February 13, 2017 maamallan 0Comment
‪ஹபிபுல்லா ரோடிலிருக்கும் நண்பன் ஷங்கர் ராமன் வீட்டின் உள் பாதையில் தள்ளுவண்டி இஸ்திரிக் கடை வைத்திருப்பவர் தீவிர அதிமுக. ‬மின் விபத்தில் சாக இருந்த தம்மைக் காப்பாற்றி மறு வாழ்வு அளித்தவன் என்று என் மீது அவருக்குத் தனி பிரியம். பக்கிகளின் கழுவி ஊத்தலால் அவ்வப்போது பைக்கில் இருந்து தவறி விழுந்து, சென்னையின் சாலைகளில் சில்லரை பொறுக்க நேர்ந்தாலும் இது போன்ற பலரது ஆசிதான், என் மீது வண்டி ஏறாமல் பார்த்துக் கொள்கிறது. 

எளிய மனிதர்கள் ஒருவரிடம் மனம் வைத்துவிட்டால் அவ்வளவு சுலபத்தில் மாறுவதில்லை என்பதற்கு MGR உதாரணம். ஜெயலலிதா MGR இல்லை என்பதற்கு இந்த இஸ்திரிக்காரரே சிறந்த எடுத்துக்காட்டு.
91 தேர்தலில், ‘கொலைகார’ கருணாநிதியை வரவிடாமல் தடுப்பது தம் சமூகக் கடமையாய்க் கருதி, குறைந்தது 20 கள்ள ஓட்டு போட்டவர் இந்த இஸ்திரி. கருணாநிதி என்றில்லை யாராலுமே புலி பிரபாகரனைக் கட்டுப்படுத்த முடியாது என்று கரடியாய்க் கத்தியும் கடைசியில், ‘MGR இருந்திருந்தா, தமிழ்நாட்டுக்குக் கெட்ட பேர் வந்துரும்னு ராஜீவை அட்லீஸ்ட் இங்க வெச்சாச்சும் கொன்னுருக்க மாட்டார் சார்’ பிரபாகரன் என்று கூறி என்னை வாயடைக்க வைத்தவர். அப்போதும் கருணாநிதிதான் கெட்டவர், எம்ஜிஆர் ஆதரித்த மாவீரன் பிரபாகரன்  ராஜீவைக் கொன்றதுகூடத் தவறில்லை. தமிழ்நாட்டு மண்ணில் வைத்து அதைச் செய்ததுதான் தப்பு. 
இதே நபர், MGRக்கும் அவர் தொடங்கிய அதிமுகவுக்கும் ஒரு தேர்தலில் ஓட்டுப் போடவில்லை என்றால் நம்பமுடிகிறதா. ஆம், சசியின் கொள்ளைக் கூட்டத்தைக் கூட சேர்த்து வைத்துக்கொண்டு, அதிமுகவுக்கே ஜெயலலிதா கெட்ட பெயர் கொண்டு வந்துவிட்டார் என்று 96 தேர்தலில் தம்முடைய ஓட்டைக்கூடப் போடப் போகவில்லை. 
’என்ன மாதிரி அதிமுகக்காரன் ரொம்பப்பேருக்கு, இந்த தடவ ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடப் பிடிக்கல சார். அதே சமயம், இரட்டை இலையை விட்டுட்டு இன்னோரு சின்னத்துல ஓட்டுப் போட்டு எங்களால எம்ஜிஆருக்கு துரோகம் பண்ணவும் முடியாது. அதனால ஓட்டுப் போடவே போவல சார். ஜெயலலிதாவே தோத்துப் போயிடுச்சாம் இதுல கருணாநிதி ஜெயிச்சதுலாம் ஓரு மேட்டரா சார்’.
இதுதான் எளியவர்களுக்குத் தெரிந்த அறம். 
ஜெயலலிதா அம்மாவால் யார் யாரோ எம்எல்ஏ ஆகி கோடீஸ்வரர்களாக ஆகியிருக்கலாம். ஆனால் எம்ஜிஆரின் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுக்கொண்டு இருந்தது என்னவோ இவர்கள்தான். இவர்கள் நினைத்தால் ஓட்டே போடாமலும் இருப்பார்கள் என்பதை ஜெயலலிதாவுக்கே கற்பித்தவர்கள். அதனால்தான், பிடித்த பிடி பிடித்ததுதான் என்று நிற்பவர் என எல்லோராலும் புகழப்படும் அய்ரண் லேடியான ஜெயலலிதாவே, 96 தேர்தல் படுதோல்வியில் ஆடிப்போய் சசிகலா கோஷ்டியை வெளியில் அனுப்பினார்.
எம்ஜிஆராலோ ஜெயலலிதாவாலோ தனிப்பட எந்த உதவியையும் அடையாத இந்த ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, இன்றும் அதே இடத்தில் அதே தள்ளுவண்டிக் கடையில் இஸ்திரிப் பொட்டியும் கையுமாய் கெளரவமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

Leave a Reply