Thursday, January 12, 2017

இறுக்கத்திலேயே நகரும் படம்

சினிமாவின் ஜெருசலேமான ஹங்கேரி படம். முன்னோடி மேதைகளின் தரத்துக்கு இது சுமார் படம்தான். ஆனால் இதுவே அள்ளு கழன்றுவிட வைக்க வல்லது. 

படம் தொடங்கும் முன் அருகிலிருந்த இளைஞர் அடுத்திருந்த நண்பரிடம், இதை ஐநாக்ஸ்ல போட்டப்ப பாதிதான் பார்த்தேன் என்றார். படம் ஸ்லோவா இருந்தாக்கூட பாத்துருவேன். ஆனா இது என்னான்னே புரியல. 

ஐநாக்ஸ் போன்ற சிறிய தியேட்டரில் திரையிடப்பட்டு விட்டதால், நிறைய பேர் தவற விட நேர்ந்தது என்கிற புகார் காரணமாக, வேறொரு படத்தைத் தூக்கிவிட்டு இதைப் போட்டிருந்தார்கள். 

படம் தொடங்கி கொஞ்ச நேரம் கழித்து, புரியவில்லை என்றவரின் நண்பர் எழுந்து போய்விட்டார். இன்னும் சற்று நேரம்கழித்துப் பார்த்தால் இவர் தூங்கிக்கொண்டு இருந்தார். 

டைட் குளோஸின் இறுக்கத்தில் படம் அக்கினி குண்டம்போல் கொழுந்துவிட்டு எரிந்தபடி போய்க்கொண்டு இருந்தது. 

இன்னும் கொஞ்சம் நேரமானதும் இவர் படம் பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. 

வாயைப் பொத்திக்கொண்டு, கிசுகிசுக்கும் குரலில் இதுல என்ன புரியல என்றேன். 

ஒன்னுமே புரியலை என்றார். 

நாஜிக்களின் கான்சட்ரேஷன் கேம்ப்னு தெரியிதா. 

ம் 

ஜனங்களை நிர்வாணமாக்கிக் கொளுத்தறாங்கன்னு புரியிதா 

ம் 

அவ்வளவு பொணங்களுக்கு இடைல ஒரு இடத்துலேந்து மூச்சு சத்தம் வந்துதில்ல 

ம் 

அந்தப் பையனுக்கு உயிர் ஊசலாடுதுங்கறது தெரிஞ்சதும் டாக்டர் வந்து லாங் ஷாட்ல கையை வெச்சு அழுத்தினதும் அவன் செத்துப் போனதும் தெரிஞ்சிதா 

ம் 

அப்பறம் அவன் Rabbi Rabbiனு தேடிக்கிட்டு திரியறதைப் பாத்தீங்க இல்ல 

அதான் புரியல 

Rabbiங்கிறது ப்ரீஸ்ட்டு அய்யிரு மாதிரி. செத்தவங்களுக்குக் காரியம் பன்றவங்க. உசுர் இருந்து, தன்கண்ணெதுர செத்துப்போன அந்தப் பையனைத் தன் மகனா நினைச்சிக்கிட்டு அவனுக்கு இறுதிச் சடங்கு செய்யதான் இவன் இவ்ளோ ரிஸ்க்கெடுத்து அலைஞ்சுக்கிட்டுத் திரியிறான். 

ஓ 

படம் ஆரம்பிக்கிம்போதே போட்டானே, ஸால் மாதிரியான ஆட்கள்லாம், ரயில்ல கும்பல் கும்பலா வர யூதர்களை, எதிர்ப்பு எதுவுமில்லாம ரொடீன் விசயம்தான்னு நம்ப வெச்சி, துணியைக் கழட்டிக் குளிக்கப் போகச் சொல்லி, கேஸ் சேம்பர்ல உள்ள விட்டுக் கொல்ல உதவியா இருக்கிற யூதர்கள். கொஞ்ச நாள் கழிச்சி இதே கதிதான் இவங்களுக்கும். அப்படிங்கிறது இவங்களுக்கும் தெரியும். அதனாலதான் இவங்க பயங்கர ரிஸ்க்கெடுத்து ஆயுதக் கிளர்ச்சிக்குத் தயாராகறாங்க ரகஸியமா. இதுக்கு நடுல இவனோட இலக்கெல்லாம் செத்துப்போன அந்தப் பையனுக்கு எப்படியாவது இறுதிச் சடங்கு செஞ்சிடணும்ங்கிறதுதான். 

இப்போது எழுதியிருக்கும் அளவுக்கு இவ்வளவு விரிவாகச் சொல்லவில்லை என்றாலும் அவருக்குப் புரிந்து விட்டது. 

நானோ, கையேடாகக் கொடுக்கப்பட்டிருந்ததில் இருக்கும் நாலு வரி குறிப்பைக்கூட படிக்காமல் போய் உட்கார்ந்திருந்தேன். இங்கிலீஷ் படிக்கத் தெரிவதும் சினிமா பார்க்கத் தெரிவதும் இரு வேறு விஷயங்களல்லவா. 

ஈர வெங்காயங்களுக்கு இந்தப் படம், மத சடங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து மூடத்தனத்தைப் பரப்புவதாகக்கூட தோன்றக்கூடும். கலை தானே இதை, யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்தானே.

கூடுதலாக சிலருக்கு இதுவும் உதவக்கூடும்.  படித்தால் இன்னும் சில படங்களின் பெயர்கள் தெரிய்வரக் கூடும். 

https://www.theguardian.com/film/2016/apr/27/son-of-saul-review-profoundly-distressing

https://www.youtube.com/shared?ci=-P6XJUuMQYE