January 9, 2011 maamallam 2Comment
காலச்சுவடு கடையில் தேவிபாரதியிடம் டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது, புத்தகத்தைக் நேற்று ஒரு வழியாகக்  கொடுத்துவிட்டேன். 27 வருடம் கழித்து ஒரு புத்தகம் திரும்பி வந்திருக்கிறது என அம்பை, பெருந்தேவி என்று எல்லோரிடமும் காட்டி அவன் மாய்ந்து போனதைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது.
அதற்கு ஓரிருநாள் முன்பாக 27 வருட இடைவெளியில் அவனை சந்தித்த போது. கொஞ்ச நேரப் பேச்சிற்குப் பிறகு அவன் சொன்ன வாக்கியம். 
மாமல்லன் உங்களிடம் ஒரு கணக்கு தீர்க்க வேண்டி இருக்கிறது.
டான்நதிதானே. அதை யாருக்கோ கொடுத்து விட்டேன் போல. எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. 

என்று சொல்லி வைத்திருந்தேன். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக டான் நதியின் முதுகை மட்டுமே பார்த்தபடி மோகமுள் என நினைத்திருந்திருக்கிறேன். மோகமுள் நாவலின் முதுகு, பள்ளி-கல்லூரியில் பேச்சு-கவிதைப் போட்டிக்குப் பரிசாகக் கிடைத்த நேருவின் இந்தியாவைக் கண்டுபிடித்தலாய் நினைத்திருந்திருக்கிறேன். 
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் புத்தக வேலையாய் 1986ல் நான் கே.கே.நகர் க்வார்ட்டர்ஸ்ஸில் இருந்த சமயத்தில், கி.ராஜநாராயணன் கிண்டலாய் எழுதி அவரது புத்தகம் ஒன்றை, அவராகவே பரிசாய்க் கொடுத்த நினைவு இருந்தது. அதில் ஒரு வேளை நிலநிறுத்தல் கதை இருக்குமோவென தூசுபடிந்த புத்தக அலமாறியைக் கலைத்துக் கொண்டிருக்கையில் டான் நதி அமைதியாய் உட்கார்ந்திருப்பது தெரிய வந்தது.
காலச்சுவடு கண்ணனை அவன் கல்யாணத்தில் (92ஆ 93ஆ) சந்தித்ததற்கு அப்புறம் எப்போதோ ஒரு முறை ட்ரைவ்-இன்னில் ஹலோ-ஹலோ சொல்லி நகர்ந்ததாக நினைவு. நேற்றுதான் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். 
பேச்சிற்கிடையில் ஒரு தருணத்தில் தொண்டையில் நெருடிக் கொண்டிருந்த விஷயத்தைச் சொன்னேன். 
1994ல் எழுதிய சோழிகள் குறுநாவல் மட்டும் அப்போதே காலச்சுவடில் பிரசுரமாகி இருந்திருந்தால் 16 வருட இடைவெளி இல்லாமல் நான் தொடர்ந்து  எழுதிக்கொண்டு கூட இருந்திருப்பேனாக இருக்கலாம். 
முக்கியமான கதைகள் இலக்கியப் பத்திரிகைகளில் முதலில் பிரசுரமாகிப் பிறகு புத்தகமாகும் போதே கவனத்தைக் கவர்கின்றன. இந்த எளிய உண்மை அறியாமல் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், புறப்பாடு, போன்றவற்றை நேரடியாக புத்தகத்தில் வெளியிட்டு, நூலக அடுக்குகளில் புதையுண்டுபோகக் கொடுத்திருந்தேன். அல்லது, நிற்பதற்காகவே மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டிருந்த கணையாழியில் பந்தாட்டமும், இலவச இணைப்பாக வெளியான மாலைக் கதிரில் சோழியுமாகப் போய் மாட்டி முதுகு காட்டிக் கொண்டிருந்தன.
ஒரு கதை இரண்டுமாதம் பிரசுரிக்கப் படாமல் தாமதப் பட்டுக் கொண்டு இருப்பதே போதும், அந்தப் பத்திரிகை என்னை அவமதித்து விட்டதாய்க் கோபம் கொண்டு திருப்பி அனுப்பச் சொல்ல. 
திருப்பி அனுப்பச் சொல்லிக் கேட்பதே போதுமானது, எழுத்தாளன் தன்னை அவமதித்து விட்டான் என்று பத்திரிகையாசிரியன் கோபம் கொண்டு திருப்பி அனுப்ப.
அத்தோடு உறவு அறுந்துவிடும். அதற்கு முன்பான அத்துனை நினைவுகளும்.
நான் முதலில் ராமசாமியைப் பார்த்தது 1982ல். காவியில் இருந்தேன். அப்போது எனக்கு 22வயது. மூன்று நான்கு நாட்கள் அவரது வீட்டு மாடியில் தங்கி இருந்தேன். அவரது இரண்டாவது மகள் தைலாவும் 60 பிறந்தவர் என்பது தெரியவர ஆச்சரியப்பட்டேன். 
இல்ல மாமல்லன், எனக்கு அது பெருசாப் படலை. கண்ணனுக்கும் உங்களுக்கும் 5 வருஷம்தான் வித்தியாசம்ங்கறதுதான் ஆச்சரியமா இருக்கு. அவன் இன்னும் கொழந்தை. 5 வருஷ வித்யாசம்தான் உங்க ரெண்டு பேருக்கும். இதுக்குள்ள உங்குளுக்கு என்னல்லாம் தெரியறது. யாரையெல்லாம் பார்த்துருக்கீங்க. எவ்ளோ பேசறீங்க.
முதல் நாள் இரவில் ஹாலை ஒட்டிய முன் அறையில் இருந்த ஒற்றை இரும்புக் கட்டிலில் ராமசாமி படுத்தபடி பேசிக்கொண்டிருக்கையில் என்னிடம் இருந்த கோல்ட்ஃப்ளேக் ப்ளெய்ன் கடைசி பெட்டியும் தீர்ந்து விட்டது.  அவர் வீட்டிற்கு எதிரில் இருந்த பெட்டிக் கடைக்கு, கண்ணனும், ஃப்ராக் அணிந்து, ரெட்டை ஜடையுடன் தங்குவும் வந்தார்கள். குட்டிக் குரங்கு காஷாயம் தரித்து வந்திருந்தது,அவர்களுக்கு ஆர்வக் குறுகுறுப்பை உண்டாக்கி இருந்திருக்கக்கூடும். அங்கு கோல்ட் ஃப்ளேக் ப்ளெய்ன் இல்லை. வில்ஸ் ஃபில்ட்டர்தான் இருந்தது. கண்ணந்தான், இரண்டு பெட்டி வாங்கிக் கொடுத்தான்.
உள்ளே வந்து நான் ஒரு சிகரெட்டைப் பற்றவைக்க, ராமசாமியும் ஒன்றை எடுத்துக் கொளுத்துவ்து பார்த்து, சிகரெட் பிடிப்பதை விட்டுட்டேன்னு சொன்னீங்க என்றேன்.
நீங்க இப்படி ஊதித்தள்ளிண்டு இருக்கும் போது எதுர்ல எவ்வளவு நேரம்தான் சும்மா ஒக்காந்துருக்கறது என்றார் சிரித்தபடி.
டான் நதி என்னையாடா மோகமுள்ளாய் நினைத்தாய் எனவோ, மோகமுள் என்னை எப்படி இந்தியாவைக் கண்டுபிடித்தலாய் நினக்கப் போயிற்று எனவோ கோபிக்காமல், முதல் வாசிப்பிறகுப் பின் வருடக் கணக்காய் கொடுக்கப்பட்ட இடத்தில் சிறு முனகல் கூட இல்லாமல் அமர்ந்திருந்தன. மூடனே இன்னொருமுறை எடுத்து வாசிக்க உனக்குக் கொடுத்து வைக்கவில்லையடா என்ற கர்வத்துடனும் நிறைவுடனும்.
தேவிபாரதி கண்ணனிடமும் டான் நதியைக் காட்டிக் கொண்டிருந்தான். காணாமல் போன முதல் இரண்டு பக்கங்களும் சேர்த்து அடுத்த புத்தகக் கண்காட்சியிலேனும் புதிய பிறப்பெடுக்கட்டும்.
புத்தகக் கண்காட்சியில், உயிர்மெய் பக்கம் போகவும் கூடக் கூச்சமாய் இருக்கிறது. 
கி.ராஜநாராயணன் புத்தகம் இருக்குமா எனப் பார்க்கப் போனபோது, 
இன்னக்கி எந்த புத்தகத்தைப் பத்தி ப்ளாக்ல எழுதப் போறீங்க என்றார் மனுஷபுத்திரன். 
அவர் உள் அர்த்தத்தோடு கவிதை மட்டும் எழுதுபவரல்ல.
கி.ராஜநாராயணனின் நிலைநிறுத்தல் கதை வெளியாகி இருக்கும் கொத்தைப் பருத்தி எங்கே கிடைக்கும்? 
தெரியலைங்க அகரத்துல கேட்டாத் தெரியும் என்றார்.
நிலைநிறுத்தலின் திரைக்கதை வடிவம் 1992ல் C.மோகன் நடத்திய காலம் பத்திரிகையில் வெளியாகி இருந்தது. கதையை பிரசுரித்து இதையும் வெளியிட இருக்கிற விருப்பத்தைக் கூறினேன். அது நல்ல ஐடியாதான் என்றார் மனுஷ்ய புத்திரன். அவர் கடையில் ஓரிடத்தில் இருந்த கடைப்பட்டியல் துண்டறிக்கையைக் கையில் எடுத்து, கடை வரிசைப் பட்டியலில் அகரம் என்று தேடிக் கொண்டிருந்தேன். 
ஏழெட்டு பேர் முன்னும் பின்னும் இடித்தபடி பிரபல எழுத்தாளரை நோக்கி கையெழுத்துக்காக முண்டிக்கொண்டிருந்தனர். அவரைச் சுற்றி மூச்சுத் திணறவைக்கும் அளவிற்கு ஏகப்பட்ட கூட்டம். கூட்டத்தில் யரோ ஒருவர், அல்லது எழுத்தாளராகவே கூட இருக்கலாம் விட்ட குசு விண்ணைப் பிளந்து கொண்டு இருந்தது. சூடாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக மேலெழுந்திருக்க வேண்டும். மேலே இருந்து கொண்டிருப்பது எல்லாம் மேலானது என நம்புகிற உலகம்.  
சரோஜாதேவி புத்தகங்களை, எழுதியவர் யாரென்றுகூடத் தெரிந்ததில்லை. சரோஜாதேவி கதைகளையும் ஒருவன்தான் எழுதி இருப்பான். அவன் தன்னை எழுத்தாளனாக உள்ளூர எண்ணி இருப்பானா? அவன் வெளியுலகிறகுத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தமைக்கு காரணம் சட்டத்தின் கெடுபிடிமட்டுமேவா? சரோஜாதேவி பெங்களூர் பதிப்பை எழுதியவர், ஒருவரா இருவரா அல்லது ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறானவர்களா என்பதையெல்லாமா யோசிக்கிறோம். எனக்கு எனக்கு எனக்கே எனக்கு என்றல்லவா ஜட்டி முட்ட முண்டுகிறோம்.
புத்தகக் கண்காட்சியில் அநாமதேயமாகத் திரிவதுதான் எவ்வளவு பெரிய சுதந்திரம். நெடுங்காலம் முன் நெருக்கமாகப் பழகியவர்கள் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கூட ஒரு விளையாட்டு போல குதூகலமாகத்தான் இருக்கிறது. 
நான் தாடி மழித்ததற்கு விடுப்பிலிருந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தது மட்டுமே காரணமில்லை. என் எழுத்துதான் என்னை அடையாளப்படுத்த வேண்டும் என திடமாய் நம்புகிறேன். அதனாலேயே என்னை முன்னிலைப் படுத்துவதைத் தவிர்க்கிறேன். என் புத்தகம் இருப்பதை மட்டுமே ஒரு காரணமாய்க் கொண்டு, கூடிய மட்டிலும் உயிர்மையை வேகமாகத் தாண்டியும் விடுகிறேன். 
எவரும் ஏறெடுத்தும் பார்க்காமல், நூலக அடுக்கில் ஒண்டிக் கொண்டிருந்த, மூன்று புத்தகங்களையும் தூசு தட்டி புதிய பொலிவுடன் முழு புத்தகமாய்ப் பதிப்பித்திருக்கும் மனுஷ்ய புத்திரனுக்கு என் மனமார்ந்த நன்றி. அதே சமயம், என் புத்தகம் பற்றி நானே விளம்பரப் படுத்திக் கொள்வதில் எனக்கிருக்கும் மனத்தடையையும் மனுஷ்ய புத்திரன் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். 
ஜி.பி.எஃப் லோன் போட்டு, கடன் வாங்கி என் புத்தகங்களை நானே பதிப்பித்த காலத்திலேயே, தானாக விற்பதாக இருந்தால் விற்கட்டும். நானாக விற்க மாட்டேன் என்றுதான் இருந்திருக்கிறேன். இருக்கிற சொற்ப காலத்தையும் இப்படியே இருந்து கழிக்கவும் இப்படியே சாகவும் முடிந்தால் போதும்.
மனிதராய் உலகில் பிறந்த எல்லோரையும் போலத்தான்,மிகைல் ஷொலக்கோவும், தி.ஜானகிராமனும்தான் இறந்துபட்டார்கள். டான் நதி அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது, சந்ததிகள் தாண்டிவரும் புதிய மனங்களையும் மோகமுள் நெருடிக் கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகங்களுக்குப் பக்கத்தில் தப்பிப் போய் சும்மா கைதவறி அடுக்கி வைக்கத் தகுதியான ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு செத்தால் போதாதா, என்னையும் ஒரு எழுத்தாளன் என்று எண்ணிக்கொள்ள? 

2 thoughts on “திரும்பக் கிடைத்த தொலைந்த புத்தகம்

  1. நீங்கள் ஒரு வித்தியாசமான ஆள் சார்.உங்க " கேரக்டர்' புரிந்து கொள்ளவே முடியவில்லை. உங்கள் புத்தகம் வாங்கி படித்து விட்டு பார்ப்போம்.மோகமுள் போல் ஒரு நாவல் எழுதினால் போதும். வேறு என்ன வேண்டும். எனக்கு மிக மிகப் பிடித்த நாவல் அது. வண்ண நிலவன் சிறு கதைகள் தொகுப்பையும் அறிமுகம் செய்யுங்கள்.

  2. …இந்தப் புத்தகங்களுக்குப் பக்கத்தில் தப்பிப் போய் சும்மா கைதவறி அடுக்கி வைக்கத் தகுதியான ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு செத்தால் போதாதா, என்னையும் ஒரு எழுத்தாளன் என்று எண்ணிக்கொள்ள?இந்த உந்தித்தள்ளும் உணர்வே நல்ல படைப்பிடம் கொண்டுபோய் சேர்க்கிறது மாமல்லன்…

Leave a Reply