August 30, 2010 maamallan 5Comment
தமிழ்ப்பறவை said…
மிக மிக உபயோகமாக இருக்கும் எனக்கு. நன்றிகள் ஐயா.எழுத்துக்கலை 2க்காக காத்திருக்கிறேன்.
இன்னொரு விஷயம் சொன்னால் எரித்து விடுவீர்களோ எனவும் பயம். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எழுத்துப் பிழைகளை மட்டும் கொஞ்சம் கவனியுங்களேன்.ஃப்ளோவைத் தடுத்துவிடுகிறது.
August 27, 2010 3:56 PM
விமலாதித்த மாமல்லன் said…
பொன் வாசுதேவனுக்கப்புறம், உங்களைப் போன்ற உற்ற நண்பர் ஒருவர் கிடையாது சார். தயவுசெய்து கட்டுரையை அப்படியே நகல் எடுத்து பிழை திருத்தி (பிழையிருக்கும் இடங்களைக் அடிக்கோடிட்டு எனக்கு madrasdada@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள் உங்கள் சந்ததி நீடூழி வாழும். எனக்குத் தமிழ் தட்டச்சு தெரியாது. இங்கிலீஷுக்கும் பெரிய வாழ்வில்லை. கடந்த 15 வருடங்களில் தமிழ் எழுதாமல் படிக்காமல் போனதில் ர் ற் ன் ண் ந் என்னைத் துவம்சம் செய்கின்றன. தொடர்ந்த பயிற்சி இல்லையேல் மொழி  மறக்கும்.  தந்தை   வழிமொழியான  மராத்தி  சுத்தமாக மறந்து …..இழுத்துக் கொண்டு போகிறது கட்டுரையாக….
இந்த ஒருமுறை மட்டும் அடுத்ததிலிருந்து எழுத்தைவிட பிழையில் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்
August 27, 2010 11:45 PM
fromthamizh paravai <thamizhparavai@gmail.com>
toVimaladhitha Maamallan <madrasdada@gmail.com>
dateSun, Aug 29, 2010 at 1:13 PM
subjectRe: பிழைதிருத்தம் ப்ளீஸ்
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 1:13 PM (11 hours ago)
வணக்கம் ஐயா…
முதலில் பின்னூட்டத்தில் உங்கள் கருத்தைப் பார்த்தபோதுகூட கிண்டல் செய்கிறீர்களென எண்ணிக் கொண்டேன். நீங்கள் ‘எழுத்துக் கலை’யைப் பிரித்துப் பதிவிட்ட பின், ‘சரி..நீங்களே திருத்தித்தான் போட்டுவிட்டீர்கள்’ என நினைத்தேன்.  கொஞ்சம்  படித்துப்  பார்க்கையில்  சரியாக இருப்பதாகவே  பட்டது.  உங்கள்  வலைப்பூவில்  ‘பிழை  திருத்தி’ கேட்ஜெட்டைப் பார்க்கவும் அது உறுதியானதால் நான் விட்டுவிட்டேன்.
பின்  உங்கள்  தனிப்பட்ட  மெயில்  கண்டுதான்,  நீங்கள்  கொடுத்த இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு ,மனமகிழ்வுடன் என்னால் இயன்ற அளவு பிழைகளைத்  திருத்தி  இருக்கிறேன்  சார்.  ஒரு  சிக்கல்  இருந்தது.  சில வற்றை நீங்கள் வேண்டுமென்று எழுதி, நான் அதனைப் பிழையாகப் பாவித்துத்  திருத்திவிடக் கூடாதல்லவா? (உம்: ‘இலக்கியம்’ வரும் இடமெல்லாம் ‘’லக்கியம்’ இருந்தது. அது  உங்கள்  ஸ்டைலாகக்  கூட இருக்கலாம்). ஆனால்  அதையும்  திருத்தி  வைத்திருக்கிறேன். தேவையெனில் ஏற்றுக் கொள்ளுங்கள்.
வீம்பாக உங்கள் கட்டுரை பிழைகள் இருக்கிறதெனச் சொல்லிவிட்டேன். தேடிப் பார்க்கையில் இல்லாமல் போனால் என்னாவது. பள்ளியில் என்னை விட அதிக மார்க் வாங்குபவனின் தேர்வுத்தாளை, என்னிடம் கொடுத்து பிழை கண்டுபிடிக்கச் சொன்னால் எவ்வாறு முனைப்புடன் செயல்படுவேனோ, அவ்வாறெண்ணிச் செய்திருக்கிறேன். மன்னிக்கவும்.
நீங்கள் அனுப்பிய மெயிலில் எழுதும் கலை(4) வரைதான் இருந்தது. உங்கள் வலைப்பூவில் சென்று 5ஆம் பகுதியையும் நகலெடுத்துப் பிழை திருத்தி இணைத்திருக்கிறேன். பிழையாகத் தெரிந்த வார்த்தை அடிக் கோடிடப் பட்டிருக்கும். பிழையான எழுத்து திருத்தப் பட்டு , தடிமனான வண்ணத்தில் இருக்கும். சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு முக்கியமான கட்டுரையைப் ப்ரூஃப் பார்க்கும் வேலையைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.திரும்பத் திரும்ப அனுபவித்துப் படித்தேன். அடுத்தடுத்த பதிவுகளைக் கூட எனக்கு அனுப்புங்கள் என்மேல் நம்பிக்கை இருந்தால். ஒரு நாள் முன்னால் அனுப்பினால் ,படித்து, பிழையிருந்தால் திருத்தி அனுப்புகிறேன். அதீத உரிமை எடுத்துக் கொண்டதாக எண்ணினால் மன்னிக்கவும்.
இன்னுமொரு திருத்தம்..உங்கள் வலைப்பூவின் வலது புறம்
தென்பட்டது… இதில் ‘பொருப்பு’ என்று இருப்பது ‘பொறுப்பு’ என இருக்க வேண்டும்.
எச்சரிக்கை!
பின்னூட்ட மட்டறுப்பு
வாசக அவமதிப்பு
அவரவர் பின்னூட்டம்
அவரவர் பொறுப்பு
ஆபாச தனிமனித
தாக்குதல் பின்னூட்டம்
இணைய குற்றப்பிரிவிற்குக்
கையளிக்கப்படும் ’’
அன்புடன்….
தமிழ்ப்பறவை (எ) பரணிராஜன்….
*************
தமிழ்ப்பறவை (எ) பரணிராஜன்….
வணக்கம்
முதற்கண் உங்களுக்கு என் மனத்தின் அடியாழத்திலிருந்து நன்றி. நீங்கள் தனிப்பட  எழுதிய  மடலை  உங்கள்  அனுமதியின்றி – நன்றிகூறும் முகமாகவே  எனினும் – வெளியிடுவதற்காக  உங்களிடம்  மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறன்.
என்னைப்  பற்றி  அடிப்படைத்  தகவல். நான்  பச்சையப்பன்  கல்லூரியில் தமிழ் இலக்கியம் (1978-81) படித்தவன். என்பதை விடவும் கல்லூரிக்குப் போனவன் என்பதே சத்தியம். அதிலும்  வகுப்பறைக்குள் நுழைந்தது அதனினும் அபூர்வம். ஆசிரியர்கள் தெருவிலிறங்கிப் போராடிய அந்த நாட்களில் ஆதரவாக பலமுறை அவர்களோடு நின்றிருக்கிறேன். வகுப்பு சாத்தியமேயில்லை. அதே நேரம் கல்லூரி போகாத நாட்களே கிடையாது.
ஒன்றா அனைத்துக் கல்லூரிக் கவிதைப்போட்டிகள். விட்டால் ‘கல்’ லெறியின் முன்னணியில் நிற்கும் ஜவான். வசந்த் (ஆமாம் ஆமாம் அதே வசந்த் தான் அப்போது இராம.வீரப்பன்) கல்லூரியில் கலாட்டா என்றால் உருப்படும் குழந்தை சமத்தாய் மாலனின் ‘திசை’ களுக்குப் போய்விடும்.
அனைத்துக் கல்லூரி ஓவியப் போட்டியில் MIT என நினைக்கிறேன், தான் பரிசு வாங்கிய கையோடு (பரிசளிப்பு விழாவுடன் ஏதோ ஒரு கவிதைப் போட்டி குறுக்கிட்டிருக்கும் போல நான் கவிதைக்கான பரிசை வாங்க செல்லவில்லை மேலும் இரண்டாம் பரிசுதானே என்கிற சுணக்கம் வேறு. முதல்  பரிசு  நண்பனுக்கு,  சந்தத்தை  நீட்டி  முழக்கி  ‘பாடி’ வாங்கிச் சென்றுவிட்டானே என்கிற ஆதங்கம் வேறு அவர் இன்றைய நீதியரசர்) எனது கவிதைப் போட்டிக்கான பரிசையும் கொண்டுவந்து கல்லூரியில் பச்சையப்பர் சிலைக்குப் பின்னால் இருந்த செயற்கை நீறூற்றுத் தொட்டி என நினைவு, அங்கேக் கொடுத்தபடி “நீங்க கவிதை எழுதறீங்க இப்பிடிக் கல்லெறிஞ்சி கலாட்டாவும் பண்றீங்க…எப்பிடி….” இந்த குழப்பம் இன்னும்கூட இருக்கக்கூடும் (யூகி சேதுவுக்கு – அதே அதே அப்போ சேதுராமன்)
எதிர்காலத்தில் நீங்கள் வளர்ந்து ஆளாகி, என்னைத் தாண்டப்போக நேர்கிற பட்சத்தில்  (அதற்கு  ஒரு  நாளும்  இடம்கொடாது, என்னைவிட இளைஞர்களுக்கு ஈடாக அவர்களுடன் இணையாக மல்லுக்கு நிற்பவனாக இறைவன் என்னை காத்திரமுள்ளவனாகவே வைத்திருக்கட்டும், ஆமென்) அல்லது நான் பிகவும் தரம் தாழ்ந்துபோய், சே இவனையெல்லாம் நாம் ஒரு ஆளாக நினைத்து இருந்திருக்கிறோமே ஒரு காலத்தில் என நீங்கள் கழிவிரக்கம் கொள்ளும்படியாக என் நிலைதாழாது கடவுள் என்னை ரட்சிக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.
இது காட்சி-காட்டலல்ல. நிஜம். என் வாழ்வில நிகழ்ந்த நிஜம். கல்லூரி நாட்களின் முதல் ஆண்டில் ‘கண்ணீர்ப் பூக்களை’ பாண்ட்டிற்குள் செருகி மறைத்துத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். வாங்கக் காசில்லை, போக அதன் மேல் அப்படியொரு மோகம். அனத்திற்கும் மேல் சாகஸம் தரும் கிளர்ச்சி.
கல்லூரிக் கவிதைப் போட்டிகளில் சக மாணவர்களைப் போட்டியாக நினைத்ததே இல்லை. 6-7 வருடங்கள் முன்பாக வெளியேறிய பச்சையப்பன் கல்லூரியின் மூத்த மாணவரான வைரமுத்துவின் “வைகரை மேகங்க”ளைத் தாண்டுவதுதான் 19 வது வயதில் வாழ்க்கையின் குறிக்கோள். வார்த்தைகளின் இறுக்கம், உவம உவமேயங்களின் கட்டுமானம் யாப்பிற்குள் இவை ஆச்சரியப்படவைத்தன. அப்துல் ரகுமானின் ஆறாவது விரல் பேனா என்று அர்த்தப்பட்டபோது ஆகாசமே பிடிபட்டுவிட்டது போல ஒரு ஆனந்தம்.
பிற்காலத்தில்தான் தெரியவந்தது, இவை வெறும் வார்த்தை ஜாலங்கள், கவிதை அற்புதமான படிமங்களாக அதற்கு 15 ஆண்டுகள் முன்பாகவே தருமு சிவராமு 1960 லேயே கவிதைகளாக எழுதத்தொடங்கிவிட்டார் என்பது.
கவிதை என்பது என்னவென்று துலங்கத் தொடங்கியதும் செய்த முதல் காரியம் கவிதை எழுதுவதை நிறுத்தியதுதான். சுரேஷ்குமார இந்திரஜித் தான் சிவராமு கவிதைகளின் தீவிரத்தை எனக்குள் விதைத்தவர்.
இதற்கெல்லாம் கல்லூரியின் இரண்டாமாண்டில், படிகள், கணையாழியின் ஓரிரண்டு இதழ்களையும் அசோகமித்திரன் என்கிற பெயரையும் சொன்னவன் நந்தனம் கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சிவக்குமார் (பிற்காலத்தில் சென்னை ஃபில்ம் சொசைட்டி நடத்தியவர்) அவன் கதை ஒன்றுகூட கணையாழியில் வந்திருந்ததாக புகைமூட்ட நினைவு.
பரீக்ஷா என்கிற பெயர்கூட இன்னும் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. படிகளில் டிட்பிட்ஸ் போல எழுதியவை கூட புரியாமல் புரிந்தது போல் இருந்தது. வெகுஜன பத்திரிகைகளைக் காட்டியிருந்த “காட்டு” கிளர்ச்சியைத் தூண்டிற்று. (பிற்காலத்தில் பரீக்ஷாவில் இணைந்து இயங்கத்தொடங்கிய பின்னரே அவற்றை எழுதிக்கொண்டிருந்தவர் தமிழவன் எனத்தெரியவந்தது)
கணையாழியின் ஓரிரு கதைகளும் கவிதைகளுமே நூலகங்களை நோக்கி விரட்டப் போதுமாயிருந்தன. மூன்றே மாதங்களில் “கண்ணீர்ப் பூக்கள்” நூலகத்தை விட்டு எப்படி வெளியேறியதோ அதே போல எடுக்கப்பட்ட இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.
இந்த நிலை எந்த கவிஞனுக்கும் / எழுத்தாளனுக்கும் வாராதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது அவனவன் பொறுப்பு.
இந்த நிலைக்குத் தன்னை உந்திதள்ளியபடி தேடிப் போய்க்கொண்டு இருப்பவனே தீவிர வாசகன்.
பல சமயங்களில் தனிச் சந்திப்பில், நல்ல வாசகன் முன், பெயராக ஆகிவிட்ட எழுத்தாளர்களே தங்களின் புஜக கிரீடங்களைக் கழற்றிவைத்துவிட்டு குறுகி நிற்கக் கண்டிருக்கிறேன்.
இந்த மாதிரியான தருணங்கள்தான் விடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பது  என்பது  அப்படியொன்றும்  பெரிய  சமாசாரமில்லை என்பதைப் பொட்டில் அறைந்த சாட்சிகள்.

5 thoughts on “நன்றி நவிலல்

 1. நன்றி சார்.

  வைகறை மேகங்கள்..பதின்மங்கள் துவங்கி இருபதுகளின் புகையிறுதிக்காலம் வரை வைரமுத்துவின் வார்த்தைஜாலங்களில் கட்டுண்டது உண்மை.

  நாலுவரிகளை மடக்கிப்போட்டு லேபிளில் கவிதை என்று போடும் எங்களைப்போன்றவர்களை உங்கள் போன்றோரின் சாபம் சும்மா விடாது. 😉

  கவிதை மீதான பார்வை ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டே வருகிறது.

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஆகாயவிமானத்தில் இருந்து பார்க்கும் பரந்துபட்ட பார்வை(MACRO) அடுத்த வரிகளில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என தனக்குள் நோக்கும் அதிநுட்ப மைக்ரோ லெவலுக்கு மாறும் வரிகளை எல்லாம் பார்த்து..

  வாசித்தலோடு நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை மீண்டுமொருமுறை உணரவைத்தது உங்கள் பதிவுகள்.

  நன்றி சார்.

 2. இன்று பக்கங்கள் கொண்ட அறிமுகச் சீட்டு (Visiting Card)போல் ஆகிவிட்டது, கவிதைத் தொகுதி.

  அறிமுகம்கூட கவிதைத் தொகுதி வெளியிட்டிருக்கிறேன் என்பதாக நிறுத்திக் கொள்வது நலம். கவிஞன் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும்.

  எல்லோரும் படிமங்களில்தான் விளையாட வேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை.

  உண்மையாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

  கண்மறைக்கும் கோபத்திலும் கலையை துஷ்பிரயோகம் செய்தல் தகாது.

  கட்டுரைக்கு பூச்சில்லை ஆளைக்காட்டிக் கொடுத்துவிடும்.

  கதையோ கவிதையோ எழுதப்படுவதைக் காட்டிலும் எழுதியதன் நோக்கத்தில்கூட அவற்றின் தரத்தை அவை காட்டிக்கொடுத்துவிடக்கூடும்.

  தவறியும் தவறு செய்யாதவன் என்று உலகில் ஒருவன்கூட தேருவானா என்பது சந்தேகம்தான்.

  இது தவறு செய்வதற்கான 'அனுமதிச் சீட்டு' ஆக ஆகிவிடக்கூடாது.

 3. /கதையோ கவிதையோ எழுதப்படுவதைக் காட்டிலும் எழுதியதன் நோக்கத்தில்கூட அவற்றின் தரத்தை அவை காட்டிக்கொடுத்துவிடக்கூடும்.

  தவறியும் தவறு செய்யாதவன் என்று உலகில் ஒருவன்கூட தேருவானா என்பது சந்தேகம்தான்./

  Again, arumaiyaana varigal.

Leave a Reply