January 8, 2018 maamallan 0Comment
அமேஸான், இன்னும் ஹீரோ ஆகவில்லை. இப்போதுதான் தமிழ்ப் புத்தக சீனுக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. அதற்குள்ளாகவே பதிப்பாளர்கள் எல்லோரும் அச்சுப்புத்தகம் போடுவதற்கு அக்கிரிமெண்ட் போடும்போதே eBook உரிமையையும் சேர்த்தே எழுதி வாங்கிக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அநேகமாக நான் ஒருவன்தான் தரமட்டேன் என முரண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இன்றைக்கு அமேஸானில் வரும் காசு வெறும் சில்லறைதான். அதிலும் பங்குவேண்டும் என பதிப்பாளர்கள் கேட்பது அதைவிட மோசமில்லையா.

அமேஸான் eBookகில் என்ன இருக்கிறது எவ்வளவு இருக்கிறது அல்லது என்ன இல்லை என்பதைப் பற்றி எழுத்தாளர்களுக்கோ பதிப்பாளர்களுக்கோ எவ்வளவு தெரியும் என்பதைப் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. இதைப் பற்றியெல்லாம் எந்தத் தரப்பாரும் கவலைப் படுவதாகவும் தெரியவில்லை. எல்லோரும் படியளக்கிற பகவான் என்பதைப் போல நீடிய இடத்தில் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். 
அதுல ஒரு எளவும் இல்லையா. 
அதான் தெரியிதில்லே அதுல ஒன்னுமில்லேனு. அப்பறம் எதுக்கு அதுலையும் உனக்குப் பங்கு எனக்கேட்கத்தான் யாருக்கும் தைரியமில்லை.
எதுவும் தெரியாமலேயே மாபெரும் நிறுவனம் ஒன்று நன்கு விற்பனையாகும் எழுத்தாளரின் புத்தகங்களை அவரது அனுமதியின்றியே அமேஸானில் eBookகாக விற்றுக்கொண்டு இருக்கிறது. இதற்கு ராயல்டி கேட்டதற்கு அச்சுப் புத்தகத்துக்குக் கொடுக்கும் அதே ஏழரை சதவீதம்தான் என்கிறது. 
கமலையும் ரஜினியையும் கே பாலச்சந்தர்தான் உருவாக்கினார். அந்த நன்றிக் கடனுக்காக இருவருமே பெரிய விற்பனைக்குப் போன பின்பும் ரஜினி வருடத்துக்கு நான்கு படங்கள் பண்ணிக்கொண்டிருந்த காலங்களில் கேபிக்கு ஒரு படம் கொடுத்து விடுவார். அதுதான் குருவுக்கான முன்னுரிமை. சம்பளம் மற்றவர்களுக்கு என்னவோ அதுதான் என்கிற சரியான ஆன்மீக யதார்த்தக் கலவையான அணுகுமுறையில் இருந்தார் ரஜினி. காசு விஷயத்தில் கமலைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 
புதிய தொழில்நுட்ப வளர்ச்சியான, எதிர்காலத் தலைமுறையின் கிண்டில் வாசிப்பினால் உருவாகியிருக்கும் அமேஸான் eBookகில் என்ன இருக்கிறதென்று எவனுக்குத் தெரியும். தெரிகிறதோ இல்லையோ எதற்கும் இருக்கட்டும் என்று எழுத்தாளப் பயல்களிடம் வட்டிக்கடை சேட்டு போல எல்லா உரிமையையும் எழுதி வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்கிற மனப்பான்மையில் தமிழ்ப் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். ரயில் டிக்கெட் படிவத்தையே வேறு யாராவது நிரப்பிக்கொடுப்பார்களா என்கிற நிலையிலிருக்கும் தமிழின் மூத்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. 
அச்சுப் புத்தகத்தை வெளியிடும் உரிமை, குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குத் தங்களிடமே இருக்கவேண்டும் என்று பதிப்பகங்கள், எழுத்தாளர்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வதற்கான அடிப்படையே, முதல் பதிப்பிற்கான விழா விளம்பரம் லொட்டு லொசுக்கு செலவுகளெல்லாம் இல்லாமல், இரண்டாவது மூன்றாவது பதிப்பில்தான், லாபம் பார்க்க முடியும் என்கிற நியாயமான காரணத்திற்காகத்தான். இவ்வளவெல்லாம் விற்கிறதா என்கிற சாருவின் நிரந்தரப் புலம்பல் இருக்கவே இருக்கிறது. இப்போது விற்பதைப் பற்றித்தான் பேச்சு.
பதிப்பாளர்கள் அச்சுப் புத்தகத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவே தங்கள் முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளவும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ராயல்டித் தொகை அவர்களுக்குக் கிடைக்கவும் என்று இரு சாராருக்குமே எழுத்தில் சட்டபூர்வ பாதுகாப்பைத் தேடியே இந்த ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளப்படுகின்றன. தமிழில் பெரும்பாலான பதிப்பகங்களின் கணக்கு வழக்குகள் இன்றுமட்டிலும் 50-60களில் சுவரில் கோடு கிழித்துக் வைத்துக் கொள்ளும் பால்காரர் கணக்கு அளவுக்குக் கூட எழுத்தில் இல்லை என்பது வேறு விஷயம். 
ஆனால் படித்த இளைஞர்கள் நடத்தும் பதிப்பகங்கள் கூட பழைய காலத்து செட்டியார் பதிப்பகங்கள் போல இந்த அமேஸான் விஷயத்தில் எழுத்தாளர்களைக் கொத்தடிமைகளைப்போல நடத்தலாமா. அச்சுப் புத்தகம் வெளியிடும்போதே, eBook உரிமையையும் சேர்த்து எனக்கே எழுதிக்கொடு என்று ஒப்பந்தம் போட வற்புருத்துவது, அவர்கள் வெளியிடும் சமூக நீதி முதல் நாட்டு அரசியலில் அறம் பேணுவது ஈறாக ஊழல் ஒழிப்புக்கான கட்டுரைகளை எழுதவைத்து புத்தகமாக்கி லட்சக் கணக்காக விநியோகிப்பது உட்பட அவர்களே வெளியிட்ட புத்தகங்களுக்காவது அடுக்குமா. 
பதிப்பாளரின் முதல் இல்லாமல் அச்சுப் புத்தகம் சாத்தியமே இல்லை. எனவே குறிப்பிட்ட வருடங்களுக்கு அந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்கும் உரிமை தம்மிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதும் அதை சட்டரீதியானதாக்கித் தம் முதலையும் லாபத்தையும் பாதுகாத்துக் கொள்வதும் நியாயமான காரியம். 
ஆனால் eBook உரிமை என்பது, அதிலும் குறிப்பாக அமேஸானில் eBookகாக எழுத்தாளரே சொந்தமாக வெளியிடும் உரிமையும் தம் பதிப்பகத்துக்கே உரியது என்று கோருவதும் இதற்கு ஒப்புக்கொண்டால்தான் உனக்கு அச்சுப்புத்தகமே வெளிடுவேன் என்று நிர்பந்திப்பதும் எவ்வகையில் நியாயமான செயல். 
அச்சுப் புத்தகத்தை வெளியிடுவதில், ஒரு பதிப்பாளரின் செலவு என்பது கைப்பிரதியில் எழுதிக்கொடுக்கப்பட்டதை டைப்படிப்பதில் ஆரம்பிக்கிறது.  அவர் டைப்படிக்கத் தெரிந்த எழுத்தாளராக இருந்தாலும் அதை அப்படியே புத்தகமாக்கிவிட முடியாது. இது அச்சுக்கோர்ப்புக் காலமில்லை. வேர்ட் ஃபைலில் எழுத்தாளரே அடித்துக் கொடுத்ததாக இருந்தாலும் அதை மென்பொருளின் வழியே புத்தக வடிவத்துக்குக் கொண்டுவரவேண்டியதிலிருந்தே பதிப்பாளர்தான் செலவழித்தாக வேண்டும். 
ஆனால், ஏற்கெனவே வெளியான புத்தக வடிவின் pdfஐ திரும்ப வேர்ட் ஃபைலாக மாற்றுவதற்கான சிரமமோ செலவோகூட புதிய புத்தகம் வெளியிடும்போது பதிப்பாளருக்கு இல்லை. ஏனென்றால் இன்று 60 வயதுக்குக் கிழே இருக்கும் எழுத்தாளர்கள் யாருமே கையால் எழுதுவதில்லை. அனைவருமே புத்தகம் அச்சாவதற்கான ஆரம்பகட்ட வேலையான டைப்படித்தலை அவர்களே செய்துகொடுத்துவிடுகிறார்கள். ஒரு படைப்பு உருவாவதே அவர்களின் கணினியில்தான் என்றாகிவிட்டது. டைப்படிக்கத் தெரியாத எழுத்தாளர்களில் சிலர், கையில் எழுதிவிட்டு அதை வெளியில் கொடுத்துத் தம் செலவில் டைப்படிக்கவைத்து பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள். ஆக பதிப்பகம் டைப்படிக்கவேண்டிய அவசியமே பெருமளவுக்குக் குறைந்துவிட்டது கூடவே அதற்கான செலவும்.
சமீபத்தில் ஜெயமோகனுடனான கைப்பேசி உரையாடலில் அவர் மனைவி அருண்மொழி கூறியதாக இப்படிக் கூறினார். நீ எந்த பப்ளிஷர்கிட்டையும் ராயல்டி கேக்காதே. டிடிபிக்கான கூலியைக் கேளு அதுவே உனக்குக் கிடைக்கிற ராயல்டியைவிட அதிகமா இருக்கும். 
ரமேஷ் பிரேதன் கைப்பேசியில் குறிப்பிட்டதையும் இங்கே கூறியாகவேண்டும். 
ஒரு புக்கு உருவாகும்போது அதை அச்சுக்கோர்த்தவன் ப்ரூப் பார்த்தவன் மெஷின் ஒட்டினவன் பைண்ட் பண்னினவன் பண்டிலா கட்டி தலைல தூக்கிக்கிட்டுப்போனவன் பிரஸ்ஸுலேந்து கொடொனுக்கு எடுத்துக்கிட்டுப் போன ஆட்டொக்காரன்னு பதிப்பாளர் ஒவ்வொருத்தனுக்கும் கூலி குடுப்பாரு. ஆனா அந்த புத்தகம் உருவாக மூலகாரணமா இருந்தான் பாருங்க எழுத்தாளன் அவனுக்கு மட்டும் எதுவுமே கிடைக்காது. 
அச்சுப் புத்தகத்தைப் போல அமேஸானில் eBook வெளியிடுவதற்கு, ஒரு பதிப்பாளருக்கு என்ன செலவு இருக்கிறது அல்லது அவர் தமது பாக்கெட்டிலிருந்து என்ன முதல் போடவேண்டி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அமேஸானில் eBook வெளியிடுவதற்கு டைப்படித்த வேர்ட் ஃபைல் போதும். அது ஏற்கெனவே எழுத்தாளன் கூலியின்றி பதிப்பகத்துக்கு தானமாகக் கொடுத்துக்கொண்டு இருப்பதுதானே. வெறும் வேர்ட் ஃபைல் இருந்தாலே போதும் அமேஸானில் வெளியிட்டு விற்கலாம் என்பதை நான் ஏதோ வாய்ச் சவடாலாக அடித்துவிடவில்லை. அமேஸானில் ஏறியிருக்கும் என் புத்தகங்களும் எல்லோராலும் டைப்படித்துக் கொடுக்கப்பட்டு ஏற்றப்பட்டிருக்கும் விக்ரமாதித்யனின் புத்தகங்களுமே சாட்சி. ரமேஷ் பிரேதன் யர்யாரிடமோ கேட்டுத் தேடிதான் அவர் புத்தகங்களில் வேர்ட் ஃபைல்களை எனக்கு அனுப்பிவைத்தார். பிரமிளின் புத்தகங்களைக் கால சுப்ரமணியன் எற்கெனவே வேர்ட் ஃபைலாக்கி வைத்திருந்ததை எனக்கு மெய்லில் அனுப்பிவைத்தார். கவிதைத் தலைப்புகளைப் பொருளடக்கத்தில் கொண்டுவருகிற கொஞ்சம் டைமெடுக்கும் சிறிய வேலை மட்டுமே அதில் நான் செய்யவேண்டி இருந்தது. 
பொருளடக்கத் தயாரிப்பை எப்படிச் செய்வது என்பதை ஒருமுறை செய்துகாட்டியதுமே சுற்றியிருப்பவர்களிடம் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டே, கண்ணும் கருத்துமாய் தம் புத்தகத்தின் தலைப்புகள் அனைத்தையுமே செய்துமுடித்துவிட்டார் எஸ்.ராமகிருஷ்ணன். 
உடனே அது அமேஸானில் ஏறிப்போய் உட்கார்ந்தும்விட்டது. இதில் எங்கே வருகிறார் பதிப்பாளர் என்று ஒவ்வொரு பதிப்பாளரும் தங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக் கேட்டுக்கொள்ளட்டும்.
உன் அச்சுப்புத்தகத்தை என் பதிப்பகம் வெளியிடுவதாக இருந்தால், அமேஸான் eBookகிற்கான உரிமையையும் நீ கொடுத்தால்தான் ஆயிற்று என்பது கந்துவட்டிக்காரனின் மிரட்டலைவிட மோசமான மிரட்டலாக அல்லவா இருக்கிறது. சரி இது கோர்ட்டுக்குப் போனல் ஜெயிக்குமா என்று, ஒரு எட்டு ஓடிப்போய், பெருமாள்முருகனின் எழுதும் உரிமைக்கு சாதகமான தீர்ப்பளித்து சாதனை படைத்த நீதிபதியைக் கேட்டுவிட்டு வரலாம் என்று பார்த்தால் துரதிருஷ்டவசமாக அவர் இப்போது சென்னையில் இல்லை
இங்கே நான் பதிப்பாளர்கள் என்று மரியாதையுடன் குறிப்பிடுவது ஒப்பந்தம் போட்டு ஒழுங்காக ராயல்டி கொடுப்பவர்களைத்தான். மொத்தமாக ஐந்தாயிரத்துக்கு புத்தகத்தையே எழுதிவாங்கிக்கொண்டு தம் சந்ததிகள் வசதியாக வாழ எழுத்தாளனின் ரத்தத்தைக் குடிக்கும் நாசகார கும்பலையல்ல. 
இந்த நியாயஸ்தர்களே இப்படி அநீதியாக நடந்துகொண்டால் தமிழ் எழுத்தாளன் எங்கேதான் போவான்.
இதனால் என் புத்தகத்தை நாளை தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்க எவருமே முன்வராவிட்டாலும் பரவாயில்லை ட்விட்டர் பேஸ்புக் கூகுள்பிளஸ் மற்றும் அமேஸான் வழியாக நானே நேரடியாக விற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். கடந்த இரண்டு மூன்று நாட்களில் என் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி புத்தகம் கேட்டவர்களில், சென்னையில் இருக்கும் ஒரு இளைஞருக்கு, அவரது அலுவலகத்துக்கு நேரில் போய் நானே கொடுத்தேன். இன்னொருவர் அறிமுகமில்லாத பெண்மணி என்பதால் கூச்சத்தின் காரணமாக, முகவரி ராயப்பேட்டையிலேயே இருந்தபோதிலும் நேரில் போய்க் கொடுப்பதைப் பற்றி மனைவியிடம் விவாதித்து ஒத்தையா ரெட்டையா போட்டுப்பார்த்துத் தவிர்த்தேன். அவரையும் சேர்த்து, நான்கு பேர்களுக்கு இன்று நானே பேக் செய்து பெஸண்ட் நகர் போஸ்ட் ஆபீஸில் போய் பதிவுத் தபாலில் அனுப்பிவிட்டு வந்தேன். நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். அதன் முதல் படியாக அமேஸானில் விற்பனையாளராகவும் இன்று என்னை பதிவுசெய்துகொண்டிருக்கிறேன். இதன் காரணமாய் என்னால் எழுதமுடியாமல் போனாலும் போகக்கூடும், ஆனால் எழுதி சொந்தமாகப் பதிப்பித்ததை ஒருபோதும்  விற்கமுடியாமல் போய்விடாது.

Leave a Reply