January 9, 2018 maamallan 0Comment
சில நாட்கள் முன்பாக விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகத்தை வடிவமைத்த Aadhi Ads அடவி முரளிக்குபுத்தகத்தின் பிரதியைக் கொடுக்கப் போயிருந்தேன். 
POD அச்சடிப்பில் வரும் குளறுபடிகளைப் பற்றியும் அப்படியில்லாமல் அடிப்பது எப்படி என்பது பற்றியும் விசாரித்துக்கொண்டு இருந்தேன். குறிப்பாக பைண்டிங்கில் அட்டையை ஒட்டிய பக்கங்கள் விடைத்துக்கொண்டு இருப்பது. அட்டையில் சில வண்ணங்கள் சரியாக வராதிருப்பது என்று என் சந்தேகங்களை அடுக்கிக் கொண்டே இருந்தேன். 
பொதுவாக நான் கேள்வி கேட்பதே இல்லை. அல்லது அடுத்தவர் பேசுவதைக் கேட்பதே இல்லை. நானே பேசிக்கொண்டு இருப்பேன் என்பதுதான் எல்லோரின் அபிப்ராயமும். இதுபோல, ஆதாரமற்ற அவதூறுகள் என்னைப்பற்றிப் பல உண்டு. உண்மை என்னவென்றால், நான் கேட்கும்படியாக நீங்கள் பேசினாலோ அல்லது தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் எண்ணிவிட்டாலோ எதிரிலிருப்பவர் விட்டால் போதும் ஓடிவிடலாம் என்கிற அளவுக்குக் கேள்விகேட்டு அவரைக் கொன்றேவிடுவேன். 
80களில், என் BSA SLR சைக்கிளில் டபுள்ஸ் வராத இலக்கியவாதிகள் மிகக் குறைவு. ஜெயகாந்தன் அசோகமித்திரன் பிரமிள் வண்ணநிலவன் விக்ரமாதித்யன் C மோகன் சுகுமாரன் வசந்தகுமார் சமயவேல் வித்யாஷங்கர் என்று பட்டியல் மிக நீண்டது. சுந்தர ராமசாமியையே அண்ணாந்து பார்த்து டபுள்ஸ் வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவர் மட்டும் என் BSA SLRல் உட்கார்ந்திருந்தால் பீம் பாய் பீம் பாய் போலல்லவா இருந்திருக்கும். இல்லை நடந்தே போகலாம் என்று ஹபிபுல்லா ரோடில் நடிகர் சங்கத்துக்கு அருகிலிருக்கும் ஷங்கர் ராமன் வீட்டிற்கு அபிராமபுரத்திலிருந்து நடந்தே வந்துவிட்டார். 
89 ஜனவரியில், கொஞ்சம் வசதியான ஏழைகளின் உலகமே டிவிஎஸ் 50யை பிளைமவுத்தாக எண்ணி ஒடிக்கொண்டிருக்கையில் நான் M80 வாங்கினேன். 10 பைசாவுக்குக் காத்தடித்தால் போதும் என்கிற வண்டியிலிருந்து 10 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாக வேண்டிய கழுத்து நெறிப்பில் சிகரெட்டிலிருந்து கணேஷ் பீடிக்குப் போகவேண்டியதாயிற்று. 
ஆனால் நான் M80 வாங்குவதற்கு முன்பாக, 88ஆம் ஆண்டு முழுவதும் தெருவில் தென்படும் ஒரு M50 M80 என்று எதையும் விட்டுவத்ததில்லை. நீங்களெல்லாம் லிஃப்ட் கேட்கத்தானே வண்டிகளைக் கைகாட்டி நிறுத்துவீர்கள். ஒரு M80 வருவதைத் தூரத்தில் பார்த்துவிட்டால் போதும் அவன் என்னை அவ்வளவு சுலபத்தில் கடந்து சென்றுவிட முடியாது. ஆனால் இந்த M80காரர்களிடம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர்கள் நீங்கள் அதைப் பற்றிக் கேட்கவேண்டும் என்றே தவமிருந்தவர்கள் போல கால் மணிநேரமாவது விதந்தோதிவிட்டுத்தான் ஓய்வார்கள். இப்படி நான் எல்லோரையும் மடக்கிக் கேட்டுக் கொண்டிருப்பதை வசந்தகுமார், என்ன மாமல்லா மெட்ராஸ்ல பாதிப்பேர்கிட்ட M80யைப் பத்தி நீ விசாரிச்சிட்டிருப்பே இல்லப்பா என்று அப்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான். 
அப்படி அன்று சிக்கிக் கொண்டவர் அடவி முரளி. 
என் புத்தகம் ஒருவேளை இந்தப் புத்தகக் கண்காட்சியில் விற்றுத் தீர்ந்துவிட்டால் – நமக்கில்லாத காலச்சுவடா, 2013 புத்தகக் கண்காட்சியில் சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரலையே எனக்காக விற்றுக்கொடுத்து உதவியவர்கள் ஆயிற்றே, காலச்சுவடிலேயே அது 20-25 பிரதிகள் விற்றதே, நியாயமாகப் பார்த்தால் காலச்சுவடு போட்டிருக்கவேண்டிய விமலாதித்த மாமல்லன் கதைகளை நாமே போட்டிருக்கும்போது காலச்சுவடில் மட்டுமே 50 பிரதிகளுக்குமேல் போய்விடும். போதாக்குறைக்கு நமது புனைவு என்னும் புதிர் புத்தகத்தை வேறு காலச்சுவடே போடுகிறது எனும்போது நிச்சயம் புத்தகக் கண்காட்சியின் இறுதிநாட்களில் நம் புத்தகம் இல்லாமல் போய்விட்டால் என்னாவது என்கிற நியாயமான கிலேசத்தில்தான் அவரிடம் நல்ல தரத்தில் அச்சிட POD அச்சகத்தைப் பற்றி நச்சரித்துக்கொண்டிருந்தேன். 
POD புத்தகம் ஆறே மாதங்களில் அச்சு அழிந்துபோய் (என்னுடையது என்னதான் காலத்தால் அழியாத இலக்கியம் என்றாலும்) வெள்ளைப் பேப்பராகிவிடும் என்கிறார்களே. 
அப்படியெல்லாம் இல்லை. நேர்த்தியாக POD பண்ணிக்கொடுப்போரும் உள்ளனர். இந்த புக்கு அவங்ககிட்ட அச்சடிச்சதுதான் என்று காலச்சுவடு வெளியிட்ட, செஸ் போர்டு போல கட்டங்களுடன் கரும்பழுப்பு நிறத்திலிருந்த இசையின் புத்தகத்தைக் காட்டினார். அட்டகாசமாக இருந்தது.
ஆனால் அவர்களிடம் விலை கூட, ஒரு பக்கத்துக்கு 35லிருந்து 40-45 பைசா வரை கூட ஆகிவிடும். இப்போ உங்க புத்தகத்தையே எடுத்துக்குங்களேன், இங்கப் போனா அடக்கவிலையே 175கிட்ட ஆகிடும் என்றார். 
ஐயையோ 
நான் வேணா நாளைக்குக் கேட்டு கரெக்ட் ரேட்டை சொல்லிடறேன். 
எங்க இருக்கு 
கருணாநிதி வீட்டுக்கிட்டதான் இருக்கு. நெட்லகூட இருக்கு என்று பெயரையும் கூறினார். 
இரண்டுமுறை கேட்டுக்கொண்டும் அவரது உச்சரிப்பு காரணமாகவோ என்னவோ நினைவில் தங்கவே இல்லை. வீட்டுக்கு வந்து கோம்ஸ் கோம்ஸ் என்றே அடித்து கூகுளில் தேடிக்கொண்டிருந்தேன். பருப்பு வேகவேயில்லை. 
அவரிடமே திரும்பக் கேட்டேன். ஸ்பெல்லிங்கோடு கூறினார். 
இப்போது பளிச்சென அவர்களது சைட்டே வந்துவிட்டது. அதிலிருந்த எண்ணில் அடித்துக் கேட்டேன். டேரிஃப் வேண்டும் ஓனரிடம் பேசவேண்டும், அவரது மொபைல் எண் கிடைக்குமா என்றேன். அந்தப் பெண் தயங்கினார். பிறகு அவரிடம் கேட்டுவிட்டு லைன் கொடுத்தார். 
என்னங்க பக்கத்துக்கு 40-45 பைசாலாம் சொல்றாங்களே இவ்ளோ ரேட்டா ஆகும் என்றேன். 
இல்லை சார். பக்கங்களைப் பொறுத்துதான் ரேட்டு. அவங்கள்ளாம் 100-120 பக்கத்தைத் தாண்டமாட்டாங்க அதனால கொஞ்சம் ரேட் கூட ஆகுது என்றார்.
POD என்றாலே இவ்வளவு நாட்களும் பிரதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்துதான் ரேட் என்றல்லவா முட்டாளதனமாக எண்ணிக்கொண்டு இருந்தோம் என்று தோன்றிற்று.
என் புக்கு 344 பக்கம். உங்ககிட்ட எவ்ளோ ஆகும்.
30 பைசால பண்ணித்தரலாம் என்றார். 
சார் அது பதினாலு வருஷம் எழுதினதோட மொத்த புக்கு. மொத்த மொத்தையா எனக்கு புக்கெழுதவும் வராது. மிஞ்சி மிஞ்சிப் போனா நான் 200 பக்கத்துக்குப் போகமுடியும். அதுக்கென்ன ரேட்டு. 
கொஞ்சம் கூட ஆகும். 
எவ்ளோங்க கூட. 
33 பைசாவுக்குப் பண்ணித்தரலாம். 
அவ்ளதானா. பரவாயில்லையே. மினிமம் எவ்ளோ காப்பி
52 சார். 
சப்போஸ் கிரவுன் சைஸ் புத்தகம்னாலும் இதே ரேட்தானா. 
இல்லைங்க. கிட்டத்தட்ட 50 பைசாகிட்ட ஆயிரும். 
அய்யோ அவ்ளவா. 
ஆமாம் சார். டெம்மினா நாலு பேஜா ஒட்டலாம் மெஷின் சைஸுக்கு கிரவுன்னா ரெண்டு ரெண்டாதான் ஓட்டியாகணும். இம்ப்ரெஷன் ட்புள் ஆகிடுது இல்லையா அதனால ரேட்டும் அபுளாகிடும்.
காலச்சுவடு புக் பார்த்தேன். அட்டகாசமா இருந்துது. 
ரொம்ப தேங்க்ஸ் சார். 
அதே குவாலிடில இருக்குமா 
அவங்களுதே 40 டைட்டில் கிட்ட நாங்கதான் பண்னிக்கிட்டு இருக்கோம் என்றார். 
அதுல புனைவு என்னும் புதிர் இருக்கா. 
தெரியிலீங்க பாத்துவேணா சொல்றேங்க என்றார்.
ரொம்ப சந்தோஷங்க என்று முடித்துக்கொண்டேன். 
அடுத்த போனே அடவி முரளிக்கு. மேட்டர் தெரியுமா என்று. 
அதற்கடுத்த போன் வேறு யாருக்கு தேசாந்திரி பதிப்பக அதிபருக்குதான். ஏனென்றால், நான் ஒரு POD அச்சகத்தின் பெயரைக் கூறி 26 பைசாவுக்குப் பேசிவிட்டேன் என்றபோது, அங்கப் போனீங்கன்னா புக்கு மொசமா வரும் என்று என்னை தெய்வம்போல காப்பாற்றியதே எஸ்.ராதான். அப்புறம்தான் தனக்கு அச்சடித்துத்தரும் மணிகண்டன் என்பவரின் எண்ணைக் கொடுத்தார். நான் யாரோ மணிகண்டன் என்று அடித்தால் அவர் கிழக்கில் இருந்த மணிகண்டன்தான் என்பது தெரியவந்தது. வேலை தொடங்கும் முன்பாகவே முன்வெளியீட்டுத் திட்டத்தில் 44-54 என நீங்கள் அளித்துக்கொண்டிருந்த பேராதரவில், 100 பிரதி POD என்று தொடங்கியவன், 300 காப்பி என்று ஆப்செட்டுக்கே சென்றுவிட்டேன். 
ஆனால் PODயில் இப்படியொரு இடம் கிடத்திருப்பதை, நிறைய விவதித்த எஸ். ராமகிருஷ்ணனிடம் சொல்லாவிட்டால் எப்படி என குதூகலத்துடன் கூறினேன். 
நல்ல விசயம் மாமல்லன். எனக்கு இப்ப உடனடியா நாலு புத்தகம் PODல அடிச்சாகணும் சரியான நேரத்துல சொன்னீங்க. காலச்சுவடு அடிக்கிறாங்கன்னா அதுக்கப்பறம் என்ன இருக்கு. நம்பர் குடுங்க நான் பேசறேன் என்றார்.
உங்க புக்குலாம் என்னிக்கிய்யா 300 பக்கத்துக்குக் கொறைஞ்சிது. 
ஆமா என்றார் ராமகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே. 
அப்ப உங்களுக்கு பக்கத்துக்கு 30 பைசாதான் அட்டையோட சேர்த்து என்றேன்
அட்டைக்குத் தனியா 15 ரூபா பக்கத்துக்கு 26 பைசாங்கிறதும் கிட்டத்தட்ட இந்த 30 பைசா கிட்டதான் வரும் மாமல்லன். நல்ல குவாலிடியா இருக்கும்னா குடுக்கறதுக்கென்ன என்றார். 
அந்த அச்சகத்தின் பெயரை அவசியம் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், தங்களிடம் உயிர்மை வெளியிட்ட மஞ்சாக்கலர் அட்டை புத்தகம் ஏற்கெனவே இருந்தாலும் இந்த விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகத்தை வாங்க கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் 10.01.18 என்றால் ₹240ம் 11.01.18க்குப் பிறகு என்றால் ₹280 ரூபாயும் செலுத்துங்கள். உங்கள் காதில் மட்டும் சொல்கிறேன்.
SBI 
Account Name: C. Narasimhan 
Account Number: 37268627909 
IFS Code: SBIN0014625

Leave a Reply