November 1, 2010 maamallam 5Comment
தோழர் மூமு எனத் தோழர்களால் அழைக்கப்படும் மூவர்க்குமுதல்வன், ராயப்பேட்டை பொன்னுசாமி ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டுக் குச்சியால் பல் குத்தியபடி வெளியில் வந்தார். வண்டியோரமாய் நின்று வாய் திறந்து சில வலிந்த ஏப்பங்கள் விட்டு உப்புசத்தை இளக்கிக் கொண்டுருந்தார்.
இன்று என்ன எழுதலாம் என உள்ளே ஒரு எண்ண இழை ஓடிக் கொண்டு இருந்தது. ஒரு புரட்சிகர எழுத்தாளன் என்கிற வகையில், எதை எழுதுவது என்பது பற்றி அவருக்கு ஒரு நாளும் குழப்பமே இருந்ததில்லை. எதில் எழுதுவது என்பதையும் கூட விஞ்ஞான யுகத்தில் ஊடகமே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. தொழில் நுட்பம் வளர வளர புதிது புதிதாய் கண்டுபிடிக்கப்படும் அனைத்தையும், கொண்ட குறிக்கோளுக்காகப் பயன்படுத்துவதே புரட்சியை முன்னெடுக்கும், சீக்கிரமாய் வரவழைக்கும்.
நிறுத்தப் பட்டிருந்த அவர் வண்டியின் தலையில் விளம்பர பிட் நோட்டீஸுகள் செருகப்பட்டிருந்தன. இருந்த இடத்தில் இருந்து எட்டி எடுத்தார். தீபாவளி நேரமாதலால் ஒரு நகைக்கடை ஒரு ஜவுளிக்கடை மற்றும் ஒரு தொழுநோயாளிகள் தொண்டு நிறுவன விளம்பரங்கள். முதலிரண்டும் தம்மிடம் இருப்பனவற்றைக் கூறி வாங்கக் கூவின. பின்னது தங்களது இல்லாமையைக் கூறிப் பழைய துணிகள் மற்றும் இயன்ற நிதி உதவி கேட்டது.
இல்லாதவனுக்கும் இருப்பவனுக்குமான இடைவெளியின் கூர்மையை, இது போன்ற அமைப்புகளே முனைமழுங்கச் செய்கின்றன. அநேகமாக அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் இதனாலேயே மதம் சார்ந்த அமைப்புகளாக இருக்கின்றன. அரசாங்கங்களும் அவற்றிற்கு ஆதரவாய் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்வதன் மூலம், இருக்கும் அவல வாழ்வில் அதிருப்தியின்றி இருக்கச் செய்கின்றன. அதிருப்தி அறிவில் உரைத்து அது கலகத்தைத் தோற்றுவித்து விடாமல் இருப்பதில் கவனம் கொள்கின்றன. கலகம் புரட்சியாய்க் கனன்றுவிடாமல் கண்ணும் கருத்துமாய் அணைத்துக் கொள்கின்றன. இறுதியாய்த் தோன்றிய இரண்டு வார்த்தைகளின் சிலேடையைக் கொஞ்சம் சிலாகித்து கர்வித்துக் கொண்டார்.
இன்றைய விஷயமாய் இதை எழுதுவது எனத் தீர்மானித்துக் கொண்டதும், சமையற் கூடத்தில் கைதவறி வைக்கப் பட்டுவிட்ட கொழுத்த தொடைக் கறித் துண்டு, பிரியாணியில் அகப்பட்டதைப் போலக் கும்மாளி இட்டது மனம்.
விட்டுவிட்டு எழுதுகிற விவாதமெனில் ட்விட்டரும் விடாமல் தம்கட்டி எழுதுகிற கட்டுரை எனில் ப்ளாகும் என சபையில் தீவிரமாய் விவாதித்து, ஏகமனதாய்த் தீர்மானிக்கப் பட்டிருந்தது. 
தட்டில் இலவசமாய் வைக்கப்பட்ட மட்டமான பீடா, காசு கொடுத்து உள்ளே அனுப்பிய பிரியாணியை செலவில்லாமல் வெளியில் கொண்டுவந்து விடும் போல இருந்தது. குச்சியைப் பல்லில் கடித்தபடி இரு சக்கர வாகனத்தை எடுக்க சாவியை நுழைக்கையில் வரிசையாக மூன்று நான்கு ஒட்டுண்ணி வர்க்கக் கிழங்கள் வண்டியிடுக்குகளில் நுழைந்து சார் சார் அண்ணே தம்பீ மவராசா எனப் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் இளையராஜா உபயோகிக்கும் இசைக்கருவிகளின் ஹார்மனிபோல ஆனால் காலாகாலமாய்ப் பழகிப்போன பிச்சைக்காரப் பாட்டை ஒலிக்கத் தொடங்கின.
நாடுவிட்டு நாடுவந்த, பார்வைக்குப் பார்ப்பணன் போலத் தோற்றமளித்த நேபாள கூர்க்கா தோலாலான சிவப்புப் பட்டையைப் பூணூல் போல சீருடைக்கு மேல் சீராக அணிந்திருந்தான். தோழர் மூமு வண்டியெடுக்க வாகாய் பின்னால் இருந்து இழுத்தபடி, பிச்சைக்காரர்களைப் பார்த்து ஏய் நவ்ரூ போ என விரட்டியபடி, மூமு ஏதும் கொடுக்காமல் போய்விடாத வண்ணம் ஒரு சிரிப்பையும் இதழில் ஓடவிட்டிருந்தான். அவரது பில்லைக் கல்லாவில் கட்ட வந்த சர்வரோ தோழர் மூமுவைப் பார்த்தபடி டிப்ஸ் கொடுக்காமல் போகிற நாய்க்கு பத்து மைலுக்குப் பஞ்சர் கடையோ மெக்கானிக்கோ இல்லாத நெடுஞ்சாலையில் வண்டி கைகொடுக்க வேண்டும் என, தனது குலதெய்வமான சுடலையாண்டியை வேண்டிக்கொண்டான். 
வெளியில் எடுத்த வண்டியோடு கூடவே இதுகள் வருவதைக் கவனியாதது போல கூர்க்காவுக்கு ஒரு நன்றி என வாயிலும் தோழர் என மனதிலும் சொல்லிக் கொண்டார். கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்டைப் பரிசீலிக்காமல் ஒருவரைத் தவறியும் தவறாக அடையாளப்படுத்திக் கொள்ளாதவர் தோழர் மூமு. 
அடுத்த வண்டிக்காரரிடமாவது ஏதும் தேறுமாவென இந்து கூர்க்கா அந்தப்பக்கம் செல்ல ஹார்மனிகளில் ஒன்றிரண்டு அவனைப் பின் தொடர்ந்தன. தானிருந்த இடத்திற்கு மூமுவின் வண்டி தானாக வந்த காரணத்தால், ஒற்றைக் கண்ணாடி நொறுங்கி கயிற்றுக்கால் இடப்பக்கக் காதைக் கவ்வியிருந்த, கிரிணிப் பழமாகிவிட்டிருந்த கிழவி, நீட்டிய கையைப் பேச விட்டிருந்தது. 
தோழர் மூமு வண்டியில் இருந்த வண்னமே ஸ்டேண்ட் போடவும், போன கும்பல் ஏதோ பெயரப் போகிறதென்ற எதிர்பார்ப்பில் ஓடி வந்தது. 
அம்மா பிச்சை எடுக்கலாமா?
நான் என்ன தம்பி பிச்சை எடுக்கணும்னு நேர்ந்துகிட்டா இருக்கேன். நெத்தியில எளுதியிருக்கு எடுக்கறேன்.
பக்கத்துப் பெட்டிக்கடையில் பீடி வலித்துப் பராக்குப் பார்த்தவனும் ஓசிப் பேப்பரில் கண்ணோட்டி அரசியல் நிலவரத்தை அனுமானித்துக் கொண்டிருந்தவனும் அருகில் வந்து வராதது போல நின்றனர். அவர்கள் தம்மை கவனிக்கத் தொடங்குவதைக் கண்ணோரத்தில் கண்ட மூமு விற்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டது. போகவும் அயல் நாட்டிற்கு நேர்ந்துகொண்ட அலுவலகத்தில் வேலை நேர ஆரம்பமே மாலையில்தான். அப்போதுதானே அமெரிக்காவில் விடியும். அங்கு விடிந்தால்தானே, இங்கே தோழருக்கு பிரியாணி. இன்னும் சோற்று வேலைக்கு நிறைய நேரம் இருந்ததால் அதை வீணாக்காமல் பொது விஷயத்திற்கு செலவழிக்க முடிவு செய்தார். 
பாட்டியம்மா இந்தத் தள்ளாத வயசுல இப்புடி நீங்க இருக்கறதுக்கு யார் காரணம்னு நெனக்கிறீங்க? 
வேற யாரு அந்தப் பாழாப்போன சிறுக்கிதான் காரணம். கண்னாலத்துக்கு மின்னாடி இப்புடியா இருந்தான் எம்புள்ள.
உள்ளிருந்து ஒரு குரல் சொன்னது. தோழர் கவனம். சீரியலை நோக்கி திசை மாறுகிறது விவாதம். அதற்குள் இறங்கினால் ஒன்றும் தேறாது.
அது இல்லைம்மா உங்க நெலமைக்கு உண்மையான காரணம் இந்த அரசாங்கம். முதியோர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு இல்லையா? 
கடைக்கு சிகரெட் வாங்க வந்த இருவர் இதை கவனிப்பதைக் கண்டதும், பீடிக்காரன் நாலெட்டு எடுத்துக் கொஞ்சம் முன்னால் வந்தான்.
எச்சூஸ் மீ சார். அரசாங்கம்தான் ரேஷன் கார்ட்டுக்கே இலவசமா கலர் டிவி குடுக்குதே. இந்த ஆயாவுக்கு நாமளாப் பாத்து எதுனா குடுத்தா இன்னா கொறஞ்சா பூடுவோம்.
அது சரியான தீர்வாங்க? ஒரு ஆளோட பிரச்சனையைத் தீக்கறது ஒட்டு போடறாப்புல. ஒட்டுமொத்தமா இதை எப்படித் தீர்ப்பதுன்னு யோசிங்க. சமூகத்தை நிர்வகிக்கிறது அரசோடப் பொறுப்புதானே. அதுக்காகத் தானே அண்னே ஓட்டுப்போட்டு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறோம். அப்ப இதுக்கு யார் பொறுப்பேத்துக்கணும்? அப்படி இல்லேன்னா அரசாங்கம்னு ஒன்னு இருக்கறது எதுக்குங்க?
கைவச தயார் அஸ்திரங்களைக் கவசமற்றவன் மேல் எய்தார் மூமு.
அரசாங்கம் இருக்கிறது, எல்லா ஜனத்தையும் சந்தோஷமா வெச்சிக்கதான். வேற எதுக்கு. அதானாலதான் கலர் டிவி குடுக்குது. சீப் வெலையில சீரியல் காட்டுது. அலஞ்சி அவதிப்படக் கூடாதுன்னு அங்கங்க டாஸ்மாக் தெறந்துருக்குது. ஒரு அரசாங்கம் இன்னும் என்னதாங்க செய்யமுடியும். அரசாங்கத்தால ஆனதை அது செய்யிது நம்மால முடிஞ்சதை நாம செய்ய வேணாமுங்களா? 
நடப்பைச் சொல்கிறானா நம்மை நக்கல் அடிக்கிறானா? அனுமானிக்கக் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டார்.
கிழவி நிற்க முடியாமல் சற்று நகர்ந்து இனி ஓடியாட முடியாது, கொடுக்க நினைக்கிற தர்மப் பிரபு தேடிவந்து கொடுத்துவிட்டுப் போகட்டும் என்கிற தீர்மானத்தோடு சுவரோம் போய்க் குந்திக் கொண்டு கையை மட்டும் நீட்டியபடி வைத்திருந்தாள். விழுவது விழட்டும் யார் வேண்டாம் எனச் சொன்னது.
சடாரென மந்தாரமாகித் தூரல் தொடங்குவதைக் கண்டதும் பைக் உதைபட்டு கிளம்பியது. 
ஒரு படத்தைத் தாங்கியபடி ஆண்டவர் வருகையின் அறிவிப்பைப் பாடியபடி வந்து கொண்டிருந்தனர் பார்வையிழந்த சிலர். மழை வலுத்ததும் ஒதுங்குமிடம் அறியாத குழப்பத்தில் நடுத்தெருவில் நின்றுவிட்டனர். ஓடிப்போய் கைபிடித்து அழைத்து வந்தான் கூர்க்கா. அவர்கள் வந்து நிற்க வசதியாய், தன்னை இன்னும் குறுக்கிக் கொண்டாள் குந்தி இருந்த கிழவி.
(1 நவம்பர் 2010)

5 thoughts on “கிழவியால் முடிந்தது [சிறுகதை]

  1. அருமையான நடை சார்.

    கதாநாயகன் பொதுவுடைமை தோழர் என்று மட்டும் அல்ல, கழக உடன்பிறப்போ அல்லது ரத்தத்தின் ரத்தமானாலும் இந்த கதை மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.
    ஒரு படத்தைத் தாங்கியபடி ஆண்டவனின் வருகையின் அறிவிப்பைப் பாடியபடி வந்து கொண்டிருந்தனர் (இயேசு வருகிறார்).

    உங்களுக்குள் ஒரு சினிமா கலைஞர் இருக்கிறார். கோடம்பாக்கம் கண்டிப்பாக உங்கள் திறைமை, வாசிப்பை, எழுத்து திறனை பயன் படுத்தி கொள்ளவேண்டும்.

Leave a Reply