March 10, 2017 maamallan 0Comment
பகவான் பாலகுமார சுவாமிகள் பூர்வாசிரமத்திலே பரபரப்பான பாக்கெட் நாவல் எழுத்தாளராக இருந்த நேரம். 80களின் இறுதி 90களின் தொடக்கமாக இருக்கலாம்.
எதோ ஒரு ஓட்டலின் அறைக்கு வெளியே இருந்த பால்கனி நடையில், இரண்டு நண்பர்களைப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் உலக சினிமா ஆர்வலர். மற்றொருவர் யார் என்பதை எப்படிச் சொன்னாலும் எளிதில் பாலகுமாரனுக்கு அடையாளம் தெரிந்துவிடும். அனாவசிய தர்மசங்கடத்தைத் தவிர்க்க வேண்டி, வீரமணி ராகுகாலம் பார்த்த நம்பினால் நம்புங்கள் கட்டுரையில் எப்படிப் பெயரை வெளியிடுவதைத் தவிர்த்து, பெரியவர் என்று ஏழுதினேனோ, அதைப் போலவே இதிலும் இவரது அடையாளத்தைத் தவிர்க்க வேண்டி, இவரை இந்தக் கட்டுரையில் மற்றொருவர் என்றே குறிப்பிடுகிறேன்
உலக சினிமா ஆர்வலருக்கு அப்போதுதான் மணமாகி இருந்தது. ரொம்ப அமைதியான அடக்கமான நபர். எனக்கு ரொம்ப நெருக்கம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவரை வழியனுப்பி விட்டு கொஞ்ச நேரம் மற்ரொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
உலக சினிமா, பாலகுமாரனின் சந்திப்பிற்கு இடையில் எதோ தனிப்பட்ட வேலையாக சற்று வெளியில் சென்றிருக்கிறார். அப்போது நமது மற்றொருவர், அவருக்கு சமீபத்தில் திருமணமாகி இருப்பதைச் சொல்லி இருக்கிறார். அதாவது அவர் மணந்திருப்பது ஒரு முஸ்லீம் பெண்மணியை என்று. அவ்வளவுதான் பாக்கெட் நாவல் எழுத்தாளருக்கு பக்கெட் பக்கெட்டாய் ஆர்வம் பொங்கி வழியத் தொடங்கிவிட்டது. சொல்லு சொல்லு என்று காமதேனுவாய் முகம் முன்னுக்கு வந்துவிட்டது. மற்றொருவர் அப்படியே பின்வாங்கிவிட்டார். அந்த அம்மாள் முஸ்லீம் இவர் இந்து என்பதைத்தவிர அதிலொன்றும் பெரிய விசேஷமில்லை என்று ரிவர்ஸ் கியர் போட்டு பேச்சை மாற்றப் பார்த்திருக்கிறார். அந்தப் பெண் விவாகரத்து ஆனவரா விதவையா இவர் கம்யூனிஸ்ட் இல்லையா என்று திரைக்கதை எழுதத் தொடங்கிவிட்டார் சித்த புருஷர். மற்றொருவரோ அதெல்லாம் எதுவுமே இல்லை. ஒரே ஆபீஸ் கொஞ்சம் வயது சென்று திருமணம் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று மழுப்பிவிட்டார். சித்தரோ ஞான திருஷ்டியில் கதையை வளர்த்துகொண்டே போயிருக்கிறார் இப்படியா அப்படியா என்று. அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. அது அவர் வாழ்க்கை அதையெல்லாம் எழுதிக்கொண்டு இருக்கக்கூடாது என்று கெஞ்சி சித்தரை அடக்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது என்றார்.
இலக்கியத்தின் பால பாடம், அனுபவ எல்லையைத் தாண்டாதே என்பது. ஆனால் எழுத்துச் சொரியர்கள் தங்கள் அரிப்புக்காக மட்டுமே அடுத்தவன் வாழ்க்கையை எட்டிப் பார்க்க விரும்புகிறார்கள். நமக்குத் தெரிந்தவர்களின் வாழ்வு, நம்மின் ஒரு பகுதி. அதன் மறு பகுதியை வாழ்ந்து பெற்ற அனுபவமாகக் கனிந்து அதன் பின் அதை எழுதுவதற்கெல்லாம் பல ஆண்டுகளாகும். அதற்கெல்லாம், இலக்கியம் காத்திருக்கும் பாக்கெட் நாவல் காத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா. கொஞ்சம் இடைவெளி விட்டால் எவன் வேண்டுமானாலும் ஏறி ஆளாகிவிடுவான். எனவே எவன் படுக்கையறையையும் எட்டிப் பார்க்க அலைந்தாக வேண்டி இருக்கிறது.
இது ஏன் இலக்கியமாவதில்லை என்பதற்கான அடிப்படைக் காரணமே இந்த அரிப்புதான். எழுதியாக வேண்டுமே என்கிற அரிப்பு. எதைப் பற்றியும் அக்கறையற்ற, எழுதிக் குவித்தாக வேண்டும் என்கிற அரிப்பு.
நண்பனின் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அது என் அனுபவமாக ஆகாமல் அப்போதேக் கேட்டு அப்போதே உப்புமா கிண்டி கொடுக்க எண்ணுபவன் எப்படி இலக்கியவாதியாக முடியும்.
சம்பத் என்கிற தனது நண்பனைப் பற்றிப் பேச்சுவாக்கில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சமயவேல் சொல்லிக் கொண்டு இருந்ததை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு மூன்றே மாதத்தில் உயிர்மைக்கு புக்காகத் தேத்தியதுதான் உறுபசி. அந்தக் கதையின் நாயகன் பெயர்கூட சம்பத் என்றுதான் இணையத்தில் கிடைக்கும் துணுக்குகள் சொல்கின்றன. காமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’ என்று விமர்சனம் எழுதிய ஜெயமோகனுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் எம் டி எம் எழுதும் கர்நாடக இசைக் கட்டுரைகள் போல இவ்வளவு ஜல்லி அடித்திருக்க மாட்டார். 
//எம்.டி.முத்துக்குமாரசுவாமி தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளர், எழுத்தாளர், படைப்பாளி. அவர் கர்நாடக சங்கீதம் குறித்து எழுத முன்வருவது வரவேற்கத்தக்கது. லலிதாராம் கர்நாடக சங்கீதம் குறித்து சிறந்த ஆய்வுகளை செய்து வருபவர். துறை சார்ந்த விற்பன்னர். இருவருமே டி,என்.சேஷகோபாலன் ஒரு மேதை என்றுதான் கூறுகின்றனர். ஆனால் எம்.டி.எம் சேஷகோபாலன் குறித்து எழுதிய கட்டுரையை தேவையற்ற கோபத்துடன் அணுகியுள்ளார் லலிதா ராம். லலிதா ராம் எம்.டி.எம்-மின் கட்டுரையின் குறைகளை சுட்டிக்காட்டுவது மிகவும் அவசியம். அதை அன்புடன், மரியாதையுடன் செய்யலாம். ஆனால் “எங்க ஏரியா உள்ளே வராதே” என்ற பாணியிலும், உனக்கு என்ன தகுதி என்ற தொனியிலும் அந்த கட்டுரை அமைந்தது துரதிர்ஷ்ட வசமானது. லலிதாராம் மேற்கோள் காட்டும் தினமணி சிவகுமார் அவர்களும் பண்பாளர்; இசை ஞானம் உள்ளவர். ஆனால் “ஒருவனுக்கு சொந்தமான பெண்” “பலரும் உறவுகொள்ளும் பெண்” என்ற பாலியல் உவமையை பொதுவெளியில் அறிவுச்செயல்பாட்டிற்கு பயன்படுத்துவது மிக மோசமான ஒரு அரசியல் பிரக்ஞையையே சுட்டுகிறது. லலிதாராமும், எம்டிஎம்மும் சந்தித்து பேச வேண்டும். கர்நாடக இசைக்கான நல்லதொரு விமர்சன வெளியை உருவாக்க வேண்டும். டி.எம்.கிருஷ்ணா பெரியதொரு மாற்றத்தை உருவாக்கி வரும் சந்தர்ப்பத்தில் இந்த விமர்சன இயக்கம் இசையை பரவலாக கொண்டுசெல்ல பெருமளவு உதவும். சமூக ஆற்றல் பார்ப்பனரால் சுவீகரிக்கப்படுவதன் முக்கிய உதாரணமான கர்நாடக இசை பூணூலை கழற்றுவது காலத்தின் கட்டாயம். – Rajan Kurai Krishnan // 
//எம்.டி.முத்துக்குமாரசுவாமி தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளர், எழுத்தாளர், படைப்பாளி. அவர் கர்நாடக சங்கீதம் குறித்து எழுத முன்வருவது வரவேற்கத்தக்கது// 
என்ன ஓய் எதோ ”காஞ்சிப் பெரியவா” என்று அவா கொடுக்கிற ரேஞ்சுக்கு இவ்வளவு பில்டப்பு. ஏன் இவர் எழுதவில்லை என்றால் கர்நாடக சங்கீதம் பற்றித் தமிழில் எழுத ஆளே இல்லையா. அல்லது தமிழில் எழுதப் பட்டிருப்பதெல்லாம் உம் போன்ற தன்மகர்ந்தச் சேர்க்கைகளுக்குத் தெரியாவிட்டால் அப்படி எதுவுமே இல்லை என்று பொருளா. 
//ஆனால் “எங்க ஏரியா உள்ளே வராதே” என்ற பாணியிலும், உனக்கு என்ன தகுதி என்ற தொனியிலும் அந்த கட்டுரை அமைந்தது// 
ராஜேந்திர சோழன் பெயரும் ராஜேஷ்குமார் பெயரும் ராவில் தொடங்குவது கவனிக்கப்படவேண்டிய விஷயம். இது இவர்கள் இருவருக்குள் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான இலக்கிய ஒற்றுமை என்று எவனாவது ’இலக்கியம் பேச ஆரம்பித்தால், ஒட்டுமொத்த இணையமும் காறித் துப்பாதா. அப்போதும் “எங்க ஏரியா உள்ளே வராதே” என்ற பாணி என்றுதான் இதைக் கூறுவீரா ஓய். இலக்கிய ஏரியாவில் உமக்கு வாசனையாவது தெரியும் எனவே இதை ஏற்க மாட்டீர் கர்நாடக இசையில் உமக்கு ஒரு மண்ணும் தெரியாது, எனவே அங்கே ஜாதீயம் பேசி சக பயனற்றவர்களைக் கூட்டு சேர்த்து அரசியல் செய்கிறீர். 
தமிழிசைக் கச்சேரிகளிலும் எழவெடுத்த பாப்பானே பாடி பாப்பானே கேட்க்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது கர்நாடக இசை என்பதுதான் யதார்த்தம். அனுமதி இலவசத்துக்கே இதுதான் கதி. 
எவன் வேணா ஏறி அடிக்கலாம் என்பது, மேற்குறிப்பிட்ட பாலகுமாரன் எஸ். ராமகிருஷ்ணன் சம்பவங்களைப் போல ’அனுபவத்துக்கு’ எந்த மதிப்பும் மரியாதையும் அளிக்காமல் சொந்த அனுபவமோ அறிவோ இன்றி ‘இரவல் விசிறி மடிப்பு’ஆக எழுதியிருக்கும் எம்டிஎம் பற்றிய விமர்சனத்தை இப்படித்தான் எதிர்கொள்வீர்கள் என்றால் கல்கி செய்த இலக்கிய பஜனையைப் புதுமைப்பித்தன் எதிர்த்ததும் பார்ப்பனீயம்தானா. 
//அன்றைய கச்சேரியின் முக்கிய ராகம்-தானம்-பல்லவி பகுதிக்கு என்ன வாசிக்க வேண்டும் என்று ரவிகிரண் கேட்டபோது, என்னருகில் இருந்தவர் ‘ஷண்முகப்பிரியா’ என்று கத்தினார். தவிலில் பழனிவேலின் துணை அன்று தனக்கு இருப்பதால், கணக்கில் சிக்கலான இரண்டு பாடல்களைப் பாடிவிட்டு மெயின் பகுதியில் ஷண்முகப்பிரியாவுக்கு வருவதாகச் சொன்ன ரவிகிரண், மண்டாரி ராகத்தில் அமைந்த பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் ‘நின்னு செப்பா’ என்ற பாடலையும்,// 
இது ரவிக்கிரண் கச்சேரி பற்றி உங்கள் இசைப் பேராசான் எம்டிஎம் எழுதியிருக்கும் கட்டுரை. 
இதன் அடிப்புறத்தில் எம்டிஎம் என்று சுவாரசியமாய்ச் சொல்கிறது மின்னம்பலம். 
//எம்.டி.முத்துக்குமாரசாமி எழுத்தாளர், இயக்குநர், தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம், சென்னை. பாரம்பரிய இசை, நடனம், ஓவியம், நாடகம் மற்றும் நிகழ்த்துகலைகள் ஆராய்ச்சியில், கடந்த முப்பது வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.// 
மந்தாரி ராகத்தை மண்டாரி என்று குறிப்பிடுவதிலேயே தெரிந்துவிடவில்லையா, இவர் நுப்பது வருடமாக இசைய அனுபவித்த லட்சணம். 
இசை அறிந்த எவரும் மந்தாரி ராகத்தைத் தமிழில் மண்டாரி என எம்டிஎம் போலக் குறிப்பிட மாட்டார்கள். 
பல்வேறு நாடுகளுக்கும் எல்லா துறைகளைப் பற்றியும் லெக்சர் கொடுக்க, போட்டிருக்கும் கோட்டைக் கூட கழற்ற முடியாத அளவுக்கு பிசியாய்ப் பறந்துகொண்டிருக்கும் கோட்பாட்டாளருக்கு இசை மட்டுமல்ல, கூகுளில் தமிழில்கூடத் தேட வராது என்று தெரிகிறது. 
ஆங்கில கூகுளில் தேடித்தேடியே ஏகப்பட்ட புக்கெழுதி அறிஞரானவர் எம்டிஎம் என்று இப்போதல்லவா தெரிகிறது.

பார்ப்பன ஜல்லி இருக்கும்வரை ராஜன் குறைக்கு என்ன குறை பேஸ்புக்கில் பேரறிவாளராய் ஜமாய்க்கலாம் எனும்போது, சென்ற சீசனில், மின்னம்பலத்துக்குக் கட்டுரை எழுதும் அசைன்மெண்ட்டுக்காகக் கர்நாடக இசைக் கச்சேரிக்குப் போக ஆரம்பித்திருக்கும் எம்டிஎம் மட்டும் நம்மை இப்படியெல்லாம் எண்டர்டெய்ன் பண்ணக் கூடாதா என்ன. 
பாலகுமாரனுக்கு பாக்கெட் நாவல் அவசரம் 
எஸ்.ராவுக்கு புக்பேர் உண்டாக்கிய உறுபசி 
எம்டிஎம்முக்கு மின்னம்பல இலைக்கு இசை

Leave a Reply