Monday, November 20, 2017

GST வரியும் ஒட்டல் கொள்ளையும்

நன்றி: தி இந்து

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் என்பது இருக்கும்தானே என்று சகஜமாக எடுத்துக்கொள்வதைப் போல வியாபாரம் என்று இருந்தால் வரி எய்ப்பு இருக்கதானே செய்யும் என்பதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம். 

அரசாங்கத்தின் ஊழல் மக்களின் வரிப்பணத்தில்தான் நடக்கிறது என்றாலும் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை. அதாவது அவனது பாக்கெட்டில் இருந்துதான் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டாலும் அவனது சட்டையோ பர்ஸோ நேரடியாகக் கிழிபடாததால் அவன் அது குறித்து மெத்தனமாக இருக்கிறான். ஆனால் வியாபாரம் அப்படியல்ல. அதிலும் குறிப்பாக ஒட்டல் தொழில் அப்படியல்ல. சாதாரண மனிதனை அன்றாடம் நேரடியாக பாதிக்கிறது. அப்படிப்பட்ட விஷயத்தில் கொள்ளை அடிக்க அசாதாரண தைரியம் வேண்டும். அது ஒட்டல் பெருமுதலாளிகளுக்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. 

இல்லையென்றால் GST ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என்றவுடனேயே, அது அமலுக்கு வரும் முன்பாகவே விலையை ஏற்றி இருப்பார்களா. சரி விலையைத்தான் ஏற்றினார்களே, ஜூலை 1 முதல் ஏற்றிய விலைக்கு உள்ளாகவாவது அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை வைத்துக் கொண்டார்களா. ஏற்றிய விலைக்கு மேல் GST எக்ஸ்ட்ரா. 

என்ன இது பகல் கொள்ளையாக இருக்கிறதே என்று கொஞ்சம் தைரியமாகக் கேட்டவர்களுக்கு, அரசாங்கம் மக்களைத் துன்புறுத்துகிறது நாங்கள் வசூலித்தே ஆகவேண்டி இருக்கிறது என்று கைவிரித்து விட்டார்கள். இது நுகர்வோரிடம். 

ஆனால் இதே ஒட்டல் முதலாளிகள் அரசிடம் முறையிட்டது என்ன. எங்களுக்கு GST கொள்முதல் பொருட்களில் இருக்கும் GSTயை வரவு வைத்துக்கொண்டு, அதிலிருந்தே செலுத்த வேண்டிய வரியை கழித்துக் கொள்ளும் வசதி வேண்டவே வேண்டாம். ஏனென்றால், நாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களும் நபர்களும் ஒழுங்குபடுத்தப்படாத வியாபாரிகள். அவர்கள் GSTக்கு உள்ளேயே வராதவர்கள். எனவே ITC என்கிற இன்புட் கிரெடிட்டால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே அதை நீக்கிவிட்டு வரியைக் குறையுங்கள் என்றார்கள். 

இதிலிருக்கும் பித்தலாட்டத்தைப் பார்ப்போம். இந்த ஒட்டல் முதலாளிகள் எல்லாம் கையேந்தி பவன் நடத்துபவர்களா. எந்தக் காலத்தில் மெஸ் போன்ற சிறு ஒட்டல் முதலாளிகள் அரசாங்கத்திடம் போய் பேசியிருக்கிறார்கள். இவர்கள் அத்தனைப் பேரும் பெரிய பெரிய ஒட்டல் நடத்துபவர்கள். இப்போதெல்லாம் ஒரு ஒட்டலை மட்டுமே யார் நடத்துகிறார்கள். நிறையக் கிளைகள் கொண்ட சங்கிலித் தொடர் ஒட்டல்கள் அல்லவா பெரும்பான்மை. இவர்களெல்லாம் மூலப் பொருட்களை வாங்குவது யாரிடம் பிளாட்பாரக் கடைகளிலா. அல்லது இப்படியான சிறு சிறு கடைகளில் கொள்முதல் செய்து இவர்களால், தினந்தோறும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்குப் பொங்கிப் போடத்தான் முடியுமா. கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் ஒட்டல்களை நடத்துபவர்கள் பேசுகிற பேச்சா இது. எதுவும் கணக்கில் வரக்கூடாது. GSTயில் டிஷ்யூ பேப்பர் முதற்கொண்டு கொள்முதல் செய்கிற எல்லாப் பொருட்களும் கணக்கில் வந்துவிடும் எனவே எங்களுக்கு இன்புட் கிரெடிட்டே வேண்டாம். இவ்வளவுதான் விஷயம். 

சரி இவர்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அரசாங்கமும் வரியைக் குறைத்துவிட்டது. ஆனால் இந்த தர்மவான்கள் வைத்திருந்த விலையைக் குறைப்பதற்கு பதில் தங்களது கொள்ளையைக் கூட்ட, GSTயோடு இருந்த பழைய விலையையே தக்கவைத்துக் கொள்ள, தங்கள் பொருட்களின் அடக்க விலையைக் கூட்டிவிட்டார்கள். 

GST அறிவிக்கும் முன்னரே விலையைக் கூட்டிவிடுவார்கள். கூட்டிய விலைக்கு மேல் GST வசூலிப்பார்கள். அரசங்கம் GSTயைக் குறைத்தால் அடுத்த ரவுண்டு கொள்ளையாக அப்போதும் பொருள் விலையை ஏற்றிக்கொள்வார்கள். நேற்றுவரை இந்த விலை கொடுத்துதானே சாப்பிட்டான். அதே விலை அவனுக்கு எப்படி கஷ்டமாகத்தோன்றும். அடி கொள்ளையை. 

இப்போது கேட்டால் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த இன்புட் கிரெடிட் சலுகையை அரசாங்கம் விலக்கிக் கொண்டு விட்டதால், ஏற்படும் நஷ்டத்தைச் சரிக்கட்ட பண்டங்களின் விலையை ஏற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கையை விரிக்கிறார்கள்.

இருக்கிற பொருளுக்கு, புதிதாக விதிக்கப்பட்ட GST வரியை மட்டும் வசூலித்து அரசுக்குக் கட்டிவிட்டுப் போவதற்கு பதிலாக எக்ஸ்ட்ராவாக ஜூலை 1க்கு முன்னால் ஒரு அநியாய விலையேற்றக் கொள்ளை, இவர்களே கேட்டுக்கொண்டதற்காக அரசாங்கம் வரியைக் குறைத்தால் இப்போதும் ஒரு அக்கிரமக் கொள்ளை. 

GSTயின் அறிமுகத்தால் எல்லாப் பொருட்களின் விலைகளும் ஏறும் என்பது உண்மை என்றால் கார்களின் விலை மட்டும் எப்படிக் குறைந்தது. ஏனென்றால் அவை தொழிற்சாலைகளில் தயாராகிக்கொண்டு இருப்பவை. அந்த உற்பத்தித் தொழில் கணக்கு வழக்கு மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் வருடாந்திர தணிக்கைக்கு உட்பட்டது. எனவே இன்புட் கிரெடிட் மூலமாகக் கிடைக்கிற கூடுதல் நன்மையை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தார்கள். 

ஒட்டல் தொழிலில் என்ன கணக்கு என்ன தணிக்கை என்பதை என்னைப்போல உங்களைப்போல பாதிக்கப்படும் ஒவ்வொரு நுகர்வோரும் அறிவார்கள். 

நம்மால் முடிந்ததெல்லாம், காய்ச்சிய எண்ணெய்யிலேயே திரும்பத்திரும்ப புதிய எண்ணெய்யை ஊற்றிக் காய்ச்சி உடம்பை விஷமாக்கும் ஒட்டல்களுக்குச் செல்வதையே முற்றிலுமாகத் தவிர்ப்பதுதான். இது ஒன்றும் அராஜகமல்ல. காந்தி சொல்லிக்கொடுத்த பகிஷ்காரம் என்கிற புறக்கணிப்புதான். அவர் சொன்னது வெள்ளையர்களுக்கு எதிராக. நாம் செய்யவேண்டியது கொள்ளையர்களுக்கு எதிராக. 

(எழுதப்பட்ட முழுவடிவம்).

நன்றி: தி இந்து 20.11.2017