September 2, 2010 maamallam 6Comment
ஜனவரி 2008ல் ஒரு அன்பர் எழுதிய இடுகை
மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த  மாமல்லன். மாதத்திற்கு  இரண்டு  நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.
இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம்  யாராவது  விமலாதித்த  மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.
பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத  தெளிவான  மொழியில்  கதைகள் இருக்கும்…….
இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப்  புனைவுலகிற்கு  நஷ்டமே. சுந்தர  ராமசாமி  ஓர்  இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில்  இருக்கிறோம். (முதல்  தரம்  மூன்றாம்  தரம்  என்பதில்  சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).
விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.
…….(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை – இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : http://madrasdada.blogspot.com)
இதற்கு ஒரு பின்னூட்டமாக
இன்னொரு எழுத்தாளர் அல்லது கவிஞர்
//விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.//
XXXXXXXXXX இருந்து காஃப்காவின் ‘Metamorphosis’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனார்;  திருப்பித் தரவில்லை.
August 24, 2010 11:11 PM
******************************************************************************************************************
திரு. XXXXXXXXXX, முதல்  காரியம்  உங்களிடம்  மன்னிப்பு  கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் புத்தகம் தேடி எடுத்துவிட்டேன்.
XXXXXXXXX
என்று  நீல  மையில்  எழுதி  இருக்கிறது. அதே  மையில்  ஒரு கோட்டோவியமும் கூட இருக்கிறது (கரப்பு போல கற்பனை செய்து கொள்ளலாம்).
எப்படி எங்கு தரச்சொல்கிறீர்களோ, அங்கேயே வந்து தருகிறேன். அல்லது தங்களின் தற்போதைய சிஷ்யப்பிள்ளையிடமும் எனது செல்பேசி எண் உள்ளது, அல்லது அவரிடமே கொடுக்கச் சொன்னாலும் சரியே.
ஒரு  முன்நிபந்தனை.  எப்போது  எங்கு  யாருடன்  இருக்கையில்  இந்தப் புத்தகத்தை  எனக்குக்  கொடுத்தீர்கள்.  நேராகவா  அல்லது  நீங்கள் யாருக்கேனும் கொடுத்து அவர் மூலமாக இந்தப்புத்தகம் என் கைக்கு வந்ததா  எனத்  தெளிவிப்பின்  நன்றாக  இருக்கும்.  ஏனெனில் ஒரேயொருமுறைதான் உங்களை நேரில் சந்தித்ததாக நினைவு, சமயவேலுடனா, நம்பியுடனா அல்லது தருமுவுடனா என பிடிபடவில்லை.
உங்கள்  தளத்தில்கூட  போய்  தேடிப்  பார்த்தேன். என்னைப்போலவே அதுவும் இயக்கமற்று  இருக்கிறது.  வேறு  யாரும்  என்னைப்பற்றி ’திருப்பித்தரவில்லை’ அறிவிப்பு கொடுக்காததால் அதில் உள்ள பெயர் உங்களுடையதாகத்தான்  இருக்க  வேண்டும். அது  தமிழ்கூறு  நல்லுலகில் நீவிர் அறியப்பட்டிருக்கும் பெயரினின்று சற்றே வேறுபட்டிருக்கவே இயற்பெயராக இருக்கவேண்டும் என்று எடுத்துக்கொள்கிறேன்.
உங்களுக்கு  நான்  எவ்வளவு  கடமைப்பட்டிருக்கிறேன்.  இப்போதே புத்தகத்தைப்  பற்றிக்  குறிப்பிட்டமைக்காக. அழியா  நெடும்பழியிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்காக. மிகுந்த  கடப்பாடுடையவனாக  உணர்கிறேன். நீங்கள்  மட்டும்  இந்தக் கருணையை  எனக்குக்  காட்டவில்லையெனில், எனது  ஊழ்  என்னை விரட்டிக்கொண்டே அல்லவா இருக்கும்.
என்  இறப்பிற்குப்பின்  நடக்கிற  அஞ்சலிக்கூட்டத்தில்  – 30  நாவலா எழுதிவிட்டான்   30  கதைகளுக்கே  முக்கியடித்துக்  கொண்டிருக்கிறான். இவனுக்கெல்லாம்  எவன்  அஞ்சலிக்கூட்டம்  நடத்துவான் –  இந்த  உயர்ந்த உன்னத  இலக்கிய  உலகத்தை,  மெய்  உலகத்தை,  மெய்நிகர்  உலக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பிதுர்களான இலக்கிய முன்னோடிகள் பெயரில்  ஆணயிட்டுக்  கூறுகிறேன். கட்டாயமாக  அஞ்சலிக்கூட்டம் நடக்கும். எனக்கு  மட்டும்  இல்லை  இலக்கிய  உலகத்தின்  சந்தாதாரர் அல்லாத  கடையில்  கைமாற்றுக்கு  பத்திரிகை  வாங்கிப்  படிக்கும் இலக்கியவாதிக்கும் கூட அவன் வாழ்ந்த காலத்தில் சோறு கிடைத்ததோ இல்லையோ அஞ்சலிக்கூட்டம் மட்டும் கட்டாயம் நடக்கும்.
அதில்  எனக்கு  துளியும்  சந்தேகமேயில்லை.  நாம்  சீடை  சாப்பிட, கிருஷ்ணனுக்குப்  பிறந்த  நாள்  கொண்டாடுவதைப்போல,  இறந்து போகிற இலக்கியவாதிக்கு அவன் முன்னாள் எழுத்தாளனாக இருந்தாலும் கூட, ஒர் அஞ்சலி கூட்டம்   கட்டாயம்   நடந்துவிடும்.  பின்   எதைவைத்துத்தான் இலக்கியவாதிகள் ஒருவரை ஒருவர் சாத்வீகமாக சந்தித்துக் கொள்வதாம்.
உள்வன்மங்களை, வயிற்றுப்பற்களை,  தற்காலிகமாகவேனும் மறைத்துக்கொண்டு, வயிற்றெரிச்சல்  பொறாமை  இவற்றை மேலோட்டமாகவேனும் ஒதுக்கிவிட்டு ”இன்று இவர் நாளை நீ” என்கிற எளிய  உண்மையை  உணர்கிற  தருணம். உலகுக்கு  தாம்  இயற்றி உபதேசித்த தத்வ தர்ம சாஸ்த்ரங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு அநித்யத்தைக் கண்கூடாகக் கண்டு தீட்சை பெறுகின்ற தருணம். நவீனத்துவக் கொம்பனுக்கும் பின்னவீனத்துவ சும்பனுக்கும் வேறுபாடு இறுதியில் குழி அல்லது கொள்ளி.
அவன் அந்தாளைப் புடிச்சி அந்த நாட்டுக்குக்குப் பயணம் போயிட்டான் என்னை எவனும் ஏறெடுத்தும்  பார்ப்பதில்லை. அவன்  பயணம்  போய்விட்டு விமானத்திலிருந்து வந்து கொண்டு இருக்கையிலேயே பயணத்தைப் பற்றிக் கட்டுரை எழுதிக்கொண்டே இருந்தான் தரையில் கால்வைக்கும் முன்பாகவே  தளத்தில்  ஏற்றிவிட்டான். அதை  அப்படியே  பதிப்பகத்தார் தரவிறக்கி அச்சடித்து ஆகாயமார்க்கமாக அனுப்ப வெளிநாட்டு விருந்தோம்பி   எழுத்தாளனை  விமானமேற்றிவிட்டு  வீட்டிற்கு செல்வதற்குள் அவரது வரவேற்பறை டீப்பாயில் பயணப்புத்தகம் அவரை வரவேற்கிறது.
இது  ஒரு  விஷயமா, நான்  அதுபோல  ஐநூறு  கட்டுரைகளை பொலீவியாவிற்குப் போகாமலேயே எழுதியவன். எவ்வளவு வருடங்கள் இரவல் ஃபேன்ஸி பனியனில் அச்சடிக்கப்பட்ட சே குவேராவுடன் திரிந்திருக்கிறேன். 56 வயதில் பீரும் மோரும் நீரும் கலந்து அடிக்கிறேன் என்பதனால் என் கடந்தகால இலக்கியக் கொடைகள் இல்லாமற் போய்விடுமா? அல்லது  நான்  மாபெரும்  நித்ய  கலக  விளிம்பன் இல்லையென்று  ஆகிவிடுமா? அதற்காக  நான்  நன்கொடை கேட்கிறேன். என்னைக்  கொண்டாடக்  கடமைப்  பட்டிருக்கிறது  இந்த இலக்கிய உலகம். ஆனால் அந்த புட்டி கண்ணாடி என்னைப் பிச்சைக்காரன் என்றான். அப்போதே எச்சரித்தேன் மல்லாக்கத் துப்பாதேடா மடையா என்றேன். எலோருக்கும்  கிடைத்திருப்பது  இந்த  ஒரே  குட்டைதான். இதைக் கலக்கிக்கொண்டே  நாம்  எல்லோரும்  தனித்தனி  என்றும்  காட்டிக்கொள்ள வேண்டும். அவரவர்  நீர்  எல்லைக்குள்  கீழ்நிலம்  தெரிவதாய் சொல்லிக்கொண்டே கலக்கவேண்டும் என்றேன்.
இப்போது  பாருங்கள், நான்  பஸ்ஸிலே  துண்டேந்துவதைக் குறைகூறிவிட்டு, முந்தா  நாள்  கூடப்பார்த்தேன் அவன் பறக்கும் ரயிலில் ஜிப்பாவை விரித்து விரிசல்விட்ட குரலில் பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். மதிய நேரம் ரயிலில் இருந்ததே பத்து பேர், அவர்களில் ஐந்துபேர் துண்டுகூட  இல்லாமல்  வெரும்  கையை  ஏந்துபவர்கள், மதிய  நேரத்தில் அவர்களிடம் இவன் ஏந்தியதையும் அவர்களில் கண்ணற்ற வயசாளி இவனுக்கு காசிட்டதையும் யாரும் அறியவில்லை என்ற நினைப்பு. நான் என்னுடைய ஃபொர்ட் ஐக்கானில் உட்கார்ந்தபடி சிக்னலில் பிச்சையெடுத்துக் கொண்டிருகந்தபடியே, பறக்கும் ரயிலில் அவன் எடுத்த பிச்சையை வீடியோ எடுத்திருக்கிறேன். இந்த  ஒரு  காரணத்திற்காகவே  கூட  என்னை  வெளி நாட்டிற்கு  ஸ்பான்ஸர்  செய்ய  வேண்டும். எனது  ஃப்ரான்ஸ்  பயணத்தின் போது பல மாபெரும் இலக்கிய ஆவிகளுடன் நான் நடத்திய இலக்கிய உரையாடல்களை புத்தகமாகப் போட நோபல் குழுவினர்  நச்சரித்தார்கள்,  முடியாது  என்று  மறுத்துவிட்டேன். ஏன் தெரியுமா? நான் பட்ட நன்றிக்கடனுக்காக. எவ்வளவு பட்டாசு கொளுத்தி எவருமே அவர் அருகில் வாராத வண்ணம் நான் பார்த்துக் கொண்டாலும் விதியே என என்னையும் விற்காத எனது புத்தகங்களையும் சுமக்கிறாரே அந்த  நட்புக்காக, நோபல்  பரிசையேக்கூட  வேண்டாம்  என விட்டுக்கொடுத்தேன். இதை காரணமாகச் சொல்லி அமைதிக்கான நோபல் பரிசாக  அதைக்  கொடுத்தால்  வேண்டாம்  என்று  சொல்ல  மாட்டேன், அது வேறு விஷயம்.
ஃப்ரெஞ்ச்  அதிபர்  சர்கோவ்ஸ்கீ,  என்னைத்  தனது  பின்  நவீனத்துவ நண்பனாய் இருக்கச் சொல்லி நாளைக்கு ரெண்டுதடவை சாட்டிலைட் ஃபோனில் (அவருடைய)  நச்சரித்துக்கொண்டு இருக்கிறார்.
என்  இலக்கிய  சாதனைகளைக் கண்டு  அசந்துபோன  ஸ்டீபன்    போன  மாதம்தான், தன்னுடைய  நோபல்  பரிசை  எனக்குக்  கொடுத்துவிடுகிறேன் எனச் சொன்னார்.
ஹாக்கிங்ஸ்! யாருக்கும்  அறிவிக்காமல்  வந்து   என்  அறையில் கொடுத்தால்  வாங்கிக்  கொள்வதாய்   சொல்லி   இருக்கிறேன்.  எனது  நண்பர்கள்  அப்படிக் கொடுத்ததுதான் என் அத்தனை எழுத்துக்களும்.
இத்துணை அலம்பல் புலம்பல்கள் எல்லாம் சற்றே மறந்து குறைந்த பட்ச நாகரீகத்துடன் நடந்துகொள்ளும் இடம் ஒரு அஞசலி கூட்டமாகத்தான் இருக்க முடியும் இல்லையா?
இப்போதெல்லாம் எழுத்தாளனுக்கு கொஞ்சம் அசுகம் என்றால்கூட விவரமுள்ள வீட்டார் வெளியாருக்கு விஷயம் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்களாம். ஏகப்பட்டபேர்  ஆஸ்பித்திரியை  சுற்றிவந்தவண்ணம் இருக்கிறார்களாம். நினைவாஞ்சலிகள்  ஆஸ்பித்திரி  வராண்டாக்களில் எழுதப்படும்  வழக்கம்  அமலுக்கு  வந்துவிட்டது.  காப்பி  ரைட்  களவு  என்று கேஸ்கூட போடமுடியாத அவலம்.

பிற்காலத்தில் இந்தவிதமான பிரச்சனகள் எழக்கூடாது என்பதற்காக்கவே, என் அஞ்சலி கூட்டத்திற்கான உரையை நானே எழுதிவிடுவது என்கிற முனைபோடு, இப்போதே ஆரம்ப கட்ட வேலைக்கு ஆயத்தமாகிவிட்டேன்.

எனக்கு மட்டும் உங்களின் பின்னூட்ட சவுக்கடி கிடைத்திருக்காவிட்டால், எனக்கு நடக்கிற அஞ்சலிக்கூட்டத்தில் வைத்து இவன் இவரிடம் இருந்து காஃப்காவின்  ‘Metamorphosis’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனான், திருப்பித் தரவில்லை. இவனுக்கெல்லாம்  சாக  என்ன  யோக்கியதை  இருக்கிறது என்றுகூட ஒரு நவீனத்துவர் பேசக்கூடும்.
எதிர்தரப்பைச்  சேர்ந்த  பின்நவீனத்துவர்,  இதிலிருந்தே  தெரியவில்லையா ஒரு  திருடனை, அதிலும்  ஒரு  புத்தகத்திருடனை,  ஒரு  விளிம்பு  நிலை கலைஞனைக் கொண்டாடாமல் விட்ட இந்த இலக்கிய உலகம் சபிக்கத்தக்கது  என்று. இதுவே  ஃப்ரான்ஸாக இருந்தால் சிறுமியைக் கற்பழித்தவனை, திருட்டுக்  குற்றம்  புரிந்தவர்களை  அவர்கள்  எழுதிய டைரிகளின்  இலக்கியத்தரத்திற்காக  மட்டுமே,  விடுதலை  செய்யச்  சொல்லி, ஊர்வலம்  போயிருபார்கள். இசை  மற்றும்  ஓவியக்  கலைஞர்கள் சாமியார்கள் எந்த ஒரு சமுதாயத்திற்கும் அத்தியாவசியமான பரத்தையர்களும் ஊர்வலத்தில்  கலந்து  கொண்டிருப்பார்கள்.  ஆனால்  ஒரு அரசு உத்தியோகஸ்தனாக இருந்த போதிலும் வாங்கிய புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்காத, ஒரு கொலைக் குற்றத்திற்கு நிகரான, காரியத்தை செய்திருக்கும்  ஒரு  கலகக்காரனை, புரட்சியாளனை  வெளிநாட்டில் வைத்து, விருதளித்துக் கொண்டாடாமல் இருந்ததற்காக நாம் அனைவரும் வெட்கித் தலை  குனிய  வேண்டும். இதை  இதுவரை  இறந்துபட்ட  கதை எழுத்தாளர்களுக்கு நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிபோல காமாசோமாவென ரெமி மார்ட்டின் இல்லாமல் நிகழ்த்த நினைத்தால் அது கடைந்தெடுத்த கயமை. (இதற்கு  மட்டும்தான்  கைவசம்  ஸ்பான்ஸர் இருக்கு).
இந்த அபத்த நாடகங்களையெல்லாம் முன்னுணர்ந்து எனது அஞ்சலிக்கூட்டத்திற்கு  5-10 வருடங்கள்  முன்பாகவே ”வாங்கிய புத்தகம் திருப்பித்தராத  விளிம்புநிலை  எழுத்தாளன்” என்கிற  பட்டத்தினின்று என்னைக் காத்தமைக்கு மிக்க நன்றி.
அடுத்தமுறை  யாருக்கும்  புத்தகத்தை  இரவல்  தராதீர்கள். அப்படித்  தருகிற பட்சத்தில்  குறைந்தது  எந்தப்  பெயர்  உங்கள்  பெயரோ, எந்தப்  பெயரால் அறிமுகப் படுத்திக்கொண்டீர்களோ அல்லது எந்தப் பெயரால் நீங்கள் அறியப்பட விரும்புகிறீர்களோ அந்தப் பெயரை புத்தகத்தில் எழுதி வைப்பது நல்லது.
உங்களைப்போலவே நானும் மனிதர்களைவிட புத்தகங்களை அத்தியாவசியமாகக்  கருதி  நேசிப்பவன்தான். ஆனால்  இறக்கும்போது எதையும்  எடுத்துக்கொண்டு  போவதான  உத்தேசமில்லை. புத்தகங்கள் உட்பட.  இந்த எழவு இலக்கியம் உட்பட.
இலங்கை இரண்டுபட்டதில் இலக்கியக் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்.
அதிகாரபூர்வ இலக்கிய கீதம் இசைஞானியின் இசையில்
”பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் என் ஐயனே…..என் ஐயனே…”
புலம்பெயர்ந்த  தமிழன்  கொடுத்துப்  பழகிவிட்டான். கொடுக்கப் பழகிவிட்டான்.
சொந்தங்களின் உயிர்களை.  கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் டாலர்களை.

6 thoughts on “திருப்பிக் கொடுக்கத்தவறிய புத்தகம்

  1. நித்ய கலக- இந்த வார்த்தைகள் மிகவும் என்னை ஈர்ப்பதாக இருந்தது. விளிம்பன் என்றால் அழைப்பவன் என்று பொருளா.

    உங்களிடம் இருந்து யாரும் புத்தகத்தை வாங்கி கொண்டு திருப்பி தராமல் இருக்கும் அனுபவம் உண்டா

  2. விளிம்பன் – விளிம்பு நிலை மனிதகனாகத் தன்னைக் காட்சிப்படுத்திக் காரில் போய் பீருக்குக் கையேந்துபவன் என்று நீங்கள் அர்த்தம் கற்பித்துக் கொண்டால் நான் தவறென்று கூறேன் என்று நீங்கள்…

  3. உண்டு. ஆனால் அதற்காக இண்டர்நெட்டை துஷ்பிரயோகப் படுத்த மாட்டேன். கேட்டுப்பார் கிடைக்காவிட்டால் நேரில் போய் சட்டையைப் பிடி.

  4. இணைய காலத்திற்கு முற்பட்ட இருண்ட காலத்தில் ”பற்றி” புத்தகங்கள் படித்து எழுதிக்கொண்டிருந்தார்கள்

Leave a Reply