Sunday, September 18, 2016

செயல்பாடென்பது மோஸ்தரல்ல - சில மூடர்கள் என்றும் இப்படித்தான்

இது ஏற்கெனவே இந்த பிளாகில்தான் இருக்கிறது. ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை மற்றும் ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை pdf  புத்தகமாக இங்கே உள்ளது.

//பிரமிளுடன் மிக நெருக்கமான நட்பில் இருந்த காலம். கட்டுரையைக் கையெழுத்துப் பிரதியில் படித்ததில், பாதி படிப்பதற்குள், எனக்குப் பரவசம் உண்டாயிற்று. இது கட்டாயம் பதிப்பிக்கப் படவேண்டும் என்றேன். மீதி கட்டுரையைப் புத்தகமாக்கி ஓய்ந்த பிறகுதான் படித்தேன்.


இந்தக் கட்டுரை புத்தக வடிவம் பெற உதவிய நண்பர்கள், நன்கொடை கொடுத்தவர்கள் ஒவ்வொருவரும் எங்கெங்கு வைத்துக் கொடுத்தார்கள் என்பது உட்பட இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. பணமும் கொடுத்து இந்த காரியம் செய்வதற்காக எனக்குப் பாராட்டும் கிட்டியது பரவலாக. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் போக, புத்தகமாக வெளியானபின் என்னை ஏன் கேட்கவில்லை என அன்போடு கடிந்து கொண்டவர்களும் உண்டு. 

உண்மையிலேயே பொது விஷயத்திற்காகத் தெருவில் இறங்கிக் காரியம் செய்தால், எதிரி கூட உள்ளூரப் பாராட்டுவான் என உணர வைத்த நாட்கள். தருமு ஒருவரின் பெயர் தவிர ஒருவர் பெயரும் இதில் இடம் பெறலாகாது என்கிற என் உறுதியை இதில் ஈடுபட்ட அனைவரும் ஆதரித்ததோடு அல்லாமல் முழுமனதோடு ஒத்துழைத்தனர். //

இதை இன்று எழுதவில்லை. எழுதியது ஏறக்குறைய ஆறு வருடங்கள் முன்பாக Sunday, January 16, 2011 அன்று. இதைப் புத்தகமாக வெளியிட்ட 1984ல் எனக்கு 24 வயது. 

32 வருடங்கள் கழித்து என் 56ஆவது வயதில் இன்னொரு நிதி திரட்டலில் இறங்குவேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. 

இன்னமும்கூட பணம் கொடுத்தவர்களில் பெரும்பாலோரை என்னால் தனித்தனியாக நினைவுகூற முடியும். 

இந்தப் புத்தகத்தைக் கொண்டுவர உதவியவர்களைப் பற்றிய விபரம். 

1.  வைத்தியநாதன் ரூ 50 (தி. நகர்) - ப்ரீக்‌ஷா நண்பர் ஆர்க்கிடெக்ட் 
2. பிரசன்னா ராமசாமி ரூ 50 (மந்தைவெளி) அன்றைக்கு இலக்கிய வாசகர் இன்று நாடக இயக்குநர்
3. வண்ணதாசன் ரூ 50 (நிலக்கோட்டை) எழுத்தாளர் 
4. கல்பகம் ராமன் ரூ 50 (ராயப்பேட்டை) பிரபல கிரிமினல் வக்கீல் வி பி ராமன் அவர்களின் மனைவி, பத்மினி கோபலனின் சகோதரி
5. கே ராமகிருஷ்ணன் ரூ 50 (மாம்பலம்) MIDS அடையாரில் அப்போது ஆராய்ச்சியாளராக இருந்தவர் 
6. தாரணி ரூ 50 (கீழ்ப்பாக்கம்) KMC மருத்துவக் கல்லூரி மாணவியாக இருந்த சிநேகிதி. இப்போது டாக்டராக எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை 
7. ஜே எம் கே சேகர் ரூ 50 (தி நகர்) அப்போது செண்ட்ரல் எக்ஸைஸ் DCயாக இருந்த நண்பர் 
8. ஜெயராமன் ரூ 50 (தேனாம்பேட்டை) மன்னிக்கவும் சுத்தமாக நினைவில்லை 
9. நாரணோ ஜெயராமன் ரூ 50 (ஆதம்பாக்கம்) கவிஞர் 
10. கலாப்ரியா ரூ 50 (கடையநல்லூர்) கவிஞர் 
11. எஸ். ஆல்பர்ட் ரூ 50 (திருச்சி) பேராசிரியர் ஜமால் முகமது கல்லூரி 
12. எஸ் மோகன் ரூ 50 (திருவல்லிக்கேணி) அப்போது செண்ட்ரல் எக்ஸைஸில் இன்ஸ்பெக்டராக இருந்த நண்பர் 
13. சி மோகன் ரூ 50 (கோபாலபுரம்) அப்போது க்ரியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வயல் மோகன் 
14. கண்ணன் ரூ 50 (சூளைமேடு) எந்த கண்ணன் என்று குழப்பமாக உள்ளது 
15. ஏ ஜே விமல்ராஜ் ரூ 50 (தேனாம்பேட்டை) அப்போது ஆனந்தா அபீஸ் செண்ட்டர் அலுவலகத்தில் பிரிவெண்ட்டிவ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் 
16. சீனிவாசன் ரூ 50 (கீழ்ப்பாக்கம்) சரியாக நினைவில்லை 
17. தேவதத்தா ரூ 50 (குற்றாலம்) பராசக்தி மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியை 
18. பஷீர் ரூ 50 (கோடம்பாக்கம்) நணபன் இப்போது அகல் பதிப்பக உரிமையாளர் 
19. வெங்கடேஷ் ரூ 50 (பெங்களூர்) நண்பன் ஷங்கர்ராமனின் நணபர் அப்போது IIS மாணவர். ஒரு முறை ஷங்கர்ராமன் வீட்டில் பார்த்தது ஒருமுறை பஸ்ஸில் பார்த்தது.
20. விமலாதித்த மாமல்லன் ரூ 52 ( கேகே நகர்) 
21. ஷங்கர்ராமன் ரூ 75 (தி நகர்) நெருங்கிய நண்பன். இன்றுவரை என் கதைகளின் முதல் வாசகன்
22. பத்மினி கோபாலன் ரூ 75 (மைலாப்பூர்) இலக்கிய வாசகர் 
23. ருத்ரன் ரூ 100 (தி நகர்) அப்போது மருத்துவர். இப்போது மனநல மருத்துவர் 
24. ராஜேந்திரன் ரூ 100 (அண்ணாநகர்) இண்டியா பிஸ்டன் இலக்கிய வாசகர் 
25. சுப்ரமண்யராஜூ ரூ 300 (பழவந்தாங்கல்) நண்பர் எழுத்தாளர் 
26. பிரியதர்ஷன் ரூ 48 (கள்ளக்குறிச்சி) பிரம்மராஜனின் நட்புக்கு முன் ஸ்வரம் இதழை கையெழுத்துப் பிரதியாக நடத்திக்கொண்டிருந்த நந்தலாலாவின் மாமா. 
27. ரவிச்சந்திரன் ரூ 40 (ஆள்வார்ப்பேட்டை) அழக்கறிஞர் 
28.எஸ்.வைத்தீஸ்வரன் ரூ 30 (கோடம்பாக்கம்) பரீக்‌ஷா நண்பர் இந்தியன் வங்கி 
29.சிவராமன் ரூ 30 (தி நகர்) மன்னிக்கவும் சரியாக ஞாபகமில்லை 
30.முகுந்தராஜ் ரூ 25 (மாம்பலம்) அப்போது செண்ட்ரல் எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர், அலுவலக நண்பர் 
31.ராமமூர்த்தி ரூ 25 (அசோல்நகர்) யாரென நினைவுக்கு வரவில்லை 
32.ஜெரால்டு ஜோசப் D சாமி ரூ 20 (லயோலா & பிரசிடென்சி) கல்லூரி மாணவர்கள் இப்போது ஜேடி ஜெர்ரி என்கிற இயக்குநர்கள் 
33.கார்த்திகா ராஜ்குமார் ரூ 20 (ஊட்டி) அப்போது விகடன் குமுதத்தில் எழுதிக்கொண்டிருந்தவர், நிறைமதி என்கிற சிநேகிதி மூலம் அறிமுகமானவர் 
34.எஸ் வி ராமகிருஷ்ணன் ரூ 10 (ஹாடோஸ் ரோடு) அப்போது செண்ட்ரல் எக்ஸைஸில் அடிஷனல் கமிஷனராக இருந்தவர். என் தந்தை இறந்து நான் வேலைக்கு சேர்வதற்கு முன்பிருந்தே பரீக்‌ஷாவின் பார்வையாளராக அறிமுகமாகி நண்பராக இருந்தவர். 

வெளியூர் நண்பர்களின் உதவி, இந்த முயற்சி பற்றி கடிதமெழுதி பெறப்பட்டது. 

உள்ளூர் நண்பர்களிடம், சைக்கிளிருக்கக் கவலையேன் என வாழ்ந்துகொண்டிருந்த காலமாதலால், இந்தப் புத்தக முயற்சி பற்றி நேரடியாக விளக்கிக் கூறி உதவி பெறப்பட்டது. 

இந்த 1900 ரூபாயில் ஒரு 50 ரூபாய்  மிகுந்த தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.  
என் வாழ்வின், அந்தக் கட்டத்தில் எதில் நான் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேனோ அதைப் பற்றிக் கண்ணில் படுவோரிடமெல்லாம் மதப் பிரச்சாரகன் போல, பேசி கழுத்தறுப்பது என் பிறவிக் குணம். அப்போது,  அலுவலகத்தில் வரி ஏய்ப்பு தடுக்கும் பிரிவில் ஆய்வாளராக (இன்ஸ்பெக்டராக) இருந்தவர் ஏ ஜே விமல்ராஜ். அவருக்கும் இலக்கியத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை. 

இன்னா மோகன் கிட்ட என்னவோ குசுகுசுனு போசிக்கிட்டு இருந்தே 

இலங்கைப் பிரச்சனையைப் பத்தி ஒரு புக்கு போடறதா இருக்கோம் அதுக்கு நிதி உதவி கேட்டுக்கிட்டு இருந்தேன் 

ஆமாம்பா. இலங்கைத் தமிழருக்கு கண்டிப்பா ஒதவி செய்யணும்பா. சாய்ங்காலம் ஆபீஸ் விடும்போது என்னைப் பாக்காம போயிராதே இன்னா 

சரி 

அன்று மாலை 5:30 வாக்கில் அவர் அருகில் சென்று நின்றேன் 

ஏறிட்டுப் பார்த்தார் 

இலங்கை புக்கு... 

ஆங்... கொஞ்சம் வெயிட் பண்ணு. அஞ்சே நிமிசம் ரெண்டு போன் பண்ணிட்டு வந்துடறேன். கெளம்பிடலாம். 

இவரிடமில்லாத 50 ரூபாயா. எங்கேக் கிளம்பலாம் என்கிறார் என ஒன்றும் புரியவில்லை. இவர் ஸ்கூட்டரில் எங்காவது கூட்டிச் சென்றால் அங்கிருந்துத் திரும்ப வந்து என் சைக்கிளை எடுப்பது எப்படி என்று எனக்கு யோசனை. பஸ் கடி. எல்லாக் காலத்திலுமே எதையும் சாராது நான் ஆயிற்று என் வண்டி ஆயிற்று என சுதந்திரமாய் நினைத்த மாத்திரம் நினைத்த இடத்துக்குச் சென்றுகொண்டு இருப்பவனை பஸ் ஏற விட்டுவிடுவாரோ இந்த ஆள் என்கிற கவலை. 

வாபா போலாம் என்று விருட்டென வெளியில் வந்து சேட்டக்கை உதைத்து ஏறு நர்சிமா என்றார் 

வண்டி நேராக மவுண்ட் ரோடு தர்காவுக்கு சற்று முன்பாக இருந்த உதிரி பாகங்கள் விற்கும் கடையொன்றின் முன்னால் போய் நின்றது. வாங்க சார் என்று உள்ளிருந்து மங்கிய வெளிச்சத்தில் ஒரு கை சலாம் போட்டது. இவர் கையை நீட்டினார். அங்கிருந்து இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்கள் இவர் கைக்கு வந்தன. அவற்ரைத் தம் பாண்ட் பாக்கெட்டுக்குள் சரக்கென விட்டுக் கொண்டார். 

வர்ட்டா 

ஏறு என்றபடி வண்டியைக் கிளப்பினார். புகாரி எதிரில் யூ டர்ன் போட்டு எதிர்ப்புறம் போய் வண்டியை நிறுத்தினார். இறங்கிக் கொண்டேன். சரட்டென பாண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டார். ஒரு ஐம்பது ரூபாய் மட்டும் வந்தது. அதை என் கையில் கொடுத்தார். 

தமிழனுக்காக இதுகூட செய்யாட்டா எப்டி. 

விமல்ராஜ் இது... 

அட என்னாபா இதை நீ வாங்கினாதான தப்பு. வாங்கினது நானு. அந்தப் பாவம் என்னுது. நீ ஒரு நல்ல காரியம் பண்றே அதுக்குக் குடுத்தா தப்பில்லே. இது புண்ணியம். உண்டியல்ல விழுற காசையெல்லாம் சாமி இன்னா நல்லது கெட்டதுன்னு பிரிச்சி பாத்தா வாங்கிக்கிது. கெளம்பு கெளம்பு எனக் கிளம்பிப் போயே விட்டார். எனக்குதான் பஸ் பிடித்து ஆபீஸ் வர நெடு நேரமாயிற்று. விமல்ராஜ் இப்போது இல்லை. பிரமிள் இப்போது இல்லை. இலங்கைப் பிரச்சனைகூட அப்போது போல் இப்போது இல்லை. இந்தப் புத்தகம் இன்னும் இருந்துகொண்டு இருக்கிறது, இந்த டிஜிட்டல் உலகத்தில் pdf வடிவத்தில். எழுத்துக்கு இறப்பில்லை.