December 1, 2017 maamallan 0Comment
மாக்கல் நந்தி வளராது 
– விக்ரமாதித்யன்
எனக்குத் தெரிந்து இந்த அழகிய சிங்கர் என்கிற சூப்பர் சிங்கர் சந்திரமெளலி இந்தக் குற்றிலக்கிய உலகில் முப்பது நாற்பது வருடங்களாக இருந்துகொண்டு இருக்கிறார். 

விசிறி சாமியார் மற்றும் பிரமிள் பற்றி எழுதியிருக்கிற இந்தப் பதிவு, அவர் கெட்ட நேரமோ இல்லை என் கஷ்டகாலமோ தெரியவில்லை, என் கண்ணில் பட்டுவிட்டது. 
எவ்வளவு சுவாரசியமான விஷயம். இதைக்கூட இவ்வளவு அசுவாரசியமாக எழுத முடியுமா. ஆனால் இதுதான் இவரது தனித்துவம். 
வாய்க்கு வாய் பிரமிள் பிரமிள் என்று பேஸ்புக்குக்காக ஜபம் பண்ணிக்கொண்டிருந்தால் மட்டும் மொழி கைகூடிவிடுமா. மொழியை சாட்டையாய் சொடுக்கிக்கொண்டிருந்தவன் பிரமிள். 
முந்தாநாள் வாசிக்க ஆரம்பித்தப் பையன்கூட இப்படி எழுதமாட்டான். அவ்வளவு மோசமான மொழி. அப்படி எழுதுபவன், குறைந்தபட்சம் பேஸ்புக்கில் என் நட்பிலாவது இருக்கமாட்டான். இவரோ பேஸ்புக்கில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் எனக்குத் தெரிந்தவர். 
எப்படிக் கொடுமைபடுத்துகிறார் பாருங்கள். 
//அதைவிட நான் போய் பார்க்க விரும்பாதது.  சாமியார்களைப் பார்ப்பது.// 
என்னையா லாங்குவேஜ் இது.
தாத்தா வயது ஆகிவிட்டாலும் அசட்டு அம்பி அசட்டு அம்பிதானே, பாவம் எதற்கெல்லாம் ஆச்சரியப்படுகிறது பாருங்கள்.
//சில சாமியார்கள் எல்லாம் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள் என்று சொன்னார்.  ரொம்ப ஆச்சரியம்.  சாமியார்கள் எல்லாம் அப்படியெல்லாம் பேசுவார்களாவென்ற ஆச்சரியம்.// 
ஏன்யா எழுதியதைத் திரும்ப ஒருமுறை படிக்கமாட்டீரா. இப்பட்டியா களபுள லொளபுள என்று எழுதுவது.
// அவர் வீட்டு முன்னால் மாலைகள் எல்லாம் அழுக்கடைந்த நிலையில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தன.// 
வீட்டு முன்னால ஏதப்பா செவுரு. வீட்டின் முன்புறச் சுவரில்னு கூடவா எழுதத்தெரியாது.
//விசிறி சாமியார் அழுக்கான உடை உடுத்தியிருந்தார்.// 
முதல்முதலாக சாமியாரைப் பாக்கும்போதே இது கண்ணில் பட்டிருக்குமா இல்லையா ஆனால் இதை நடுவில் எங்கோ எழுதிவைத்திருக்கிறார். 
விசிறி சாமியாரைப் பார்க்கும் பத்தி எப்படி ஆரம்பிக்கிறது என்று பாருங்கள். 
//விசிறி சாமியார் முன் நாங்கள் போய் நின்றோம்.  எனக்கு எல்லாம் வித்தியாசமாக இருந்தது.  இவ்வளவு எளிமையாக ஒரு சாமியார் தென்படுகிறாரே என்ற ஆச்சரியம்.// 
எளிமையா இருந்தார்னா ஆச்சா. எப்படி எளிமையா இருந்தார்னு சொல்ல வேண்டாமா. 
//விசிறி சாமியார் அழுக்கான உடை உடுத்தியிருந்தார்.// 
இதைச் சொல்லிட்டு எளிமையாக இருந்தார்னு சொன்னா ஒரு அர்த்தமிருக்கு. எழுதும்போதே எல்லாம் எல்லாருக்கும் கோர்வையாக வராது. அப்படி வராதிருப்பது தவறும் இல்லை குறையும் இல்லை. அது ஒரு சிந்தனைமுறை. ஒவ்வொருவர் சிந்தனை எண்ண ஒட்டங்கள் ஒவ்வொருமாதிரி இருக்கும். சிலருக்கு எண்ண ஓட்டம் சங்கிலித் தொடர்போல கோர்வையாக வரும். சிலருக்கு ஹைலைட்கள் மட்டும் மின்னிச் செல்லும். அவற்றுக்கு முன்னும் பின்னும் அப்ப்றம் இட்டு நிரப்பவேண்டியிருக்கும். இந்த இட்டு நிரப்புதல் வளவளப்பாகப் போய்விடவும் கூடாது. 
சுந்தர ராமசாமியிடம் சொற்றொடர்கள் தெறித்துவிழும். அவை காலத்துக்கும் நினைவை விட்டகலாத கவித்துவத்துடன் இருக்கும். ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பதைப்போல என்பதைப் போல.
அசோகமித்திரனிடம் அடிக்கோடிட அசாதாரண வார்த்தைச் சேர்க்கை ஒன்றைக்கூடக் காண்பதரிது. ஆனால் அவரது விவரிப்பை முறுவலிக்காமல் படிக்க முடியாது. அந்த முறுவல், முடிவில் வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றுவிடும். 
தி. ஜானகிராமன் ஓரிரு வார்த்தைகளில் விவரித்தே ஒட்டுமொத்த சித்திரத்தையும் மனக்கண்ணில் விரித்துவிடுவார். இத்தனைக்கும் அவரது ஜிலுஜிலு நடை காரணமாக வார்த்தைச் சிக்கணம் இல்லாதவர் போன்ற மாயத் தோற்றம் உண்டாகும். பாஷை இரும்புக்கடலையாக இருக்கவேண்டிய கட்டாயமில்லை என்பதைப்போல.
பிரமிளின் மொழி சவுக்கு. எதிர்ப்பாராத இடத்தில் ஒரு சொடுக்கு எதிரி செத்தான். 
இவர்களைப் படிப்பதால் மட்டுமே எவன் வேண்டுமாகிலும் ஏகப்பட்டதைக் கற்கலாம் -உள்ளே பொறி இருப்பவனாக இருந்தால். இந்த சீனியர் சிங்கரோ பிரமிளுடனேயே உண்டுறைந்துடுத்து வாழ்ந்தவரைப் போன்ற உட்டாலக்கடித் தோன்றத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் பேஸ்புக் போஸ்ட்டுகளில். பேஸ்புக் பெருமாள் கோவில்போல. பெருமாள் கோவிலில் தண்ட தீவட்டிகளுக்கா பஞ்சம்.
//சிகரெட் தீர்ந்துபோனபிறகு பிரமிள் சிகரெட் வேண்டுமா என்று கேட்க, ஆமாம் என்றார் சாமியார்.  பிரமிள் என்னைப் பார்க்க, நான் உடனே பணத்தை எடுத்து சாமியாரிடம் நீட்டினேன்.  ஆனால் விசிறி சாமியார் என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.// 
//நான் பிரமிளிடம் கொடுத்து அதை அங்குள்ள ஒரு பையனிடம் கொடுத்து சிகரெட் வாங்கிவரச் சொன்னார்.//  
இவ்வளவு கேனையாக -இலக்கியத்தை விட்டொழியுங்கள்- சாதாரண மனிதன் கூட இவ்வளவு கேனையனாக இருக்க முடியுமா. 
ஏன் ஓய், சாமியாரோ மாமியாரோ சிகரெட் வேணும்னு கேட்டா, சாதாரண மனுஷன் எவனும் ஒடிப்போய் சிகரெட் வாங்கிக்கிட்டு வந்து குடுப்பானா இல்லே ரூவா நோட்டை எடுத்து அவர்கிட்டயே நீட்டுவானா. அந்தாள் என்ன நீ குடுக்கிற ரூவாயை வெச்சு சுருட்டி சிகரெட்டா பிடிக்கணும்னு எதிர்பாக்கறியா. பேங்க்குல வேலை பாக்கிறவனுக்கு பேசிக் மேனர்ஸ் கூடவா தெரியாது. சிகெரெட் கேட்டா அவர்கிட்ட ரூவாயை எடுத்து நீட்டறே. ஹைய்யோ ஹைய்யோ ரெண்டு கை பத்தல அடிச்சிக்க.
செய்யிற அபத்தத்தையும் செஞ்சிட்டு இதுக்கு ஏன்யா எதோ பெரிய தத்துவத்துவம் புரியாத மாதிரி இப்படியொரு பாவ்லா. 
//இந்தச் சம்பவம் எனக்கு இன்னும் கூடப் புரியவிôல்லை.  ஏன் என்னிடம் பணம் வாங்க விரும்பவில்லை என்ற கேள்வி என்னை அன்று முழுவதும் குடைந்து கொண்டிருந்தது.// 
எழுத்துக் கலை தொடர், திரும்பப் படித்து எடிட் செய்யப் பார்க்கையில், கண்ணியமற்று கவட்டையிலேயே ஓங்கி அடிப்பதாய் இருக்கிறதே, இதைப் போய் எப்படி அச்சுப் புத்தகமாய் வெளியிடுவது. இணையத்துக்கு வந்த புதிதில் எழுதியவை இணையத்தில் அப்படியேக் கிடக்கட்டும் என்று நல்ல புத்தியில்  நானே கைவிட்டாலும் என்னை விடாதுபோல இருக்கிறது.
இனி படியுங்கள் இந்த அழகிய தமிழை முழுவதுமாக.
நான் பெரிய மனிதர்களைப் பார்ப்பதில் சங்கடப்படுவேன்.  அவர்கள் முன் எப்படி நடந்துகொள்வது என்பது எனக்குத் தெரியாது.  அதாவது சரியாக வராது. அதைவிட நான் போய் பார்க்க விரும்பாதது.  சாமியார்களைப் பார்ப்பது.
அவர்கள் முன் நிற்பது எனக்கு சங்கடத்தைத் தரும்.  எதாவது சொல்லி விடுவார்களோ என்று யோசனை ஓடும். 
ஆனால் தீவிர இலக்கியவாதியான பிரமிள் சாமியார் பின்னால் போனது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  பார்த்தால் இலக்கியத்தைப் பற்றி பேசுவார் என்றால், ஜே கிருஷ்ணமூர்த்தி, ஷீரிடி சாய்பாபா, ரமணர், யோகி ராம்சுரத் குமார் என்று பேசிக்கொண்டிருப்பார்.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பூக்கோ, தெரீதா என்றெல்லாம் பேசுவதை விட்டு, சாய்பாபா, ராம்சுரத் குமார் ஜே கிருஷ்ணமூர்த்தி என்று பேசுகிறாரே என்று தோன்றும்.
 ஒருமுறை என்னை திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்.   யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கலாம் என்றார்.  அவருடன் போனதால் சாமியார் என்னைப் பார்த்து எதுவும் சொல்லிவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.  நான் வீட்டிலேயே கூட சொல்லாமால் விசிறி சாமியாரைப் பார்க்க பிரமிளுடன் சென்றேன்.  
 போகும் வழியெல்லாம் சாமியார்களைப் பற்றி நிறையா கதைகள் சொன்னார்.  கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது.  சில சாமியார்கள் எல்லாம் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள் என்று சொன்னார்.  ரொம்ப ஆச்சரியம்.  சாமியார்கள் எல்லாம் அப்படியெல்லாம் பேசுவார்களாவென்ற ஆச்சரியம். 
 விசிறி சாமியார் முன் நாங்கள் போய் நின்றோம்.  எனக்கு எல்லாம் வித்தியாசமாக இருந்தது.  இவ்வளவு எளிமையாக ஒரு சாமியார் தென்படுகிறாரே என்ற ஆச்சரியம்.  அவர் வீட்டு முன்னால் மாலைகள் எல்லாம் அழுக்கடைந்த நிலையில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தன.  மற்றப் படைப்பாளிகள் முன் சிம்ம சொப்பனமாக இருந்த பிரமிள், சாமியார் முன்னால் பவ்யமாவ இருந்தார்.  எனக்கு அதுவும் ஆச்சரியம்.  நாங்கள் உட்கார்ந்த பிறகு, (கால சுப்பிரமணியனும் வந்திருந்தார்) சாமியார் பிரமிள் முதுகில் இரண்டு மூன்று முறை தட்டினார்.  பின் தெய்வத்தின் குரல் புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.  ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து.  அங்கு இருந்த சில மணி நேரங்கள் வித்தியாசமாக இருந்தன.  விசிறி சாமியார் அழுக்கான உடை உடுத்தியிருந்தார்.  ஆனால் அவர் முகத்தில் தென்பட்ட தேஜஸ் ஆச்சரியமாக இருந்தது.  விரல்களைச் சிமிட்டி ஜபம் செய்து கொண்டிருந்தார். அதைவிட ஆச்சரியம்.  சாமியார் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தது.  சிகரெட் தீர்ந்துபோனபிறகு பிரமிள் சிகரெட் வேண்டுமா என்று கேட்க, ஆமாம் என்றார் சாமியார்.  பிரமிள் என்னைப் பார்க்க, நான் உடனே பணத்தை எடுத்து சாமியாரிடம் நீட்டினேன்.  ஆனால் விசிறி சாமியார் என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.  நான் பிரமிளிடம் கொடுத்து அதை அங்குள்ள ஒரு பையனிடம் கொடுத்து சிகரெட் வாங்கிவரச் சொன்னார்.
இந்தச் சம்பவம் எனக்கு இன்னும் கூடப் புரியவிôல்லை.  ஏன் என்னிடம் பணம் வாங்க விரும்பவில்லை என்ற கேள்வி என்னை அன்று முழுவதும் குடைந்து கொண்டிருந்தது.  என்  யோஜனைகளை சாமியார் மாற்றி விட்டார் என்று தோன்றியது. அதன் பின் நான் திரும்பவும் அங்கு போகவில்லை.  ஆனால் பிரமிள் இரண்டு மூன்று தடவைகள் போயிருப்பார். 
 பல வருடங்கள் கழித்து  நான் ஒரு முறை குடும்பத்தோடு திருவண்ணாமலை சென்றபோது விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை. நான் பிரமிளுடன்  பார்த்தபோது எளிய வீட்டில் இருந்தார்.  அதன் பின் எல்லாமே பெரிய மாற்றமாக மாறி விட்டது.   விசிறி சாமியார் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவதுபோல் ஒருமுறை கனவு கண்டேன்.
 ஏன் இதெல்லாம் எழுதுகிறேன் என்றால், விசிறி சாமியாரின் பிறந்தநாள் இன்று.  ஒருமுறை .இதே பிறந்த தினம்போது  பெரிய விழா எடுத்து சிலர் கொண்டாட முயற்சித்தார்கள்.  ஆனால் அவர் அந்த விழாவிற்குப் போகவில்லை.  அந்த அளவிற்கு விளம்பரப் படுத்திக்கொள்ளாத எளிதில் புரிந்துகொள்ள முடியாத மகான் அவர்.  என்னோட பிறந்த நாளும் இன்று.

Leave a Reply