August 31, 2010 maamallam 19Comment
1997 ல் கணினியைக் கண்டு பயந்ததைப் போல், தட்டச்சையும் பார்த்து முதலில்  பயந்துதான்  போனேன். ஏற்கெனவே  கொஞ்சம்  கொஞ்சம் வெவ்வேறு மென்பொருட்களில் அடித்திருக்கிறேன், என்றாலும் நீளமாக அடிக்க  முனைகையில்  எக்கச்சக்க  பிழைகள். அழகிதான்  சிறந்தது  என எண்ணி அதில் பழகிவிட்டேன். NHM அதைவிடவும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் ந் nh க்கு பதிலாக w க்குப் போய்விட்டது. ழ் க்கு z அடித்தாலே போதும். இந்த மாற்றதிற்குப் பழக,  கொஞ்சம்  அவகாசம்  எடுக்கக்கூடும். தமிழ்கூறு நல்லுலகு  அதுவரை  தாங்கித்தான்  ஆக  வேண்டும். தாங்கிக் கொள்ளல் தமிழனின் தனித்துவம்.
செப்டம்பர் 1994 ல்  எழுதிய  சோழிகள்  என்கிற  கதை  அகநாழிகையில் இரண்டொரு நாளில் மீள்-பிரசுரமாக வர உள்ளது.
அரசாங்க  ஜெராக்ஸை  விடவும்  மோசமான  அச்சில், கையகல  சைசில் வெளிவந்தது  1995 ல். அதைவிடவும்  பெரிய  சைசில்  மையிலை  தேரடி எதிரில் அம்மாவும் பெண்ணுமாக வெங்காய பஜ்ஜி போடுகிறார்கள்.
கபாலி கோவிலுக்கு செருப்புவிடும் இடத்தையொட்டிய ஒற்றைக் கம்பி உதிர்த்த  ஜன்னலிலும்  பஜ்ஜி கிடைக்கிறது. கம்பிக்குள் உருமும் கரடி. காட்சி சாலை  போல  கூட்டம்  நெரியும். கூட்டத்திற்கு  இணையாக  கரடியும் கூச்சலிடும். அவனவனும்  கைகழுவிக்  கொள்வதாக அடுத்தவனின் கால்கழுவி விடுவான்கள். காற்றில் கழுவப்படும் தட்டு, அதன்மேல் வைத்த, பிளாஸ்டிக் பேப்பர்  மட்டும்  நீல ட்ரம்முக்கு. கண்ணெதிரிலேயே புது பிளாஸ்டிக் பேப்பர் வைத்து பஜ்ஜி பவனி. யாருமே எதையுமே பார்க்காமல்தான்  சாப்பிட்டுக்  கொண்டு  இருக்கிறார்கள். கண  நேரம் கவனித்தால், உள்ளே   போன பஜ்ஜி  உருமாறாமல் வெளியேவரக்கூடும். தள்ளி  நிற்பது  உசிதம். பல  சமயம்  கபாலியையே  பார்க்காமல் பஜ்ஜியிலேயே புண்ணியம் கிட்டிவிடுகிறது போலும். கோவிலுக்குள் கூட பிரசாத விற்பனை இவ்வளவு இருக்குமா என்பது சந்தேகம்தான். இது இவா டேஸ்ட். தேரடி அவா டேஸ்ட்.
ரிசப்ஷனுக்கு ரெடியாகி அதற்குள் ஒரு ஈடு எடுத்துவிட்டுப் போகலாமே என்பது போல, ஐப்ரோ  திருத்தி,  இரவு  ஒன்பதரைக்கு, கடைசீ  பஜ்ஜி எடுக்கும் போதும், அப்போதுதான் வந்து அமர்ந்தது போல, துளி வியர்வை கிடையாது. இதுவே ஆம்பிளை என்றால் காய்ந்த பதம் பார்க்க, அக்குளை எண்ணையில்  சுண்டுவான், பெண்ணைப்பற்றி  கேழ்க்கவே  வேண்டாம் நோஸ்ரிங்  போட்ட  அஞ்சலிதேவி. பெட்ரோமாக்ஸ்  வெளிச்சத்தில், கொஞ்சம் பூசியதேவதை.
சோழிகள் கதை வந்த பத்திரிகை, பஜ்ஜி மடிக்கும் பேப்பரைவிட மோசம். இலவசமாக கொடுத்திருந்தாலும் யாராவது சீந்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். படித்துவிட்டு  நாலுபேர்  பரவாயில்லை  என்று சொல்லியிருந்தால், ஒருவேளை, நானும் கூட தொடர்ந்து எழுதியிருப் பேனோ என்னவோ. எவனையும்  ஏறெடுக்க  வேண்டிய  அவசியமற்ற இணையம் அன்று இருந்திருந்தால், இயங்கிக்கொண்டு இருந்திருப்பேனோ என்னவோ.  அநேகமாக  அத்துனை  சிறிய  பெரிய  நடுவாந்திர பத்திரிகைகளும் ஏதேதோ போக்குகாட்டி நிராகரித்தன. இருட்டடிப்பு என்று சொல்வது  இன்னும்  கூடப்  பொருத்தமாய்  இருக்கும். அப்பா அம்மா இல்லாதவனுக்குப்  பெயர்  அநாதையில்லை. யார்  கருத்துக்கும்  முழு  ஆதரவு  தெரிவித்து  கட்சி  கட்டாமல்  இருந்தாலே  அநாதையாகிவிட  வேண்டியதுதான். கதையையே  கையெழுத்துப்  பத்திரிகைபோல  நடத்தத் தோன்றாமல் போய்விட்டது,  துரதிருஷ்ட்டம்தான்.  
இப்போதெல்லாம் வெளியீட்டு விழாக்களில் பொஸ்தகம் சினிமா டிக்கெட்டு போல ப்ளாக்கில் விற்கப்படுவதாக பேசிக்கொள்கிறார்கள். விழா முடிந்தபின் தீர்த்தவாரி, கார்ப்பொரேட் கத்துகுட்டி எழுத்தாளன் தயவில். விருந்தே  விஎஸ்ஓபி  என்றானபின், பொஸ்தக  லுக்கின்  தரம்  பற்றி கேட்கவா  வேண்டும். சரோஜாதேவி  அச்சுத்  தரத்தில் எந்தப்புஸ்தகமும் இப்போதெல்லாம் போடப்படுவதே இல்லை. கதைகளின் வாசிப்புத்தன்மை செய்நேர்த்தியெல்லாம் சரோஜாதேவியே தேவலை என்றாக்குகிறது என்றபோதிலும்.
பஜ்ஜி  பரதலாயிருந்தாலும்  பரவாயில்லை  பண்ணுகிறவள், பார்க்க லட்சணமா  என்று  பார்க்கிற  காலம். பெண்பார்க்கப்  போனதுபோல்  பஜ்ஜி சாப்பிட்டாகிறது ரோட்டோரம்.
பதினைந்து  வருடத்துப்  பழைய  கைப்படிவம், ஜெராக்ஸ்ஸாகப்  போய், தட்டச்சி  மெயிலில்  திரும்பியது. சோழிகள்  கதைக்குக்  கணினியில்  பிழை திருத்தும் போதுதான், என்னென்ன பிழைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரியவந்தது. இலக்கியம் தெரியாமல் தட்டச்சு மட்டுமே தெரிகிற பட்சத்தில் இன்னும் என்னென்ன விதமாக, பிழைகள் செய்ய வாய்ப்பிருக்கிறது எனவும் தெரிந்தது.
குண்டு கருப்பு பேனாவில் எழுதிக்கொண்டு இருந்த காலத்தில், அநேகமாக இவ்வளவு  பிழைகள்  செய்துகொண்டிருக்கவில்லை. எழுதிக் கொண்டிருந்தேன் என்கிற ஒரு பிழையைத்தவிர. ன் ண் ர் ற் என்பவற்றில் எனக்குக்  குழப்பமே  இருந்ததில்லை. இப்போது  சோழிகளைப்  படித்துப் பார்த்தபோதுகூட  அதையே  உணர்ந்தேன். தப்பே பண்ணியிருக்கவில்லை. வகுப்புக்கே  போகாதவனுக்கு  இது  அதிகம்தான். புழக்கத்தில் இல்லையெனில்  போய்விடுகிறது. எல்லாமே  மறந்துபோய்  விடுகிறது. தந்தை  மொழியான  மராத்தி  மறந்ததைப்போல. எழுதுவதை  விட்டதும் எல்லோரும் என்னை மறந்ததைப் போல.
பொதுவாக நம் எல்லோருக்கும் மிகக்குறைந்த நினைவாற்றலே இருக்கிறது  போலும். எது  ஒன்றும்  சதா  இடித்துக் கொண்டே இருக்க வேண்டும். முகவாய் கட்டையில் வந்து இருக்கிறேன் இருக்கிறேன் என்று சொல்லி இடித்துக் கொண்டே  இருக்க வேண்டி  இருக்கிறது. கவிதை பொஸ்தகங்கள் நிறைய வருவதன் காரணம் இப்போதுதான் பிடிபடுகிறது. கைக்காசைத் தொலைக்கும் பாவப்பட்ட கவிகள். கும்பலுக்கு மவுசு. தரம் நிர்ணயித்த எழுத்துக்கள் போய், எண்ணிக்கை நிர்ணயிக்கும் தரம். சில சமயம் பொஸ்தக எண்ணிக்கை. பல சமயம் பக்கங்களின் எண்ணிக்கை.
தொழுகை போல நாளைக்கு ஐந்து கட்டுரைகள் ஒரே தளத்தில். பேர்பாதி சுய  பின்னூட்டங்கள்.  சுயபுராண  சொடுக்கலுக்காக  சொந்த ப்ரொட்க்‌ஷனில் கேள்விகள்.  (ப்ரொட்ட்டெக்‌ஷனில் என்றும் வாசிக்கலாம்). ஆளுமை, என்றும் அலங்கார ஜோடனக்கு ஆசைப்படுவதில்லை.
சந்தியாவந்தனம் மாதிரி அட்டவணைக்கிரமமாய் மூன்று நான்கு பத்திகள், கிடைக்கிற பத்திரிகைகளில் எல்லாம். ஒருமையில் தொடங்கி பண்மையில் அல்லது பண்மையில் ஆரம்பித்து ஒருமைப்பட்டு முடியும் வாக்கியங்கள். ஃபோட்டோவுக்கு போஸ்கொடுக்க கச்சித உடலுக்கு காட்டும் அக்கறையில், இப்போதெல்லாம் பஜ்ஜியே சாப்பிடுவதில்லயாம் இலக்கியவாதிகள். வாசக நிர்பந்தமெனில்  பஜ்ஜி எண்ணெய் பேப்பரில் ஏறிய  பின்பே  ஒரு  செளந்தர்ய  விள்ளல்  ஒப்புக்கு. எழுதியதை ஓட்டிப்பார்க்கக்கூட நேரமற்ற ஓட்டம்.
ஆய்  சாஸ்திரிகள்  பற்றி  சொல்லாமல்  இருப்பதே  நல்லது.  அடிவயிற்று உபாதையாக புஸ்க்கு புஸ்க்கென்று மூன்றுவரி நான்குவரி, ஸ்கூல்பசங்கள் சுவரில்  அட்சராப்யாசம்  பழகிக்கொள்வதைப்போல.  அலம்பலுக்கு  மட்டும் அளவே இல்லை.
அதிகபட்சம்  ஆயிரத்து  இருநூறு  அச்சு  ஆர்டருக்குள் அலைபுரண்டு அடங்கியாகிறது. இதற்கே இத்தனை ஆர்ப்பாட்டம். புத்திசாலி பொஸ்தக ஓனர்கள் அறுநூறு பிரிண்ட்டோடு முதல் சடங்கை முடித்துக் கொள்வதாய் கேழ்வி. குண்டுசட்டி கூடையாகி இருக்கிறது. ஜனத்தொகை பன்மடங்காகி இருக்கிறது. கல்வி கலங்கரை விளக்கமாகி இருக்கிறது. கட்டுமானமுள்ள கலங்களின் எண்ணிக்கை?
எட்டரை கோடியைப் பற்றி ஒருமையில் இளக்காரமாய் பேசலாமா?
அக்கடா  என்று, பேசா  நோண்பிருந்து  துளசி  தீர்த்தம்  உணவாக  வேண்டிய பருவத்தில்,  துக்கடா  கேள்விகளுக்கெல்லாம்  பதில்  சொல்லிக்கொண்டு, அரதப்பழைய விஷமேயானாலும், நேற்றுதான் உருவான பிரச்சனைபோல், புதிய கேள்விகளை எழுப்பிக்கொண்டு, அவை எழுப்பும் எதிர்வினைகளுக்கு எதிர்வினை செய்துகொண்டு, இப்படியேக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது காலம். யாருக்குமே  தெரியாமல்  விரலெண்ணிக்கையிலான வாசகர்க்கு எழுதும்  இதை, யாராவது  போய்  போட்டுக் கொடுத்தால்  இதற்குக்கூட பின்னூட்டம் கிடைத்துவிடக்கூடும்.
ஒரே ஒரு நாள், பத்திரிகைகள், யார் பேரையும் போடாமல், வெறும் கேள்வி அதன் எதிர்வினையான பதில், இதை மட்டும் போட்டால், யாருடைய கேள்வி யாருடைய பதில் என்று யாருக்குமே கூட புரியாமல் போகலாம். சில  கேள்விகளும்  சில  பதில்களும்  அவற்றின் கர்த்தாக்களுக்கே கூட, நாம் கேட்டதுதானா அல்லது நாம் சொன்னதுதானா என்கிற ஐயத்தை உண்டாக்கலாம். இன்னும்  சொல்லப்  போனால்  இதை  நான்  கேட்கவே இல்லை என்றோ அல்லது சொல்லவே இல்லை என்றோ கூட மறுக்கக்கூடும். அதுவே  புதிய  கேள்விகளையும்  பதில்களையும்  உருவாக்கக் கூடும்.
கேள்வி கேட்பவரும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை பதில் சொல்பவரும் அப்படியே.
இதில் பூணூலை மட்டும் நீக்கிவிட்டால், சுத்தம். முழு இருட்டில் நடக்கிற முகமூடிப்   பேச்சாகத்தான்   போய்  முடியும்.  அடையாளப்படுத்திக்  கொள்ளத்தான் ஆரம்பத்தில் போட்டுக் கொள்ளப்பட்டது  பூணூல். போட்டுக் கொண்டிருப்பது, வெற்று சடங்காக நீர்த்துப் போனதால், இன்று  எதிப்பவரை  அடயாளப்  படுத்துவதாக  ஆகிவிட்டது. என்ன  ஒரு  அனர்த்தம். போட்டிருப்பவன்  போடாதவன்  போல்  நடந்து  கொண்டு  இருக்கிறான். போடாதவன் போட்டுக் கொண்டிருப்பதே போல பொழுதிற்கும் மறப்பதில்லை. யார்  போட்டிருக்கிறார்கள்  அல்லது  யாருக்கு போட்டுவிட்டிருக்கிறார்கள்  என்றே  புரியவில்லை.  கபாலி  கரடி  பஜ்ஜிக் கடைபோல்  எல்லார்மேலும்  தூத்தூத்தூ. அணிந்தவனுக்கு  அன்றாட  அனுகூலம், சொறிந்துகொள்ள   நூல்   வடிவ  விசிறிக்கொம்பாய்  சுருங்கிக் கிடக்கிறது.
இலக்கியம் பொதுஜனப் பரப்பிற்குப் போனதோ இல்லையோ, பொதுமக்கள் மற்றும் அவர்களை ஆள்பவர்கள் என்று எல்லோரும் இலக்கியவாதிகளாய் ஆகிவிட்டார்கள். எல்லாவற்றையும் குறியீடுகளாகவே பார்க்கத் தொடங்கி விட்டார்கள். நூலும்  பூநூலும்  என்று  கூட  ஆராய்ச்சி  செய்து  யாரேனும் ஒருவர் டாக்டரேட் கூட வாங்கியிருக்கக்கூடும். இதுவரை இல்லையெனில் நாளையே பதிவு செய்வது நலம். கல்வி  பொதுமயமாக்கப்பட்டதில்  நூல் பூநூலில் இருந்து கழற்றி விடப்பட்டாகி விட்டது. காநாசு  சிசுசெ  கண்ட கனவு நனவாகிவிட்டது.  இலக்கியம் பரவலாக்கப்பட்டுவிட்டது.
நா.முத்துசாமியின் “கட்டியக்காரன்” நாடகத்தில்  ஒருவன்  போஸ்ட்டரை ஒட்டுவான்  மற்றொருவன்  கிழிப்பான். ஒட்டுபவனே,  வேறு  ஒருவன் ஒட்டிய  போஸ்ட்டரைக்  கிழிப்பவனாகவும்  இருப்பான்.  பரீக்‌ஷாவில்  அந்த நாடகத்தின்  போஸ்டர்களை,  நானும்கூட  ஒட்டியிருக்கிறேன்.  EB பெட்டிகளின்மேல்.  அந்த   கதவுகளுக்காகவே  அளவெடுத்த  வடிவம். அரசாங்க  சொத்திற்கு  சேதம்  விளவிக்காத  கலை  இலக்கியப் பொறுப்புணர்வு.
கட்டியக்காரன் முதல் முறையாக போடப்பட்டே முப்பது வருடங்கள் ஓடிவிட்டன.
இன்னமும் மாறி மாறி போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டும் கிழிக்கப்பட்டுக் கொண்டும்  இருக்கின்றன. ஒட்டப்பட்ட  போஸ்ட்டர்  மேலேயே  புதிய போஸ்ட்டர் ஒட்டப்படுதலும் நடக்கிறது. சமயத்தில் போர் மூளும் அபாயம் வரைகூட போய்விடுகிறது. சமாதான  காலங்களில், ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டப்பட்டவை ஒன்றுசேர்ந்து, தடித்து இன்னொரு சுவர் போல ஆகிவிடுகின்றன.
சுவரில் போஸ்ட்டர் ஒட்டுவதாக ஆரம்பித்தது, போஸ்ட்டர் ஒட்டவே சுவர் என்று  ஆகிவிட்டது. போஸ்ட்டர்  என  ஒன்று  இருந்தால்  அதைப் பார்க்கவேண்டும் படிக்கவேண்டும். சிரமம் ஒன்றுமில்லை. இலவசம்தான். தேர்தல் நேரத்தில் ஒட்டுபவனுக்குக் காசு கிடைக்கிறது. உதிரி வேலை செய்பவரெல்லாம் போஸ்ட்டர் ஒட்டத் தொடங்கிவிடுகிறார்கள். அறிவிக்கப்படாத வேலையில்லாத் திண்டாட்ட ஒழிப்புத் திட்டம். ஆளும் கட்சி,  எதிர்கட்சி,  டெப்பாசிட்  கூட  வாங்காத  கட்சி  என  எல்லோரும் அமல்படுத்தும் திட்டம்.
உழைப்புக்கேற்ற ஊதியம். ஒட்டுபவனுக்கு மட்டுமல்ல, பார்க்க படிக்கக்கூட ஊதியம்.  இது  சமீபத்தில்தான்  அமலுக்கு  வந்தது. இனி  இதுவே  விதி. காசுவாங்கி போஸ்ட்டர் படித்தவன் இனி ஒருபோதும் ஓசியில் படிக்கமாட்டான். உள்ளங்கை  அரிப்புக்கு  ஒரே  களிம்பு  காசுதான்.  வேறு மருந்தே  கிடையாது. அப்படி  இப்படி  சரி  தப்பு  பேசியவர்களெல்லாம்  கூட வழிக்கு வந்துவிட்டார்கள். வேறு வழியில்லை. வந்துதான் ஆகவேண்டும். இருப்பவர்கள்  கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள்   ஏற்கெனவே  போட்டு வைத்திருந்த  சேமிப்பு  நிதியத்திலிருந்து  கொடுக்கிறார்கள்.   வாங்கிக் கொள்கிறவனிடம்  சொல்லிப்  பார்த்தாயிற்று.  கெஞ்சிப்பார்த்தாயிற்று.  திட்டிப் பார்த்தாயிற்று. அவன் யார் பேச்சையும் சீந்துவதாகக்கூட இல்லை. இது என்ன கூரில்லாத பேச்சு என்றுதான் அவனுக்குத் தோன்றுகிறது.
என்னிடம் இருந்து எடுத்ததை எனக்குத் திருப்பிக் கொடுக்கிறார்கள். கைமாற்று  போல  திருப்பிக்  கொடுக்கிறார்கள்.  இதில்  எவனுடைய  குடி முழுகிப் போய்விட்டது.
எடுத்தது கொடுக்கப்படுகிறதா? எடுக்கப்போவது கொடுக்கப்படுகிறதா?
கைமாற்றா? முன்பனமா? யாருக்குக் கவலை. காசு வந்தால் சரி.

19 thoughts on “சித்திரமும் கைப்பழக்கம்

 1. நண்பரே
  heimat பற்றிய ஒரு அற்புதமான கட்டுரைக்கு நன்றி !
  heimat you tube ல் பார்க்க முயற்சி செய்க .
  ஏன்
  இந்த மலரும் நினைவுகள்
  கட்டுரை ?
  நல்ல ஆரம்பம் – நலமான முடிவு
  சித்திரமும் கைப்பழக்கம் நன்றாக வந்துள்ளது
  அனைவரும் பயன் பெற வாழ்த்துக்கள் !
  மீனாட்சிசுந்தரம் ,
  சென்னை குடிநீர் பொறியாளன்,
  சென்னை 83

 2. ’சோழிகள்’-ஆவலுடன்…
  அநாயசமா அடிச்சு விளாசுறீங்க சார். கமெண்ட் போடக் கூடப் பயம் தான்.
  //நோஸ்ரிங் போட்ட அஞ்சலிதேவி. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், கொஞ்சம் பூசியதேவதை. //
  🙂

 3. meenakshisundram natarajan

  பரீக்‌ஷாவின் ஆரம்பகால ஒல்லித்தூன் தானே!

  மிக்க மகிழ்ச்சி.

  பிரபஞ்சனின் “முட்டையில்” முட்டைக்காரர் நீங்களா? சாமியா? (இந்தக் கேள்விக்கு மன்னிக்கவும். காலம் காலிடற வைக்கிறது) சாமி எப்படி இருக்கிறார்.

 4. தமிழ்ப்பறவை

  தப்பிருக்கா என்று தப்பிக்காமல் சொல்லவும்.

  ஒரு ‘பொருப்பு’ பார்த்து று வாக்கிவிட்டேன். இழைக்க இழைக்கத்தான் மெருகேறும்.

  நீங்கள் எனது மூன்று புத்தகங்களில் ஒன்றைக்கூட வாசித்ததில்லையா?

  http://www.maamallan.com/p/my-books.html

  ஒரு ரகசியம் சொல்லவா.
  உங்கள் பழைய மெயிலுக்கு ரிப்ப்ளயை சொடுக்கிவிட்டு இதை எழுதத்தொடங்கினேன். சும்மா பழசில் தவறிருக்கா என்பதற்கும், சோழிகள் அகநாழிகை தகவல் சொல்வதற்கும். அது வளரத் தொடங்கியது. முன் பின்னாக ஓடத்தொடங்கியது.

  நோட்பேடில் என்றால் சமயத்தில் ரீஸ்டாட் ஆனால் போய்விடுகிறது. இதில் என்றால் ட்ரெஃப்ட்டாக சேமிக்கப்பட்டுவிடுகிறது.

  பார்க்கில் எழுதுகையில் சில கதைகள் மழை வந்து முடிந்thirukkinRana enRu ezuthiyiruppaar.

  athupOla ithu ummai vaiththu ezuthth thodangkiya nhaaluvarik kadithm m kadduraiyaakividdathu.

  En thidiirenRu thamiz varavillai rnath theRiyavillai.

 5. வழக்கம் போலவே அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  இப்போது எல்லாம் சரோஜாதேவி, பருவ காலம் puத்தகங்கள் கிடையாது, எல்லாமே you tube தான்.

  இணையத்தால் பாதிக்கப் பட்ட முதல் தொழில் பாலியல் பத்திரிக்கை, கதை புத்தகங்கள் தான்.

 6. நீங்கள் மூன்று புத்தகங்கள் தான் எழுதி உள்ளீர்களா. வேறு ஏதும் கட்டுரை, சிறுகதை எழுதி உள்ளீர்களா (வலைப் பதிவயு தவிர). ஜ்யோவ்ராம் சுந்தருக்கு உள்ளது போல எனக்கும் உங்களின் வேறு படைப்புக்களையும் படிக்க ஆசை உள்ளது.

 7. ராம்ஜி_யாஹூ

  ஆஹா என்ன ஒரு சமூக சேவை யூடியூபினால்.

  நன்றாக இல்லை என்று உங்கள் மனதிற்குப் பட்டால் உள்ளபடி சொல்வீர்கள்தானே.

 8. உண்மையா எல்லாமே படிச்சேன், ஆனா எனக்கு பஜ்ஜி மட்டும்தான் கடைசியா ஞாபகத்தில நின்னுச்சு 🙁 . திரும்பவும் ஒரு முறை படிப்பேன்.

 9. தெகா

  அவா அவாளுக்கு வேண்டிடயத்த அவா அவா எடுத்துக்கறா.

  நீள தேங்கிய நீரெல்லாம் ஆறாவதில்லை.

  ஆற்றின் ஓட்டதில் அனத்தும் அடித்துக்கொண்டு வரத்தான் செய்யும்.

  இப்போதே திரும்பப் படிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. சில நாட்கள் கழித்து, சில வருடங்கள் கழித்து, அடுத்த ஜென்மத்தில்…வாங்கிக் கொள்ளும் வசதியைப் பொருத்து…

  ச்சும்மா… தமாஷ்.

  சரியான பொருளில் புரிந்துகொள்ளப்படும் என்கிற நம்பிக்கை.

  எனக்கு நிறைய மூட நம்பிக்கைகள் உண்டு.

  அறிவிப்பு!

  அருமையான வரிகள் என்று எழுதுவதற்கு ராம்ஜி_யாஹூ விற்கு தடை விதிக்கப்படுகிறது.

 10. அருமையான வரிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகள் என்பதை வோர்ட் பைலில் சேவ் செய்து உள்ளேன். ஒரு கிளிக்கினால் அது வந்து விடும், ஒட்டி விட எளிது

  நீங்கள் என் பிழைப்பில் மண் அள்ளி போடடா பார்க்கிறீர்களே. லொல்

 11. //அடுத்த ஜென்மத்தில்…வாங்கிக் கொள்ளும் வசதியைப் பொருத்து…//

  கண்டிப்பா. அது பெறும் கொள்ளளவினைப் பொறுத்தது.

  //சரியான பொருளில் புரிந்துகொள்ளப்படும் என்கிற நம்பிக்கை.

  எனக்கு நிறைய மூட நம்பிக்கைகள் உண்டு.//

  :)) நம்புங்க. சரியான பொருளிலேயே எடுத்துக் கொள்ளப் பட்டது. நம்பிக்கை/மூட நம்பிக்கை நாணயத்தின் இரு பக்கங்கள்.

  மறைமுக பொருளை ரசித்து சிரித்தேன். நன்றி! keep giving us more.

 12. ராம்ஜி_யாஹூ
  Thekkikattan|தெகா

  யப்பா பயங்கரமான ஆட்கள்.

  நகைச்சுவை மட்டும்தான் நம்மைக் காப்பாற்றும் – நம்மைப் பற்றிய நகைச்சுவை.

 13. //தப்பிருக்கா என்று தப்பிக்காமல் சொல்லவும்.
  //
  🙂

  //நீங்கள் எனது மூன்று புத்தகங்களில் ஒன்றைக்கூட வாசித்ததில்லையா?//
  ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் உங்கள் வலைப்பூவில்.ஆனால் படித்ததில்லை. இப்போதுதான் பழைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். விரைவில் உங்கள் புத்தகங்களையும் படித்து விடுவேன். ஜ்யோவ்ராமின் அறிமுகத்தைப் படித்திருக்கிறேன்…
  //athupOla ithu ummai vaiththu ezuthth thodangkiya nhaaluvarik kadithm m kadduraiyaakividdathu. //
  மகிழ்வாக உணர்கிறேன்.
  நான் nhm தான் உபயோகித்து வந்தேன் இரண்டு வருடங்களாக. இன்று எனது கம்ப்யூட்டரில் அது வேலை செய்யவில்லை. எனது ஆண்டி-வைரஸ் ப்ரகிராம் அதனை உள்ளே விடாமல் தடுத்துவிட்டது.
  அதனால் இன்று இரவிலிருந்து அழகியிடம் தஞ்சமாகிவிட்டேன். கஷ்டமாக இருக்கிறது 'ந' போடும் இடங்களில்.
  nhm அருமையான சாஃப்ட்வேர். alt+2 போட்டால் அழகாக மாறிக் கொள்ளும். அழகியைக் கொஞ்சுவதற்கு f10 ஐத் தடவ வேண்டியுள்ளது.

 14. நீரும் என்னைப் போலவே ஓசி kaspersky trial கோஷ்டி என்று சொல்லும்.

  NHM and kaspersky trial இரண்டையும் அனின்ஸ்டால் செய்துவிட்டு. kaspersky ஃபோல்டர் உட்பட ப்ரோக்ராம் ஃபைல்ஸ்ஸிலிருந்து ஒழித்தேன். அதே கதி NHM க்கும்.

  என்ஹ்செம் மை இன்ஸ்டால் செய்து kaspersky trial லை எது செய்தாலும் என்னைக்கேட்டு செய் என்கிற கட்டளையோடு இன்ஸ்டால் செய்தேன்.

  ரீஸ்டாட்டுக்குப் பின் செட்டிங்ஸ்ஸில் போய் எக்ஸ்க்லூஷனில் ஆப்ஜெக்ட்ஸில் NHM Writer ன் இரண்டு Mx.dll My.dll இரண்டிற்கும் விலக்கு அளித்தேன்.

  அப்ளிகேஷன்ஸிலும் சிற்சில .exe files க்கு உ.ம். IE then Explorer இப்டி இப்டி விலக்ஸ்.

  அப்டேட் செய்து, விரைவு ஸ்கேனிங் மட்டும் அனுமதித்தேன்.

  ஆங்காங்கே கெஸ்ப்ப்ரஸ்க்கி மூக்கை மூக்கை நீட்டினான் செல்லமாய் ரெண்டு தட்டு தட்டு தட்டி வைத்தேன்.

  இப்போ கொஞ்ச மருவாதியா இர்குராப்புலத் தோன்து.
  அப்பால இன்னா பண்ணுவானோ ஆண்டவ்னுக்குதா வெள்ச்சம்.

  கூட்த்துக்கு ஆள்சேக்கோ கொஞ்சொ டிங்கிரிங் பெய்ண்டிங்லாம் செய்சிருகேன்.

  இப்பொதான் மொதொ மொதொ நா எளுதி ஆனா பப்லிஸ் ஆவாத நேரா ரெண்டாவுது புக்குல போட்ட ‘குப்பை’ டைப்படிக்க ஆரம்பிச்சிகுனு இருகுறேன்.

 15. வணக்கம் தலைவரே…

  ஆரம்பத்தில் நான் நிறைய பிழைகளுடன்தான் எழுத ஆரம்பித்தேன் போகப் போக வெகுவாக குறைந்து இப்போது ஒற்றுப் பிழைகள் மட்டும் வருகிறது …

  உங்கள் எழுத்து நடை என்னை பிரமிக்கவைக்கிறது ….

 16. கே.ஆர்.பி.செந்தில் said…
  உங்கள் பதிவு ஒன்றில்
  தருமு சிவராமு கவிதையான ’காவியம்’ பற்றிய பின்னூட்டங்களில் ஒருவர் கடைசீ வரியை சரியாகச் சொல்கிறார். ஒரு பெண் தனது பின்ணூட்டத்தில் மாற்றியதும் மாறிவிடுகிறார்.

  காவியம்

  சிறகிலிருந்து பிரிந்த
  இறகு ஒன்று
  காற்றின்
  தீராத பக்கங்களில்
  ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது

  ”எழுதிக்கொடிருக்கிறது” என்கிறார் அது சரி இல்லை.

  எழுதிச் செல்கிறது – என்பதுதான் சரி என்பது என் நினைவு கைப்பிடியளவு கடல் தொகுப்பை இரண்டு நாட்களாகத் தேடித்தேடி புத்தகங்கள் கலைந்ததுதான் மிச்சம்.

  புத்தகம் கிடைக்கவில்லை.

  வேறு வாங்கவேண்டும். எங்கு கிடைக்கும்?

  ”எழுதிச் செல்கிறது” – சுகுமாரனிடம் உறுதிபடுத்திக் கொண்டேன்.

  இன்னும் கொஞ்சம் வேண்டுமெனில் குவளைக் கண்ணன் கட்டுரை http://www.kalachuvadu.com/issue-92/page34.asp

 17. http://blog.mohandoss.com/2007/10/blog-post_30.html

  மன்னிக்கவும் சே குவேரா குழப்பம் படத்தினால் வந்த குழப்பம். நான் மேற்சொன்ன தருமு கவிதை பற்றிய தடுமாற்றம் மேலே உள்ள சுட்டியில்தான் உள்ளது. தங்களிடம் இல்லை.

Leave a Reply