August 28, 2010 maamallan 2Comment
எழுத்து  என்பது  வெறும்  திறமை  அன்று. அதற்குப்  பொருள்  திறமையை மறுப்பது  என்பதுமன்று. எழுதும்  திறமையைப்  பயிற்சியே கூர்மைப் படுத்தும். எழுத்தின்  ஆதாரத்  தேவை  உண்மை. பட்டறிந்த  உண்மை அனுபவம் பாதிவழி காப்பாற்றும். குறிப்பாக நடைவண்டி எழுத்துக்கு நேரடி அனுபவம் அத்தியாவசியம். செய்திறன் மெருகூட்டும். மீதியை வாசகன் பார்த்துக் கொள்வான்.

நீங்கள்,  ட்ரைவ்-இன்  போய்  வந்து  கொண்டிருந்து,  அது  இடிக்கப்பட்ட இழப்பினால் உண்டான உண்மையான சோகம் என்றால், எந்த வடிவத்தில் எழுதப்  பட்டாலும்  கொஞ்சமேனும்  அடுத்தவனை  பாதிக்கும். ட்ரைவ்-இன் ‘இடிக்கப்பட்டது’ எல்லோரும் அறிந்த ’செய்தி’. அதுவரை உள்ளே கூட நுழையாத  ஒருவனுக்கு  அதை  வைத்துக்  கதை ‘பண்ணினால்’ என்ன எனத்தோன்றிய காரியமாகவே படுகிறது. என் அனுமானம் தவறாகக்கூட இருக்கலாம். எனக்கு  இப்படியொரு  எண்ணமே  உதிக்காமல் எழுத வேண்டியது  உங்கள்  பொறுப்பு. உங்கள்  ‘சோகம்’ செவிவழி  வந்து ஜீரணமும் ஆகாமல் இருந்தால் அது ‘போலி’ அனுபவம்.

போலி கம்யூனிஸம், போலி ஜனநாயகம், போலி மனிதாபிமானம், போலி தேசாபிமானம், போலி ஆன்மீகம், போலி கலகம், போலி இலக்கியம் என்று எல்லாப்  போலியும்,  அண்டசராசரத்தை  அணுவணுவாய்  பிரித்து  மேயும். அடஅட என்ன ஒரு மேதைமை என்று வாசக புல்லரிப்பைக் கண்ணோரம் கண்டுகொண்டதும், சுயத்தை முன்னிருத்தும். அதுவே போலியின் உண்மையான அடையாளம்.

ரசிகனாய், குனிந்து  மண்டியிட்டு  குதிரையேறிக்கொள்ளுங்கள்  என்றால் விமோசனமில்லை.  கட்டுடைத்துக்  கொள்வதே  கலைஞன்  ஆவதற்கான முதல்படி.

கலைஞனின்  வித்தை  கண்ணைக்கட்டி  மயக்கும். ஆனால்  வித்தை காட்டுவது மட்டுமே ஒருபோதும் கலையாவதில்லை.

இதைத்தான்  எல்லாப்  “பெரியவாளும்” அனுபவ  எல்லையைத் தாண்டாமையை எழுத்தாளனுக்கான ஒரு அடிப்படை விதியாகவும் தகுதியாகவும்  சொல்கின்றனர்.  வித்தை  காட்டுகிறேன்  பேர்வழி  என்று எவ்வளவு  முஸ்தீபுகளோடு  தண்டிதண்டியாய்ப்  ‘பொஸ்தகம்’ போட இறங்கினாலும்,  பரிச்சயமற்ற  பாசாங்கு  என்பது  பாசி  படர்ந்த  வழுக்குப் பாறை.

தவறான,  நம்பகத்தன்மையற்ற  தகவல்களைக்  கொடுத்து ‘மாட்டிக்கொள்வதை’ விட. கற்பித தகவல்களை பிரபலமான இடங்களைப் பற்றி  எழுதுகையில்  தவிர்ப்பது  நல்லது. உதாரணம்: வேறெங்கும் தேடவேண்டாம், சில பத்திகள் முன்னால் செல்லுங்கள். ட்ரைவ்-இன்னுக்கு எதிர் வரிசையை விவரிக்கையில் வுட்லேண்ட்ஸ் ஷூ கடைக்குப் பிறகு நகைக்கடைகள் என்று பொதுவாக ஓட்டியாயிற்று. ஏனெனில் வைரக்கடை பெயர்  நினைவிலில்லை  டைட்டன்? முன்னா  பின்னா? கடைசியில் கஸானா  அங்கே  உள்ள  சிக்னலை  எப்படி  விடுவது. ஆனால்  வரிசை தவறிவிடுமோ என்ற பதட்டம். அதில் வந்த மழுப்பல்தான் ‘நகைக்கடைகள்’

வாசிப்பு, தகவல்  கொடுக்கவேண்டும்  என்பதுவரை  உங்களை  அழைத்து வந்திருக்கிறது,  அந்தமட்டிலும்  சந்தோஷமே. துல்லியமான  விவரிப்பே மனத்திரையின்  தூரிகை. அத்தியாவசியமான நுட்பங்களைக்  காணவும் தெரிவு செய்யவும் பயிற்சி மட்டுமே போதாது.

நான் அசோகமித்திரனின் அடியொற்றி வந்தவன் என்பதால் விவரணைக்கு முக்கியத்துவம் என்கிற சாய்வு என்னிடம் கொஞ்சம் கூடுதலாக இருந்தே தீரும். இது  எல்லாரிடத்திலும்  இருந்தேயாக  வேண்டும்  என்பது  அவசியம் இல்லை. ஒவ்வொருவர் தீட்டும் ஓவியமும் ஒவ்வொரு விதமானது.

அதேநேரத்தில் அதீத விவரணம் புதைமணல். இதமான சூட்டில் இழுபட்டுக் கொண்டிருப்பது அறியாமல் சப்புக்கொட்ட வைக்கும். மூச்சு முட்டி மோக்ஷம் தெரியும்போது முழிப்பு வந்து என்ன பயன்.

கோபுர  வாசலிலா  இருக்கிறது  கர்ப்பக்கிரகம்.  கொடிக்கம்பம்  தாண்டி, கருடாழ்வார் கடந்தாலும் மூலவரை நெருங்கவே முக்கியடித்தாக வேண்டும்.  பலசமயம்  உற்சவமூர்த்திதான்  கைக்கெட்டும்  தூரத்தில் இருப்பார்.

எழுதி  அச்சேறிய  பேப்பர்களைக்  காட்டிலும்  கசக்கிப்போட்ட காகிதத்தின் எடைதான் எந்த எழுத்தாளனிடத்திலும் அதிகம்.

மரங்களை எழுத்தாளர்களிடமிருந்து பாதுகாக்கத்தான் பின்நவீனத்துவம் வந்ததுபோலும். பிட்டு  பேப்பர்கூட  வீணாவதில்லை. தவறுதலாய் கைபட்டுக் கசங்கிய  பேப்பர்கள்கூட  இஸ்திரி  போட்டு,  கிழிந்திருந்தால்  ப்ளாஸ்திரி போட்டு, ஃபாரம் இழுபறியாக இருக்குமேயானால் எவனாவது ஏற்கெனவே அச்சில்  ஏற்றியதையும்  எடுத்துப்  போட்டு,  அமோகப்பட்டுக் கொண்டிருக்கிறது எழுத்துச் சந்தை.

மூலவரை தரிசித்தாலும் மூர்த்தியின் அருள் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை.  கடவுள்  போன்ற  தோற்றம்  காட்டும் கற்சிலைகள்தான்  எண்ணிக்கையில்  ஏராளம். கும்பிடுவது  கிடக்கட்டும் வரவேற்பறைக் காட்சிப் பொருளாய் வைக்கக்கூட தகுதியற்ற மூளிகள்தாம் அநேகம். செப்பமான செய்திறன் கூடப்பெற்றவை என்பது ஒரு அடிப்படைத் தகுதி மட்டுமே, அந்தமன்று.

பட்டறை  நடத்துவதாக  எண்ண வேண்டாம்.  பட்டதைச் சொல்கிறேன். அதுவும் கேட்டதால் சொல்கிறேன்.

முதலில் செய்யவேண்டியது ‘நீங்கள்’ ஒரு கடிதம் எழுத வேண்டும். நீங்கள் முதியவராக ‘ஆவது’ எல்லாம் அப்புறம்.

ஒரு  கடிதத்தை  எப்படி  எழுதுவோம்? இருவருக்கும்  தெரிந்த  பொது விஷயங்கள், ட்ரைவ்-இன்னின்  தயிர்  வடைமேல்  பூந்தியாக இருக்கவேண்டுமே அல்லாது பூந்திக்குள் தயிர்வடையாக இருக்கலாமோ? இருவரும்  சந்தித்ததை, பரஸ்பரம்  பேசிக்கொண்டதை,  அதன்  நீட்சியாக நண்பர்  இல்லாத  இழப்பை வாசகனுக்கு ‘சொல்லக்’  கூடாது  உணரவைக்க வேண்டும்.

அது எப்படி சாத்தியம்.

முதல்  கடிதத்தையே  எடுத்துக்கொள்வோம்.  லாஜிக்  பற்றிய  உங்கள் கவலை. இந்த  காலத்தில்  போய்  ஒருத்தன்  கடிதம்  எழுதுவானா?  என்று எவனாவது கேள்வி எழுப்பிவிடுவானோ என்கிற பதைப்பு.

//செல்போனில் பேச எப்போதும் எனக்கு ஒருவித தயக்கம்//

இதை அவருக்கு சொல்வதை விடவும் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்வதாகத்தான், தோன்றுகிறது  எனினும்  இதை  உங்களின்  சாதகமான அம்சமாக, கோயில்படியில்  கால்  வைத்தாயிற்று என எடுத்துக்கொள்ளலாம். பாருங்கள் அதற்குள் ஒரு இடறல்.

//நாம் இருவரும் இதுவரை செல்போனில் பேசிக்கொண்டதை நினைவு கூர்கிறேன்.//

நான்கு வாக்கியங்களுக்குள் என்ன இது? திரும்பவும் இடைப்பட்ட காலத்தை, இட்டு  நிரப்ப  சப்பைக்கட்டா? இல்லை வாசகன்  பற்றிய கவலையா?

நீங்கள்  நம்புகிறபடி  எழுதினால்,  வாசகனும்  நம்புவான்.  முதலில்  நீங்கள் நம்புங்கள்.

கதையின் வடிவம் வெறும் கடிதப் பரிமாற்றங்களாகவே இருந்தால் கூட இருவருக்கும் தெரிந்த தகவல்கள் வாசகனுக்குத் தெரிந்தாக வேண்டுமே என்கிற  மெனக்கெடல்  தேவையற்றது.  மேடைநாடக  நடிகன்  சகநடிகனைப் பார்த்து ஒரு வசனமும் மைக்கப் பார்த்து ஒரு வசனமுமாக அல்லாடுவான். அவர்கள் இருவருக்குள் இருந்த நட்பை முதலில் நீங்கள் உணர்ந்து நம்பகத்தன்மையோடு  வெளிப்படுத்தும்  போதுதான், மைக்கை  மறந்து சக நடிகனை மறந்து பார்வையாளனை மறந்து தன்னையழித்து பிறிதொரு பாத்திரமாய் ஆகமுடியும்.

இதை ஒருவர் தியான அறையில் இருந்துதான் செயல்படுத்த முடியும் என்றில்லை. ட்ரைவ்-இன்னின் சத்தங்கள் எழுதிக்கொண்டு இருந்த தருணங்களில்  காதில்  விழுந்ததேயில்லை. பழக்கமும்  பயிற்சியும் முனைப்பும்  எதையும்  சாதிக்க  வல்லவை. அவ்வளவு  ஏன்  இதை கணினியில் அடிக்கத் தொடங்கிய போது ஹரியுடன்நான் எதிரில் ஓடிக்கொண்டுதான்  இருந்தது. இப்போதும்  எத்துனையாவது தடவையாக தடவித்தடவி இழைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற கணக்கே தெரியவில்லை. ஏனெனில்  இது  உங்களைப்பற்றி  இருந்தாலும் உங்களைவிடவும்  எனக்காகவே  எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லா விஷயங்களும்  சுயத்திற்காகவே  செய்யப்படுகின்றன. சுயத்தை திருப்திப்படுத்த. சுயத்தை முன்னிருத்த அல்ல.

சே குவேரா போர்க்கள விழிப்புடன் பக்கத்தில் துப்பாக்கி சாய்ந்திருக்க பாப்லோ நெருதாவை வாசித்துத் தன்னைக் கரைத்துக் கொண்டதை ஒப்பிட்டால் பாதுகாப்பு நிறைந்த இலக்கிய சிந்தனை உப்புப்பெறுமா? நிற்பது உப்பளத்திலேயே இருப்பினும் கூட.

தயவுசெய்து  ‘ஹரியுடன்  நான்’  நிகழ்ச்சியைப்  பாருங்கள்.  எத்துனை நுட்பங்கள். எப்படியாகப்  பயிற்றுவிக்கப்படுகின்றனர்.  கேள்   கவனி பயிற்சிசெய் பாடு.

2 thoughts on “எழுத்துக் கலை தொடர்கிறது (3)

 1. சில நாட்களாக உங்கள் வலைமனையை தொடருந்து படித்து வருகிறேன். தங்கள் கதைகளைப் போலவே மிகவும் வித்தியாசமான நடையில் `எழுத்துக் கலை` இருக்கிறது. ரசித்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

  இணையத்தில் எழுதத்துவங்கியது குறித்து மிகவும் மகிழ்ச்சி.

  நன்றி.

 2. ரா.கிரிதரன் said…

  நன்றி.
  தணிக்கையற்ற பொதுவெளி தவறாக தன் முனைப்பிற்காக பயன்படுத்தப்படுவதைப் பார்க்கத் தாங்காமல்தான் திரும்ப எழுத வந்தேன்.

  பேசாப் பெரும்பாண்மை பார்ப்பதும் படிப்பதும் கணிப்பு காட்டிகளில் தெரிகிறது.

  ஒரு எழுத்தாளனுக்கு கோடிகோடியாய் கொட்டிக்கொடுப்பதைவிட படிக்கப்படுவதே அவனை நிறைவிக்கும்.

  முடிந்தால் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

Leave a Reply