August 28, 2010 maamallan 2Comment
நான் குறிப்பிடும் இடமும் நீங்கள் எழுதியிருக்கும் இடமும் வேறுவேறாகத் தோன்றும் அளவிற்குத் தகவல் பிழைகள். கதையில் தகவல் பிழை,  எழுத்துப்  பிழையை  விட  மோசமானது.   பிழை திருத்துபவர் தகவலைத் திருத்தத் தொடங்கினால் அப்புறம் அது உங்கள் பெயரில்  பிரசுரமாகிற  அவரது  கதை  என்றுதான்  மிஞ்சும். என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என சொந்த பெண்டாட்டி குழந்தையை அந்நியனிடத்தில் விட  முடியுமா?

கதை  எடிட்டர்  எல்லாம்  எழுத்து  வணிகத் தொழிற் கூடங்களுக்கு,  இலக்கியத்திற்கல்ல.  அச்சேறும்  முன்  அடுத்தவர் அபிப்ராயம் கேட்டு பரிசீலிக்கலாமெனத் தோன்றினால் திரும்ப நீங்கள்தான்  எழுத  வேண்டும். நல்ல  புடவை  கிடைக்கிற  இடத்தின் தகவலைத்தான்  அடுத்தவன்  சொல்ல, தெரிந்து  கொள்ளலாம்,  அவனே வந்து அணிவித்தும் விட அனுமதிக்க முடியுமா?

இரண்டு  முதியவர்கள்  பற்றிய கதை. ஆனால் அவர்கள் தகவலாக மட்டுமே எஞ்சிப் போயிருக்கிறார்கள். பாத்திரங்களாய் உயிர்ப் பெறவில்லை.

எழுத்தாளனுக்கு  நம்பகத்தன்மை  முக்கியம். கோணம்  முக்கியம்.  ஆக முதலாவதாக  கருப்பொருள் மற்றும்  களத்தேர்வு  மிகமிக  முக்கியம். எந்த நடையை எடுக்கிறானோ அதிலிருந்து அகலாதிருத்தல் அவசியம். கட்டுடைப்பெல்லாம்,  கயிறெடுத்துக் கட்டவே தெரியாதவனுக்கல்ல.

ஆரம்ப எழுத்தாளனை இந்த அடி அடிக்கலாமா?

பின்னாளில்  பெரும்  சாதனைபுரியப் போகிறவன்,  முதல்  பிரசுரத்திலேயே தெரிவான். ஏனெனில்  அது  அவன்  எழுதிய  முதல்  எழுத்தன்று. எழுதி பார்த்தது  ஏராளம். எழுதுகோலை  தாளில்  வைக்கும்  முன்பாக, வாக்கியங்களை மனதிற்குள் உருட்டிக்கொண்டு இருந்தது, எப்போதிருந்து என்பது,  அவன்  மட்டும அறிந்த  ரகசியம். விந்து  உள்ளே  விழும் முன்பாகவே விருதுக்கு அணிகிற கோட்டுக்கு அளவுகொடுக்க தயாராகும் அவசரயுகம்.

சோறு  போடும்  கணினிமொழியைக்  கற்பதற்கு எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியும் அரைகுறையாக இருந்திருந்தால் வேலை கிடைத்திருக்குமா?

பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு எழுதுவது முழுநேரத் தொழிலில்லை, எனினும்  எந்த  ஒரு  தொழிலுக்கும்  விதிக்கப்பட்டிருக்கும் சட்ட திட்டங்கள் போல்  எழுத்திற்கும்  உண்டு.  விதிகளிலிருந்து  விலக்கு அளிக்கப் படவில்லை.  எடுத்துக்கொள்ளவும் முடியாது.

முதலில் எழுதும்போது அட பரவாயில்லையே எனத்தோன்றும். முடித்ததும் பிரமாதமென  தட்டிக் கொடுத்துக்கொள்ளச்  சொல்லும்.  அச்சில்  பார்க்க பாயைப் பிறாண்டவைக்கும். பார்த்ததும் அரங்கேற்றத்திலேயே இவ்வளவு அம்சமா?  அடுத்த  ஸ்டார்  நாம்தானென  நம்பவைக்கும்.  புத்தகமாகும்வரை எதிர்ப்படும்  எழுத்தாளனிடம்  பவ்வியம்  காட்டச்செய்யும். புத்தக  வடிவில் பார்த்ததும் விருது கிடைக்குமா? வாங்க என்ன செய்யலாம் எனக் குறுக்கு வழிகளைத்தேடும். ஒன்று  கிடைத்ததும்  அடுத்து  ஐரோப்பாவா  ஸ்வீடிஷ் அகாடெமியா? எதுமுதலில்  என்று  குழப்பக்  கனவுகளைக்  காணவைக்கும். என்னைச்சொல் உன்னைச்சொல்வேன் என எழுதாத ஒப்பந்தமிட வைக்கும். புத்தக  எண்ணிக்கை  கூடத் தொடங்கியதும்,  என்னைத்தவிர எவனுமில்லை எனக் கொக்கரிக்க வைக்கும்.

தன் புட்டத்தைத் தன் கையால் தன் தலைமேல் தானே தூக்கிக்கொண்டு திரிவது எவ்வளவு பரிதாபம்.

உன்னத எழுத்துக்களைப் படைத்தவர்களில்கூட இந்த விதிக்கு விலக்கானவர்கள்  மிகச்சொற்பம். இதுகூட  விளம்பர  விதி  போல்  100% என சொல்லக்கூடாது என்பதனால் சொல்லும் வார்த்தை அவ்வளவுதான்.

அவ்வளவு பெரிய மதிப்பீடுகளை, வாழ்க்கையை முன்வைத்தது பொய்யா? இல்லை  உண்மைதான். உண்பதும்  கழிப்பதும்  எவ்வளவு  உண்மையோ அவ்வளவு உண்மை. படைக்கும் அந்தத் தருணம் தவிர மற்ற நேரங்களில் அவனும் சமூகப்பிராணிதானே.

முப்பத்தியிரண்டு  பற்களுக்கிடையில்  தப்பிப்  பிழைக்க, எத்துனைத் தந்திரோபாயங்களை  செய்துகொண்டிருக்கிறது  நாக்கு. நாக்கிற்கு நரம்பில்லையெனப்  பழிப்பது  நியாயமா? அதி  உன்னத  எழுத்தாளனுக்கே இந்த கதி என்று ஆன பின் பல்பொருள் அங்காடிகளையும் நடைபாதை வணிகர்களையும்  பற்றிச்  சொல்ல  என்ன  இருக்கிறது. இன்றைய இண்டர்நெட் கிறுக்கல்கள்,  மூன்றாம் உலகப்போருக்கான முஸ்தீபுகள்.

முதலில்  கோடு  நேராகப்போடக்  கற்றுக்கொள்ள  வேண்டும்.  அதற்கே கடுமையான  பயிற்சி  அவசியம்.  கையே  தூரிகையானபின்,  கட்டற்று, காற்றுவெளியில் நடைப்பேச்சும் கவித்துவமாகும்.

எழுத்து  கொடுமுடியைத்  தொட்டுவிடும்  என்பதற்கு, எழுதும்  முன்பாகவே காப்பீட்டுத் திட்டம்  எதுவும்  இதுவரை  அமலுக்கு  வரவில்லை.  செய்திறன் கொண்ட எழுத்து சிகரத்தைத் தொடுகிறதோ இல்லையோ குறைந்தபட்சம் மனதைச் சிராய்க்காது. பல் கூசாத பதம்.

ட்ரைவ்-இன்னில்  ஏது   புல்வெளி? மதிய  நேரத்தில்  பசங்கள் கிரிக்கெட் விளையாடும் இடத்தை சொல்கிறீர்கள் போலும். 79 முதல் மூடப்படும்வரை அங்கு தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் வசித்தவன் (அலுவலக மாற்றலில்  வெளியூர்களில்  இருக்க  நேர்ந்த  காலங்கள் தவிர) என்ற முறையில், எனக்குத்தெரிந்து  நானோ  அல்லது  வேறு  எவருமோ, மிஞ்சிப்போனால்  மரத்தடியில்  உட்காருவது  மட்டுமே  வழக்கம். அதுவே யதார்த்த சாத்தியம்.

ஏனெனில், இருளத் துவங்கியதுமே அவனவன் ஜிப்பைத் திறப்பதே நீங்கள் குறிப்பிடும்  குப்பையாய்  வளர்ந்து  கிடக்கும் ‘புல்வெளி’ யில்தான். 1.நெடுநேரம் மூச்சடைக்கும் சமாதி யோகம் சித்திக்கப் பெற்றிருந்தால் தவிர, ட்ரைவ்-இன்னின்  கழிப்பறையை  உபயோகிப்பது  சாத்தியமன்று. 2.அங்கு வந்து போய்க்கொண்டு இருந்தவர்களில் பலபேர் காற்றாட இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைக் கடைப்பிடித்த பச்சையர்கள்.

உங்களின்  தவறுதலான  தகவல், ட்ரைவ்-இன்னை  அறிந்தாராத வாசகனுக்கு, தலை  போகிற  அபாயத்தை  உண்டாக்கிவிடாது  என்பதால் மன்னிக்கலாம். ஆனாலும்  கட்டியெழுப்பப்படும்  கட்டிடத்தின்  கடைக்கால், உள்ளீடற்றதாக இருக்கக்கூடாதல்லவா, ஆகவேதான் இந்த அவதானிப்பு.

அது என்ன நண்பரின் கடித அறிவுரையில் குறிப்பிடும், “ட்ரைவ்-இன்னுக்கு எதிரே இருக்கும் காபி கார்னர்”.

காப்பி கார்னர் எங்கே இருக்கிறது எதிரில்? ட்ரைவ்-இன் எதிரே இருப்பவை, USIS கத்தீட்ரல் சர்ச், BOB, பொட்டானிக்கல் கார்டன், வுட்லேண்ட்ஸ் ஷூ கடை  மற்றும்  நகைக்கடைகள். காட்சி  விவரிப்பு  தபால்காரனின் துல்லியத்தில் இருக்கவேண்டும. நிஜ இடங்களைப்பற்றிய எழுத்தாளனின் விவரணை, ஊர்விட்ட  வாசகன்  முகவரி  விசாரித்து, தட்டுகெட்டு அழியாமல், இலக்கை  அடைய  உதவுவதன்  மூலம், குறைந்தது  பயன் இலக்கியமாகவேனும் எஞ்சும்.

எந்த சுற்றுலாத்தலத்திலும் வண்டிவிட்டுக்  கீழிறங்கும்  போதே,  பயணிகள் வழிகாட்டிப் புத்தகத்தைப் பிரித்தபடியேதான் இறங்குவான் வெளிநாட்டுக்காரன். எங்கே  என்னென்ன  சாப்பிட  கிடைக்கும்  எங்கே தங்கவேண்டும்  எங்கே  எதையெல்லாம்  செய்யக்கூடாது. அனைத்தும் தரவரிசையோடு தரப்பட்டிருக்கும். நாட்டைவிட்டுக் கிளம்பும் முன்பாகவே நான்குமுறை படித்திருப்பான். அயல்நாட்டுக்காரன்தானே என்று உடான்ஸ் விட்டு  ஒப்பேற்றமுடியாது. ஈ  மொய்க்கும்  இடம்  போல  நம்மை  விட்டு நகர்ந்து விடுவான்.

நாம்தான் திருப்பதிக்குப் போகாமலேயே மொட்டை போட்டுக் கொள்ளவோ போடவோ  தயாராய்  இருக்கிறோமே. மிகமிக  நுண்மையான  தொழில்நுட்பம் செறிந்த நூதனமான பெரிய திருட்டுக்கள் எவ்வளவு கேள்விப்பட்டிருப்போம்? பூஜ்ஜியம்தான்.  பெருமளவில் திருடக்கூட செய்வதில்லை என்பது நமது புராதன இந்துதர்ம பாரம்பரியத்தின் அடையாளம்  என்ற  கதை  வேண்டாம். கலப்படமற்ற  அசல் சோம்பேறித்தனம். கையாலாகத்தனம்

லக்கிய லோகத்தில் எத்தனை பொஸ்தகம் எளுத்தப்பட்டுக் கொண்டிருக்கு. என்ன இப்படி சொல்கிறான் இவன் தூங்கி எழுந்து வந்து?

தொழில்நுட்ப வளர்ச்சியால் வாழ்க்கை லகுவாகி இருக்கிறது, குறைந்தது மேல்தட்டு   நடுத்தர   வர்கத்திற்கேனும்.   லக்கியம்   பாரமாகி இருக்கிறது. ஏகப்பட்ட ஃபாரங்கள்.

அடித்தட்டில்  இருந்தவன்  அதளபாதாளத்திற்குப்  போய்விட்டான்.  போலி லக்கியம்  ஒரு  மோஸ்தர்.  வயிற்றிலடிக்கப்பட்டு  வாழ்க்கை மறுக்கப்படுபவன் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதில்லை. எழுதப்படுபவனாகவும் பேசப்படுபவனாகவும் இருக்கிறான். வெளிச்சப்பெட்டிக்குள் நிழல் உருவமாய் அவன் நிற்பதால், காட்டுக் காட்சிகள் கனவு போன்ற மயக்கத்தோற்றம் காட்டுகின்றன. மனிதர்களுக்குள்ளான இடைவெளி பக்கவாட்டில் இருப்பதைவிட மேல்கீழாய் ஆவது, காற்று வீசக் காத்திருக்கும் கங்கு. காடெரியும் பட்சத்தில் வீட்டிற்கு மட்டும் பாதுகாப்புண்டெனக் கருதுதல் வெற்றுப் பகல்கனவு.

அணில், பாணம்  விட்டுத்தான்  ஆக வேண்டும் என்று  ராமாயணத்தில் கூட கட்டாயப்படுத்தவில்லை.

உள்ளூர்  காகித  கத்தி சுழற்றலுக்கே   கர்வம்  தலைக்கேறி இருக்கிறது.  தன் கருத்தாக்க சார்பில்லை என்ற ஒரு காரணத்திற்காகவே குருவிமண்டை எனக் கூவி தேசாபிமான சுய சான்றிதழ் குத்திக்கொள்வது லக்கிய லட்சணம்.  எழுத்தாளராய்த்  தொடங்கிய  அருந்ததி  ராய்   இயக்கவாதியாகி  நாட்டு  நடப்பை  விமர்சித்தால்  குருவி  மண்டை. எழுதுவதை நிறுத்திக்கொண்ட சக்கரியா அநீதிக்கெதிராக விமர்சித்து அதற்காகத் தாக்கப்பட்டால்  கண்டனம். கருத்துச்சுதந்திரம்  எங்கு  மறுக்கப்பட்டாலும் கண்டிப்பதுதான்  இலக்கியவாதியின்  அறம். ஒருவரைக்  குருவிமண்டை எனக்கூறி அவமானப்படுத்துவது,  அவரது  கருத்துச்  சுதந்திரத்தை மறுப்பதுவே. மட்டறுத்தல் போல.

ஆனால் அதிகாரத்தின் அடிப்படைக்குணம் அது கம்யூனிஸமோ ஜனநாயகமோ, எதிர்  நிலையை  எதிரியின்  நிலையாக  மட்டுமே  காணும். பூண்டோடு  அழிக்கவே  பார்க்கும். குறைந்த  பட்சம், ஜனநாயகத்தில், எழுத்திலாவது  எதிர்வினையாற்ற  இருக்கும்  இடத்தையும், லக்கிய கமிசார்கள்  அழிக்கப்  போடும் கூப்பாடே குருவிமண்டை.

தேசாபிமானம் என்பது ஒற்றைநிறக் கொடியில் ஒளிந்து கொண்டிருப்பதல்ல.

தராசைக் கையில் தூக்கிக்கொண்டே திரிவது சாத்தியம் இல்லைதான். வாழ்க்கையின் வயிற்றுப் பிழைப்பின் நிர்பந்தங்களை யாரால்தான் தாண்டிவர முடியும். எத்துனைப் பெரிய பீடாதிபதியாக தன்னைக் கற்பித்துக் காட்சிப்படுத்திக் கொண்டாலும், உட்கார்ந்துதான் மோளணும் மோனே!. என்னிஷ்ட்டம் நான் நின்றுகொண்டேதான் போவேன் என்றால் தெறிக்கும் நம்மேலும்  அடுத்தவன்  மேலும். அடுத்தவனை  அஸூயைப்படுத்துவது இந்துமத   அறமல்ல.  நமது   குருமார்கள்   நமக்கு   அப்படி  தீட்சை அளிக்கவில்லை.

இந்த அக்கப்போரெல்லாம் ஆரம்ப எழுத்தாளனான எனக்கெதற்கு?

2 thoughts on “எழுத்துக் கலை தொடர்கிறது (2)

  1. அருமை, விளக்கமாக எழுதி உள்ளீர்கள்.

    எழுத்தாளர் பிறக்கிறாரா அல்லது உருவாகுகிறாரா

    is writer born or made

    உங்கள் கருத்து என்ன

  2. ஒரு எழுத்தாளர் பிறப்பதுமல்ல, உருவாவதுமல்ல, அவர் இறக்க மட்டுமே செய்கிறார், அதுவும் அவராகச் செய்வதல்ல, அது அவருக்குச் செய்யப்படுகிறது என்கின்றனர் ரோலான் பார்த் வகையறாக்கள்.

Leave a Reply