August 18, 2010 maamallan 10Comment
தோன்றியது.  சொல்ல  வேண்டும்  போலத்  தொன்றியது. அதான் சொல்கிறேன்.

இந்த சொற்களை ஒரு முறையேனும் சொல்லாத மனிதன் இருந்திருக்கக் கூடும். ஆனால்  அருளப்பட்டு  வாங்கிக்கொள்ளாத  மனிதன்  இருந்து இருப்பதற்கான  வாய்ப்பு  அரிதுதான். பட்டும்படாத அறிவுரை. கிடந்து பிறாண்டவில்லை என்கிற கண்ணியமான அவதானிப்பு. தவறாகப் போக நேர்கையில் “நா அப்பவே சொன்னேன் வேணாண்டானு, கேட்டாதானே!” சொல்லிக்கொள்ள முன்னெச்சரிக்கையாக தூவப்படும் கள்ள கண்னிய விதை.

இது  நம்புகிறார்போல்  இல்லையே.  கொஞ்சம்  அதீதமாக  அல்லவா தோன்றுகிறது.  இவ்வளவு  முன்னீடுகளோடா  மனிதர்கள்  வாழ்கிறார்கள்? அடப்போய்யா  அவனவன்  யோசிக்கிறதே  இல்லை. ஏதோ என்னவோ வென்று நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறான் இதில் போய் காரண காரியங்களைத் தேடிக்கொண்டு!

உண்மையில் ஏதோ என்னவோவாக வாழத்தான் அல்லது குறந்தபட்சம் அப்படித் தோற்றம் அளிக்கும்படியாகவாவது வாழத்தான் பிரியப் படுகிறோம். நான் எதையுமே திட்டமிடுவ தில்லை என்ன வருகிறதோ என்ன கிடைக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டுதான் இருந்துகொண்டு இருக்கிறேன். எத்தனை பேட்டிகளில் இதைக் கேட்டு இருப்போம். இது அடக்க பாவனையன்றி வேறென்ன? பேட்டி யாரிடம் எடுக்கப்படுகிறது. வென்றவனிடம். வென்றவன் செருக்கைக் காட்டலாமோ? இது எனது திறமையால் கடும் உழைப்பால் அடைந்த வெற்றி. எவனும் போட்ட பிச்சையல்ல, எனக்கு நானே இட்டுக்கொண்ட வேள்வியில் கண்ட டைந்த மணிமகுடம்.

இது பொது ஜனங்களிடம் வெறுப்பைத்தான் சம்பாதித்துக் கொடுக்கும். அதை அடைய பட்ட கஷ்டங்களைச் சொல் கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் நாங்கள் அதை மட்டும்தானே பட்டுக்கொண்டு இருக்கிறோம். வெற்றி தொட்டில் கட்டத் திட்டமிட்டிருக்கும் விருட்சத்தின் விதையாவது விதைக்கப்பட்டு இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது  எங்களுக்கு. பரிதாபப்படும்  அளவிற்குக்  கஷ்டப்பட்டு இருக்கிறாயா, பரவாயில்லை இன்று மேல்நிலைக்கு வந்துவிட்டாயல்லவா, நல்லது  நானும்  ஒரு  நாள்  முன்னேறிவிட  வாய்ப்பிருக்கிறது.  நமது இன்னல்கள் என்ன காலத்திற்கும் நம்மோடேவா இருக்கப் போகின்றன. நட்சத்திரங்களைப்போல் உச்சத்திற்கு வராவிடினும் நாள் பொழுது நன்றாகக் கவலையின்றிக் கழியுமளவிற்கு முன்னேறினாலே போதுமானது.

இந்தப் பெரும்பாலானோரைக் கையெடுத்துக் கும்பிடவேண்டும். இவர்தான் நிஸப்தப் பொதுஜனம். எல்லாத்  துறைகளையும்  சார்ந்த  ஏகப்பட்ட நட்சத்திரங்களுக்கு படியளப்பவரே இவர்தான், என்பதை அறிவு பூர்வ மாகவோ உணர்வு பூர்வமாகவோ இவர் உணராத பட்சத்திலும். சமூகத்தில் பல விஷயங்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் இவர் கைகளில், ஆயினும் ஒருகாலத்திலும், ஒன்றுசேர்ந்த அமைப்பாக, கும்பலில் சேரா உதிரிமனிதர்.

பொருளாதார ரீதியில் கொஞ்சம் முன்னேறியதும், ஆன்மீகத் தேடல் ஜோசியத்தைத் தாண்டி கோயில் குளங்களைத் தாண்டி அமைதியைத் தேடி அரூபத்தில் அலைபாய்வதான அவதானிப்பு பெரும் கிளர்ச்சியைக் கொடுக்கிறது. கிளர்ச்சியைத் தேடலாக பாவித்து சிந்தனையா இலக்கியமா ஆன்மீகமா என்று அல்லாடத் தொடங்குகிறார். பொருளாதார ரீதியில் நாடு வேறு முன்னேறிக் கொண்டு இருக்கிறதா, சேர்ந்து இவரும் வேறு முன்னேறிக் கொண்டு இருக்கிறாரா, உள்ளூர குற்றவுணர்ச்சி வேறு பிடித்து உலுக்கி எடுக்கிறது.

குற்றவுணர்வே குழப்பங்களின் ஊற்றுக்கண்.

அம்புட்டுக் கிட்டியாடா தம்புட்டுக்கா பட்டா என்று ஆன்மீக மற்றும் இலக்கிய மடாதிபதிகள் பெரியபெரிய வலைகளோடு தயார் நிலையில் காத்திருக்கிறர்கள்.

வெற்று லெளகீக குற்றவுணர்விற்கு யோகபோக குருஜிக்கள்.

ரசனாரீதீய லெளகீக குற்றவுணர்வுக்கு, இல்லாத உளைச்சலை இஞ்செக்ட் பண்ணி, ஏகத்துக்கும் களேபரப்படுத்தி, எந்தப்பக்கமும் யோசிக்கவிடாமல் ரெகுலர்  டோசேஜில், கட்டுக்குள்  வைத்திருக்கும், ஆன்ம இலக்கிய மடாதிபதி.

கட்டுடைத்தவன் என்ற பேரில் ஜட்டி கழற்றி கொடியாக்கி ஒற்றையாள் பேரணிக்கு கூவிக்கூவி கூட்டம் சேர்க்கும் சுயதம்பட்ட ஜோக்கர். இதில் ஐரோப்பாவேறு விருதை வாங்கிக் கொண்டால்தான் ஆச்சு என ஒற்றக் காலில் தவமிருப்பது போல் காது கிழிக்கும் கொள்கைப் பாடல்கள்

எழுத்தாளனைவிட எந்த விதத்திலும் குறைந்தவனல்ல எழுத்தன். ஏதோ ஒரு இடத்தில் தன் உணவிற்காக தான் உழைத்து அதன் மூலம் சமூகத்திற்கு பங்களித்து, மீளக் கிடைத்த சொற்ப நேரத்தை தன் சேமிப்பை ரசனையின் பேரால் இலக்கியத்திற்கு செலவிட்டு பரவசமடைபவன்.

எழுத்தாளனுக்கு மானஸீக அபிஷேகம் செய்யும் படித்த பாமரன்.

அவனுக்கே தெரியாத அவனது இடம் –  ஏந்துவதல்ல இடுவது.

இதை அவன் ஒருபோதும் உணர்ந்துவிடாமல் இருக்கத்தான் இவ்வளவு ஒய்யாரமும்  ஒப்பாரியும்.  குற்ற  உணற்விற்கு  ஆட்பட வேண்டியவன்கள் ஆட்பட வைக்கிற அவலம்.

யோகபோக குருஜி உட்பட அனைவரிடத்திலும் ஒருத்தருக்கொருத்தர் அடித்துக் கொண்டாலும் பிடித்துக் கொண்டாலும் பொதுவாகத் தென்படுவன, இந்த குணவிசேஷங்க்கள்.

கூச்சமற்ற விளம்பரக்கூப்பாடு
சுயதம்பட்டம்
குற்றவுணர்ச்சியை சுரண்டுவது

வித்தியாசம் விகிதாசாரத்தில் மட்டுமே.

இருபது  வருடங்களுக்கு  முன்பிருந்த, ‘வயிற்றிலே பல்’ வகைப்பட்ட வன்மமும் காழ்ப்புமே தேவலாம் போல் இருக்கிறது

எல்லாம் வளர்ந்து பல்கிப்பெருகியிருக்கும், இன்றைய காலகட்டத்தில் இது, வேறு எப்படியும் இருந்திருக்க வாய்ப்பில்லைதான்.

இதே நபர்கள் உண்மையான கமர்ஷியல் களமான சினிமாவிலோ அரசியலிலோ பிஞ்சுக் காலடி பதிக்கும்போதே அதன் மங்கல இசையை சுருதி பிசகாமல் இசைக்கத் தொடங்கி விடுவதைக் காணலாம். ஆம் அவ்விடத்து இலக்கணம் நமக்கு இரண்டு நாற்காலி கிடைத்தால் அடுத்தவனுக்கு நான்கு நாற்காலி ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டே யாகவேண்டும்  என்பதுதான்,  பரஸ்பர  பரிவர்த்தனைகளின் பாவனைகளுக்குப் பேர்பெற்ற களமல்லவா.

அங்கே  வெற்றி  பெற்றவனுக்கும்  நாற்காலி  போட வேண்டும், வெற்றி பெறவேண்டும் என்றாலும் நாற்காலி போடவேண்டும், வெற்றி நோக்கிய கேரெட் பயணத்தில் நாற்காலி போடமட்டுமே நாம் நட்டுவைக்கப் பட்டிருக்கிறோமோ என்கிற குழப்பகிலிவேறு பற்றிக்கொண்டுவிடும்.

பாரம்பரிய குணமாக இங்கே இருக்கிற, அடுத்தவன் உட்கார்ந் திருக்கும் முக்காலியின் ரெண்டே முக்கால் காலை உடைக்கிற, உடைப்பதை கலா ஆவேசத்துடன் கருத்தோவியம் தீட்டுகிற சாவதானத்திற் கெல்லாம் அங்கு இடமேயில்லை.

ஒஹோவென்று பாட்டெழுதிய காலத்திலும், வார்த்தைகளுக்கு சிலாகிப்பு கண்  சிமிட்டிவிட்ட  பிறகும்கூட, கார்  கதவை  ஓடிவந்து  திறந்த  வஜ்ரம் பாய்ந்த அடிசேவல்தான் இன்றைக்கு கவி இண்டர் காண்டினெண்டாக்கி விரலாட்டியாட்டி மிகை வேகப் பேச்சு பேசவைத்து அழகு பார்க்கிறது மேடைதோறும்.

சங்கோஜம் வெற்றிக்கு சத்துரு.

எல்லோருமே வெளிச்சத்தில் களங்கமற்ற கனவான்களாய் இருப்பதை விடவும், அப்படியாக காட்டிக்கொள்ள விரும்புவதே அதிகம். எழுத்தாளன் மட்டும் விதிவிலக்கென எண்ணுதல் மொளடீகம். ஐன்ஸ்டீனே ஏகப்பட்ட சந்தேகத்துடன் சமாதிக்குள் இருக்கையில், அடுத்தவா ஆராதனையில் காலட்சேபம் நடத்துபவர்களிடம் உனது வாழ்க்கையின் ஐயங்களுக்கு அர்த்தமுள்ள விடை கிடைக்குமாவென பேமெண்ட் க்யூ தரிசனம்வேறா, தலையெழுத்து?

தோன்றும்போது  எழுதுவது, தோன்றுவதற்காக  எழுதுவது, தோற்றம் அளிப்பதற்காக எழுதுவது.

எழுதும்போது தோன்றுவது, எழுதுவதற்காகத் தோன்றுவது, எழுதுவதுபோல் தோற்றமளிப்பது

என்று  ஏகப்பட்ட  சதிர்  தெரிந்தவன்  எழுத்தாளன், குறிப்பாக எட்டடிக் குச்சினை வானுயர்ந்த கோபுரமாக்கி இருக்கும் மடாதிபதிகள்.

யாரும் யாரிடமும் எதுவும் கேட்காதீர்கள்
உண்மையிலேயே

யாருக்கும் யாரிடமும் கொடுக்க எதுவுமில்லை

இதைப்போய் இத்தனை நீட்டி முழக்கி எதற்காக சொல்கிறாய் என்கிறீர்களா?

கோவணமும் களவுபோகும் முன்பாக கொஞ்சம் முழிக்கவைக்க முயற்சித்தாலென்னவெனத்

தோன்றியது. சொல்லவேண்டும் போலத்தொன்றியது. அதான் சொல்கிறேன்.

10 thoughts on “தோன்றியது

 1. யாரும் யாரிடமும் எதுவும் கேட்காதீர்கள்

  உண்மையிலேயே

  யாருக்கும் யாரிடமும் கொடுக்க எதுவுமில்லை

  நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை வார்த்தைகளாக வடித்து உள்ளமைக்கு நன்றி.

 2. தோன்றும்போது எழுதுவது, தோன்றுவதற்காக எழுதுவது, தோற்றமளிப்பதற்காக எழுதுவது.

  எழுதும்போது தோன்றுவது, எழுதுவதற்காகத் தோன்றுவது, எழுதுவதுபோல் தோற்றமளிப்பது//

  i like the way you tag the sentence… வார்த்தை விளையாட்டு – தொடர்ந்து எழுதுங்க, படிப்போம்.

 3. அருமை, நல்ல நடை. நன்றிகள்
  தோன்றியது. சொல்லவேண்டும் போலத்தொன்றியது. அதான் சொல்கிறேன்.missing words-

  கேட்பது கேட்காமல் இருப்பதும் உன் இஷ்டம்.

 4. A.Shankar Raman – நீதான் என் முதல் வாசகன் எப்போதும். இது இணையம் என்பதால் – படுத்திகினே போத்திகிலாம் – போத்திகினே படுத்திகிலாம்

 5. தெகா – விளையாடவே இல்லை. பொழிப்புரையும் நானே அளித்தால் நானிருப்பது சென்னையில்லை நான் விமல்லாதித்த மாமல்லன் இல்லை என்று ஆகிவிடும் ஆதலால் விளக்கச் சொர்பொழிவுகளை ஸ்வாமிஜீக்கே விட்டுவிடுகிறேன். க்ஷமிக்கணும். சாரே.

 6. ராம்ஜி_யஹூ – எனது பின்னூட்டக் கதவுகள் மூடப்படாதவை. ஏனெனில் நான் இன்னும் ஆர்டர் கொடுக்கவே இல்லை. உத்தேசமும் இல்லை. வடலூர் வள்ளலார் மடம் போல வரலாம் போகலாம் கூடிவிவாதித்துக் கொள்ளலாம் உங்களுக்குள்.

Leave a Reply