August 28, 2010 maamallan 0Comment
எப்படி சார் இப்படி எழுதறீங்க?

கண்ணையு காதையு தெறந்து வெச்சுண்டிருக்கேன் அவ்வளவுதான் – தி.ஜானகிராமன்.

எவர் வேண்டுமாயினும் பாடிவிட முடிகிறதா அட குளியலறையில் கூட.

பாடும்   குரலையும்   ஞானத்தையும்   கொடுக்காமல்   வஞ்சித்த போதிலும், காதுகளைக் கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி.

ஜெயகாந்தனின்  ‘நினைத்துப்  பார்க்கிறேன்’  படித்துப் பாருங்கள். அதில்  அவர் வீணை  கற்றுக்கொண்டதை, கற்றுக்கொள்ள  ஆசைப்பட்டதை, முயற்சித்தை எழுதியிருப்பார். அந்த வாசிப்பு நேரடி அனுபவமாக உங்களுக்கு அமைவதே நல்லது, தேடிப்படியுங்கள். அதிலிருந்து  ஒரு  வரி  மட்டும்  – எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது எதன் மீதும் மரியாதை  இல்லாமல் சொல்லப்படும் வார்த்தை.

இதை  அவர்  எழுதிய  போது  அவரே  கொடுமுடி. தமிழ்நாட்டில் இலக்கியமென்றால் அவர்தான். நடிப்புலகிற்கு வெளியிலிருந்த நட்சத்திரம். எம்ஜிஆர் சிவாஜி ஜெயகாந்தன். பிரபலங்களின், அன்றைய தர வரிசை பட்டியல்.

அரசியலில்  அண்ணாவை  அண்ணாதுரை  என்று  சொன்னாலே, அவமதிப்பு என்றிருந்த  காலத்தில்  அரசியல்  மேடையில் – மூடரே  அவரை  அறிஞர் என்றனர்  பெருமூடர்  அவரைப்  பேரறிஞர்  என்றனர். ஜெகே  சொன்னது சரியா தவறா என்பதல்ல அவரது ஆகிருதிக்காகவே இங்கே குறிப்பிடப்படுகிறது.

அண்ணாவின்  மறைவுக்குத்  தெரிவித்த  அஞ்சலி  – அவர் இறந்ததில் எனக்கும்  வருத்தமே. என்  அரசியல்  எதிரியை  நான்  தோற்கடிக்கும் முன்பாக காலன் கவர்ந்து கொண்டு சென்றுவிட்டான் என்பதில் எனக்கும் வருத்தமே.

எம்ஜிஆர் – மதுவிலக்கை முழுமையாக அமல் படுத்துவோம்  – பத்திரிகை அறிவிப்பு

ஜெகே – வீட்டிலே  கதவை  மூடிக்கொண்டு  குடித்தால்  என்ன  செய்ய முடியும் – பேட்டி

எம்ஜிஆர் – சட்டம் வந்து கதவைத் தட்டும் – அறிவிப்பு

ஜெகே – வீட்டிலே  கதவை  மூடிக்கொண்டு  குடித்தால், சட்டம்  வந்து கதவைத் தட்டுமாம், தட்டுகிற கையை வெட்டுவேன்.

இது ஏதோ ப்ளாக்கிலோ குறும்பத்திரிகையிலோ அல்லது வீட்டுக் கொல்லைப் பக்கத்தில் அடுத்த ஸ்டேட்டை வைத்துக்கொண்டு எழுதியதில்லை, அல்லது எட்டுப்பேர் கும்மியடிக்கும் லக்கிய ஆன்மீக சுகமளிக்கும் சுவிசேஷ பட்டறைப் பேச்சல்ல.

நண்பரே, மெட்ராஸின்  நட்ட  நடுவில்  இருக்கும்  பனகல்  பார்க்கில்  பொது மேடையில்  பேசிய  பேச்சு. கற்பனையின் கட்டுக்குள் அடங்காத அதீத கம்பீரம்.

பாஞ்சஜண்யத்தின் போர் முழக்கத்தைக் கேட்ட காதுகளுக்குத்தான் தெரியும், நந்தியாவட்டையின் அடிக்காம்பில் ஊதிவிட்டு, ஐயையோ எங்கியோ எழுதியதை எங்கியோ எடுத்துப் போட்டு அநியாயம் அக்கிருமம் கேக்க நாதியே இல்லையா என்கிற அலம்பலின் நாராசம்.

எழுத்தாளன்  பொறுப்போடு  எழுத  வேண்டும். எழுதிவிட்டால் அதற்குப் பொறுப்பேற்க  வேண்டும். அவசரத்தில் அரைகுறையாய் பெற்றதற்காக அப்பனில்லை என்றாகிவிடுமா?

எழுத்தைக் கையிலடக்கிவிட்டதான இறுமாப்பு எவனுக்குமே வேண்டாதது. காரணமே இல்லாமல், பள்ளி செல்ல மறுக்கும் குழந்தையாய், என்ன செய்தாலும்  ஒரு  நாள்  எழுதவராமல்  போகக்கூடும்.  அன்று நீங்களிருக்குமிடம் மானசரோவராகவே இருந்தாலும் எழுதவியலாது. மானசரோவர் பற்றியே பயணக்கட்டுரை எழுதிவிடுவாரே மணியன், என்றால்  என்  பதில்  மெளனம்தான். ஏனெனில்  எந்திரனுக்கு  எதுவும் சாத்தியம். நாம்  மனிதர்களைப்பற்றி  பேசுவதோடு  நிறுத்திக்கொள்வதே நலம்.

எழுதறதை திரும்பத்திரும்ப திருத்தி எழுதித்தான் ஆகணும் ஆனா அது எவ்வளோ தடவை எழுதப்பட்டு மெருகேறியிருக்குங்கறது வாசகனுக்குத் தெரியற மாதிரி இருக்கக்கூடாது – மீசையை உருவியபடி நா.முத்துசாமி.

செய்யப்பட்டதன் தோற்றமும் உள்நோக்கமும் அப்பட்டமாய்க் காட்டி இளிக்கும் எதுவும் கதையல்ல வெற்றுத் தாள்கத்தை.

கதைக்கிடையில் – கையாலாகாத  பெருமூச்சு  வணிகமயமாதல்  ஐடி வேலையில் அமெரிக்காவிருக்கும் இருவரின் மகன்களும் கவனிக்காமல் இருப்பது  என்கிற  வார்த்தைகள் – இந்தக் காரணங்களாலேயே அவர்கள் ட்ரைவ்-இன்னுக்குத்  தள்ளப்படுகிறார்கள். அதைச்  சொல்லத்தானே கதை எழுதத்தொடங்கியது. அப்புறம்  அதை  அப்படியே சொன்னால் எப்படிக் கதையாகும்.

கதையில்லாத மனிதன் ஒருவன் கூட கிடையாது இந்த உலகத்தில். அப்புறம்  ஏன்  எல்லோரும்  எழுதுவதில்லை? எழுதப்படிக்கத் தெரியாதவர்களை விட்டுவிட்டால் மீதியில் பெரும்பாலோனோர் ஏன் கையெழுத்தைத்  தவிர  எதையுமே  எழுதுவதில்லை? ஐ டி  துறையின் வேலையும் இண்டர்நெட்டின் எல்லைகளழிந்த பரவலும் எழுத்தாளர்களை உருவாக்கிவிடாது.

எழுதமுடியாமல் இருக்க முடியாததால் எழுத வருபவனுக்குப் பெயர்தான் எழுத்தாளன்.

எழுத வருகிறது என்பதற்காக எழுதுபவனுக்கு பெயர் கேளிக்கையாளன்.

எழுத்தறிவும் வசதியும் வாய்க்கப் பெற்ற பெருங்கூட்டம், வாசகனாக இருப்பதில் சலிப்புற்று அலுவலகத்தில் இருக்கும் அந்தஸ்துகூட இங்கு இல்லையே  என்றும், கணினியைக்  கவிழ்த்துப்  போட்டுக்  காசாக்கும் நம்மால் கேவலம் இதைக்கூடவா செய்ய முடியாது என்ற நினைப்போடும், எழுதவருவது  போல்  தோன்றுகிறது. லெளகீக  வெற்றியோ  பதவியோ கலையில் ஜெயிப்பையோ தோற்பையோ ஒருபோதும் தீர்மானிப்பதில்லை. உண்மையும்  உழைப்புமே  வழிகள். குறுக்குப்  பாதைகளுக்குப்  போடப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப் படாமலேயே நிராகரிக்கப் பட்டுவிட்டன.

எந்தத்துறையின் வெற்றியும் எதை வேண்டுமானலும் முற்சிக்கும் இறுமாப்பைக்  கொடுப்பதென்னவோ  வாஸ்தவம்தான்.

உள்ளீடற்ற மேம்போக்கான புகழுடன் போஸ் கொடுத்துக்கொள்ள முண்டும் ரஸிகன், ஆகக் கீழே அடியில்  இருக்கிறான். அவனை  ஒரு  நடிகன்  அப்படியே  வைத்துக்கொள்வதைப்  புரிந்துகொள்ள  முடியும். கொள்கை கொள்கையெனக் கூரை  முட்டக்  கூப்பாடு  போடும்  எழுத்தாளன், உலகம் சுற்றுவதற்காக, லேகியப்  புகழ்  டாக்டர்  காளிதாசாகத்  தனது நிகழ்ச்சிநிரலைத் தானே தட்டியிலெழுதி தமுக்கடிக்கும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.

உயர்ந்த வாசகன் எப்போதும் எழுத்தாளனுக்கு இணையாகவே நிற்கிறான். கூடிக்கலையும் கும்பலில் போஸ் கொடுக்க ஒருபோதும் அவன் முண்டியடிப்பதில்லை. அவன்  எழுத்தாளனுடன்  மனப்பூர்வமான  காதலில் இருப்பவன். அவன்  தானய்யா  புதுமைப்பித்தன்  சொன்ன “என்றைக்கோ வரப்போகிற ஒற்றை வாசகன்”.

எழுத்தாளன் எவ்வளவு முக்கியமோ வாசகனும் அவ்வளவு முக்கியம். ஏனெனில் முன்னவன் எழுதாமல் விடும் மீதியை மனதிற்குள் நுண்ணுணர்வோடு  எழுதி  முழுமைப்படுத்துபவன்  அவனே. நிபுண வாசகனின் மனதில் ஏறிக்கொள்வது கிளியோபாட்ராவை வசியப்படுத்துவதைக் காட்டிலும் கஷ்ட்டமான காரியம்.

பேச்சென்னவோ பேரம்பலத்தில் பார்வை வீச்சென்னவோ பாமரன்மேல்.

தீவிர வாசகனை உருவாக்குவதே எழுத்தாளனின் உண்மையான செயல்பாடு. உலகெங்கிலும்  தனக்கான காரியதரிசிகளை  உருவாக்கிக் கொள்ளுவதல்ல. அங்கங்கே  அச்சாரம்  போட்டு  வைக்கவே  வாலிப வயோதிக வாசக அன்பர்களுக்கு அவ்வப்போது கடிதப் பிரசுர விவாத விளம்பரம்.

தந்திர வாழ்க்கை ஈன்றெடுத்தது எந்திர எழுத்து.

எல்லா உண்மையான எழுத்தாளனும் அடிப்படையில் உன்னத வாசகன். ஆகவேதான் “நாங்கள் எல்லோரும் கோகோலின் மேல் கோட்டிலிருந்து வெளியே வந்தவர்கள்” என்று சொன்னார் தாஸ்த்தயேவ்ஸ்க்கி.

இந்த சுபயோக சுபதினத்தில் இன்ன நட்சத்திரத்தில் இன்ன திதியையில் எனது குருவும் ஆசானுமான இன்னவரைக் கடந்து மேலேறினேன்.

எந்தா சாரே அவ்விடெ பூமியில் சாகித்யம்மார் இங்கெனெ தன்னெ பரயாமோ?  அதாநோ அவ்விடெ கல்ட்சர்.

கும்பிடுதல்  ஒரு  நற்குணம். புகழ்  வெளிச்சத்திற்கு  நேர்ந்து கொண்டவனுக்கோ கூழைக்கும்பிடுதான் குருபூஜை.

Leave a Reply