January 11, 2018 maamallan 0Comment
                                                              11.01.2018
                                                             
புதுச்சேரி
திருமிகு மாமல்லன் அவர்களுக்கு
வணக்கம்.

நான் பொதுவெளிக்கானவன் அல்லன்.
துரோகங்களை மட்டுமே வாழ்நாள் எல்லாம் எதிர்கொண்டவன். சாவின் எல்லைவரை சென்று திரும்பியவன்.
உயிரோடு புதைக்கப்பட்டவன்; முளைத்துவந்ததால் உயிர்த்திருக்கிறேன். உறவுகளென்றோ நண்பர்களென்றோ
சொல்லிக்கொள்ளும்படி யாருமற்றவன். ஜெயமோகன் என்ற அறவான் என் உயிர்காத்து உறங்க இடமும்
உண்ண உணவும் நான் சாகும்வரை கிடைத்திட வழிசெய்தார். எனக்கு வயது ஐம்பத்து மூன்று. எனது
அரைநூற்றாண்டு வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட மாமனிதன் அவர். தமிழ்ச் சூழலில் அந்த விஷ்ணுபுரத்தானின்
கலாமேதைமையை மட்டுமே நான் மதிப்பவன்; பிறர் எனக்குப் பொருட்டல்லர். எனவே, அவர் தாமே
முன்வந்து எனக்குச் செய்த உதவியை நான் ஏற்றுக்கொண்டேன். அவ்வண்ணமே, நீங்களே வந்துசெய்த
உதவியை மதிப்பிற்குரியதாகக் கருதி ஏற்றேன். நீங்களும் ஜெயமோகனும் என் ஐம்பதுகளின் இன்றியமையாதவர்கள்.
மாமல்லன், என் உறக்கத்தைக்
கெடுத்துவந்த, என்னைத் தொடர் ரத்த அழுத்தத்தில் இருத்திவைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாய்
கடனை, உங்கள் அனுமதியோடு அடைத்தேன். ஒரு லட்சத்தி எண்பதினாயிரத்தை ஃபிக்சட் டெபாசிட்
செய்தேன். கைவசம் ஐம்பதினாயிரம் வைத்துள்ளேன். பேலியோ உணவுமுறையில் தீவிரமாக இருக்கிறேன்.
வீட்டுக்குப் படிக்கட்டுப் பக்கக் கைப்பிடிகள் வைத்துவிட்டேன், ‘வாக்கர்’கொண்டு நடக்கிறேன்.
இந்த வேதபுரத்தானுக்குத் தொப்பை சிறுத்துவருகிறது.
பக்கவாதத்தில் விழுந்தாலும்
படுத்தபடியே பத்து நூல்களை எழுதி முடிக்கவேண்டும். அதுவரை உயிர்வாழவேண்டும். என்னை
யாராலும் அவமானப்படுத்த முடியாது. பிரமிள் சொல்வதுபோல அதிரும் தந்தியில் தூசு குந்தாது.
நான் அதிர்ந்துகொண்டே இருக்கிறேன். பெண்ணாக இருந்தால் விபச்சாரியாயிருப்பேன்; ஆணாகி
நிற்பதால் பிச்சைக் காரனானேன். இந்தியமரபில் நானொரு பிச்சாடனன். இரண்டாயிரமாண்டு தமிழ்
இலக்கிய மெய்யியல் மரபில் கடைசி பாணனாகவும் பிச்சைக்காரனாகவும் நானே இருக்கவேண்டும்.
புதுச்சேரியில் என்னைச் சுற்றி நின்ற எனது வாசகர்களைப் படைப்பாளிகளாக்கினேன்; அந்தப்
பெருமிதம் எனக்குண்டு. அவர்களுக்குச் சொந்த முகங்களை வனைந்துத் தந்தேன். 
நான் இதுநாள்வரை பார்த்தறியாத,
பேசியறியாத அன்பர்கள் உதவுகிறார்கள். அவர்களுக்கு என் செய்நன்றியை எழுதித் தீர்க்கிறேன்.
நான்காவது நாவலை எழுதிவருகிறேன்.
பி. கு:
வங்கி மேலாளர் தனது குடும்பத்தின்
திருமண நிகழ்ச்சி நிமித்தம் நீண்ட விடுப்பில் சென்றிருந்ததால் நமக்கிடையில் புரிதல்
முரண்பாடு உண்டானது. அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. அவர் விடுப்புக்குப்
பிறகு நேற்றுதான் பணிக்குத் திரும்பினார். ஃப். டி. ரசீதை இணைத்துள்ளேன்.
                                              தோழமையுடன்

                                               ரமேஷ்
பிரேதன் 

Leave a Reply