January 7, 2018 maamallan 0Comment
டிசம்பர் 21ஆம் தேதி, காலச்சுவடு கண்ணன் கைப்பேசியில் அழைத்திருந்தார். எப்படி இவ்வளவு துல்லியமாகத் தேதி நினைவிருக்கிறது என்பது, இதை முழுவதும் படிப்போருக்குத் தன்னால் தெரியவரும்.
அலைபேசியில் அழைத்த கண்ணன், மாமல்லன் புக்ஃபேர்ல காலச்சுவடு ஸ்டால்ல ஒரு நாள் சாயங்காலம் வந்து புத்தகத்துல வாசகர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் குடுக்கணும் என்றார். 
நானா. ஹாஹ்ஹாஹ்ஹா எங்கிட்டையெல்லாம் யார் வந்து ஆட்டோகிராப் கேக்கப்போறாங்க.
அப்பறம் பேஸ்புக்குல இவ்வளவு ரகள பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்கக்கிட்ட கையெழுத்து வங்கணும்னு நாலு ரீடர் கூடவா இருக்கமாட்டாங்க. 
அப்படியில்லே நான் என்ன மத்த ரைட்டர்ஸ் மாதிரியா யார் வந்து எங்கிட்ட கையெழுத்து கேக்கப்போறாங்க. 
(நானென்ன காலச்சுவடு ரைட்டர் பெருமாள்முருகன் மாதிரியா, அதிரிபுதிரியா ரகளை நடந்து ஹைகோர்ட்டே எழுதச் சொல்லி கெஞ்சிக் கேட்டப்பறம் எழுத ஆரம்பிக்க. ஒரு ஆப் பாயில் ஆண்ட்டி குடுத்த புகார்ல வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷன்லேந்து ஒரு இன்ஸ்பெக்டர் கூப்ட்டாரு. அர்ஸ்ட்டுகிரெஸ்ட்டு ஜெயிலுகியிலுனு எனக்கும் சடங்கு சீமந்தம்னு எதாச்சும் நடந்திருந்தா வாஷிங்டன் போஸ்ட் இல்லேன்னாலும் இங்கிலீஷ் இந்துவாச்சும் என்னை சீந்தியிருக்கும் ஒரு இண்ட்டர்வியூ கிண்ட்டர்வியூ போட்டிருக்கும். அட்லீஸ்ட் உங்க பெருமாள்முருகன் மாதிரி இண்ட்டர்நேஷனல் பேம் ஆகாமப்போயிருந்தாலும் அட்லீஸ்ட் அடுத்த ஸ்டேட்லையாச்சும் சாரு ஜெயமோகனாட்டம் அன்னிக்கி ஒரு நாளாச்சும் என்னையும் தெரிஞ்சிருக்கும். சக்கரியா ஜலதோஷம் பிடிச்சி, ஒன்றரை லைன்ல எதாச்சும் தும்மி வெச்சிருந்தா அதை இந்த ஆயுசுபரியந்தம் சாருவாட்டம் சக்கரியாவே சொல்லிட்டாரு சக்கரியாவே சொல்லிட்டாருனு கத்திகத்தியே செத்திருக்கலாம். அந்த அளவுக்கு புகார் கொடுத்த அதுக்கும் வக்கில்லே எனக்கும் லக்கில்லே)
அப்படி இல்லே. எல்லாருக்கும் கையெழுத்து வாங்க என்ன  கியூலயா நிக்கிறாங்க. நீங்க வந்தா, உங்களுக்குனு ஒரு நாலுபேர் கூடுதலா வரக்கூடும் அவ்வளவுதான் வேற ஒன்னுமில்லை.
நான் இருக்கேன்னு தெரிஞ்சா காலச்சுவடு வரிசைக்கே வராம போயிடறதுக்கு வேணும்னா நிறையபேர் இருப்பாங்க கண்ணன்.
நீங்க வறீங்களா. 
நான் வரதுல என்ன இருக்கு. எனக்காகல்லாம் யாரும் வரமாட்டாங்கனு சொல்றேன். 
ஓகே அப்ப நீங்க வறீங்க. 14ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமைதான். ஆபீஸ்கூட லீவுதான். 
எங்க ஆபீஸ்ல வேலை எப்ப வேணா வரும். ஆனா முன்கூட்டியே சொல்லி கொஞ்சம் கேட்டுக்கலாம்.
நோட் பண்ணி வெச்சிக்குங்க. 14 ஜனவரி ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம். 
சரி. 
சுகுமாரனுக்கு போன் போட்டு கண்ணன் கூறியதைச் சொன்னேன். 
வா வா நானும் இருப்பேன். 
அடங்கொக்கமக்கா இது என்ன ரெட்டை நாயணமா. அப்ப நாம சோலோ கிடையாதா. ங்கொப்புராண தப்பித்தவறி வருகிற ஒரு வாசகனும் எனக்கா உனக்கா என்கிற பங்காளிச் சண்டையில் சிதறிச் சின்னாபின்னமாகி நீயும் வேண்டாம் உன் கையெழுத்தும் வேண்டாம் என்று ஓடிவிட்டால் என் கதி என்னாவது. போதாக்குறைக்கு. இவன் வேறு, தேவிபாரதிபோல அந்த ஒர்க்‌ஷாப் இந்த ஒர்க்‌ஷாப் என்று பக்கா காலச்சுவடு நிலைய வித்வானாக ஒரு மாதம் ஒரு ஊர் அல்லது ஒரு மாதம் ஒரு நாடு என்று டூர் அடித்து விருந்தாளி சாப்பாடு சாப்பிட்டு வருடாவருடம் நாவல் கீவல் என்று மரத்தைச்  சீவத் தொடங்கிவிட்டான். வருகிற ஒற்றை வாசகனுக்கும் கனவான் எழுத்தாளரான சுகுமாரன் எதிரில் நான் வெற்று பேஸ்புக் பொறுக்கிப் பயலாக அல்லவா தெரிவேன் என்று கவலை பிடித்துக்கொண்டது. லஜ்ஜையின்றி வெளிப்படையாகவே கேட்டுவிட்டேன்.
நீயும் இருப்பியா. 
ஆமா. நானும் இருப்பேன். கண்ணன் கிட்ட சொன்னதைச் சொன்னா நீ கன்னாபின்னான்னு எகிருவே. 
என்ன சொன்னே. 
வேணும்னா கம்மனாட்டி எழுத்தாளனும் கனவான் எழுத்தாளரும்னு விளம்பரம் குடுக்கலாம் கண்ணன்னு சொன்னேன். 
விமலாதித்த மாமல்லன் கதைகள் இரண்டாம் பதிப்பில் அவனது முன்னுரையை வெளியிடவில்லை. 1983ல் சுகுமாரனின் அறிமுகத்தை வெளியிட்டதற்குக் காரணம், புத்தக உலகில் நான் புதியவன் எனவே அறிமுகம் வேண்டும் என்பது. 2010ல் உயிர்மை வெளியிட்டபோதும் 16 வருட இடைவெளி காரணமாக, இரண்டு மூன்று வாசகத் தலைமுறைகளுக்கு நான் புதியவன் எனவே அறிமுகம் வேண்டும் என்பதால் இன்னொரு அறிமுகத்தை வெளியிட நேர்ந்தது. 2017ல் நான் விலைபோகிற பண்டமோ இல்லையோ, இணையத்துக்கு வந்த இந்த 7 வருடங்களில் களம்பல கண்டவன் என்பதால், இலக்கிய உலகில் மட்டுமின்றி என்னை எல்லோருக்கும் தெரியும். எனவே உயிர்மை பதிப்பில் இருந்த சுகுமாரனின் முன்னுரையைத் திரும்ப வெளியிடுவது அவசியமற்றதாக எனக்குத் தோன்றியது. வாசகன் என் கதைகளோடு நேரடியாக தொடர்புகொள்ளட்டும் என்றே அதைச் சேர்க்கவில்லை என்று சுகுமாரனிடம் தெரிவித்திருந்தேன். எல்லா கனவான்களையும்போல திருட்டுப் பயல் சின்ன சுணக்கத்தைக்கூடக் காட்டிக்கொள்ளவில்லை. புத்தகத்தில் வெளியிடாவிட்டாலும் எனக்கு அதை அனுப்பி வை, பிளாகில் போடவேண்டும் என்று கேட்டிருந்தேன். அதைத் திரும்பவும் நினைவுபடுத்தி, உடனே அனுப்பி வைய்யிய்யா என்று கடித்து வைத்தேன். அந்த முன்னுரைக்கான தலைப்பு, அவன் வாயிலிருந்தே கிடைத்தபின் தாமதிப்பது தவறில்லையா. அதை அறியாமல் அவனும் அன்று மாலையே அனுப்பிவைத்தான். 
மறுநாள் அது கம்மனாட்டியைப் பற்றி ஒரு கனவான் என என் பிளாகில் வெளியாயிற்று. இதை எழுதத் தொடங்கும் முன்னர் அதை ஒருதடவை பார்த்து தேதியை உறுதிசெய்துகொண்டேன். இதைத்தான் முதல் வரியில் குறிப்பிட்டேன். 
எனவே 14 ஜனவரி மாலையில் புனைவு என்னும் புதிர் புத்தகத்தைக் காலச்சுவடில் வாங்குவோருக்குக் கடைக்கு உள்ளே கையெழுத்துப் போட்டுத்தர கடமைப்பட்டிருக்கிறேன். 
கிழக்கு டிஸ்கவரி தேசாந்திரி மற்றும் இனிவரும் நாட்களில் பெரிய மனது வைத்து என் புத்தகத்தை வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்ளும் இன்னபிற கடைகளில், விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகம் வாங்குபவர்களுக்கும்
State Bank of India ‬
‪Account Name: C. Narasimhan ‬
‪Account Number: 37268627909 ‬
‪IFS Code: SBIN0014625‬
என்கிற என் வங்கிக் கணக்கில் ₹240ஐ செலுத்தி என்னிடம் உறுதிபடுத்திக் கொள்பவர்களுக்கும் கையொப்பமிட்டுத் தர நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
ஆனால், அந்தப் புத்தகத்தை தங்கள் கடையில் விற்பனைக்கு வைக்க முடியாது எனச் சொல்லி கைவிரித்துவிட்டதால்,  காலச்சுவடு கடைக்கு உள்ளேயே கையொப்பமிட்டுத் தருவது முறையில்லை எனவே எங்கு வாங்கினாலும் தயவுசெய்து, புத்தகத்துடன் காலச்சுவடு பதிப்பகத்துக்கு வந்துவிடுங்கள். காலச்சுவடு கடைக்கு எதிரிலேயே நடைவழியில் நான் உங்களுக்கு ஆட்டோகிராப் போட்டுத் தருகிறேன்.

Leave a Reply