March 11, 2018 maamallan 0Comment
எல்லா கம்பெனியின் பேலன்ஸ்ஷீட்டிலும் ஏகப்பட்ட ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்றபோதிலும் எந்த கம்பெனியின் இருப்புநிலை அறிக்கையும் யாரும் பார்க்கக்கூடாத தேவ ரகசியமில்லை. 

இந்த பேலன்ஸ்ஷீட்டுகள் மத்திய அரசின் Ministry of Corporate Affairsஇன் அதிகாரபூர்வ  mca.gov.in என்கிற இணையதளத்திலேயே கிடைக்கின்றன. ஒரு கம்பெனியின் ஆவணங்களை எடுக்க, 100 ரூபாய் செலுத்தி 3 மணி நேரத்துக்கு, எத்தனை ஆவணங்களை வேண்டுமானாலும் தரவிறக்கிக்கொள்ளலாம். வெறும் இருப்புநிலை அறிக்கை மட்டுமின்றி அந்த கம்பெனியின் டைரக்டர்கள் பங்குதாரர்கள் அவர்களது முகவரிகள் உட்பட எல்லா விபரங்களையும், இணைப்பாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தையும் சட்டபூர்வமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். இவற்றையெல்லாம் பொதுமக்களாகிய நாம் தரவிறக்கிக்கொள்கிறோம் என்பதற்காக அடுத்த ஆண்டு, இவற்றை இந்தக் கம்பெனிகளால் தராதிருக்கவும் இயலாது. ஏனெனில் இவையனைத்தும் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டாகவேண்டியவை. கொடுப்பதற்கான கெடு தேதிகூட உண்டு. இந்த ஆவணங்களைப் பெற, நாம் செய்யவேண்டியதெல்லாம், இலவசமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டியதுமட்டுமே.
பப்ளிக் லிமிடட் கம்பெனி என்றில்லை, தனியார் நிறுவனங்களையும் பார்க்கலாம். சும்மா எட்டிப் பார்த்தாலே, சாம்பிள்போல இலவசமாகக் கிடைக்கக்கூடியது மாஸ்டர் டேட்டா. இதிலேயே கம்பெனி ஆரம்பித்த வருடம் தற்போதைய முகவரி பங்குகள் கம்பெனி கடைசியாக சமர்ப்பித்த இருப்புநிலை ஆவணத்தின் தேதி மற்றும் டைரக்டர்களின் பெயர்கள் அவர்களது பதிவு எண்கள் வரை அனைத்தும் கிடைக்கும். 
அவரவர்க்கு விருப்பமான கம்பெனியின் பெயரைப் போட்டுத் தேடி, பொதுவான இலவச தகவல்களை பார்த்துக்கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைக்கக் கூடியது மாஸ்டர் டாடா என்கிற ஒரு பக்கம் மட்டுமே. 
ஆவணங்கள் வேண்டுமென்றால் இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு இங்கே இருப்பவற்றில் என்ன ஆவணங்களை வேண்டுமானாலும் நீங்களே தரவிறக்கிக்கொள்ளலாம். 
நேர்மை நாணயம் நம்பிக்கை பலவருட வரலாறு படிப்படியான வளர்ச்சி என்பதையெல்லாம்  கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்துவிட்டு, எப்பேர்ப்பட்ட பாரம்பரியமிக்கக் குடும்பம்,  நேரு பொண்ணு தப்பா போயிருமானு பெடிக்ரி (pedigree) பாத்தது தப்பாப் போச்சு என்று, காமராஜர் தம் கடைசி காலத்தில் எமெர்ஸன்ஸியில் புலம்பியதைப்போல, இது தப்பாப் போயிடுமா என்கிற அசட்டு நம்பிக்கையில், அரசியல் பின்புலம் முதல் இலக்கிய பின்புலம் ஈறாக, முதலீடு செய்துவிட்டுப் பின்பு முழிக்காதீர்கள். 
எல்லா கம்பெனிக் கணக்கிலும் வரவு கணக்கு டாலடிக்கும், செலவுக் கணக்கு பூ அஞ்சு ரூபா புஷ்பம் பத்து ரூபாய் புய்யம் அஞ்சு ரூவா என்று வர்ணஜாலம் காட்டும். வந்ததெல்லாம் செலவில் போக, லாபம் ரொம்ப டல்லடிக்கும். யானை லத்தி எலிப்புளுக்கையாகிற இடம் வருமான வரி. அவர்களையெல்லாம்விட இவர் இவ்வளவு டாக்ஸ் கட்டுகிறாரே நிஜமாகவே நாணயஸ்தர்தான் என்று ஒப்பீட்டு முறையில் சான்றிதழ் வழங்கிவிட்டுப் சுவடு படாமல் போய்க்கொண்டே இருங்கள்.

Leave a Reply