Thursday, November 24, 2016

தவிப்பு [சிறுகதை]

எவ்வளவு அடித்தும் யா அல்லா அல்லா என்கிற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் அவன் வாயிலிருந்து வரவில்லை. சின்னப் பையன். இன்றெல்லாம் இருந்தால் இருபது இருபத்தியிரண்டு வயது இருந்தாலே அதிகம். இப்போதுதான் கல்யாணமாகி மனைவி முழுகாமலிருக்கிறாள் என்று திரட்டப்பட்டத் தகவல்கள் கூறின. இளசுக்கு இப்படி ஒரு வைராக்கியமா என்று விசாரணை அறையைவிட்டு வெளியில் போன பின்பு வியக்காதவர்கள் இல்லை. 

அவன் படும் அவஸ்தைகளைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. கூடவே அப்படியென்ன வைராக்கியம் என்று எரிச்சலாகவும் இருந்தது. முகமறியா உயிர்களைக் கொன்றுவிட்டு உனக்கு மட்டும் என்ன சொர்க்கத்துக்கு முன்பதிவு. அடி உதை என்று வெளுவெளுவென்று எவ்வளவுதான் வெளுத்தாலும் அவ்வளவு சுலபத்தில் வெளுப்பதாயில்லை அவனுக்குச் செய்யப்பட்டிருந்த மூளைச் சலைவை. 

இன்னும் இரண்டு மூன்று முக்கியமான தலைகள் தலைமறைவாய் இருந்தன. எந்த நேரத்திலும் இன்னொரு சுற்று தொடர் குண்டு வெடிப்பு நிகழக்கூடிய அபாயம் கண் எதிரில் நின்று மிரட்டிக் கொண்டு இருந்தது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து மணிக்கொருதரம் ரிப்போர்ட் அனுப்பும்படி ஆணையிட்டிருந்தது தலைமையகம். எட்டு ஒன்பது மணி நேரமாய் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிற அறிக்கைதான் சென்றுகொண்டு இருந்தது. எங்கள் எல்லோருக்கும் உள்ளூர அவமானமாக இருந்தது. ஆளையே இரண்டாய் முறித்தாலும் அவனது மன உறுதியை உடைக்க முடியுமென்று தோன்றவில்லை. எங்கள் கையாலாகாத் தனத்தை ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பகிர்ந்து கொண்டோம். ஒரு தருணத்தில் சீய் என்ன ஜென்மம் இது என்று சுய வெறுப்பு மண்டிற்று. 

வேலையில், எங்கள் ஒவ்வொருவரின் முனைப்பும், கொஞ்சம் கூடக்குறையவென வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும் எவரும், சாப்பாட்டுக்கு இது இன்னொரு வேலை என்கிற மனநிலையிலோ அல்லது கட்டாயத்தின்பேரிலோ வந்தவர்கள் இல்லை. தன்னார்வமும் நாட்டு மக்களின் நலனுக்காக பாதுகாப்புக்காக முக்கியமான காரியம் செய்துகொண்டிருக்கிறோம் என்கிற உயர்ந்த லட்சியத்துடனும் தனிப்பட்ட முறையில் எதிரிகள் உருவாகக்கூடும் உயிரே போகக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தும் அர்ப்பனிப்புடன் வந்தவர்கள்தான் எல்லோரும். 

இவை அனைத்தும் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தக் கூடியவை என்பதுபோல் இருந்தது அவனுடைய உறுதி. அதைப் பற்றி நேரடியாக மெச்சிக் கொள்வதைத் தவிர்த்தோம் எனினும், கொலைகாரப் பயலுக்கு எதோ தேசத் தியாகிபோல என்னவொரு நெஞ்சழுத்தம் என அதுதான் எங்கள் எல்லோரையுமே, உள்ளூர கொதிப்படையவும் வைத்தது என்பதை எளிதாய் உணர முடிந்தது. இதையெல்லாம் புரிந்துகொள்ளவோ அல்லது பாராட்டிக் கொண்டிருக்கவோ இது சந்தர்ப்பமும் இல்லை அதற்கெல்லாம் இங்கு எவருக்கும் நேரமுமில்லை. அவனுடைய தலைவர்கள் வெளியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அப்பாவிப் பொது மக்களுக்குப் பேராபத்து என்கிற நிஜத்தை எங்களைவிட உணர்ந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. ஆனால் அதைத் தடுக்க முடியாதவண்ணம், அவன் வாயைத் திறப்பேனா ஏன்று எங்களைக் கழுத்தறுத்துக் கொண்டிருந்தான்.

முகரம் பண்டிகையில் நெஞ்சுக் கூட்டிலும் முதுகிலும் பேனாக் கத்திகள் கட்டிய செயின்களால் அடித்து ரத்த விளாராய் ஆக்கிக்கொண்டாலும் சற்றும் வேதனையைக் காட்டிக்கொள்ளாத ஊர்வல ஆட்கள் எப்போதுமே வியப்பை ஏற்படுத்துவார்கள். அவர்களுக்கு வலிக்கவில்லை என்றில்லை. மதரீதியாய் மிக முக்கியமான காரியத்தை செய்துகொண்டிருக்கிறோம் என்கிற உணர்வின் காரணமாய் வலியைத் தாங்கும் அல்லது குறைந்தபட்சம் அதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் உறுதியைக் கொண்டிருப்பார்கள். அதைப்போலவே எவ்வளவு ரத்தம் சிந்தவும் எப்பேர்ப்பட்ட சித்திரவதைகளையும் அனுபவிக்கவும் சித்தமாய் இருந்தான் அவன். 

எங்களால் முடியவில்லை என்கிற ரிப்போர்ட்டை வேறு வழியின்றி அனுப்பிவைக்க வேண்டியதாகிவிட்டது. மான அவமானமல்ல காரியம்தான் முக்கியம் என்று கறாராய்க் கூறிவிட்டார் மாநிலக் கிளையின் அதி உயர் அதிகாரி. நிச்சயம் மிகுந்த வலியுடன்தான் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருப்பார். தலைமையகம், எங்களது இயலாமையை நேரடியாய் அவரது திறமையின்மையாய்த்தான் பார்க்கும். ஆனால் அதைவிட மோசம் அடுத்த குண்டு வெடிப்பு. அந்த பயங்கரத்தைத் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 

சிறப்பு விமானத்தில் தலைமை அலுவலகத்திலிருந்து தனிச்சிறப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற அதிகாரி கிளம்பிவிட்டதாய் தகவல் கசியத் தொடங்கிற்று. அவர் மட்டும் என்ன செய்துவிட முடியும். எதிரில் இருப்பதோ எங்களால் சக்கையாக்கப்பட்ட நடைபிணம். அதனிடம் செய்ய இன்னும் என்ன இருக்கிறது. 

அவனைப் பிடித்ததே பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். யாரையும் போல இரண்டாவது முறை பார்க்க வைக்காத, திருவல்லிக்கேணியின் சந்துகளில் தென்படும் ஆயிரக்கணக்கான இளம் முஸ்லீம்களில் ஒருவனைப் போல பூனைமுடி தாடியுடன்தான் அவன் இருந்தான்.  அனிச்சையாய் அடிக்கடி கண் சிமிட்டிக்கொள்வான் என்பதுதான் அவனைப் பற்றி மேலதிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த ஒரே குறிப்பு. 

இன்ன முகவரியிலிருக்கும் இன்னாரை கொஞ்சமும் சந்தேகம் எழாதபடி கண்காணிக்கவும் அவன் ஒரு முக்கியமான கண்ணி என்று தலைமையகத்திலிருந்து அதி ரகசியத் தகவல் வந்தது. அவனைக் கண்காணிக்கத் தொடங்கி ஒரு வாரத்துக்கு மேலாகியும் எந்த ஒரு சிறிய சந்தேகத்தையும் அவனது எந்த நடவடிக்கையும் ஏற்படுத்தவில்லை. அவன் வேலை பார்த்தத் தனியார் கொரியர் கம்பெனியில் எல்லோரிடமும் எல்லோரையும்போல பழகுவனாகவே இருந்தான். அவனை நோட்டம் பார்க்க எங்களால் நடப்பட்டிருந்த ஆள் அந்த அலுவலகத்தில் தற்காலிக எடுபிடியாய் சேர்ந்திருந்தார். இடையில் ஒரு நாள் அந்தக் கொரியர் அலுவலகத்தில் பெரிய பார்ஸலைத் தவறிக் காலில் போட்டுக்கொண்ட நோஞ்சான் ஐயர் பையனை பதறியடித்துக்கொண்டு ஆம்புலன்ஸில் அவன்தான் அழைத்துச் சென்றான். அறுவை சிகிச்சைக்குத் தேவைப்பட்டதென்று கூறியதும் சட்டென்று படுத்து ரத்தம் கொடுத்தான். இவையெல்லாம் குறிப்புகளாக எங்கள் அலுவலகத்துக்கு வந்துகொண்டு இருந்தன. எங்கள் குழுவின் அதிகாரி இனியும் இவனைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை. இவன் மீதான கண்காணிப்பை விலக்கிக்கொண்டு விடலாம் என்கிற இறுதி முடிவெடுப்பது பற்றி எங்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கையிலதான் விநோதமான அந்தத் தகவல் கிடைத்தது. 

கொரியர் டெலிவரி பையனாக இருந்ததால் அவன் எங்கு சென்று வருவதும் ஆரம்பத்தில் பெரிய சந்தேகத்தை உண்டாக்கவில்லை. திருவல்லிக்கேணியின் ஒரு சந்துக்குள் இருக்கும் வீட்டுக்கு தினமும் இரண்டு மூன்று முறை அவன் சென்று வருகிறான் என்பதைத் தவிர. அதிலும் குறிப்பாக அது ஒரு பிராத்தல் வீடு என்பது தெரிய வந்தது, வியப்பை அதிகப்படுத்திற்று. மேலும் தொழுகை முடித்த கையோடு அவன் அந்த வீட்டுக்கு சென்று வந்ததும் ஐயத்துக்கு வலு சேர்த்தது. இது, வேளை தவறாது தொழுபவன் செய்கிற வேலை இல்லையே என்று சம்சயத்தை அதிகமாக்கிற்று. ஒரு முறை அந்த சந்தின் முனையில், நெருக்கத்தில் அவன் கடக்க நேர்கையில், தெரியாமல் நிகழ்ந்ததுபோல் அவன் மீது நான் வேண்டுமென்றே மோதிக்கொண்டேன். அவன் கையிலிருந்த கவர் கீழே விழுந்தது. அதைக் கீழே இருந்து எடுத்துப் புரட்டிப் பார்த்தபடி, அவன் கண்களை நேரடியாய் சந்திப்பதைத் தவிர்த்து, மன்னிப்புக் கோரியபடி அவனிடம் கொடுத்தேன். அதில் விலாசம் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. அவன் அந்த வீட்டிற்குக் கொண்டு செல்வதும் வீட்டிலிருந்து கொண்டு வருவதும் இரண்டுமே முகவரியற்ற கவர்கள் என்று எங்கள் அலுவலகத்துக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். 

வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வேண்டி நான் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டேன். அடுத்து அங்கு நின்று கண்காணிக்கத் தொடங்கியவரும் தொழுகை முடிந்த கையோடு அவன் கவருடன் அந்த வீட்டுக்கு வருவதை உறுதிசெய்தார். அவனுடன் தொழுகைக்குச் சென்று வந்த எங்களது இஸ்லாமியத் தோழரும் அவன் கையிலோ சட்டைப் பையிலோ எப்போதும் ஒரு கவர் இருந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார். ஒவ்வொரு தொழுகையின் போதும் வெவ்வேறு நபர்கள் அவன் அருகில் ஒரு கவரை வைத்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தனர். ஒரு முறை வந்தவர் மறுமுறை வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது என்றும் தகவல் வந்தது. ஆகவே தலைமையகம் கூறியதுபோல் இவனே அனைவருக்கும் இடையிலான தொடர்பின் இணைப்புக் கண்ணி என்பது உறுதியானது. இவனைக் கண்காணிப்பதை விலக்கிக் கொண்டுவிடலாம் என முடிவெடுக்க இருந்த எங்கள் குழுவின் அதிகாரி, சிலுவையிட்டுக் கொண்டபடி இவனை உடனடியாகத் தூக்குவது என்று முடிவெடுத்து அவரே வண்டியை ஒட்டிக்கொண்டும் வந்தார். செல்லும் வழிநெடுக அவர் மனதுக்குள் ஜெபித்தபடி இருப்பது அவ்வப்போதைய உதட்டசைவாய் வெளிப்பட்டது.

திறந்திருந்த எங்கள் காரின் கதவை அவன் நடந்தபடி கடந்தபோது, வண்டிக்குள் இருந்தபடியே கார் கதவை கொஞ்சம்போலத் திறந்து, ஒரு முகவரியைக் காட்டி விசாரித்தேன். காருக்குள் அவன் லேசாகத் தலையை நீட்டியதும் உள்ளே இழுத்துக் கதவை படக்கென மூடிக்கொண்டேன். 

அவன் அணிந்திருந்த தொளதொளத்த நீள முழுக்கை சட்டைப் பைக்குள் இருந்த கவருக்குள் இருந்த காகிதத்தில் உருதுவில் இரண்டு வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. அவனையே படித்துக் காட்டச் சொன்னோம். தனக்கு உருது தெரியாதென்றான். அவனுக்கு இந்திகூட சரியாகத் தெரியாது ஸ்டார் தியேட்டர் அளவில்தான் தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும். 

தெரிந்ததைச் சொல் என்றுதான் அவனை அந்த அடி அடித்துக் கொண்டிருந்தோம். தனக்கு எதுவும் தெரியாது என்றுகூடச் சொல்ல அவன் தயாராய் இருக்கவில்லை. எந்தக் கேள்விக்கும் பதில் சொன்னால்தானே பேச்சு வளரும் என்கிற அனுபவஸ்த குடும்பஸ்தன்போல அவன் மெளனமாய் இருந்தான். சித்திரவதையின் வலி தாங்க முடியாத அளவுக்குப் போகும்போது மட்டும் யா அல்லா என்று அரற்றினான். மற்றபடிக்கு அவன் வாயே திறப்பதாக இல்லை. 

தலைநகரிலிருந்து வந்திருந்த சர்தார்ஜி ஆஸ்பித்திரி தூண்போல இருந்தார். முகத்தில் கொஞ்சம்கூட கடுமையின்றி சிரித்த முகத்துடன் இருந்தார். நாங்கள் அவர் அறியாவண்ணம் நமுட்டுச் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அவன் எங்கிருக்கிறான் என்று தெரிந்துகொள்வதில்கூட அவர் ஆர்வம் காட்டாதது எங்களுக்கு வியப்பை அளித்தது. கூடவே என்ன பெரிதாகக் கழட்டிவிடப் போகிறார் என்று எகத்தாளமாய் எங்களைக் கண்களால் பேசிக்கொள்ளவும் வைத்தது. 

அவன் இருந்த விசாரணை செல்லுக்கு அடுத்திருந்த அறையும் அதற்கு அடுத்த அறையும் அவசர அவசரமாய் காலி செய்யப்பட்டன. அவருடைய ஆணையாய்த்தான் இருக்க வேண்டும் என்று நான் அனுமானித்தபடி பார்த்தேன். உடனிருந்த இன்னொருவரின் தலையசைப்பு அதை உறுதி செய்தது. 

அவனிருந்த அறையின் கம்பிக் கதவருகில் அவனை நிற்க வைக்கச் சொல்லி அதி உயர் அதிகாரியின் அறையிலிருந்து ஆணை வந்தது.  அரை மயக்கத்தில் சுருண்டு கிடந்த அவனை நான் தான் உரக்க அதட்டி எழுந்து வரச் செய்தேன். கம்பிகளைப் பிடித்தபடி துவண்ட கால்களுடன் அவன் நிற்க முயன்றான். எனக்குப் பின்னால் யாரோ கடந்து சென்றதைப் போல நிழலாடிற்று. 

அடுத்த நொடியில் யா அல்லா என்று தீனமாய் அவன் குரல் வெடிக்க வீறிட்டு அழத் தொடங்கினான். 

அடுத்தொரு பெண் குரல் அடிக்காதீங்கைய்யா. அல்லா காப்பாத்துங்க. பிள்ள இருக்குய்யா. வயித்துல அடிக்காதீங்கைய்யா என்று அலறத் தொடங்கியது அடிவயிற்றைப் பிசையச் செய்தது. தடியடி சத்தம் மொத்து மொத்தென கண்டமேனிக்கும் விழத் தொடங்கிற்று.

அவன் முகம் வெளிறி விகாரமடைந்தது. அப்படியே தரையில் கைகளைப் பரப்பி அமர்ந்தவன் தலையில் தலையில் அல்லா அல்லா என்று அடித்துக் கொள்ளத் தொடங்கினான். வெறி வந்தவன் போல தலையைத் தரையில் மடேர் மடேர் என இடித்துக் கொண்டான். 

அந்தப் பெண் அலறலும் இவன் கதறலும் எதோ பைத்தியக்கார ஆஸ்பித்திரியில் கலவரம் நடப்பதைப் போல உணர வைத்தன. 

சொல்லிடறேன்யா அவளை அடிக்காதீங்கைய்யா என்றான் திடீரென்று. அந்தரத்தில் எதோ விசையை அமுக்கியதைப்போல முன்றாவது அறையிலிருந்து வந்துகொண்டிருந்த தடியடி விளாறல் சட்டென நின்றது. அந்தப் பெண்ணின் அலறல் மெல்ல அடங்கி அழுகையாய் மாறி மெல்லிய கேவலாகத் தொடங்கிற்று.

கம்பிக் கதவைத் திறந்துகொண்டு எங்கள் குழுவின் அதிகாரி உள்ளே சென்றார். அவனை அள்ளிப் பொறுக்கிகொண்டு, சுவரைத் தவிர வேறு எதுவும் தெரியாத அறையின் மூலைக்குச் சென்றோம். அவன் ஓரிரு வார்த்தைகளாய்ச் சொல்லச் சொல்ல குறித்துக் கொள்ளத் தொடங்கினார் அதிகாரி. வாய்விட்டுச் சொல்லக்கூட வலுவற்றவனாக அவன் தண்ணி என்று சைகையில் காட்டினான். எங்கள் அதிகாரி என்னைப் பார்த்தார். 

எவர்சில்வர் லோட்டாவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தலைமை அதிகாரியின் அறையைக் கடக்கையில் லேசாக திறந்திருந்த கதவிடுக்கில் ஒரு புர்கா பெண்மணி கையெடுத்துக் கும்பிட்டபடி நின்றிருப்பதும் கைகளை உயர்த்தித் தலையசைத்தபடி சர்தார்ஜி பேட்டி என்று அவளிடம் எதோ சொல்வதும் தெரிந்தது. 

எடுபிடி வேலைக்கு இருக்கும் ஆட்கள் கந்தல் கந்தலாகப் பிய்ந்திருந்த இரண்டு மூன்று தலையணைகளையும் லத்திகளையும் எடுத்துக் கொண்டு என்னைக் கடந்து சென்றார்கள்.

19 ஜூன் 2016