March 18, 2018 maamallan 0Comment
ஜெயமோகன் ஊரிலில்லை. பூட்டிய கதவின் முன் பலமாக சவுண்டு விட்டுக்கொண்டிருக்கிறார் காலச்சுவடு கண்ணன். 
 
எனக்கு ஜெயமோகன் ஒன்றும் ஜிகிரி தோஸ்த்தில்லை என்பது ஊரறிந்த விஷயம் -புனைவு என்னும் புதிர் eBook உரிமைப் பிரச்சனைக்கு முன்புவரை கண்ணனுடன் எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, அவர் எனக்கு ஜிகிரி தோஸ்த்தாக இருந்தவரில்லை எனினும், அவரது அப்பா சுந்தர ராமசாமி அளவுக்கு இல்லையென்றாலும் கண்ணன் எனக்கு நண்பரராக இருந்தவர்தான் என்பதும் யாவரும் அறிந்ததே.
காலச்சுவடு மூலமாக இலக்கியத்தைக் காக்க தமிழில் அவதரித்த கடவுள் கண்ணன் என்கிற பிம்பம் கவனமாக உருவாக்கப்பட்டது. எல்லோருக்கும் ஒரு பிம்பம் இருக்கிறது பொறுக்கி என்று எனக்கில்லையா அதைப்போல. 
 
பிறர் என்னைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது அல்ல, ஏமாறாமல் இருப்பதும், ஏமாற்றுகிறவர்களை இனம்காட்டுவதும்தான் என் வேலை 
– ஜே. ஜே: சில குறிப்புகள் சுந்தர ராமசாமி க்ரியா நவம்பர் 1981 பக்கம்: 92 வரி: 16 

கண்ணனுக்கும் ஜெயமோகனுக்கும் இருக்கும் பஞ்சாயத்து சுந்தர ராமசாமி காலத்திலேயே தொடங்கியது. நான் இலக்கிய வெளியின் விளிம்புக்கும் அப்பால் வெகுதொலைவில் இருந்த காலம் அது. எனவே அதைப் பற்றித் துல்லியமாக எனக்குத் தெரியாது என்பதால் அதில் நுழைய விரும்பவில்லை. மேலும் இது ஜெயமோகனுக்கான வக்காலத்தும் அன்று. அவருக்காக வக்காலத்து வாங்கவேண்டிய நிலையில் அவரும் இல்லை. அவசியத்தில் நானும் இல்லை.சாரு ஜெமோ எஸ்.ரா பற்றி நான் எழுதி இணையத்தில் இருக்கும் இலக்கிய விமர்சனம் எதையும் நான் நிராகரிக்கவுமில்லை. விமர்சனம் வேறு நட்பு வேறு என்பதில் எனக்கு எவ்விதக் குழப்பமும் இல்லை. ஆனால் கண்ணன் விவகாரம் இது இல்லை. கண்ணன் எழுத்தாளரில்லை என்பதால் அவரிடம் விமர்சனத்தோடு மட்டும் நின்றுவிடமுடியாது. செயலிலும் அவரை அம்பலப்படுத்திக் காட்டியாகவேண்டி இருக்கிறது. 

 

என் கேள்வியெல்லாம், அப்பழுக்கற்ற நேர்மையாளரான கண்ணன், கூகை மொழிபெயர்ப்பு விவகாரம் தொடர்பாக, தமது பேஸ்புக் போஸ்ட்டில் ஆதாரங்களாய் காட்டும், தமது மற்றும் சோ. தர்மனின் கடிதங்களில் சமீபத்தியதைத் தவிர, மற்ற இரண்டிலும் ஏன் தேதியை மறைத்து வெளியிட்டிருக்கிறார் என்பதுதான் முற்ற முதலாவது.அப்படித்தேதி தெரிந்தால், வெகு முன்பாகவே தர்மன், கூகைக்கான மொழிபெயர்ப்பு வேலைக்காக தன்னிச்சையாக உழைக்கத் தொடங்கிவிட்டார் என்பதும் அதில் அப்போதிருந்தே கண்ணனின் பங்கு எதுவுமில்லை என்பதும் தேதி பூர்வமாய் தெளிவாகிவிடும் என்பதால்தான் தர்மனின் கடிதத்தில் தேதியை மறைத்து வெளியிட்டாரா.

எல்லாவற்றையுமே தர்மன் வெளிப்படையாகக் கண்ணனிடம் தெரிவித்துவிட்டே செய்கிறார். தோப்பில் முகம்மது மீறான் மூலம் தெரியவந்த சிபி என்கிற மொழிபெயர்ப்பாளர், கண்ணனுக்கும் ஏற்கெனவே நன்கு தெரிந்தவர். அவரும் கண்ணனிடம் பேசியிருக்கிறார், கூகையை மொழிபெயர்க்க இருப்பதைப் பற்றி அவரே கண்ணனிடம் தெரிவித்து இருக்கிறார். மொழிபெயர்க்க கண்ணனும் சம்மதித்து இருக்கிறார். சிபி தர்மனிடம், மலையாளத்தில் மொழிபெயர்க்க அனுமதிக் கடிதம் கேட்டிருக்கிறார். தர்மன் ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்திருக்கிறார்.

இதை நன்றாகக் கவனிக்க வேண்டும். சிந்தா பதிப்பகத்திடம் கண்ணனுக்குத் தெரியாமல் தர்மன் வெள்ளைத்தாளில் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. அது, மொழிபெயர்க்க சிபிக்குக் கொடுக்கப்பட்ட வெறும் அனுமதிக் கடிதம் மட்டுமே. புத்தகம் வெளியாகப் போகிற விஷயம்கூட தர்மனுக்குத் தெரியாது. முதலில் அது தெரியவருவதே கண்ணனுக்குதான். உடனே அவர் ஓடிப்போய், அந்த நாவலின் மொழிபெயர்ப்பு உரிமை தன்னிடமே இருக்கிறது என்று சிந்தா பதிப்பகத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார். மொழிபெயர்ப்புக்காக ஆளைத் தேடிப் பிடித்த உழைப்பு தர்மனுடையது, உலை பொங்கி வருகையில் பாதிப் பங்கு கண்ணனுக்கு. புதிய கீதை.

 

இரண்டாவது கேள்வி: மொழிபெயர்ப்புக்கு ஒன்றுமே செய்யாமல் ஓடு மீன் ஓட இருந்துவிட்டு, புத்தகம் வெளியாகிறது என்கிற உறுமீன் தெரிய வந்ததும்  ஓடிப்போய் ஒப்பந்தம் போட்ட கண்ணன் அல்லவா காசை வசூல் பண்ணவேண்டியவர். சிந்தா ஒரு கம்யூனிஸ்ட் பதிப்பகம். தோழர்களிடம் துட்டை வசூல் செய்வது அப்படியொன்றும் சுலபமில்லை. எனவே உரிமையைத் திருப்பிக் கொடுக்கிறேன் என்பதற்குப் பெயர் பெருந்தன்மையா. உண்மையான பெருந்தன்மை உரிமையைத் திருப்பிக் கொடுக்கிற கையோடு அந்த உரிமையால் கிடைத்த அட்வான்ஸ் பணமும் வேண்டாம் என்று திருப்பிக் கொடுப்பதில் அல்லவா இருக்கிறது.

மூன்றாவது கேள்வி: பிரச்சனை கூகையைப் பற்றிதானே, ஏன் தூர்வையையும் சேர்த்து கோலா உருண்டையாகப் பிடித்து முன்வைக்கிறார் கண்ணன். எதை மறைக்க இதைச் செய்கிறார்.

நான்காவது கேள்வி: ஜெயமோகன் கிடக்கட்டும். சோ. தர்மனின் குறை என்ன. குமுறல் என்ன. மலையாள மொழிபெயர்ப்புக்குக் காலச்சுவடு கண்ணன் இதுவரை ராயல்டி தரவில்லை என்பதுதானே. சோ. தர்மர் அவர்களே, இரண்டு புத்தகங்களும் 2014ல் வெளியாகின . இதோ  வருடவாரியாக ஆக்ஸ்போர்ட்காரன் குடுத்தது இவ்வளவு, மலையாளப் பதிப்பகம் கொடுத்தது இவ்வளவு என்று, கணக்கைக் கொடுத்துப் பணத்தை செட்டில் செய்ய வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு எல்லாவற்றையும் ஏன் ஒன்றாக்கி, அயல் மொழிகள் மூலம் வந்தது 26,000 அதில் தர்மனுக்குச் சேரவேண்டியது 13,000 என்று, நமக்கும் சேர்த்து ஏன் விஸ்வரூபப் படம் காட்டுகிறார் கண்ணன். ஆங்கிலப் பதிப்பகம் சென்னை/டெல்லியில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ். மலையாள பதிப்பகம், திருவனந்தபுரத்தில் இருக்கும் சிந்தா பப்ளிகேஷன்ஸ் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. ஏன் இரண்டு நிறுவனங்கள் கொடுத்ததையும் மொத்தமாக முன்வைக்கிறார். யாரைக் குழப்ப.

ஐந்தாவது கேள்வி: அட்வான்ஸுக்கு மேல் எதுவுமே வரவில்லை என்பதே – அதாவது ஆங்கிலத்தில் 7,500ல் பாதியான 3750ம் மலையாள அட்வான்ஸ் 7500ல் பாதியான 3750ம் தவிர கண்ணன் தமக்கு எதையுமே தரவில்லை என்பதே சோ. தர்மன் எல்லோரிடமும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இப்போது கண்ணனே சொல்கிறார் இரண்டுக்கும் சேர்த்துத் தாம் இதுவரை தர்மனுக்கு அனுப்பியிருப்பது 7,660 என்று. ஆக இருவர் வாக்கும் இங்கே ஒத்துப் போகிறது. போக, மலையாளத்தானுடன் தம்மால் மல்லுக்கட்ட முடியவில்லை என்று சொல்லி மலையாள உரிமையை ஆசிரியருக்கே திருப்பித்தர சித்தமாயிருக்கும் கண்ணன், தம் பங்காக எடுத்துக்கொண்ட அட்வான்ஸையும் அல்லவா திருப்பித் தரவேண்டும். வந்த வரை பாதியை  வழித்து நான் சாப்பிட்டுவிட்டேன். இனி வராது என்பது நிச்சயமாகத் தெரிகிறது எனவே நீ, முடிந்தால் முழுசாக சாப்பிட்டுக்கொள் என்பது எதில் சேர்த்தி. சுந்தர ராமசாமி பையன் போய் இதைச் செய்யலாமா என்றல்லவா ஊர் தூற்றும். காலச்சுவடின் பேக்கிரவுண்டு பேஸ்மெண்ட்டு எல்லாமே சுந்தர ராமசாமிதானே.

ஆறாவது கேள்வி: அயல் மொழியிலிருந்து வந்த மொத்த ராயல்டி பணம் 26,000 என்கிறார் கண்ணன். அதற்கான கணக்காக கண்ணன் சொல்வது என்ன. அட்ன்வான்ஸ் பணமாக இருவருக்கும் சேர்த்துக் கிடைத்தது ஆக்போர்டிலிருந்து 7500 + சிந்தாவிலிருந்து 7500 ஆக மொத்தம் 15,000.  இதில் சோ. தர்மனுக்கு கடந்த மூன்று நான்கு வருடங்களில் வந்திருப்பது 7500 மட்டுமே என்பதுதான் சோ. தர்மன் தரப்பு. இது உண்மையெனில், 26,000 என்று கண்ணன் ஜெயமோகனை முன்னிருத்தி பேஸ்புக்கில் கொடுக்கிற கணக்கில் இருவரும் ஒப்புக்கொள்ளும் 15,000 போக தொக்கி நிற்கும் 11,000 எங்கிருந்து வந்தது, எப்போது வந்தது, யார் கொடுத்தது என்று சோ. தர்மன் கேட்டால் கண்ணனின் பதில் என்ன என்பது, சார்பெடுக்காது சிந்திக்கும் நேர்மைத் திறனுள்ள யாருக்கும் எழவேண்டிய கேள்வி. இது தமிழில் அபூர்வம் என்பது கண்ணன் போன்ற திறமைசாலியான வியாபாரிக்கு நன்றாகத் தெரியும் அதனால்தான், ஜெயமோகனைத் திட்டி கைதட்டல் வாங்கி மழுப்பிவிட்டு ஓடுகிறார். நிஜமாகவே நேர்மையானவன் என்ன செய்வான். தனக்கு வந்தது எவ்வளவு, தான் இதுவரை சோ. தர்மனுக்குக் கொடுத்தது எவ்வளவு என்பதைப் பதிப்பகம் வாரியாக வருடம் வாரியாக எளிதாகக் கொடுத்துவிட்டுப் போவானா இல்லையா. ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ்ஸிலிருந்தும் சிந்தா பதிப்பகத்திலிருந்தும் தனக்கு முன்பணம் மட்டுமே வந்திருப்பதையும் அவற்றை ஏற்கெனவே அனுப்பிவைத்துவைட்டதையும் கண்ணனே 08.08.2016ல் குறிப்பிடுகிறார். இந்தப் பதினோராயிரத்தை இதுவரை எந்தக் கடிதத்திலும் குறிப்பிடாதது ஏன். ஒருவேளை ஜெயமோகனின் ரயிலடிப் பதிவு வராமல் போயிருந்தால், எங்குமே குறிப்பிடப்படாத இந்த 11,000மும் வெளிவராமலே போயிருக்குமோ என்கிற கேள்வி தர்மனுக்கு எழுவது அதர்மமா.

இதைத்தான் தர்மனும் ஜெயமோகனிடமும் எஸ். ராமகிருஷ்ணனிடமும் இன்னும் பல எழுத்தாளர்களிடமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறார். மூன்று வருடங்களாக அட்வான்ஸைத் தாண்டி இன்னும் பணம் வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த கண்ணன், 08.08.2016ல் கூட வரவில்லை என்று கூறிய கண்ணன்,  ஜெயமோகன் சீண்டி விட்டதும் சீறிக்கொண்டு எக்ஸ்ட்ரா 11,000 வந்திருக்கிறது, அதில் பாதியை அனுப்பி வைக்கிறேன் என்று வாலண்டரியாக முன்வருகிறார். இது, இப்போது எங்கிருந்து வந்தது, இத்தனை நாள் எங்கே இருந்தது என்றுதான் கேட்கிறார் தர்மன். இந்தப் பதினோராயிரத்தில் பத்து பைசா கூட ஆங்கில மொழிபெயர்ப்புக்கானது இல்லை என்றால் இது மலையாளத்திலிருந்து கிடைத்தது என்றுதானே பொருள். எனில் இதை ஏன் தன்னிடம் சொல்லாமல் உரிமையை தரத் தயாராக இருப்பதாக, 18.07.2017ல்கூடக் கூறிக்கொண்டிருந்தார் கண்ணன் என்று நீங்களே கேட்பீர்களா மாட்டீர்களா.

அட்வான்ஸைத் தவிர நயா பைசாவைக்கூட கடந்த மூன்று ஆண்டுகளாய் தரவில்லை என்பதற்கு ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ் எனக்கு அனுப்பிய மெய்லே ஆதாரம்.

மினி கிருஷ்ணன் என்கிற, ஆக்ஸ்போர்ட் யூனிவர்ஸிடி பிரஸ்ஸின் அதி முக்கிய நபரிடமே, சோ. தர்மன் போனில் தொடர்புகொண்டும் நடக்காத காரியம் கிடைக்காத தகவல், இந்த மெய்ல் வடிவில் எனக்கு எப்படி வந்தது என்பதை விளக்கிக்கொண்டு இருப்பது, என் இயல்புக்கு மாறான அடக்கமற்ற செயலாக இருக்கும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.

ஓலா விவகாரத்தின்போது, ஓலா ஓட்டுனரின் முதலாளி ஷெரீஃப், ஓட்டுனரின் தாய், தம்பி முதலியோருடன் இந்து நாளிதழின் ஆசிரியரை சந்திக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததும், இதை சும்மா விடுவதில்லை என்கிற வைராக்கியத்துடன், ஷெரீஃபை அழைத்துக்கொண்டு, தாம்பரம் களப்போராளி ரூபத்தில் இந்து ரெஸிடெண்ட் எடிட்டரை அவர் கேபினில் சந்தித்து, அரை மணி நேரம் அவருடன் வாதிட்டேன். அவரோ யார் அந்த விமலாதித்த மாமல்லன் என்று தெரிந்துகொள்வதிலேயே குறியாக இருந்தார். பேஸ்புக் மூலம் தெரிய வந்தவர். ஆண்ட்டி ஒரு கொலைசெய்தாள் என்கிற கட்டுரையை எழுதி ஓலா விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தியவர்  என்பதற்கு மேல் எனக்குத் தெரியாது எனச் சொல்லவும்,  அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, மத்திய வருவாய் துறையில் சீனியர் இண்டெலிஜென்ஸ் ஆபீஸராக இருப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்று சுரேஷ் குமார் அவர்கள் என்னிடம் கூறவும், இது நீங்கள் சொல்லிதான் எனக்கே தெரியும் எனக்கூறி, ஓலா டிரைவர் கைதானதே உங்கள் நிருபர்கள்    நிருபரின் பொறுப்பின்மையாலதான் எனவே மன்னிப்பை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்துவதில் நான் முனைப்பாயிருந்தேன். நீங்கள் சொல்வதை ஏற்கிறேன், அந்த டிரைவரின் கைதுக்கு ஒரு விதத்தில் நாங்களும் காரணம், அதற்கு மன்னிப்பு வெளியிடுவது மட்டுமே தீர்வில்லை. தவறுக்கு வருந்துகிறோம் என்று ஒரு வரி வெளியிடுவது எங்களுக்குப் பெரிய விஷயமே இல்லை. டிரைவர் பெயிலில் வந்ததும் முதல் காரியமாய் இங்கு அழைத்து வாருங்கள், அவர் தரப்பைக் கூறட்டும். அதை அப்படியே வெளியிடுகிறோம் என்று கூறியபின்பே இந்த் அலுவலகத்தைவிட்டு வெளியேறினேன். ஓலா ஓட்டுனர் பெயிலில் வெளிவந்ததும் மறுநாள் அது பெரிய செய்தியாய் வெளியானது. அதை ஒப்பிட்டால் இந்த ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரஸ்ஸில் மெய்ல் பெற்றதெல்லாம் ஜுஜூபி. இதில் பெரிய காமெடி என்னவென்றால், ஓலா ஓட்டுனரின் பேட்டி வெளியான சுட்டியை பேஸ்புக்கில் வெளியிட்டு, இப்போதுதான் ஓலா டிரைவர் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார், மாமல்லன் சொல்வதைப் போல சொல்லியிருந்தால் சங்குதான் என்று என்னைப் பார்த்து ஓலா லாயர் கைகொட்டி சிரித்ததுதான். அன்றைக்கு அந்தக் காரியம் முக்கியம், அதைவிட முக்கியம் அவனுக்குக் கார் வாங்கிக்கொடுப்பது. எனவேதான், அந்தச் செய்தி வெளிவர மூலகாரணமே நான்தான் என்பதை எவரிடமும் மூச்சுவிடாமல் இருந்துவிட்டு இப்போது சொல்கிறேன். வேண்டுமென்றால் இருபது நாள் தாடியுடன் இருக்கிற என் போட்டோ எதற்காவது  ஓரம் கிழிந்த பிளாட்பார எக்போர்ட் சட்டையை போட்டோஷாப்பில் போட்டு, அதை இந்து ரெஸிடெண்ட் எடிட்டர் சுரேஷ்குமாரிடம் காட்டிக் கேட்டுக்கொள்ளுங்கள் இந்த ஆள் வந்து உங்களைப் பார்த்தானா என்று.

கிழக்கு பத்ரி எப்போதோ ஒருமுறை கூறினார். இவரென்ன சரியான சுப்பிரமணிய சுவாமியா இருப்பார் போலயிருக்கே என்று. எமெர்ஜென்ஸி காலத்து சுப்பிரமணிய சுவாமியாக இருப்பதில் எனக்கு என்றுமே மகிழ்ச்சிதான்.

ஆறாவது கேள்வி: ஜெயமோகனுக்கு பதில்சொல்வதான பாவனையில் சோ. தர்மனையும் சேர்த்து தர்ம அடி அடித்திருக்கிற கண்ணன், காலச்சுவடு அறக்கட்டளை நிதி உதவி செய்த மேட்டரில் ஏன் முழு உண்மையையும் சொல்லாமல் மறைக்கிறார் எனக் கேட்கிறார் சோ. தர்மன்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், சோ. தர்மன் ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞர், படிப்புச் செலவுக்கு, 2011 வாக்கில் உதவி கேட்டு காலச்சுவடு கண்ணனுக்கு நேரடியாகக் கடிதம் எழுதியிருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு கண்ணன் சோ. தர்மனைத் தொடர்புகொண்டு, இப்படி ஒருவர் உங்கள் ஊரிலிருந்து உதவி கேட்டு இருக்கிறார். அவர்கள் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்கள்தானா என்று பார்த்து விசாரித்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நன்றாகக் கவனியுங்கள் கண்ணன் பேஸ்புக்கில் அவிழ்த்துவிட்டதைப் போல உறவுக்கார இளைஞருக்கு உதவிகேட்டு சோ. தர்மன் கண்ணனை அணுகவில்லை. கண்ணன்தான் சோ. தர்மனிடம் அந்த இளைஞர் யார் என்னவென்று விசாரிக்கச் சொல்லுகிறார் என்பதே தருமனின் தரப்பு.

கண்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சோ. தர்மன் போய் பார்த்துவிட்டு, அந்த இளைஞரின்  குடும்பம் கஷ்டப்படுகிறவர்கள்தான் என்று, கண்ணனிடம் தொலைபேசியில் உறுதி செய்திருக்கிறார். அதன் பிறகு சோ. தர்மனை அந்தப் பையனை அழைத்துவரச் சொல்லி, 20,000 ரூபாயை தட்டில் வைத்து ஆசீர்வதித்துக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் கண்ணனின் அம்மா. இதை ஏன், ஏதோ தமக்காக செய்யப்பட்ட உதவிபோல கண்ணன் திரிக்கிறார் பேஸ்புக்கில் என்று கேட்கிறார் சோ. தர்மன்.

சோ. தர்மன், தன் பையனுக்கு செய்த உதவிகூட, தான் கேட்டதில்லை, தம் பையன் தானாகவே, தனக்குத் தெரியாமல் கேட்டது. ஆனால் கொடுக்கப்பட்டபோது அதைத் தாம் ஏற்றுக்கொண்டதால் அதைக் குறித்துத் தமக்கு ஏதும் புகாரில்லை என்கிறார்.

ஏழாவது கேள்வி: மலையாள மொழிபெயர்ப்பில் காலச்சுவடு சரியாக ராயல்டி தரவில்லை என்பதுதானே அய்யா, ஜெயமோகன் ரயிலடி போஸ்ட்டில் எழுப்பிய பிரச்சனை. அதற்கு ஏன் இதுவரை கொடுத்திருக்கும் ராயல்டி 65,000 என்று  படம் காட்ட வேண்டும். 2005 முதல் 2018 வரையிலான பதின்மூன்று வருடத்துக்கும் சேர்த்து கூகை  தூர்வை ஆகியவற்றின் பற்பல பெரும் குறும் சிறும் நறும் பதிப்புகள் அனைத்துக்கும் சேர்த்து கொடுத்திருக்கும் ராயல்டி அல்லவா இது. ஊர்க் கண்ணை மறைக்கக் கண்ணா நீ ஆடும் ஒய்யார நாட்டியமா இது என்று நான் கேட்கவில்லை தர்மம் கேட்கிறது.

 

ஏழரையாவது கேள்வியாக நீங்கள் என்னைப் பார்த்துக் கேட்கிறீர்கள். ஏன் தர்மனுக்கு வாய் இல்லையா கண்ணனின் கூற்றை அவரே மறுக்க வேண்டியதுதானே என்று.

நியாயமான கேள்விதான். ஏன் கண்ணனுக்கு மூளையில்லையா ஒப்பந்தத்தை அவரே போட வேண்டியதுதானே ஏன் லாயர் எழுதிக்கொடுத்ததை வைத்து எழுத்தாளர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொள்கிறார் என்று திருப்பிக் கேட்கிறார் தர்மன்.

விளக்கம் ஒன்று: இந்த ரயிலடி பதிவை ஜெயமோகன் எழுத நேர்ந்ததே காலச்சுவடு கண்ணன் என்னிடம் அநீதியாக சட்டம் பேசியதன் விளைவுதான் என்பதை மறந்துவிட வேண்டாம். தமது 25ஆவது கல்யான வைபவத்தில் வன்மத்துடன் தம்மீது புழுதிவாரி இறைக்க சோ.தர்மனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றுதான் தொடங்குகிறார் கண்ணன்.

கண்ணனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையிலிருப்பது, சுந்தர ராமசாமி காலத்து அஸ்வத்தாமன் – அர்ஜ்ஜுணன் வாய்க்கா வரப்புப் பஞ்சாயத்து. அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. ஏனெனில் நானே ஒரு காலத்து அர்ஜ்ஜுணன் சுந்தர ராமசாமிக்கு -இறக்கும்வரை அப்படியேதான் இருப்பேன் என்பது வேறு விஷயம். ஏகலைவனாக நான் சுந்தர ராமசாமியை 1982 டிசம்பரில் முதன்முதலாக சந்திக்கும்போது, கண்ணன் அஸ்வத்தாமன். சிசு, பாலகன். இப்போது நிறுவன அதிபர். சிசுபாலன்.

வேலையைத் துறந்து, காவி உடுத்திக் கிளம்பிய முதல் பயணம் அக்டோபர் 82ல். மதுரையில் சுரேஷ்குமார இந்திரஜித் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் புறப்பட்டு, நிலக்கோட்டையில் வண்ணதாசனைப் பார்த்து, அவரால் திருப்பி அனுப்பப்பட்டு மெட்ராஸுக்குத் திரும்பி வந்தேன்.  நான் கொடுத்த ரெஸிக்னேஷன் லெட்டர் ரெக்கார்டிலேயே வராமல் போய் வெறும் EL எண்ட்ரியாக எஞ்சிப்போனது. இப்படி என்னை விடமாட்டேன் என்று விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டிருக்கும் என் அரசு வேலையை ஆப் பாயில் ஆண்ட்டிகள் அடித்து காலிபண்ணிவிட தொடர்ந்து முயலலாம் இன்னும் இரண்டு வருடம் மூன்று மாதங்கள் எஞ்சியுள்ளன.

 

அடுத்துக் கிளம்பியது, ஒரு மாத இடைவெளியில் ஈரோட்டிலிருந்து டிசம்பர் 1982ல். இம்முறை நாகர்கோயிலில் சுந்தர ராமசாமியைப் பார்த்து கவியுடைப் பயணம் நிரந்தரமாய் நிறைவடைந்தது. அவர் திரும்பிச் செல்லும்படிச் சொல்லவில்லை. அவருடன் அந்த வீட்டில் இருந்த அந்த மூன்று நாட்களில் வீட்டுக்குத் திரும்புகிற மனநிலை எனக்குள் உருவாகிற்று.

 

என்னிடம்போய் காலச்சுவடுக்கு பிராண்ட் வால்யூ இருக்கிறது 20 வருட ஹிஸ்டரி இருக்கிறது என்று வகுப்பெடுக்கத் தொடங்கிய அஸ்வத்தாமனை எண்ணி அர்ஜ்ஜுணன் சிரிக்கவுமில்லை அழவுமில்லை. கடுப்பானான். தனக்கு பிராண்ட் வேல்யூ இல்லையா 30-35 வருடங்களுக்கும் மேலான சரித்திரம் இல்லையா என்று திருப்பிக் கேட்டான். பேட்டைப் பெருமாளை எடிட்பண்ணி வெறும் கண்ட்டெண்ட்டாக இருந்ததை உழைத்து நாவலாக்கியதாகச் சொல்கிறாயே. அசோகமித்திரனிடம் உன் எடிட்டர்களுக்கு என்ன வேலை அஸ்வத்தாமா என்றான்.

எல்லா உரிமையும் தனக்கே என்று, ஒப்பந்தம் என்கிற பெயரில் இருக்கிற கொத்தடிமை பத்திரத்தில், எழுதப்பட்டிருந்த  eBook உரிமையை கொடுக்க முடியாது என்று எதிர்ப்பைத் தெரிவித்தான் அர்ஜ்ஜுணன். புத்தகம் வெளியாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி குமுறியபடி கையெழுத்திட்டுவிட்டு, பேஸ்புக்கில் புகையத் தொடங்கியதில் தொடங்கிய போர் இது.

2010ல் உயிர்மை வெளியிட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள் தொகுப்பே இலக்கியத்துக்கான பதிப்பகம் என்கிற பிம்பம் தாங்கி நிற்கும் காலச்சுவடல்லவா வெளியிட்டிருக்க வேண்டும். 2013 புத்தகக் கண்காட்சியில் 15-20 சின்மயி புத்தகங்கள் விற்ற காலச்சுவடில், 2018ல் விமலாதித்த மாமல்லன் கதைகள் தொகுதியை விற்பனைக்கு வைக்க, தங்கள் புத்தகத்தையும் வைக்கச் சொல்லி 'பிறர்' கேட்பார்கள் எனச்சொல்லி இடமில்லை. கையெழுத்துப் போட உட்கார வைக்கையில் நன்றாக இருக்காதே என்று 10 விமலாதித்த மாமல்லன் கதைகள் பிரதிகளை வைக்க அனுமதி. அதற்கும் பேஸ்புக்கில் போஸ்ட் போடக்கூடாது என்று நிபந்தனை. ஆப் பாயில்களா இலக்கியமா எது பெரிது.

புத்தகக் கண்காட்சியில்  300 பிரதிகளும் விற்று முடிந்தபின், அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை நானே வாங்கி விற்றுக் கொடுத்தபின்பும், ஒப்பந்தம் ரத்தாகாது என காலச்சுவடு அதிபராக கண்ணன் அளித்த பதிலைப் பார்த்து ஜெயமோகன் போட்ட பதிவுதான் ரயிலடி என்கிற சோ. தர்மன் ராயல்டி விவகாரம். இது ஜெயமோகனால் திட்டமிடப்பட்டதல்ல. என்னை முகாந்திரமாகவைத்து காலச்சுவடு கண்ணனே வைத்துக்கொண்ட செய்வினை என்பதே உண்மை. அதை சிக்கெனப் பிடித்துக்கொண்டார் ஜெயமோகன். வாய்ப்பு கிடைத்தால் யாருக்குதான் வாலிபால் ஆட ஆசையில்லை எவ்வளவு வயது ஆனாலும்.

விளக்கம் இரண்டு: ஜெயமோகனின் பதிவைப் பார்த்ததும், அட கண்ணனை நாமும் வாலிபால் ஆடிப் பார்த்தால் என்ன என்று எனக்கெழுந்த ஆசையின் விளைவாகவே சோ. தர்மன் விவகாரத்தில் நான் குதித்தேன். எல்லாம் இருக்கிற பதிப்பக துரையை எதிர்த்து, ஏதுமற்றவன் எது கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு போரிட முயல்வதுதானே யுத்த தர்மம். கோவில்பட்டி மாரீசிடம் பேசி, சோ. தர்மனின் கைபேசி எண் வாங்கி, நானாக சோ. தர்மனைத் தொடர்புகொண்டேன். அவர் தரப்பை மொத்தமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

காலச்சுவடு கண்ணன் சாதாரண ஆளில்லை ஆள் பலம் பண பலம் எல்லாம் இருக்கிற இண்ட்டர்நேஷனல் மாஃபியா பாஸ். அவரை எதிர்த்து நிற்பது லேசுப்பட்ட காரியமில்லை. ஆனால் இப்படியாப்பட்டவர்களை எதிர்ப்பதே, இலக்கியம் அலுவலகம் பொதுவெளி என்று எல்லா காலத்திலும் என்னை உந்திக்கொண்டிருக்கும் விசை. சதா சாகஸம் தேடி அலையும் எனக்கு, வாழ்வதற்கான அர்த்தம்.  இந்த சாகஸ விழைவுதான், 22 வயது இளைஞனான என்னிடம் சுந்தர ராமசாமியை ஈர்த்தது. இதைப் பலமுறை என்னிடமே வாய்விட்டுச் சொல்லியிருக்கிறார் அவர். தர்மனிடம் கதை கேட்டதும் அவரிடம் நான் கேட்டுக்கொண்ட முதல் காரியம் எல்லா ஆவனங்களையும் மெய்லில் அனுப்பச் சொன்னதுதான்.

முதல் ஆவனம்: கூகைக்கான 2005 தமிழ் ஒப்பந்தம்.

 
இரண்டாவது ஆவணம்: கூகைக்கான 2011 ஆங்கில ஒப்பந்தம். 

 
மூன்றாவது ஆவணம்: கூகை மலையாள பதிப்புக்கான 2014 ஒப்பந்தம் 
தோற்றங்கள் அல்ல, தோற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையே இலக்கியத்திற்கு ஆதாரமாகும். இதில் ஒரு நாளும் மாற்றம் இல்லை. 

 

– ஜே. ஜே: சில குறிப்புகள் சுந்தர ராமசாமி க்ரியா நவம்பர் 1981 பக்கம்: 93 வரி: 23சோ. தர்மனுக்கு தமிழில் புத்தகம் போட்டபோது, 2005ல் இருந்த ஒப்பந்தம் எப்படி இருக்கிறது. ஆங்கிலத்தில் புத்தகம் வெளியிடுவதற்கான முயற்சிகளில் 2011ல் ஈடுபடும்போதே முச்சுவிட முடியாதபடி எப்படி எழுத்தாளன் கழுத்தைச் சுருக்குக் கயிறாய் இருக்கிவிடுகிறது புதிய ஆங்கில ஒப்பந்தம் என்பதை நீங்களே பாருங்கள். இப்படி ஒப்புக்கொண்டால்தான் நீங்கள் ஆங்கிலத்துக்கும் அயல் மொழிகளுக்கும் செல்ல முடியும். ஆங்கிலத்துக்குக் காலச்சுவடு உங்களைக் கூட்டிக்கொண்டு போவதாலேயே நீங்கள் பெருமாள்முருகன் ஆகிவிடுவீர்கள் என்பதற்கு கண்ணன் உத்தரவாதம் கொடுப்பாரா. அறிவிலிகளான RSSகாரர்களும் அடிமுட்டாள் ஜாதி வெறியர்களும் கொளுத்திவிட்டால், அது கொழுந்துவிட்டு எரிந்தால் எவனும் பெருமாள்முருகன் ஆவான். இலக்கியவாதி ஆவானா. அமேரிக்காக்காரன் ஒப்பந்தம் போட்டு விற்றால் பெருமாள்முருகன் கோடீசுவரர் ஆவார். ஆகிவிட்டுப் போகட்டும் அவர் எழுத்தில் இலக்கியத்தரம் கூடிவிடுமா. ஆர் எஸ் எஸ்காரன் கொளுத்தியதில்  கண்ணன் குளிர் காய்ந்து பாதி ராயல்டியை அபகரித்துக்கொள்வார். அதற்காகத்தான், பட்டால் பாக்கியம் என்று தீர்க்கதரிசனத்துடன் இந்த கொத்தடிமை ஆங்கில ஒப்பந்தம். இந்த ஒட்டுண்ணித்தனத்துக்குக் காலச்சுவடு அகராதியில் சொல்லியிருக்கும் வார்த்தை உழைப்பு.

ஆங்கில மொழிபெயர்ப்புக்காவது, ஆ இரா வேங்கடாசலபதி ஒரு அத்தியாயத்தை மொழிபெயர்த்து, தலித் பேக்கேஜிங் செய்து தள்ளிவிட்ட உழைப்பு இருக்கிறது எனலாம். ஆனால் மலையாள மொழிபெயர்ப்பின் முழு உழைப்பும் சோ. தர்மனுடையது மட்டுமே. எந்த யத்தனமும் செய்யாத, மலையாள மொழிபெயர்ப்புக்கு என்று சிறு துரும்பைக் கூட நகர்த்தாத காலச்சுவடு கண்ணனுக்கே, மேலே இருக்கும் ஒப்பந்தப்படி ராயல்டியில் சரிபாதி. எழுத்தாளனுக்கு ரயிலடி. அதுவும் கண்ணனாகப் பார்த்துப் போட்டால்தான் உண்டு.

அல்லும்பகலும் தம்மிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட தமிழ் எழுத்தாளர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பாடுபட்டு பிறமொழிகளுக்குக் கொண்டு செல்வதாக, ஜெயமோகனை முன்னிருத்தி கண்ணன் செய்யும் அலப்பறை எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்பது ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ் எனக்கு அனுப்பியுள்ள மெய்லிலேயே இளித்துவிடவில்லையா. 2014ல் வெளியான கூகை ஆங்கிலப் பதிப்பு நான்கு வருடங்களில் 350 பிரதிகளே விற்றிருக்கின்றன. இது ஆங்கிலத்துக்குப் போய் என்ன சாதித்தது. பெரிய அளவில் விற்க, எந்த வகையான விளம்பர முன்னெடுப்பு காலச்சுவடால் செய்யப்பட்டது. சரிபாதி கட்டிங்காக ஒப்பந்தம் போட்டுப் பிடுங்கித் திங்கும் காசு ஒட்டுமா.

சோ. தர்மன் காலச்சுவடுக்கு ஒரு தலித் மெடல். ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ்ஸுக்குஒரு தலித் பட்டயம். உலகளவில் காட்டிக்கொள்ள தலித் போர்ட்ஃபோலியோ. நிதியுதவி பெற தலித் விசிட்டிங் கார்ட். சோ. தர்மன் விலகிவிட்டாரா. பிடி அடுத்த தலித்தை. வந்தானா பேட்டைப் பெருமாள் கண்டண்ட்டோடு, பிடித்துப்போடு. இருக்கவே இருக்கிறார்கள் நம் எடுபிடி எடிட்டர்கள். ஒன்றுமில்லா பேஸ்புக் குபையை ஜாக்கி வைத்து முதலில் உள்ளூர் இலக்கியமாக்கு. அப்புறம் ஒரு அத்தியாயத்தை மொழிபெயர்க்க இருக்கவே இருக்கிறார் ஆராய்ச்சி பார்ட்னர் ஆ. இரா. வேங்கடாசலபதி, ஏடுகொண்டலவாடா என்றால் ஒரு சேப்டரை மொழிபெயர்த்து ஜெர்மானிய புத்தகக் கண்காட்சிக்குப் போகும்போது காட்டலாகில் சேர்த்துவிட்டால் எவனாவது ஒரு வெளிநாட்டு மொக்கை அம்புடாமலா போவான். பிடித்துத் தலையில் கட்டு. தமிழிலக்கியம் கடல்தாண்டிப் போகும் காசு நம் கல்லாவுக்கு தன்னால் வரும் பாதியை பெருமாள் கணக்கில் சேர்த்தால் போச்சு. இலக்கியம் கோவிந்தா கோ…யிந்தா.

இலக்கியத்துக்கு சம்மந்தமே இல்லாத வருகிறவன் போகிறவனெல்லாம் காலச்சுவடை நேர்மையான பதிப்பகம் என்றும் கண்ணன் 24 காரட் நேர்மையானவர் என்றும் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்களே அண்ணனின் நேர்மை எப்படியாப்பட்டது என்று, 18.07.2017ல் தர்மனுக்கு கண்ணன் எழுதிய இந்தக் கடிதமே சொல்லிவிடும்.

 
உன்னோடு சங்காத்தமே இனி வேண்டாம் என்று வெளியேறியது சோ. தர்மன். ஆனால், மாட்சிமை தங்கிய பிரபு, தாம் அவரை வெளியேற்றுவதைப் போலச்சொல்கிறார் பாருங்கள்.

மலையாள ஒப்பந்தத்தை அனுப்பி வைப்பதாகச் சொல்லும் இக்கடிதத்தின் தேதி 18.07.2017.

இதை முழுமையாக வெளியிடாமல் வெட்டி பேஸ்புக்கில் வெளியிட்டது இது.

 
இந்த 18.07.2017 கடிதத்துக்கு, என்னிடமிருந்து மலையாளப் பதிப்பு உரிமையைப் பிடுங்கிக்கொண்டு அவனுடன் ஒப்பந்தத்தையும் போட்டுக்கொண்டு அட்வாண்ஸ்லில் பாதியையும் வாங்கிக்கொண்டு இனி வராது என்று தெரிந்ததும் என்னை வசூலித்துக் கொள்ளச் சொல்கிறாயா என்று கடுப்பாக சோ. தர்மன் எழுதிய கடிதம்தான் இது. 
 
 
//மலையாள பதிப்பாளர் விஷயத்தை இனி நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள், ஒப்பந்தந்தை உங்களுக்கே அனுப்பிவிடுகிறேன் என்று எழுதினேன். தர்மன், நீங்களே கவனியுங்கள் உங்களால்தான் முடியும் என்று பதில் அனுப்பியுள்ளார். இணைப்பை பாருங்கள். தூரத்திலிருந்து கவனித்த அவருக்கே அது மன உளைச்சல்தரும் பணி என்பது தெரிந்திருக்கிறது ! காலச்சுவடு எவ்வளவு சுரண்டுகிறது பாருங்கள்!//

என்று தமது 18.07.2017 கடிதத்துக்கு 21.07.217ல் தருமன் நக்கலாகக் கூறியிருப்பதை எதோ சோ. தர்மன் தனக்கு நற்சான்றிதழ் வழங்கியதைபோல பேஸ்புக்கில், ஜெயமோகனிடம் சொல்வதைப்போல எழுதிக்கொள்ள கண்ணனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்.

கண்ணன் மட்டுமா பதிப்பாளர், உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்று நீங்களாகக் கஷ்டப்பட்டு, சோ. தர்மன் மலையாளத்தில் மொழிபெயர்க்க ஆளைத் தேடியதைப் போல, ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பாளரைப் பிடித்து மொழிபெயர்த்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கும் காலச்சுவடு என்கிற ஆக்டோபஸ்   உங்களை வெளியில் செல்லவிடாமல் பார்த்துக்கொள்ளும். எப்படி என்கிறீர்களா.

இன்று தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்களில் பேர் பெற்றவர் N. கல்யாண்ராமன்.  வசந்தா சூர்யா என்று விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களே இருக்கிறார்கள். இவர்களை விட்டால் இளைஞர்களில் இருக்கும் ஒருசிலரும் கண்ணனின் கண்ணசைவுக்கு ஏற்றபடியே நடப்பவர்கள். இவர்கள் யாரும் காலச்சுவடு ஒப்பந்தம் போடாத புத்தகத்தை மொழிபெயர்க்க மாட்டார்கள். பெருமாள்முருகன் போன்ற மொக்கைகளை உலக இலக்கியம் என்று மொழிபெயர்ப்பார்கள். 
 
இந்தக் கல்யாண்ராமன் நன்றாக இலக்கியம் அறிந்தவர். 70களில், இன்றைய வினவு/மகஇக வீராச்சாமி ரங்கராஜனாக இருந்து நடத்திய ப்ரக்ஞை பத்திரிகையில், ஓலா ஆண்ட்டியின் டூப்ளிகேட் மொக்கைப் பிரக்ஞை அல்ல ஒரிஜினல் ப்ரக்ஞையில், சிவசங்கரா என்கிற புனைபெயரில் எழுதியவர். அசோகமித்திரனின் நிறைய புத்தகங்களை, அவருடன் சேர்ந்தும் தனியாகவும் மொழிபெயர்த்தவர். ஆனால் இன்று, படைப்பு சுமாராக இருந்தாலும் மொழிபெயர்ப்பு சூப்பர் என்கிற பெயரை அடைவதற்காக, பெயருக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு, பெருமாள்முருகன் முதலான மொக்கைகளையே மொழிபெயர்த்துக்கொண்டு இருப்பவர். இவர் நம்மை மொழிபெயர்க்காவிட்டால்கூடப் பரவாயில்லை, இந்திய ஆங்கிலப் பதிப்பகங்கள், நீங்களே முன்னெடுத்த மொழிபெயர்ப்பைக் கூட, இவர்போல காலச்சுவடின் கஸ்டடியில் இருப்பவர்களிடமே அனுப்பி அபிப்ராயம் கேட்கும். அது காலச்சுவடிடம் ஒப்பந்தம் போடப்படாத புத்தகம் அல்லவா மொழிபெயர்ப்பு சுமார் என்று சொல்லிவிடுவார்கள். அவ்வளவுதான் இந்தியாவிலேயே நீங்கள் செலாவணியாகவில்லை என்றால் உங்களுக்கு வெளிநாட்டு விசா எப்படிக் கிடைக்கும். 

எனக்குத் தெரிந்து காலச்சுவடு கண்ணனுடைய கஸ்டடியிலிருந்து தமிழ் இலக்கியத்தை விடுவித்து சுதந்திரமாய் சுவாசிக்க வைக்க சூனியம் வைப்பதைத்தவிர வேறு வழி இல்லை.

அதைத்தான் இப்போது வைத்திருக்கிறேன். இதைத் தீவிரமாக வேலைசெய்ய வைப்பது உங்கள் பொறுப்பு.

இன்றுமுதல் காலச்சுவடு வெளியிடும் புத்தகங்களைப் புறக்கணிப்போம்.

காலச்சுவடு என்கிற ஆக்டோபசஸைக் கட்டுப்படுத்த முடியாது ஒழிப்பது ஒன்றே வழி. அடுத்த பேல்ன்ஸ் ஷீட்டில், புத்தகம் விற்ற வகையில் வருமானம் இரண்டு கோடி என்று எப்படிக் காட்டுகிறார்கள் என்பதைப் பார்த்துவிடுவோம்.