December 29, 2011 maamallan 0Comment
திங்கட்கிழமை காலை வழக்கம்போல கிண்டியில்போய் வண்டிபிடிக்க, இரு சக்கர வாகனத்தில் மத்திய கைலாஷ் அருகில் வந்தபோது, அன்றாடம் பார்க்கும் சென்னையா என்று வியக்கும்படி வெண்ணையாக வண்டிகள் சென்று கொண்டிருந்தன. அற்ப சந்தோஷம் ஐஐடி வரைதான் நீடித்தது.
கோட்டூர்புரம் சாலையில் போ எனக் காக்கிச் சட்டைகள் வழி மறித்து மடை திருப்பிக்கொண்டிருந்தன.
சார் கிண்டி போகணும், இப்படிப்போனா எப்பிடி சார்?
சுத்திகிட்டுத்தான் சார் போகணும்.
கெஞ்சிக்கூத்தாடினாலும் விடப்போவதில்லை. பேசுகிற நேரத்திற்கு உசுரைப் பிடித்துக்கொண்டு பேயாய்ப் போனால் ஒருவேளை கிண்டியில் வண்டியைப் பிடித்துவிடக்கூடும் என்கிற நப்பாசையில் கண்மண்பாராது குச்சிமுனை சாட்டை நெளிவாய் கோட்டூர்புரப் பாலம் தாண்டி சாலை திரும்பி சந்துபுகுந்து நந்தனம் வந்தால், தேவர் சிலையிடம் அண்ணா சாலையில் இப்படிப் போக முடியாதென அதிகார மறிப்பு. 
வேற எப்படிங்க போறது.
இப்படிப்போவ முடியாது அவ்ளதான்.
சார் கிண்டிபோக வேண்டியவனை ஐஐடியிலேந்து கோட்டூர்புரத்துலத் திருப்பி விட்டுட்டாங்க. இங்கையும் போவக்கூடாதுன்னா என்னங்க அர்த்தம். ஏற்கெனவே ஒரு ரயிலை விட்டாச்சி.இப்படிப் பண்ணினா அடுத்த ட்ரெய்னையும் புடிக்க முடியாதுங்க.
பின்னால் 60-70 வண்டிகள் மெத்துமெத்தென் பூனைமுடிக் குரலில் ஒத்து ஊதத்தொடங்கின..
யோவ் இன்னா பேசறே. போவக்கூடாதுன்னா போவக்கூடாது அவ்ளதான். அங்க பெரிய கலாட்டா நடக்குது போவாதேன்னா கேக்கறியா?
காக்கியில் பேண்டும் சாதாரண வெள்ளைச் சட்டையும் போட்ட குரல் மிரட்டியது. பக்கத்தில் வெள்ளைப் போலீஸ் ஜீப்.
சார் கலாட்டா பண்றவனை பண்ண உட்டுட்டுப் பப்ளிக்கை மெரட்றீங்க? போலீஸ்னா இப்படித்தான் பொதுமக்களுக்கு சேவை செய்யணும். சூப்பர்.
போ கல்லடிபட்டு சாவு எனக்கின்னா போச்சு. நல்லதுக்குக் காலமில்லே, என்றபடி ஜீப்புக்கு நகர்ந்தது பாதிச் சீருடை..
வண்டிகள் பிய்த்துக்கொண்டன. மெஜஸ்டிக் ஓட்டல் அருகில் மறுபடியும் இரும்புத்தடைச்சுவர்கள். ஓரிரு வண்டிகள் ஓரம்கட்டி நின்றன.
அந்தப்பக்கமா போங்க. தி நகர் திசை நோக்கிக் கை நீண்டது.
என்ன சார் அக்கிரமம் ஐஐடிலேந்து டூர் போறாப்புல ஊரைச்சுத்திப் பாத்தாச்சி. இன்னும் கிண்டிக்குப்போக விடமாட்ன்றீங்க.
சிஐடி நகர் நந்தி செலை வழியாப் போங்க சார்.
சார் அங்கப் போக விடலை. அங்கேந்துதான் நான் வறேன் என்றார் மோபெட் பெண்மணி.
போக்குவரத்துப் போலீஸ் மவுனமானது.
என்னாங்க இது அநியாயம். அடுத்த ட்ரெய்னைக்கூடப் பிடிக்க முடியாது போல இருக்கே. எப்பதான் விடுவீங்க.
சின்னமலைல கறுப்புக்கொடிக்காரங்களை அரெஸ்ட் பண்ணி அனுப்பினப்புறம்தான்.
மொவுண்ட்ரோட்ல போய் மறியல்பண்ண ஏங்க பர்மிஷன் குடுக்கறீங்க?
குடுத்தவங்களைப் போயிக் கேளுங்க சார். இப்பக்கொஞ்சம் பொறுமையா இருந்துதான் ஆவணும்.
கேக்க நாதியில்லே.
அதான எப்படிப் பர்மிஷன் குடுத்தாங்க. அதுவும் பீக் அவர்ல போயி பர்மிஷன் குடுத்தவங்களைச் சொல்லணும்.
அப்ஸலூட்லி தே டோண்ட் ஹெவ் அ க்ளூ அபொட் வாட் ஈஸ் கோயிங் ஆன்.
எவ்ளோ நேரங்க இப்படியே நிக்க வெக்கப்போறீங்க?
சார். விடிகாத்தால நாலு மணிலேந்து நிக்கிறோம். எங்களையும் கொஞ்சம் நெனச்சிப் பாருங்க சார் என்றார் ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்.
வண்டிகள் அடைந்தடைந்து திட்டு குளமாகித் தீவாகிக்கொண்டிருந்தது..
சைதையிலிருந்து சிஐடி நகருக்காய் பேருந்துகளில் காள்மோளெனக் கத்தியபடி கருப்புக்கொடிகள் நடுத்தெரு நாராயணர்களைப் பார்த்து இளித்தபடித் திரும்பின. எல்லோரும் வெள்ளைச் சட்டையணிந்து எல்லோரும் செழிப்பான கன்னங்களுடன் இருந்தார்கள்.
இரண்டுலட்சம் பேரைத் திண்டாட வைக்க வெறும் இருநூறு பேர் போதும், கொசுராகக் கொஞ்சம் கொள்கை என்று எதையாவது கோஷமாய் வைத்திருந்தால் யதேஷ்டம்.
இருசக்கர வண்டிகளில் ஒன்று ஆர்பாட்டக்காரர்கள் பயணித்த பஸ்ஸைப் பார்த்து வவ்வவே காட்டியது. அதைக் கவனித்த கறுப்புக்கொடியொன்று கழுத்தைத் திருப்பி நாக்கை மடித்து அத்தா பண்ணிவிடுவேன் என்பதுபோல் மிரட்டியது.
சார் அதான் அரெஸ்ட் பண்ணியாச்சில்ல வழியத் தெறங்க சார்.
கொஞ்சம் இருங்கம்மா ஆர்டர் வரட்டும். 
அடப்போங்க சார் என்று முனகியபடி, மறிக்கப்பட்டு நின்றிருந்த வண்டிகளில் முதல்வண்டி, அனுமதிக்குக் காத்திராமல் மடை உடைக்க மற்றவை சீறிப்பாய்ந்தன.
சைதைப் பாலத்தில் அறுந்த செருப்புகள் தியாகச் சின்னங்களாய் சிதறிக்கிடந்தன. ஆளுநர் மாளிகைக்குப் போகும் வழிமறிப்பு இன்னமும் அகற்றப்படவில்லை. புது வாழ்வு ஏஜி திருச்சபை எதிரருகில் இருந்த தடுப்பைத் தாண்டி நடைபாதையில் மக்களோடு மக்களாய் வண்டிகள் ஏறின. பக்கவாட்டில் வளைந்து நெளிந்து வேளச்சேரியை நோக்கிய ஒருவழிப்பாதையின் இடைவெளிகளில் முண்டியடித்து முரட்டுத்தனமாய் முன்னேறின.
கிண்டி சென்று, நடைமேடையின் முன்புறம்போய், உடைந்து துருப்பிடித்திருந்த இரும்பு நாற்காலிக் கைப்பிடியில் பட்டுக்கொள்ளாதவண்ணம் பதவிசாய் அமர்ந்து அடுத்த வண்டிக்காகக் காத்திருந்தபோதும் புஸ்ஸு புஸ்ஸென்று ஆற்றாமை பொங்கிக்கொண்டிருந்தது.
கைபேசியில் அழைத்தால் அழைப்புமணி போய்க்கொண்டே இருந்தது.
சற்று நேரத்திலேயே அழைப்பு வந்தது.
என்னடா திடீர்னு போன்லாம் பண்ற?
ஒரு பில் போடணும் மச்சி. சிடிக்குள்ள போராட்டம் நடத்த பர்மிஷன் குடுக்ககூடாதுன்னு சொல்லி பில் போடணும்.
அடங்கொ இதானா மேட்டரு. ஓத்த நானே அரமண்நேரமா குருநாணக் காலேஜாண்ட நக்கிட்டுக் கெடக்கறேன். இவுருக்கு பில்லு போடணுமாம். கறுப்புக்கொடி மேட்டரா? உன்ன ஊர்சுத்த உட்டாணுங்களா?
ஆமாம் மச்சி. எப்பிட்றா பீக் அவர்ல, அதுவும் அண்ணா சாலைல ரகளை பண்ணப் பர்மிஷன் குடுக்கறாங்க?
டேய் இது பர்மிஷன் வாங்கிப் பண்ணினதில்ல. கொடி புடிக்கணும்னா காயிதே மில்லத் லேடீஸ் காலேஜ் பின்னாடி இருக்கறக் கூவக்கரைல போயி ஒக்காந்து கொரல் குடுங்கப்பான்னு கோர்ட் சொல்லிடுச்சி.அவங்களே அவுரு வரதையும் போறதையும் ரகசியா வெச்சிகிட்டு டபாஞ்சிகினுப்போனா இவங்க கறுப்புக்கொடி காட்டறேன்னு திடீர்னு வந்து ஒக்காந்துட்டாங்களாம்.
அப்பிடின்னா பப்ளிக்குக்கு இடைஞ்சலா இருக்கக்கூடாதுங்கற ஜட்ஜ்மெண்ட் ஏற்கெனவே இருக்குங்கிறியா? 
ஆமா மச்சி. ஆபீஸ்ல எவங்கிட்டையும் மொறச்சிக்கிலியா? போரடிக்கிதுன்னு இப்பிடிப் பில்லு போட எறங்கிட்ட! என்று சிரித்தான் கல்லூரி நண்பனான சீனியர் கவுன்சில்.
கைபேசியை அணைத்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, கடுப்பில் கவனக்குறைவாய் கையை சேரின்பிடியில் வைத்துவிட, உடைந்திருந்த துருப்பிடித்த இரும்புச் சேர் கைப்பிடியில் கீறியதில் ரத்தம் வந்தது.
அணிச்சையாய், விரலை எடுத்து வாயில் வைத்து சூப்பியபடி, கடைசியாக டிடி போட்டுக்கொண்டு ஆறுமாதம் ஆயிற்றா இல்லையா என எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.

Leave a Reply