March 27, 2017 maamallan 0Comment
அசோகமித்திரன் தமிழ்ச் சமுதாயத்தால் கொண்டாடப்படவில்லை. ஏன் கொண்டாடப்படவில்லை. அவர் பிராமணர் என்பதால் என்பது போன்ற ஒரு அயோக்கியத்தனம் இருக்கவே முடியாது. 
ஆண்டுகொண்டிருந்த திராவிட அரசுகள் அசோகமித்திரன் புத்தகங்களை நூலகத்திற்கு வாங்கக் கூடாது என தடை விதித்தனவா. இல்லை அசோகமித்திரன் எழுதத் தொடங்கிய 1956லிருந்து திராவிட அரசுகள்தான் இருந்தனவா. எழுத்துலகில் அசோகமித்திரன் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டாரா. மீதி எழுத்தாளர்களுக்கெல்லாம் அவர்களின் எழுத்துக்காக கோபுரத்தில் தூக்கி வைக்கப்பட்டார்களா. 
அசோகமித்திரன் எழுத்தை முழுநேர தொழிலாக எடுத்துக் கொண்டார். மற்றவர்கள் வயிற்றுப்பாட்டுக்கு ஒரு வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மற்றவர்கள், இலக்கியத்தில் இருந்தும் சிரமமின்றி இருந்தது எழுத்தால் அல்ல. அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த வேறு வேலையால்.
இதே கேடுகெட்ட தமிழகத்தில்தானே பேனர் வைக்காத குறையாய் சுஜாதா வாழ்ந்தார். பாலகுமாரனுக்கு என்ன குறை பாப்புலாரிட்டியில். சாண்டில்யன் தொடர் ஆரம்பம் என்ற அறிவுப்பு வந்தால் குமுதத்தின் விற்பனை எகிறியது எங்கே இத்தாலியிலா. ஏன் அவர்களெல்லாம் எழுத்தாளர்கள் இல்லையா. அவர்களெல்லாம் பிராமணர்களில்லையா. அவர்களையெல்லாம் பிராமணர்கள் மட்டுமே படித்தார்களா. இப்போதும் ஏதாவதொரு செங்கல்பட்டு டிரெயினில் ஏறிப் பாருங்கள் எத்தனை பேர் பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்களில் பெரும்பான்மை பிராமணர்களாக இருக்க மாட்டார்கள்.
இந்தக் கொண்டாட்டம் கிண்டாட்டம் என்கிற கலீஜ் அர்த்தத்திலான குடிகார வார்த்தையெல்லாம் தன்னைக் கொண்டாடவேண்டும் என்பதற்காக சாரு எடுத்துக் கொடுத்தது. அதையே பிடித்துக் தொங்கிக் கொண்டிருக்கிறது இந்தக் கிளிப்பிள்ளை இணையம். தீவிரமான இலக்கியவாதி எவனாவது சாருவையெல்லாம் ஒரு சீரியஸான எழுத்தாளனாக பரிசீலிப்பானா. நாளைக்கே நீதான் சுஜாதா என்றால் எதைச் செய்யவும் தயாரான ஆளைப் போய் எழுத்தாளன் என்று கொண்டாட ஒரு வாசகர் வட்டம் அதில் பத்துப் பதினைஞ்சு புட்டம். 
எந்த சமூகத்திலும் கொண்டாடுதல் எப்படி நிகழ்கிறது. 
வெகுஜன பரப்பில் எது பரபரப்பாக உள்ளதோ அதுதானே கொண்டாடப்படும். வெகுஜன பரப்புக்கு எது உவப்பாக இருக்கிறதோ அதைத்தானே அது கொண்டாட எடுத்துக் கொள்ளும். மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எல்லோரும் வெகுஜனங்களுக்குப் புரியும்படியாக எழுதியவர்கள். கேளிக்கையூட்டியவர்கள். 
வெகுஜன பத்திரிகைகள் அவர்களை வெளியிட்டன. அவர்களுக்குக் கொட்டிக் கொடுத்தன. 
அதே பத்திரிகைகள் அசோகமித்திரனை வெளியிடவில்லை. ஏனென்றால் அவர் எழுத்து வெகுஜன தளத்தில் பெரும்பான்மை வாசகர்களுக்குப் புரியாது. அவர் எழுதுவதில் எந்த வார்த்தையும் புரியாத வார்த்தை இல்லை என்ற போதிலும். சுவாரஸியமாக இருக்காது. கிளுகிளுப்பாக இருக்காது. ஒன்றே போல் இருக்கிற மொனாட்டனியை உடைக்க எப்போதாவது ஒரு கதையை குமுதம் வெளியிட்டது. அதைப் போய் ஆதரவளிப்பது என்கிற ஜெயமோகனப் பார்த்து எதால் சிரிப்பது என்றுதான் தெரியவில்லை. வருஷத்துக்கு ஒன்றோ இரண்டு வருடத்துக்கு ஒன்றோ கதையைப் போடுவது என்ன எழவு ஆதரவோ.
அசோகமித்திரன் அற்புதமான கதைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான், இந்துமதி சிவசங்கரிக்கு அடுத்தபடியாக,  பிரபலமான தொடர்கதை எழுத்தாளராக இருந்தார். இருவருக்கும் பதிப்பாளர் ஒருவரே. ஆனால் இந்துமதிக்கு ராயல்டி முன்பணமாகக் கொடுக்கப்படும். அசோகமித்திரனுக்கு எப்போதாவது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கப்படும். ஏன் என்றால், இது என்ன சோவியத் யூனியனா தேவைக்கேற்ற ஊதியம் கொடுக்க. விற்கிற பண்டத்துக்குதானே பணம். ஒரே செட்டியார் இரண்டு பிராமண எழுத்தாளர்களிடம் இப்படி நடந்துகொள்வதைப் பாரபட்சம் என்பீர்களா. இல்லை தலையெழுத்து என்பீர்களா. இதில் நிந்திக்கப்பட வேண்டியவர்கள் வாசகர்களாகிய நாமா அல்லது அரசும் அரசியல்வாதிகளுமா.
ஒரு முறை, நண்பன் ஷங்கர் ராமன் வீட்டின் வெளியில் நின்று பேசிக்கொண்டிருக்கையில் யூகி சேது சொன்னான். இதுவே அபூர்வம். கல்லூரிக் காலம் தொட்டே யூகி சேதுவும் நானும் ஜிகிரி தோஸ்த்தெல்லாம் இல்லை. சொல்லப்போனால் பரஸ்பரம் பிடிக்காது என்பதே சரியான கணிப்பாய் இருக்கும். அவனுக்கு நான் பொறுக்கி. எனக்கு அவன் ஒரு வேஸ்ட் என்கிற எண்ணம். இருவருக்கும் ரொம்ப வேண்டியவன் ஷங்கர் ராமன். 
80களில் நான் சொன்னேன். முன்னைக்கிப்போது இலக்கிய வாசகர் எண்ணிக்கை எவ்வளவோ மேல் என்று. 
என்ன பெரிதாய் முன்னேறியிருக்கிறது. மணிக்கொடி காலத்தில் இருந்த பாப்புலேஷன் என்ன இப்போது என்ன. மக்கள் தொகைக்கேற்ப இலக்கிய வாசகர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. ஆனால் விகிதாசாரம் அதானே. 
வாயடைத்துப் போனேன். இன்று மக்கள்தொகை மட்டுமின்றி, முன்னெப்போதையும் விட வசதி வாய்ப்பெல்லாம் கூடியிருக்கும் காலகட்டத்தில் புத்தகக் கும்பமேளாவில் எவ்வளவு புத்தகங்கள் விற்கின்றன. மூவாயிரம் காப்பி விற்க எழுத்தாளன் எவனெவன் காலையெல்லாமோ திரைமறைவில் நக்கி சாகித்திய அகாதெமி வாங்க வேண்டி இருக்கிறது. 
அசோகமித்திரன் பிடிவாதமாக, தான் எழுதுவதைத்தான் எழுதுவேன் என்று எழுதிக்கொண்டு இருந்தார் என்பதெல்லாம் ஒரு கலைஞனுக்கு செலுத்தும் அஞ்சலியா. எழுத்தில் சகல சமரசங்களையும் செய்துகொண்டு இருந்திருந்தால் அவர் எழுத்தில் என்ன மேதமை வாழ்ந்து கிழித்திருக்கும். அப்படி இருந்திருந்தால் அவரைப் பெரிய கலைஞனென்று இலக்கியவாதிகள் ஏன் பாராட்டப் போகிறார்கள்.
விருதுகள் கொடுக்கப்படவில்லை. என்ன விருது கொடுக்கப்படவில்லை. பத்மஸ்ரீ வாங்க அப்ளிகேஷன் போட்டு, ஜெயமோகன் போல கமலிடம் போய் நின்றிருந்தால், மேடையை விடுங்கள் அவர் உள்ளூர மதித்திருப்பாரா. நேர்ப் பேச்சில் கமலின் குசும்பும் நக்கலும் கொஞ்ச நஞ்சமன்று. எதிரிலிருப்பவர் யார் என்று கணித்து அதற்கு ஏற்ப அடித்து விடுபவர். 
ஆண்டு நினைவில்லை. 80களில் ராயப்பேட்டையில் இருக்கும் அருண் வீரப்பன் ஸ்டூடியோ அரங்கில் அரவிந்தன் பட விழா நடந்தது. அரங்கில் கலந்துரையாடலின் போது நான் எதோ கேட்டேன். என்ன கேட்டேன் என்பது கூட இப்போது நினைவில்லை. அவர் ஏதோ மழுப்பினார். வேறு வகையாக மாற்றிக் கேட்டேன். திரும்பவும் வேறு எதையோ கூறினார். அடப்போய்யா என்று தம்மடிக்க வெளியில் வந்துவிட்டேன். கொஞ்சம் நேரம் கழித்து வந்த கமல், நீங்களும் எப்படியெப்படியோ மடக்கறீங்க. ஆனா அவுரு எப்படி பிடி குடுக்காம நழுவறார் பாருங்க என்றார். ஆச்சரியமாக இருந்தது, தன்னால் வந்து பேசுகிறாரே என்று. 
புனே திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு சென்னையில் இருந்த இயக்குநர் நாகா மைலாப்பூர் ஃபைனார்ட்ஸில் நடந்த ஒரு பிரெஞ்சு திரைப்பட விழாவில், கமலிடம் உலக திரைப்படங்களின் சேகரம் வீடியோ கேஸட்டுகளாக இருப்பதைப் பற்றிக் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. நாமாகத் தேடிப் போகவில்லை தானாக வருவதை நழுவ விடுவானேன் எதற்கும் ஒரு பிட்டு போட்டு வைப்போம் என்று மெல்ல தொடங்கினேன். 
உலக கிளாஸிக்குகள் எல்லாம் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப் பட்டேன் என்று ஆரம்பிக்கும்போதே உசாராகி அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க ஏதோ ஒரு சிலது இருக்கு. இன் ஃபேக்ட் பிளேயரே ரிப்பேர்ல இருக்கு என்பது போல எதையோ சொல்லி பிடி கொடுக்காமல் மழுப்பியபடி, என் சிகரெட் முடிந்து விட்டதைக் கவனித்தவர், வாங்க உள்ள போவோம் என்று 20-25 பேர்கள் இருந்த ஹாலுக்குள் அழைத்துக்கொண்டு போய்விட்டார். 
இப்படித்தான் உலகம். எனக்குக் கமலிடம் இருக்கும் படங்களில் சிலவற்றையேனும் பார்க்க முடியுமா என்கிற நப்பாசை. என்னால் கமலுக்குக் கால் காசு பிரயோஜனமில்லை எனும்போது என்னை ஏன் அவர் நெருங்கவிட வேண்டும். 
பத்திரிகை வாசகனிடம், அல்லது பேஸ்புக்கில் மொக்கை சிந்தனை போஸ்ட் போட்டு 800 லைக் வாங்கும் பிரபலத்திடம், அசோகமித்திரனின் பார்வை கதையைக் கொடுங்கள். அவர் முதலில் அதை முழுதாகப் படிக்கிறாரா என்று பாருங்கள். புத்தகம் என்பதால் ஸ்குரோல் பண்ண வழியில்லையே என்று முக்கிக் கொண்டு இருப்பார். நெட்டில் படிக்கிறேனே சுட்டி இருக்கா என்பார். கொடுத்தால் கங்காரு தாவலாகப் படித்து ஒப்பேற்றி அசோகமித்திரனின் பார்வை ஒரு வாசக அனுபவம் என்று ஒரு போஸ்ட் போட்டுத் தம் இலக்கிய அர்ப்பணிப்பை முடித்துக் கொள்வார். வாசகனுக்கு இன்னும் சுலபம் லைக் போட்டால் அவரது இலக்கிய அர்ப்பணிப்பு முடிதது. இந்த லட்சணத்தில்தான் அசோகமித்திரனை இந்த உலகம் கொண்டாடவில்லை என்கிற ஓலம்.  
தி.ஜா என்றவுடன் சிலிர்க்கும் எத்தனை பிராமணர்கள் ஜானகிராமனின் பரிமாணங்களைப் புரிந்து சிலாகிக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்கள். நக்கலும் குத்தலும் நையாண்டியும் வெளிப்படையாகக் குமிழியிடும் ஜானகிராமனே பெரும்பாலும் தீபாவளி மலர் எழுத்தாளராகத்தானே இருந்தார். ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்துக் கொண்டு இருந்து எழுத்தாளராகவும் இருந்த ஜானகிராமன் என்ன ஓஹோவென்று வாழ்ந்துவிட்டார் என நினைக்கிறீர்கள். அந்தக் காலத்து எல்லா மத்தியதர வர்க்கக் குடும்பத்தையும் போல, தீபாவளி சமயத்தில்தான் குழந்தைகள் உட்பட குடும்பத்தில் எல்லோருக்கும் புதுத் துணிமனி என்கிற அளவில் கட்டுசெட்டாக இருந்தாக வேண்டிய கட்டாய வாழ்க்கைதான். மலர்களில் எழுதி வந்தது எக்ஸ்ட்ரா செலவுக்கு ஆகும். பின்னே பிஎம்டள்யூ வேண்டுமென்றால் ஊரையடித்து உலையில் போட்டால்தானே கிடைக்கும்.
அசோகமித்திரன் என்றாவது புலம்பியிருப்பாரா எனக்கு அது இல்லை இது இல்லை என்று. சுகுமாரன் நேற்று போனில் பேசிக்கொண்டிருக்கையில் நினைவுகூர்ந்தான். எனக்கு துல்லியமாக நினைவில்லை, தேசலாகத்தான் தெரிகிறது. 
லஸ் கார்னரில் இருந்து என் சைக்கிளில் தி. நகர் வந்தோமாம். பஸ் நிலையம் அருகிலிருக்கும் இந்தியா காபி ஹவுஸில் காபி குடிக்கலாம் என நுழையப் போகையில் நான் தடுத்து, இப்ப மணி மூன்றரை. வா அசோகமித்திரன் வீட்டுக்குப் போனா எப்படியும் காபி கிடைக்கும் என்று அவனை அழைத்துச் சென்றேனாம். என்னதான் மத்திய அரசு குமாஸ்தா என்றாலும் சிகரெட் சினிமா கையேந்திபவன் சாப்பாடு என்று திரிகிற எழுத்தாளன், இப்படி டிசிப்ளிண்டாக எங்காவது பீராய்ந்தால்தானே உண்டு. அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகத்தான் ஒரளவு செட்டிலான பிறகு, எவரையும் எங்கு சாப்பிட்டாலும் பில் கொடுக்க விடாமல் நானே கொடுத்துவிடுவது.
அவர் கதவைத் திறந்தபடி என்ன இவ்ளோ வெயில்ல வந்திருக்கேள் என்றபடியே வரவேற்றாராம். அவருடன் இலக்கியம் பேசிவிட்டு காபி குடித்துவிட்டுக் கிளம்பினோமாம். 
இவர்தான் ஜெயமோகன் சொல்வதைப் போல் வறுமையில் உழன்று ஏழ்மையில் வாடி சாவியில் டீ பாயாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர். அசோகமித்திரன் வீட்டில் காபி சாப்பிடும் நேரத்தில் எவர் இருந்தாலும் இதுதான் விருந்தோம்பல். படிக்கிற வயதில் மூன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு மத்தியதர குடும்பத்துக்கு என்னவெல்லாம் சிரமங்கள் இருக்குமோ அவ்வளவும் அவருக்கு இருந்திருக்கும். அரசு வேலையிலோ வங்கியிலோ வேலை பார்த்திருந்தால் வரக்கூடிய மாதாந்திர சம்பளத்துக்கு பதில், மொழிபெயர்ப்பு வேலைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் வந்திருக்கும். எப்போது போனாலும் சட்டை போடாமல் வெற்றுடம்புடன் டைப்படித்துகொண்டே இருப்பார். அடித்துக்கொண்டு இருப்பதை அப்படியே நிறுத்திவிட்டு நம்மைடம் பேச ஆரம்பித்து விடுவார். நான், பரீக்‌ஷாவிலிருந்த இப்போது மறைந்துவிட்ட ரமேஷ், ம.வே.சிவக்குமார் என அவரை வேலை செய்யவிடாது, அவ்வப்போது போய் கழுத்தறுத்த இளைஞர்கள் எத்தனைப் பேரோ. ஒரு நாளும் வேலை கெடுகிறதே என்று சின்ன எரிச்சலைக்கூடக் காட்டியதில்லை. இந்த லட்சணத்தில் வாகுவாதம் வேறு. நானும் சரி மா.வே.சிவக்குமாரும் சரி சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிவிடுவோம். அப்பறம் மனசு கேட்காமல் நாங்களே தேடிப்போவோம். ஆனால் நானும் அவனும் சேர்ந்து போய் அசோகமித்திரனைப் பார்த்தது எப்போதே ஒருமுறை என்று நினைக்கிறேன்.
இப்போதிருக்குமளவுக்கு அப்போது, காசு பணம் வசதியால் மட்டுமே அளவிடும் அளவுக்கு வாழ்க்கையும் இயந்திரமயமாகிவிடவில்லை. பேச நிறைய நேரமும் மனமும் இருந்தது எல்லோருக்கும். எல்லோரையும்விட அசோகமித்திரனுக்கு இவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்தது.

Leave a Reply