள்ளூரில் தேடுங்கள் நாடகத்தை நிகழ்த்த ரயிலில் பரீக்‌ஷா குழுவினர் பயணப்பட்டோம். பிரபஞ்சனின் முட்டை நாடகத்தில் எனக்கு சைக்கிள் இளைஞன் வேடம். இப்போது என்னைப் பெயரின்றி மனநலம் திட்டும் போதெல்லாம் அது மாமல்லன்தானே என்று கமெண்ட் போட்டு நக்கிக்கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரம் என்கிற வேஸ்ட் பார்ட்டிதான் முட்டைக்காரன் வேடத்தில் நடித்துக் கொண்டு இருந்தது.

இந்தியாதான் இந்திரா இந்திராதான் இந்தியா என்பதைப் போல, ஆயிரம் சொன்னாலும் அது ஞாநியின் பரீக்‌ஷாதான். அவரைத் தவிர அந்த இலக்கிய உழக்கில்  இருந்த இன்னொரு ஆகிருதி என்றால் அது அக்கினிபுத்திரன் மட்டுமே. ஞாநிக்கும் ராஜேந்திரன் பூமணி விவேகானந்தன் கேவி ராமசாமி என்று இயங்கிக் கொண்டிருந்த வீதி நாடகக் குழுவுக்கும் ஆகாது. இக்கினியூண்டு நாடக உழக்குக்குள் ஏகப்பட்ட பவர் ஸ்ட்ரகிள். மனதை வீதிக்கும் உடலை பரீக்‌ஷாவுக்கும் கொடுத்துக்கொண்டு இருந்த அன்றைய பவர் ஸ்டார் அக்கினிபுத்திரன். ஆகவே ஞாநியைத் தவிர்த்து இன்னொரு ஆளான அக்கினிபுத்திரன், வேட்டி கட்டியபோதெல்லாம் வானம்பாடிகளின் ஆவி உள்ளே புகுந்து உசுப்பிவிட, ஞாநியை நோக்கி, உங்களுக்கு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் என்று, நீ பாப்பான்தானே என்பதை செவ்வியல் நாசூக்குடன் விமர்சிப்பார்.  

ஆக திருவள்ளூரில் தேடுங்கள் நாடகம் போட ஞாநி, அக்கினிபுத்திரன் மற்றும் இதர நடிகர்களுடன் அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபஞ்சனும் ரயிலில் வந்துகொண்டிருந்தார். பாடத் தெரிந்தவர்களுக்கும் பாட முடிந்தவர்களுக்கும் ரயில் பயணத்தின்போது பாடாமல் இருக்க முடியுமா என்ன.

பிரம்மராஜனின் மனைவியான மீனா அவர்கள், 1982ல் ஊட்டி ரயிலில், டி என் சேஷகோபாலனின் காக்கைச் சிறகினிலேவைப் பாடக் கேட்டது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது - இன்று அவரே இல்லை என்றபோதிலும்.

பரீக்‌ஷாவில் நன்றாகப் பாட முடிந்தவன் அதிலும் குறிப்பாக P B ஸ்ரீநிவாஸ் மற்றும் சந்திரபாபுவின் பாடல்களைப் பாடக்கூடியவன் ரமேஷ். இந்த ரமேஷ், அசோகமித்திரனின் கரைந்த நிழல்களை சினிமாவாக எடுக்கத் திரைக்கதை எழுதி வைத்துக்கொண்டு, தயாரிப்பாளரை தேடுவதற்கு பதில் குடிசை ஜெயபாரதியின் பின்னால் திரிந்துகொண்டே இருந்து தற்கொலை செய்துகொண்டு மறைந்துபோனவன்.  ரமேஷ்.  P B ஸ்ரீநிவாஸ் மற்றும் சந்திரபாபுவின் பாடல்களைப் பாடிக்கொண்டு வந்தான். ஞாநி, இப்போதிருக்கும் அதே குரலுடன் தமது குரல் வளத்தின் ஆழ நீள அகலங்களை அவ்வப்போது ரமேஷுடன் இணைந்தும் பிரிந்தும் நிரூபித்துக் கொண்டிருந்தார்.

உலகத் தொழிலாளர்களை, நாங்கள் நீங்கள் மேடைப்பேச்சு கவித்துவம் மூலம் உய்விக்க, 70களில் வானம்பாடியாய் அவதரித்து, 80களில் அது இருந்த இடம் காணாமல் போனதில் அநாதையாகிவிட்டிருந்த அக்கினிபுத்திரன், தம் குரல் வள பரீட்சார்த்தத்தில் இறங்காவிட்டாலும் இரயில் ஒட்டம் தவிர்த்தும் தலை கை கால்களை அசைத்து ரசித்துக் கொண்டிருந்தார். PBSல் தொடங்கிய பாடல்கள் மெல்ல குங்குமப் பூவே கொஞ்சுபுராவேக்குப் போகத்தொடங்கி மெல்ல சுராங்கனி சுராங்கனி என சிலோன் பாய்லாவுக்குத் தாவியது. இதற்கிடையில் ஞாநி யாருடனோ, தம் பிறவிப் பயனான பேச்சை விட்டுவிடுவதா என்று யாருடனோ பேச் ரயில் பெட்டியின் கதவருகே சென்றுவிட்டிருந்தார். சினிமாப் பாடல்களை விடவும் அதிக உற்சாகத்தில் குழுவினர் சுராங்கனியில் இறங்கிவிட்டவே நானும் சேர்ந்துகொண்டேன். திடீரென முட்டைகாரன் மீனாட்சி சுந்தரம் தன் ஒடிசலான தேகத்தின் கொட்டை தொண்டைக் குழிக்கு வந்துவிடும் அளவுக்கு பதறவைக்கும்படிக் குரலெடுத்து பாட்டென்ற பெயரில் We shall over comeஐத் தமிழில் கத்தத் தொடங்கினான்.

நாங்கள் வெல்லுவோம் நாங்கள் வெல்லுவோம்
நாங்கள் வெல்லுவோம் ஓர் நாள்
மனதில் நம்பிக்கை பூரண நம்பிக்கை
நாங்கள் வெல்லுவோம் ஓர் நாள்

ஆஹா பரீக்‌ஷா ஒரு இடதுசாரிக் குழுவாக இல்லாவிட்டாலும், அதை நோக்கி மூஞ்சைத் திருப்பிக் கொண்டிருக்கும் நவீன முற்போக்கு நாடகக் குழு அல்லவா என்று ஒட்டுமொத்தக் குழுவும் சுதாரித்துக் கொண்டு நாங்கள் வெல்லுவோம் கத்தலில் கலந்துகொண்டது.

எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவன் என்றாலும் எல்லாவற்றைப் பற்றியும் விமர்சனபூர்வமாய் ஒரு கோணல் முறுவல் உள்ளூர ஒடிக்கொண்டே இருக்கும் இயல்புடையவன் நான். எழுத்தாளனுக்கு கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய அடிப்படைத் தகுதி இது. அப்போது,  உலகத்துக்கு நான் ஒரு நடிகன் மட்டுமே. சமீப எதிர் காலத்தில் எழுத்தாளனாக உருவாகி ஓரிரு கதைகளிலேயே இலக்கிய உலகில் ஒரு பெயராக ஆகிவிடப் போகிறவனாக இருந்த எனக்கு இது கொஞ்சம் ஓவராகப் பட்டது.

நாங்கள் வெல்லுவோம் பாடலைப் பாட மீனாட்சியின் அப்போதைய பல்லி உடலில் ஒட்டிக்கொண்டிருந்த ஒட்டுமொத்த சக்தியும் செலவழிந்து போய்விட, பாடல் முடித்ததும் டிரெயின் பெஞ்சில் ஒருக்களித்துப் படுத்து அது மரவட்டைபோல் சுருண்டு கொண்டுவிட்டது. இந்தக் காமெடியைப் பார்த்தும் என் வாய் சும்மா இருந்திருந்தால் நான் எப்படி மாமல்லனாக இருக்க முடியும்.

என்ன மீனாட்சி புரட்சி செஞ்சி களைச்சிட்டீங்க போலயிருக்கு என்றேன்.

பளார் என்று ஒரு அறைவிட்டு விட்டு, நாங்க ஒவ்வொருத்தரும் ரத்தம் சிந்தி வளர்த்தது இந்த பரீக்‌ஷா அதை இப்படி சீரழிக்க விடமாட்டோம் என்று காச்சு மூச்சென கத்தித் தீர்த்து அடுத்த பெட்டிக்கோ எங்கோ சென்றுவிட்டார் பவர் ஸ்ட்ரகிள் பவர் ஸ்டாரான அக்கினிபுத்திரன். ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பிரபஞ்சன், நீங்க சொன்ன இதையே நான் சொல்லி இருந்தா என்னையும் இதே மாதிரி அறைஞ்சிருப்பாரா என்று என்னிடம் அமைதியாகக் கேட்டர்.

ஞாநியால் சுராங்கனியையும் ஏற்கமுடியவில்லை அதற்காக, அதைத் தடுக்கிறேன் பேர்வழி என்கிற அக்கினிபுத்திரனின் வன்முறையையும் ஏற்கமுடியவில்லை. நடந்த நாடகத்தைவிட நடக்கவிருக்கிற தேடுங்கள் நாடகம் முக்கியம் என்று  இறுக்கத்துடன் தொடர்ந்தது எங்கள் பயணம்.

இப்போது சொல்லுங்கள்,
1972ல் பிறந்த அம்மையார் 1981ல் சிறுமியாக லாலிபாப் அல்லவா சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கும். யார் யாரை அடித்தார்கள் என்பதுகூடத் தெரியாமல், இது என்னவோ எல்லாம் தெரிந்தது போல கமெண்ட் அடிக்கிறது. மீனாட்சி என்கிற பல்லியெல்லாம் எந்தக் காலத்திலும் ஒரு ஆளா என்ன. அது அடித்திருந்தால் புரட்டி எடுத்திருக்க மாட்டேனா. அல்லது 1981லேயே திருவள்ளூரை நோக்கி ஓடிக்கொண்டிருந்த அந்த டிரெயினிலிருந்து மாமல்லனைப் பிடித்துக் தள்ளியிருக்க வேண்டும் என்கிறாரா அம்மையார் என்றும் புரியவில்லை. இவர்கள் தயவில் வளர்ந்தவனா நான். இது இன்னொரு ஆப் பாயில் என்பதால் நானும் தலையெழுத்தே என கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தக் கார்ப்பரேட் வீராங்கணையும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கண்ணைக் கசக்கினால் என் ட்விட்டர் அக்கவுண்டையுமல்லவா போலீஸ் முடக்கிவிடும்.


81ல் ஒரு நாள், திடீரென்று சம்மந்தமில்லாமல், அப்போது ஞாநி இருந்த 17/2 பீட்டர்ஸ் காலனி எதிரில் வைத்து, பரீக்‌ஷாவில் இருக்கிற ஒரே ஞானவான் நீதான்பா. ஆனா நான் என்ன சொல்றேன்னு உனக்கு இப்பப் புரியாது. அதுல ஒரு சூக்‌ஷுமம் இருக்கு. அது பின்னாடி உனக்கே தெரியவரும் என்றார் சுரேஷ்குமார இந்திரஜித்.

குரு பத்தினியார் குறிப்பிட்ட மேற்படி சம்பவம் 1981ன் முற்பகுதியில் நடந்தது. 81ல் நிறைய கதைகள் எழுதியிருந்தாலும் எதுவும் பிரசுரமாகி இருக்கவில்லை. இப்போது கிறித்துவக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருக்கும் பாலுச்சாமி, அப்போது பச்சையப்பன் கல்லூரியில் MA தமிழிலக்கியம் படித்துக்கொண்டிருந்தார். நான் அப்போது BA.  சமீபத்தில் அவரை சந்தித்த போது, என் கதைகளில் சிலவற்றைக் கையெழுத்துப் பிரதியிலேயே படித்திருந்ததையும், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ஷண்முகநாதன் மேடையில் இருக்கும் போதே, மெயின் ஹாலில் டேபிள்மீது டேபிள் போட்டு ஏறி சட்டைக் கழற்றி எதிர்ப்பு தெரிவித்த பொறுக்கித் தனத்தையும் கூட இருந்த ஆசிரியர்களிடம் சிரித்தபடி நினைவுகூர்ந்தார்.

குருபத்தினியார் குறிப்பிடுவதில் எந்தத் தவறுமில்லை. தீய சக்தியும்தான் நான். அநீதி என ஒன்று என் மனதுக்குப் பட்டுவிட்டாலோ அல்லது அநியாயமாக நான் பழிவாங்கப்படுகிறேன் எனப் பட்டுவிட்டாலோ, அது கல்லூரியா அலுவலகமா இணையமா என்று, பின் விளைவுகள் பற்றி எள்ளளவும் யோசிக்காது குதித்து விடுவது என் இயல்பு. தீவிரமான சக்தி மந்த மத்யமர்களுக்கு தீய சக்தியாகத்தான் படும். இந்தக் கார்ப்பரேட் கனகச்சிதங்கள் நல்ல சக்தி என்று நம்மைச் சொல்லாதவரை நம் ஆன்மா ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது என்று பொருள்

1981ல் வலி கதை கல்கியில் வெளியாகி ஓரிரு மாதங்களுக்குள் இலை கதை அதே வருடம் அக்டோபரிலோ என்னவோ கணையாழியில் வெளியானது. உடனே பெண்ணின் நிர்வாணத்தை வைத்துத் தொடங்கி இறுதியில் அது அம்மாவின் சாயலில் இருப்பதைப் போல ஒரு கதை எழுதி இந்திரஜித்திடம் காண்பித்தேன்.

இதை எதுக்காவது குடுத்திருக்கியா

இல்லை. ஷங்கர்ராமன் கிட்ட காட்டினேன். அடுத்து உங்ககிட்டதான்.

எதுக்கும் அனுப்பிடாதே. கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. கொஞ்சம் கேப் விட்டுட்டு படிச்சிப் பாரு என்றார்.

ஆனால் பெரிய இடைவெளி விடாது அடுத்து ஓரிரு நாட்களிலேயே,

என்ன பண்ணின அந்தக் கதையை என்றார்.

சிரித்துக்கொண்டே கிழிச்சிப் போட்டுட்டேன். சரியா வரலைனு தோணிச்சு என்றேன்.

வலி இலைனு ரெண்டு கதைகள் வெளியாகி உனக்கு நல்ல பேர் கிடைச்சிருக்கு. இந்தக் கதையை அனுப்பியிருந்தா பேர் கெட்டுப் போயிருக்கும் என்றார்.

இது இடித்துரைத்தல். அக்கினிபுத்திரனைப் போல் அறைவது அல்ல. இத்தனைக்கும் சுரேஷ்குமார இந்திரஜித் பேயிங் கெஸ்டாக அப்போது தங்கியிருந்தது அக்கினிபுத்திரனின் அரசுக் குடியிருப்பில்.

1972ல் அவதரித்த இறைவிக்குதான் எடுப்பும் தொடுப்பும் புரியவில்லை. 1955ல் அவதரித்துத் துறவிபோல் தடியை நீவி விட்டு நடித்துக் கொண்டிருக்கும் இறைவருக்குமா தெரியவில்லை நான் யார் என்பது - 82லிருந்தே என்னை அறிந்திருந்தும்.
சர்வீஸ் டாக்ஸ் சண்டைக்குப் பழிவாங்கலாய் ஒரே வருடத்தில் ஆறேழு மாற்றல்களை உள்ளூரிலேயே சந்திக்க நேர்ந்து, முகப்பேருக்கு மாற்றப்பட்டபோது, அதற்குத் தெரிவிக்கும் எதிர்ப்பாய், அநேகமாய் லீவே போடாத நான் ஆறுமாதம் விடுப்பெடுத்து இணையம் வந்தேன். அதை, இடைக்காலப் பணி நீக்கத்தில் நான் இருப்பதாய் அவதூறு செய்த நக்ஸலைட் ஏழரயை ஆதரித்தவர்தான் இந்த குங்குமப் பொட்டு குணசீலர்.

காமாக்ஷி சந்நிதியில் சட்டையைக் கழற்றி அக்குளில் சுருட்டிக் கொண்டு அய்யரிடம் கைகட்டி வாய்பொத்தி பவ்வியம் காட்டிவிட்டு, ஃபேஸ்புக்கில் பார்ப்பன எதிர்ப்பாளராய்க் காட்டிக்கொள்ளும் அவதார புருஷர் சொல்கிறார்,

//ஒரு சாவின் பரிதாபத்தால் வந்த வேலையை தன் திறமையின் பரிசாய் பீற்றும் பொறுக்கித்தனத்தை கண்டு கொள்ளாமல் விடுவதையும்......//

என்றைக்குப் பீற்றிக்கொண்டேன் என் திறமையால் கிடைத்த வேலை என்று. இன்றல்ல எழுதியது என்று என கண்ணாடியைத் துடைத்தணிந்து சரியாகப் பார். Saturday, February 19, 2011. என்ன எழுதி இருக்கிறேன் என்பதையும் பார்.

82 மார்ச்சில் கருணையில் வேலை கிடைத்து, ஜூன் வாக்கில் இலக்கிய குறு வட்டத்திலும் பேர் கிடைத்து அக்டோபர் வாக்கில் அலுவலகப் புழுக்கம் வெடிக்க, காவியில் அலைக்கழிந்து, தண்டணை மாற்றலாக ஈரோடு சென்று, ஆறு மாதத்தில் 83 ஏப்ரலில் மெட்ராஸ் திரும்பினேன்.

சத்தமில்லாத சமயவேல்

//படிக்க முடியாது என்ற எண்ணத்தை மாற்றியதும்//

எனக்கென்னவோ நீயே தாயுமானவன் என்பதுபோல் பெண் லைக்கர்களுக்காகப் பகல் வேடம் போடாதே. ஆதாரத்தோடு விழும் மரண அடி. இன்றல்ல நேற்றல்ல, Wednesday, January 19, 2011 அன்றே என்ன எழுதி வைத்திருக்கிறேன் என்பதைப் பார்.

//க்ரியா ராமகிருஷ்ணன்தான், என்னை முதல் முதலாகத் திட்டி ஆங்கிலத்தில் படிக்க வைத்தவர்.

மாமல்லன், சும்மா பார்த்து பயந்துகிட்டே இருந்தா எப்பதான் படிப்பீங்க? தமிழ்ல எல்லா மொழிபெயர்ப்பும் இல்லையே! இந்த வருஷம் ஒரு புக்கு படிங்க, அடுத்த வருஷம் ரெண்டு புக்கு அப்பறம் மூணுன்னு ஆரம்பிச்சாலே போதும். எங்கையாவது ஆரம்பிக்கணும்.

ராமகிருஷ்ணன் கூறியதை மோகனிடம் ஒப்பித்தேன்.

அவ்ளதான ஒண்ணும் பிரச்சனையே இல்லை. க்ரைம் அண்ட் பணிஷ்மெண்ட்ல ஆரம்பிங்க. மொதல் முப்பது பக்கம், நீங்க புதுசுங்கறதாலக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். முப்பதாவது பக்கத்துல ஒரு கொலை விழும். அப்பறம் நீங்க புக்கைக் கீழ வெக்க முடியாது.//

இலக்கியமும் இலக்கியப் போலிகளும்

//முடங்கிய கையை மீண்டும் எழுத வைத்ததையும்//

தோடா காப்பிரைட்டை மொத்தமா உனக்கே கேட்டா எப்படி. ஆண்டவருக்குள்ளதை ஆண்டவருக்கும் சீசருக்குள்ளதை சீஸருக்கும் 1994லேயே கொடுத்தாயிற்றே. ஃபேஸ்புக்ல டகால்டி காட்டி லேடீஸை அட்ராக்ட் பண்ணறதுக்காக உனக்குக் கை மாத்தி எழுதித்தற முடியுமா நைனா.

சும்மானாச்சுக்கும் எதையாவது சொல்லி என்னை அவமானப்படுத்திவிடலாம் என ஒருபோதும் கனவு காணாதே குணசீலம். அதை சரியான வடிவத்தில் ஆதாரபூர்வமாய் நானே எங்காவது எழுதி வைத்திருப்பேன்.

//அதிகார பிச்சையாய் கேட்ட காலணியை அலைந்து வாங்கிக்கொடுத்ததையும்//

உன் கல்யாணத்துக்கு என்னால இவ்வளவுதான் பண்ண முடியும் இதுதான் என் பட்ஜெட்டு என்று தானாக முன் வந்து சொன்னது யார்.

திஸ் பார்ட் ஆஃப் தி ப்ரோக்ராம் ஸ்பான்ஸர்ட் பை என்று திட்டமிட்டுக் கொண்டது மட்டுமே நானல்லவா. அதைக் கேட்டு இடி இடியென சிரித்த இருவர் யார் என்பது உண்மையான இறைவனுக்குத் தெரியாதா என்ன.

//கண்ட நேரமும் வீட்டுள் புகுந்து கழுத்தறுக்க சகித்துக்கொண்டதையும்//

மனைவி பிரிந்து தனித்து வாழ்ந்த இரவுகளை நன்பர்கள் மற்றும் ஹேவார்ட்ஸ் 2000 துணைகொண்டு தள்ளியாக வேண்டிய நீண்ட காலகட்டங்களில் பல இரவுகளை சிரிக்கச் சிரிக்கப் பேசி விடிய வைத்தது யார் என்பது, எப்படி மனசாட்சிக்குத் தெரியாமல் போகும் அதை விற்றுத் தொலைத்துவிட்டிருந்தால் தவிர.