Sunday, July 9, 2017

வரி செலுத்த வேண்டிய எரிச்சல் Vs ஜிஎஸ்டி - எது உண்மையான வலி?


பேலியோவுக்கு வந்த பின்னர் வாராவாரம் வெண்ணெய் வாங்கியாக வேண்டிய நிர்பந்தத்தில் திருவல்லிக்கேணி பெரியதெரு ஷண்முகம் கடைக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. பத்து நாள் முன்பாக 500 கிராம் வெண்ணைக்கு 240 ரூபாய் என்றார்

என்னங்க விலை ஏறிடிச்சா அஞ்சு நாள் முன்ன 230க்குக் குடுத்தீங்களே 

ஒன்னாந்தேதி வரட்டும் இதே வெண்ணை 250 - 260க்குப் பொனாலும் ஆச்சரியமில்லை என்றார்

ஏங்க 

அதான் GSTனு ஒன்னைக் கொண்டாராங்களே 

அதனால ஏங்க விலை ஏறணும் 

பின்ன என்ன சார். வெண்ணெய் தானே காச்சினா நெய் ஆகுது.  வெண்னெய் வாங்கும் போது 12% வரி கட்டணுமாம். அதைக் காய்ச்சி நெய்யா விக்கும்போதும் 12% வரி கட்டணுமாம். 24% வரி போட்டு வித்தா யார் வாங்குவா. எப்படி வியாபாரம் செஞ்சு பொழைக்கிறது. என்ன அநியாயம் சார் என்று பொங்கிவிட்டார்

வயதானவர் ஆயிற்றே என்று நானும் பொறுமையாகக் கூறினேன்

நீங்கக் கட்டற 12% வரிக்கு பில்லை வாங்கி, நீங்கக் கட்ட வேண்டிய 12% வரில கழிச்சுக்கப் போறீங்க. இதுல எங்க சார் 24% வரி கட்டவேண்டி வருது. நீங்களும் பேஸ்புக்குல இருக்கீங்களா என்ன என்றேன் சிரித்தபடி

என்ன சொல்றீங்க என்றார். வெண்ணெய் தானே சார் காய்ச்சி நெய்யாக்கறேன்

ஏன் அவ்வளவு தூரம் போவணும். வெண்ணெய்யை வாங்கி ஒன்னுமே பண்ணாம வெண்ணெய்யாவே வித்தாலும் வரி கட்டத்தானே போறீங்க. நீங்க சொல்றா மாதிரி ஒவ்வொரு இடத்துலையும் வரி போட்டு விலைவாசி கன்னா பின்னானு ஏறக்கூடாதுனு இன்னிக்கு நேத்து இல்லே, 1986 ராஜீவ் காந்தி தலைமைல  இருந்த காங்கிரஸ் ஆட்சில வி பி சிங் நிதியமைச்சரா இருந்தபோது கொண்டுவந்த சீர்திருத்தம்தான் இது எல்லாத்துக்கும் தாத்தா

அதாவது நீங்க ஒரு சைக்கிள் தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்கீங்கனு வெச்சுக்குங்க. சைக்கிளுக்கான இரும்புலேந்து வீலு டயர்னு எல்லா பாகங்களையும் நீங்களே தயாரிக்க முடியாது. பெரும்பாலான பொருட்களை வேற வேற கம்பெனிலேந்துதான் வாங்குவீங்க. அந்த ஒவ்வொரு பொருள் மேலையும் உக்காந்திருக்கிற வரிகளோட சேத்து நீங்க சைக்கிளாக்கி விக்கும் போது நீங்க சொன்னாப்புல வெண்ணெய்க்கு 12% நெய்க்கு 12% னு ஒரு காலத்துல இருந்ததைத்தான் 1986 MODVATனு சீர்திருந்த்தி, சைக்கிள் தயாரிக்க வாங்கற பொருள்கலுக்கெல்லாம் என்னென்ன வரியைக் கட்டி இருக்கீங்களோ அதுக்கெல்லாம் பில்லிருந்தா வரவு வெச்சிக்கிட்டு சைக்கிளா விக்கும்போது கட்டவேண்டிய வரிலகட்டின வரியைஎல்லாம் கழிச்சிக்கிட்டு மீதியை வரியா கட்டினாபொதும்னு சீர்திருத்தம் கொண்டாந்தாங்க

அப்பறம் 1994 நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்துல மன்மோகன் சிங் நிதியமைச்சரா இருந்தபோது, கச்சாப் பொருள் பாகங்கள் மட்டுமில்லே உங்க சைக்கிள் கம்பேனில சைக்கிள் பிரேம்  தயாரிக்க வெச்சிருக்கிற மோல்டு பன்ற மெஷின் வாங்கியிருப்பீங்க இல்லே. அந்த வரியையும் வரவுல வெச்சிக்கிட்டு வரி கட்டும்போது  கழிச்சிக்குங்கனு சொன்னாங்க

இதே மாதிரி, 1994 கொண்டாந்த சேவை வரிங்கிற Service Taxக்கும் 2004 வரவு வெச்சிக்கிட்டு வரி கட்டும்போது கழிச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால இது ஒன்னும் புதுசில்லே நீங்க நினைக்கிறாப்புல விலைவாசியெல்லாம் ஏறாது. குறையும். GST ஆரம்பத் தடுமாற்றத்துக்கு அப்பறம் நீங்களே வென்ணெய் விலையை நெய் விலையைக் குறைப்பீங்க பாருங்க

இதுமாதிரி ஒன்னில்லே ரெண்டில்லே எகப்பட்ட வரி செண்ட்ரலு ஸ்டேட்டுனு ஊருக்கு ஒம்போது வரி. அதுல சிலதை ஸ்டேட் விட்டு ஸ்டேட் போனா எடுக்க முடியாது. இதையெல்லாம் ஒன்னாக்கி இந்தியா முழுக்க எங்கக் கட்டின வரிக்கும் எங்க வேணும்னா வரவு வெச்சிக்கலாம்னு கொண்டாந்ததுதான் GST. 

நெய்க்கடை ஷண்முகம் அவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் இப்படி எத்தனைப் பேரைப் பார்த்திருப்பார். கபால் என மாறினாரே பார்க்க வேண்டும்

சார் இப்ப இந்த போளியை எடுத்துக்குங்க. ஒரு அம்மா வீட்டுல செஞ்சி கொண்டாந்து குடுக்குறாங்க அவங்க கிட்ட நான் என்னத்தைனு பில்லைக் கேப்பேன் என்னத்தைனு வரியைக் கட்டி வரவு வெச்சி இதை உங்களுக்கு விக்கும்போது என்னான்னு வரி வசூலிப்பேன் என்றார்

இந்தம்மா மட்டுமில்லே, வருஷத்துல 20 லட்சத்துக்குக் கீழ வியாபாரம் பன்ற யாருமே GST பதிவு செஞ்சிக்கத் தேவையில்லை. ஆனா பதிவு செய்யாதவங்ககிட்ட வாங்கற நீங்க, அதுக்குக் கட்டப்படவேண்டிய ஆனா கட்டப்படாம இருக்கிற வரியை நீங்களே கட்டி வரவுல வெச்சி கட்டவேண்டிய வரில கழிச்சிக்கலாமே. ஆக கொள்முதல்ல இருக்கிற வரியைக் கழிச்சிட்டா நீங்கக் கட்டப்போற வரி, தயாரிப்புச் செலவு விற்பனைச் செலவு லாபம்னு கணக்குப் போட்டு நீங்க வெக்கிற உபரி விலைக்கான வரிதான் என்று கூறிவிட்டு, வெண்ணெய் பையுடன் பைக் எடுக்க வந்தேன்

அவருக்கு உண்மையான வலி, ஜென்மத்தில் பில்லே இல்லாமல் ஒடிக்கொண்டிருக்கும் வியாபாரத்தில் இனி ஒவ்வொன்றுக்கும் பில் போட்டு கணக்கில் கொண்டுவர வேண்டும். எல்லாமே கணக்கில் வந்துவிட்டால் விற்பனை வரி மட்டுமின்றி, ஆதார் PAN பேங்க் என்று எல்லாமே கோர்க்கப்பட்டுவிட்ட சரக்கூடத்தில் வருமான வரியும் கட்ட வேண்டுமே என்பதுதான் என்று புரிந்தது

விலை எப்படிக் குறையும் என்கிற கேள்வி எல்லோருக்குமே எழுவது சகஜம்தான்

கட்டிய எல்லா வரிகளுக்கும் கிரெடிட் எடுத்திருக்கிறாய் அல்லவா விலையைக் குறை என்று நீங்களும் நானும் சொல்ல வேண்டியதில்லை அதை மார்க்கெட் பார்த்துக் கொள்ளும்

அடப்போய்யா பொக்கே. இந்தியாவுல ஏறின விலை எந்தப் பொருளுக்குக் குறைஞ்சிருக்கு

இதை இப்ப நான் டைப்படிச்சிக்கிட்டு இருக்கிற லேப்டப்பை நான் வாங்கினப்போ வித்த விலையென்ன இப்ப விக்கிற விலையென்ன. இதை நீங்க படிச்சிக்கிட்டு இருக்கிற மொபைல் விலை ரெண்டு வருஷம் முன்னாடி என்ன இன்னைக்கு விலை என்ன. இந்த விலை இறக்கத்தையெல்லாம் நீங்களும் நானுமா செஞ்சோம். இல்லை அதுவே தானா குறைஞ்சிதா. மார்க்கெட் குறைச்சிது

சந்தைப் போட்டியில் சரக்கைத் தள்ள விலை குறைத்தாக வேண்டிய நிர்பந்தம். அதற்காக நஷ்டத்துக்கு யாரும் வியாபாரம் பண்ண முடியாது. வாங்குகிற பொருள்களில் இருக்கிற வரிகளை எல்லாம் கிரெடிட் எடுத்துக்கொண்டு மீதிக்கு வரி கட்டினால் போதும் என்றால், அடக்க விலை குறையுமா குறையாதா. வாய்ப்புக் கொடுத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க எந்த வியாபாரியும் முட்டாள் இல்லை. லோகாதய முட்டாள்கள் இலக்கியவாதியாக இருக்கலாம் ஒருநாளும் வியாபாரியாக இருக்க முடியாது. 

நன்றி: தி இந்து 04.07.2017