October 15, 2017 maamallan 0Comment
நான் இதுவரை எழுதியுள்ளவை அனைத்தும் maamallan.com இல் எவரும் வாசிக்க வசதியாக இலவசமாக உள்ளன. இவைபோக, https://ta.pratilipi.com/search?q=விமலாதித்த+மாமல்லன் https://m.dailyhunt.in போன்ற தளங்களிலும் நான் இதுவரை எழுதியுள்ள அத்தனை கதைகளும் என் காலத்துக்குப் பிறகும் https://archive.org/search.php?query=விமலாதித்த%20மாமல்லன் தளத்தில் இலவசமாக வாசிக்க முழுமையாக கிடைக்கின்றன.

இன்றைய இளைய தலைமுறையின் தேர்வு அச்சுப் பிரதியைவிட இணைய வடிவமே என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. இவர்களுக்கு முந்தைய தலைமுறைக்கும் அதற்கு முந்தைய தலைமுறைக்கும் இன்னமும் அச்சுப் பிரதியில் படிப்பதே அதிலும் குறிப்பாக தீவிர இலக்கியத்தை அச்சில் படிப்பதும் தம்முடைய பிரதியாக தங்களிடம் வைத்துக் கொள்வதிலும் இன்னமும் வியக்கத்தக்க ஆர்வம் இருக்கிறது. புதிதாக இலக்கியத்துக்கு வரும் வாசகர்களிடமும் இந்த ஆர்வம் இருந்துகொண்டு இருக்கிறது.
பத்திரிகைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்திருந்தலும் நமக்கு பிரியப்பட்ட ஆசிரியர்களின் படைப்புகள் தொகுப்பாக வருகையில் அதை வாங்கிவிடுவது என்பது எனக்கெல்லாம் அந்தக் காலத்தில் நேர்த்திக் கடன் போல இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் கல்லூரிக்காலத்தில், வாங்கிப் படிக்கக் காசில்லாத காரணத்தால் எழுதிய ஆசிரியர்களிடமே வாங்கிப் படித்திருந்த, குறிப்பாக அசோகமித்திரனிடமே வாங்கிப் படித்த குற்ற உணர்ச்சியையும் கூறலாம். 
இலக்கியத்தில் 80களின் இலக்கிய உலகின் சூப்பர் ஸ்டார் கடையாக க்ரியா மட்டுமே இருந்தது. இலக்கியத்துக்கென்று இருந்த ஒரே ஸ்டார் கடையும் அதுதான். அதில் அது சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தது. 
இன்று மிகுந்த தாராள மனதுடன் இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய உலகில் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களாக சொந்தப் பல்லக்கில் வலம் வருபவர்களுக்கே ஒரு வருடத்துக்கு ஆயிரம் புத்தகம் விற்பது பெரிய சாதனையாக இருக்கிறது. பெருமாள்முருகன் போன்றற அதிர்ஷ்டசாலி இதில் விதிவிலக்கு. எழுத்து அப்படியொன்றும் சூப்பர்  என்று சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் இன்றைக்கு இலக்கிய வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து வயிறு எரியும் இடத்தில் இருக்கிறார் பெருமாள்முருகன் என்பது மறுக்க முடியாத உண்மை. தன் எழுத்தை காசு கொடுத்து மொழிபெயர்ப்பதற்காக உண்டி குலுக்கும் எழுத்தாளர் இருக்கும்போது, பெருமாள்முருகன் நாவலின் பிற மொழி பதிப்புரிமை பல  லட்சங்களுக்குப் போயிருக்கிறது. இந்துமத அடிப்படைவாத முட்டள்களால் முற்போக்கு வியாபாரம் அமோகமாக நடக்கிறது. ஓட்டு வியாபாரத்தில் முற்போக்குகளுக்கு டெப்பாசிட் கிடைப்பதே அரிதாகிவிட்டது என்றபோதிலும்.
இலக்கியம் தரம் எல்லாம் எள்ளுருண்டை பெறாது என்பது தெரிந்த கதைதான் எந்தக் காலத்திலும். இருந்தாலும் இணையத்தில் ஏற்கெனவே படித்திருப்பினும் புத்தகமாக வாங்கி வைத்துக்கொள்ள விழையும் தீவிர இணைய வாசகர்களின் எண்ணிக்கையும் இனையத்துக்கு வெளியில் இருக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் இன்றைக்குக் கணிசமான அளவில் பெருகியுள்ளது. 
இணையம் என்று மொத்தமாகச் சொல்வதைவிட ட்விட்டர் பேஸ்புக் கூகுள்+ போன்றவற்றில் இருக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், இவற்றில் இருக்கும் தீவிர இலக்கிய வாசகர்களின் எண்ணிக்கை மணிக்கொடி காலத்தில் இருந்ததைவிடக் குறைவு என்றுதான் கூற வேண்டும், இரண்டு காலகட்டத்தின் மக்கள் தொகையை ஒப்பிட்டு நோக்குகிறபட்சத்தில். 
மூட்டை படி உழக்கு என்று படிப்படியாக நான் இறங்கி வருவதற்கான முதன்மை காரணம் எனக்கு இருக்கும் தீவிர இலக்கிய வாசகர் எண்ணிக்கை ஆகக் குறைவு என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்கொண்டு முன் செல்லத்தான்.
பொதுவாகவே வருடாவருடம் புதிய இலக்கிய வாசகர்கள் இலக்கியத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள் என்கிற மூட நம்பிக்கையில்தான் புத்தகக் கண்காட்சி இவ்வளவு பிருமாண்டமாக நடத்தப்படுகிறதோ என்கிற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு. இயல்பாகவே இலக்கியத்தைப் பொறுத்தவரை நானொன்றும் பெரிய நம்பிக்கைவாதியெல்லாம் இல்லை. 
என் எழுத்தும் விற்கும் என்பதில் என்னைவிடவும் அவநம்பிக்கைவாதிகளாக இருக்கிறார்கள் எனக்குக் கிடைக்கிற பதிப்பாளர்கள். ஆனாலும் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக விமலாதித்த மாமல்லன் கதைகளைத் தமக்குக் கொடுத்தால் பதிப்பிக்க சித்தமாக இருப்பதாய் கேட்டுக்கொண்டு இருந்தார். இன்னொரு பெரிய பதிப்பகம் பதிப்பிக்கக்கூடும் என்கிற சிறிய சமிஞ்ஞை இருந்ததால் அவரிடம் பிடிகொடுக்காமல் இருந்துகொண்டு இருந்தேன். 
சில நாட்கள் முன்பாக, வேறு பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தின் மறு பதிப்புக்கான சாத்தியம் இல்லை என்பது தெளிவாகிவிடவே விருப்பப்பட்டவரிடம் தொடர்புகொண்டேன். கண்டிப்பாகப் போடலாம் என்றார். ஆனால் சில நாட்கள் கழித்து ஒரு வேளை இவருக்கு நம் பழைய பஞ்சாயத்தெல்லாம் நினைவில் இல்லையோ என்கிற சந்தேகத்தில், இந்தக் கதைகள் அனைத்துமே இணையத்தில் இருக்கின்றன. இதை உங்களுக்குத் தெளிவாகத் தெரிவித்துவிட வேண்டியது எனக்குத் தெரிந்த அறம். இது தெரிந்தும் நீங்கள் மறு பதிப்புக் கொண்டு வருவீர்களா. ஏனென்றால் முதல் போடப் போகிறவர் நீங்கள் அல்லவா என்றேன். அப்படியா இவை அனைத்தும் https://archive.orgல் இருக்கின்றனவா என்று கணினியில் தட்டிப்பார்த்துவிட்டு, ஒன்றும் பிரச்சனையில்லை, நாங்கள் அடுத்து டிஜிட்டல் தளம் தொடங்க இருக்கிறோம் உங்கள் புத்தகத்தை இபுக்காக வெளியிட்டுவிடலாம் என்றார். ஏற்கெனவே நான் பாட்டிலில் வைத்திருக்கிறேன் இதை நீர் வந்து என்ன கிளாசில் ஊற்றிக் கொடுப்பது காசு கொடுத்தால் சல்ஸா கிளாசே கிடைக்கும் நானே வாங்கி ஊற்றிக் கொள்கிறேன் என்று எண்ணிக்கொண்டு பரவாயில்லை என்று அவரிடம் சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். 
ஆக வேறு வழியின்றி, க்ரியா காலத்தைப் போலவே இப்போதும் என் புத்தகத்தை நானே வெளியிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு இருப்பதன் காரணமாக, உயிர்மை வெளியிட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள் (1980-1994 வரையிலான 30 கதைகளை) புத்தகத்தை, மறுபதிப்பாக வெளியிட முடிவெடுத்து இருக்கிறேன். 
குறைந்த அளவில் அச்சிட இருப்பதால் ஆஃப்செட் அச்சகத்தை நாட வேண்டிய அவசியமோ பெரிய முதலீடோக்கூடத் தேவையில்லை. இந்தப் புத்தகம் சுற்றில் இல்லை, புத்தகம் இருந்துகொண்டு இருக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்படுகிறது. எனவே புத்தகக் கண்காட்சிவரை காத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. 
அச்சில் படிக்கவும் அச்சுப் பிரதியை வாங்கி வைத்துக்கொள்ள விழைவோரும் எவ்வளவு பேர் இருக்கக்கூடும் என்பது குத்துமதிப்பாகவேனும் எனக்குத் தெரிந்தால் உதவியாக இருக்கும். 
விமலாதித்த மாமல்லன் கதைகள் (1980-1994  30 கதைகள்) புத்தகத்தை வாங்க விழைவோர் வாட்ஸப்பிலும் பேஸ்புக் மெசஞ்சரிலும் தொடர்புகொள்ளவும். புத்தகம் தயாரானதும் விலை விபரம் தெரிவிக்கப்படும். நன்றி.

Leave a Reply