Sunday, July 2, 2017

GSTயும் பேஸ்புக் கும்மியும் நம் ஓட்டல் பில்லும்

GSTக்கு முன் தமிழக ஓட்டல்களில் VAT 2% ST 5.6%மாக 7.6% தானே இருந்தது.

GSTக்குப்பின் இப்போது SGST 9% CGST 9% என்று 18% வரி என்று ஆகிவிட்டதே. GST வந்தால் விலை குறையும் என்பது எவ்வளவு பெரிய புருடா என்கிறது ஒட்டுமொத்த பேஸ்புக்கும்.

அப்போதைய VAT 2% என்பது VAT கிரெடிட் எடுக்காதவர்களுக்கு மட்டுமே. அப்போதே பில்லுடன் வாங்கி VAT கட்டி அப்படிக் கட்டிய VATஐ கிரெடிட் எடுத்துக் கொண்டு இருந்த ஓட்டல்களுக்கு VAT 14.5% . அதனால்தான் பெரிய ஓட்டல்களில் 14.5% + 5.6% = 20% இருந்தது. 

GSTயில், ஒட்டல் தொழிலில் வருடாந்திர வியாபாரம்  20 லட்சத்துக்குள்  இருப்பவர் பதிவு செய்யவும் வேண்டியதில்லை. கிரெடிட்டும் எடுக்க முடியாது. அவருக்கு GSTயும் கிடையாது. இது கையேந்தி பவனில் இருந்து சின்ன ஓட்டல்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும்.

20 முதல் 75 லட்சத்துக்குள் இருப்பவர் கட்டாயம் பதிவு செய்தே ஆகவேண்டும். தயாரிப்பு செலவுகளுக்குக் கட்டிய எந்த GST வரிகளையும் கிரெடிட் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் CGST 2.5%ம் SGST 2.5%மாக 5% வரியைக் கட்டினால் போதும். ஆனால் அவர் நம்மிடம் தனியாக வரியைக் குறிப்பிட்டு வசூலிக்ககூடாது. அவர் வைக்கும் விலைக்குள்ளாகவே இந்த GST வரியை சரிசெய்துகொள்ள வேண்டியது அவர் பொறுப்பு.

அவரே, தயாரிப்பு செலவுகளுக்குக் கட்டிய எல்லா GST வரிகளையும் கிரெடிட் எடுத்துக் கொள்வதாக இருந்தால் CGST 9%ம் SGST 9%மாக 18% வரியைக் தனியாகக் குறிப்பிட்டே நம்மிடம் வசூலித்தாக வேண்டும். 

20 முதல் 75 லட்சங்களுக்குள் இருந்துகொண்டு 2.5% + 2.5%ல் சலுகையில்  வரி கட்டுவதால், அவரது உற்பத்தி செலவுகள் அனைத்தையும் GSTயில் பதிவு செய்தவரிடமிருந்தே வாங்கியாக வேண்டும். பதிவு செய்யாதவரிடம் வாங்கினால் அதற்கான GST வரியை அவரே கட்டியாக வேண்டும். ஆனால் அதற்கு கிரெடிட் எடுக்க முடியாது. எனவே இந்த வகையில் இருப்பவர் எல்லோரும் GSTயில் பதிவு செய்தேதீருவர். நாம் அதிகம் செல்லும் ஓட்டல்கள் பெரும்பாலும் இந்த வைகைக்குள் வந்துவிடும்.

75 லட்சத்தைத் தண்டிய பெரிய ஓட்டல்களுக்கு இந்த ஆப்ஷனே இல்லை. கிரெடிட் எடுக்கிறார்களோ இல்லையோ அவர்கள் CGST 9%ம் SGST 9%மாக 5% வரியை நம்மிடம் வசூலித்தாக வேண்டும். 

ஓட்டல் பெரியதோ சிறியதோ GST அமல்படுத்தப்பட்டபின் இப்போது பில் இல்லாமல் வியாபாரமே செய்ய முடியாது. கொள்முதல் செய்யும் சகலவிதமான பொருள்களுக்கும் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் சகலவித சேவைகளுக்கும் 9% + 9% கட்டியாக வேண்டும். கட்டியவர் எப்படி அதைக் கிரெடிட் எடுத்துக் கொள்ளாமல் இருப்பார். எனவே உற்பத்தி செலவில் இவ்வளவு கிரெடிட் கிடைக்கையில் அடக்கவிலை கண்டிப்பாகக் குறைந்துதானே ஆகவேண்டும். 

வரியைக் கட்டு. கட்டிய வரியை வரவில் வை. அதைக் கட்டவேண்டிய வரியில் கழித்துக் கொள் என்பதே எதிர்கால வியாபாரமாக இருக்கும்.