August 28, 2010 maamallan 4Comment
வாசகனாக உருவாகும் முன்னாலேயே எழுத்தாளனாகிவிடும் விபரீதம் ஏற்பட இது போன்ற தவறான முன்னுதாரனங்களே காரணம். ஆரோக்கியமான வாசக சூழலுக்கு பதில் தன்முனைப்போடு ஒருமுகப்படுத்தப்படும் ஜால்ரா சூழல்.

//அமெரிக்காவிலிருந்து நமக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை பணம் வருகிறது. அத்துடன் நமது ஓய்வூதிய பணம், நில புலன்களை விற்று வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணம் என இருவருமே நல்ல நிலையில் இருப்பதாக  நினைத்துக்  கொள்வோம். இத்தனை  இருந்தும்  நமது தனிமையை, கவனிப்பாரின்றி வீட்டைக் காவல் காத்துவரும் நிலைமையை நினைத்து டிரைவ்-இன்னில் வெகுநேரம் பேசியிருக்கிறோம்.//

கருத்து  கதையாக  வேண்டும். அந்தப்  பெரியவர்  தமது  தனிப்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் நண்பருக்குத் தெரிவித்தபடி புலம்பி தள்ளத்தள்ள வாசகன் தன்னை அவராக பாவிக்க முனைந்தால் – நிறம் மதம் இனம் மொழி நாடுகள் வயது பாலினம் கடந்து அவரது வலி வாசகனைப் பீடிக்குமேயானால் – உலகத்தின் சிறந்த எழுத்துக்கள் இப்படி பாதிப்பதை  நாமே  அனுபவித்துக்  கொண்டுதானே  இருக்கிறோம்.  வாசிப்பு ரசனை  வேறு, உருவாக்கத்திறன்  வேறு. முன்னதே  பின்னதை அடைவதற்கான சரியான பாதை. பயணமோ முடிவற்ற தூரம்.

இங்கென்ன நடக்கிறது கண்ணீர் வழிகிறது வார்த்தைகளில். வார்த்தைகளைக் கடந்தால்தான் அவர்கள் மாந்தர்களாக உயிர்த்தெழுதல் சாத்தியம்.

கதையின் வெற்றி விஷயத் தேர்விலேயே சூட்சுமமாய் உறங்கிக் கிடக்கிறது,  விருட்சம் உறங்கும் விதை.

Vital எக்ஸ்பீரியன்ஸை எழுத எடுத்துண்டா சக்ஸஸ் ஆகறத்துக்கான சான்ஸ் ஜாஸ்தி.

Vital எக்ஸ்பீரியன்ஸ்னா?

இங்கெதான் …… எங்க …. இருந்தா. அவ தவறிப்போய்ட்டா நா மாடிலெ இந்த மாதிரி பால்கனியாண்டெ நின்ணுண்டிருக்கேன் ஆம்புலென்ஸ் போயிருக்கு. பாடி எடுத்துண்டு வர. அப்ப அவளோட ஃப்ரெண்ட், ந்யூஸ் கேள்விப்பட்டு  கொஞ்சம்  தள்ளி  அதோ  அவ்ளொ  தூரத்ல, கார  வுட்டு எறங்கி தலைய முடிஞ்சிண்டு தடதடன்னு ஓட்டமும் நடையுமா வரா. பரபரன்னு படியேறி யார் என்ன யேதுன்னு பாக்காமெ உள்ளெ போனா. சாதாரணமா லேடீஸ் அப்டி போமாட்டா.

அந்த  லேடி  வந்தது  இன்னும்  அப்டியே  இருக்கு.  அப்ப  இருந்த  வெதர் கண்டிஷனோட.  இது  எதாவ்து  ஒரு  எடத்துலெ  எழுதும்போது கண்டிப்பா வந்துடும் – சுந்தர ராமசாமி

இதை சொன்ன இடமும் அவரது முகபாவமும் கூட அப்படியே இருக்கிறது. எவன்  சொன்னான்  இவர்  இறந்துவிட்டாரென்று.  என்னுடன் எப்போதும்  இருக்கிறார். என் சுந்தர ராமசாமி என்னோடு இருப்பார், நான் இறந்த பின்பும்.

மேலே இருக்கும் வைட்டல் எக்ஸ்பீரியன்ஸ்ஸை எங்காவது எழுதி இருக்கிறாரா  என்றும்  தெரியாது. நான்தான்  எழுதுவதை  மட்டுமல்ல படிப்பதையும்  நிறுத்திப்  பலகாலம்  ஆயிற்றே.  ஒரு  நேர்ப்பேச்சில் கிடைத்தது.  விவரிப்பைப் பார்த்தீர்களில்லை இது சாதாரண நேர்ப்பேச்சு.

உங்கள் கதையில் இவரது மனைவி சொல்வதிலிருந்து மகன் குடும்பத்தோடு இருக்கிறான் அமெரிக்காவில் என்று தெரிகிறது தகவலாக மட்டுமே.

மூன்றாண்டுகளின் பிரிவில், அவன் திருமணம் நடந்ததா அதற்கு நண்பர் வந்திருந்தாரா அவர் மகனுக்கு திருமணமானதா இல்லை பார்த்துக்கொண்டிருக்கிறாரா. இருவர்  மகன்களும்  குடும்பத்தோடு வெளிநாட்டிலிருக்கிற பட்சத்தில் அவர்களை ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளச் சொல்லி இதுகளில் ஒன்று நச்சரித்தும் அதை அவர்கள் தம் பரபரப்பு வாழ்வில் செய்யாதிருப்பது பற்றிய புள்ளிகூட ஒரு நல்ல கதைக்கான கருதான்.

மேலே சொல்லியிருப்பவற்றில் ஒன்றைக்கூடத் தொடவில்லை எழுதப்பட்ட கதை..

பெரியவர், கூரியர்  அலுவலகம்  செல்கிறார்  எப்படி  ஆவியாகவா உடையில்லாமல்லா காலையா மாலையா மதியமா அவருக்கு ஸ்தூல சரீரமா ஒல்லி மனிதரா தலையில் முடியுண்டா முழுவழுக்கையா அவரெப்படி நடக்கிறார் கூரியர் அலுவலகத்தில் கும்பலா கூட்டமேயில்லையா கூரியர் அலுவலரால் பெரியவர் அவமதிக்கப்பட்டாரா பரிவோடு நடத்தப்பட்டாரா அது அவரை எப்படி பாதித்தது அலுவலகத்தை விட்டு வெளியில் வருகையில் நிம்மதியாக வந்தாரா வரும்போது இருந்ததை விடவும் நொந்து போய்விட்டாரா வெளியே வருகையில் மூட்டமாக இருந்ததா வெய்யில் சுட்டெரித்ததா.

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் அப்ஜெக்டிவ் டைப்பில் தர்க்க நியதிக்குட்பட்டு சரி அல்லது தவறு போட்டுக்கொண்டே வாருங்கள் இடைவெட்டி உங்கள் கடிதத்தை படிக்கவோ அசைபோடவோ செய்யுங்கள். முடிந்தவரை நெகிழ்வை வார்த்தைகளிலன்றி நிகழ்வுகளில் மற்றும் உரையாடல்களில்  கொண்டுவரப்  பாருங்கள். அடுத்த  வருட  ஐரோப்பா விருது உங்களுக்கே கூட  கிடைக்கலாம். வாழ்க்கை  எல்லாவித சாத்தியக்கூறுகளையும் கொண்டதுதான். இண்டர்நெட் ஜோக்கரே தன்னை ஏசாகக்  கனவு  காண்கையில்  தங்களுக்கு  என்ன  குறை. வானம் தொட்டுவிடும்  தூரம்தான், குட்டைக்கையர்களின்  வசதிக்காக வாடகைக்குக்கூட கிடைப்பதாகக் கேள்வி.

எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது நம்மிருவரில் யார் யாரைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று.

என்ன பிரச்சனையென்றால்

ஒரு ஐடியா கிடைத்து விட்டது ‘புறக்கணிக்கப்பட்ட முதியோரின் தனிமை’.

1939லிருந்து இருக்கும் ட்ரைவ்-இன்னை. ஒரு படிமமாக வரிந்து கொண்டாயிற்று

(எனக்குத் தெரிந்து இது 1965ல் தொடங்கப் பட்டதாகவே தகவல் – முதல் நாள் முதல் காபி சாப்பிட்ட டிவிஎஸ் கடைசீ காப்பியும் சாப்பிட்டுத்தான் மூடினாற் போலும். ஸ்ரீதரை (தரன் தேவதை கேமரா மேன்) வரச்சொல்லி அவனால் வர முடியாமல் போனதால் போகாமல் விட்டது. அதுதான் இறுதி நாள் என மறுநாள் இந்து படித்துதான் தெரிந்தது.

வடிவமாக கடிதத்தை வைத்துக் கொண்டாயிற்று.

கணினி இருக்கிறது தட்டியாயிற்று.

ப்ராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பு இருக்கிறது அப்லோட் பண்ணியாற்று

மேலே கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்பதை வைத்து ஒரு கதையும். இல்லை என்பதை வைத்து ஒரு கதையுமாக எதிரெதிராக இரண்டு  கதைகள்  பயிற்சிக்காக  எழுதிப்பாருங்கள்.  அவரது  நடையுடை பாவனை அனைத்திலும் கவனம் வையுங்கள்.

பெரியவர் நெகிழநேரும் தருணங்களில் பாசமலர் சிவாஜிக்குப் பதிலாக பணம்  சிவாஜியை  நினைத்துக்  கொள்ளுங்கள். பராசக்திக்குப்  பதிலாக சிவாஜிக்கு  எலியாக்  கஸானின்  – ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட் முதல் படமாக  இருந்திருந்தால். மார்லென்  ப்ராண்டோ  பராசக்தியில் நடித்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

எல்லாக் காலகட்டத்திலும் அந்தந்த சூழலுக்கேற்பவே கலைஞன் உருவாகிறான். பராசக்தியில் சிவாஜி கோட் அணிவதை கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். பிறக்கையிலேயே  கோட்டோடு  பிறந்த  கனவான்  போல தோள்குலுக்கிப்  போட்டுக்  கொள்வார், அதுவரை  கஞ்சிக்கு  அல்லாடிய அந்தக் கலைஞன்.

தசாவதானியை  என்னென்னவெல்லாமோவாகக்  கொண்டாடியாயிற்றே பயணக் கட்டுரையை கொஞ்சம் கோட் போடச்சொல்லிப் பாருங்கள் ஊரே சுற்றி நின்று குலவை இடும்படி ஆகிவிடும்.

கைதட்டலுக்கு அதிகம் செவிமடுப்பதால் கைவந்ததை அதீதப்படுத்துகிறான் கலைஞன். விரல்தட்டிக்  கிடைத்த  வெளிச்ச  பூரிப்பில், உப்பளம் – தான்றா ராமா  தாண்டினால் – தூய்மைவாத  லக்கியம். சிவாஜிக்குக்  கிடைத்த பேரோசையில் தசைநார்களை நமது முகம்வரை இழுத்துக் காட்டினால் இளக்காரம். என்ன ஒரு நியாயஸ்தர்கள் நம் லக்கிய கர்த்தாக்கள்.

உங்கள் கதையில் பல இடங்களில் வார்த்தைகள் கூட்டங்களாக உறைந்து கிடக்கின்றன.

பலசரக்குக் கடையில் இருக்கும் பொருட்களை வைத்து பஞ்ச பட்ச பரமானந்தமாய் ஒரு படைக்கே கூட பந்தி வைக்கலாம்தான்.

சமைக்காமல்  அப்படியேப்  பரிமாற  முடியுமா. வயிறு  பிடுங்கிக்கொள்ள அவனவன் வாயாலும் சபிப்பான்.

இது உங்களின் முதல் கதையாக இருந்து பிரசுரிக்காமல் பயிற்சிக் கதையாய் இருந்திருப்பின் தவறு இல்லை.

ஏழெட்டு வயதுள்ள, வெள்ளை  உடையணிந்த, சுருள்முடி குட்டிப்பையன், இருட்டில் கயிற்றில் கட்டப்பட்டு தொங்குகிற பந்தை, டொக்டொக்கென்று கிரிக்கெட்  மட்டையால்  தடுத்துத்  தட்டிக்கொண்டு  இருக்கிறான், கர்ம சிரத்தயாக  திரும்பத்திரும்ப,  ஒரே  தாளகதியில்.  அவன்  எப்போதிலிருந்தோ அதை செய்துகொண்டிருப்பதை அனுமானிக்கும்படியாக அமைந்திருக்கிறது காட்சி. நிறைய  டொக்குகளுக்குப்  பிறகு, பின்னணியில் தூக்கக் கலக்கத்துடன் ஒரு பென்குரல் மட்டும் கேட்கிறது   சோ…ஜாரே

அதிகபட்சம் ஒரு நிமிடம் இருக்கலாம் இந்தப் படம்.

நான்தான் எழுத முடியும் நீ எப்படி எழுதப் போயிற்று என்று சொல்வதாக எடுத்துக்கொண்டு ஜன்ம வைரி ஆகிவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நான் ஒரு கொசுதான் லத்தியாலேயே உருவாக்கப்பட்ட யானையின் முன் நான் ஒரு கொசுதான்.

மேற்கூரியவைகளை சரியாக விளங்கிக்கொண்டு வாசக எழுத்து சிந்தனை மற்றும் மனப்பயிற்சிகளை மேற்கொள்வது உங்களுக்கு நல்லது.

ஊசி மூஞ்சி மூடா என்று தூற்றிவிட்டுப் போனால் எனக்கு இழப்பில்லை, குறைந்த  பட்ச  நன்மை  உண்டு,  பதிவ ‘எழுத்தாளர்கள்’ யாரும் இனிமேல் எதையும் படிக்கச் சொல்ல மாட்டார்கள்.

இந்த ஒரு சமாசாரத்திற்காக மட்டுமே உங்களுக்குக் காலத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

4 thoughts on “எழுத்துக் கலை தொடர்கிறது (5)

 1. வடிவமாக கடிதத்தை வைத்துக் கொண்டாயிற்று.

  கணினி இருக்கிறது தட்டியாயிற்று.

  ப்ராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பு இருக்கிறது அப்லோட் பண்ணியாற்று

  என்னை போன்று அலுவலக இலவச இனையத்தில் மேயும் பலர் இருக்கிறோம்

  துபாய், சிங்கபூர் போன்ற நகரங்களில் இருந்து இந்தியா முன்னேற்றம் பற்றி பேச பின்னூட்டம் இட நூறு பேர் இருக்கிறார்கள்.

  எங்களைப் போன்ற வாசகர்களிடம் இருந்து நாற்பது பின்னூட்டம் கிடைக்கிறது.
  முப்பது வாக்குகள் கிடைக்கிறது.

  மூன்றே பதிவுகளில் ஒருவரை உடனடி இலக்கியவாதியாக மாற்ற/அழைக்க நாங்கள் இருக்கிறோம்.
  கவலைப் படாது இருங்கள்

 2. ராம்ஜி_யாஹூ
  1981 ஆகஸ்ட் என்று நினைக்கிறேன் என் முதல் கதை 'வலி' கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் வெளியாயிற்று.

  1982 கணையாழியில் 'இலை'

  http://madrasdada.blogspot.com/p/my-books.html

  நல்லது. என்னை இலக்கியவாதியாக மாற்ற/அழைக்க தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெற மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

 3. நீங்கள் இணைய காலத்திற்கு முந்தியே இலக்கியவாதி ஆகி விட்டீர்கள்.

  நான் சொன்னது இணையம் வந்த பிறகு எழுத்தாளர்கள் ஆகும் நண்பர்களைப் பற்றி.

  உங்கள் அறிவுரை/கருத்து என்ன- கல்லூரி மாணவர்களை இணையப் பதிவுகள் படிக்க/ எழுத ஊக்குவிக்கலாமா.

 4. ஆரம்பிச்சுட்டாருய்யா ஆரம்பிசிட்டாரு!
  கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாரு!
  உலக மேடைலக் கதா காலட்சேபம் பண்ணிகிட்டு இருந்தவரை, கண்டமானத்துக்கும் கேள்வியாக் கேட்டு, ஓடஓட வெரட்டி, வூட்ல போய் பின்னூட்டக் கதவை மூடிகிட்டு

  "பின்னூட்டம் நிறுத்தப்பட்டமைக்கு இடப்பிரச்சினையே காரணம். ஆனால் சலித்துவிட்டேனா என்றால் ஆம் என்பதே பதில்.."

  இன்னா சோக்கா டபாய்குராரு பாத்தியா

  "பெரும்பாலான நேரங்களில் நான் சொல்ல வருவதை புரிந்துகொள்ள பொறுமை இல்லாதவர்களிடமே பேசவேண்டியிருந்தது"

  தருமிய வுட பேஜாராப் பொலம்ப வுட்டுட்டியேபா

  ஒன்னிய மாதிரி ஊருக்கு பத்து பேரு இர்ந்தா, வேநா நைனா நீ ஒர்த்தனே போதும்,

  ஷேன்வானுக்கு சச்சினு வெச்ச ரிவிட்டாட்ட வெக்கிறே பாரு இந்த லக்கியக் காரனுவொளுக்கு அத்த சொல்லொனு.

  பின்ன இன்னா எதுனா ஒரு நாயம் வாநா, வடிவேலு மார்கெட்டுகு டப்பாசு வெச்சுருவானுவப் போலக்குதே.

  நம்பொ இப்பொத்தா ரீ எண்றீ.

  ஆமா இந்த அம்மணக் குண்டியா ஊத்த வாயோட ஒர்த்த திரியிரானே அவம் பேரு கூட இன்வோ யின்னு வர்மே அவ்ன இன்னா ஸாய்ஸ்லொ உட்டியா

  இத்தா நீ கேக்குற லாஷ்ட் கேய்வினு நா சொன்னா அது பாசிஸொம்.

  நா சொல்றோ கட்சீ பதில்னு சொன்னா அது ஜன்நாய்கொ.

  இன்னா கேட்ட, ஊக்கு விக்கொலாமா? பாஸ்மணெ ஊஸ்மனெ விக்கும் போதெ ஊக்கு வித்தாதாங் குத்தமா. நல்லா விய்யி.

  நம்பொ கிட்ட இல்லெ. வெள்லெ.

Leave a Reply