February 8, 2017 maamallan 0Comment
பிருமாண்டமான இரும்புக் கதவின் முன் அவர்கள் நின்றிருந்தனர். 
உடன் வந்திருந்த சக அதிகாரிகள் ஆவணங்களுடன் உள்ளே சென்றிருந்தார்கள்.
நான் சற்றுத் தள்ளி நின்றிருந்தேன். 
அவன் என்னிடம் வந்து கைகொடுத்தபடி, சார் நல்லாபாத்துக்கிட்டீங்க சார் என்றான் 
அது எங்க டூட்டி. அது சரி. அப்பவே கேக்கணும்னு நினைச்சேன். கூட எல்லாரும் இருந்ததால தோதுப்பட்டு வரல. சரி. எங்க போய் டிரெய்னிங் எடுத்தே
டிரெய்னிங்குலாம் தனியா எடுக்கல சார். சின்ன வயசுலேந்து அப்படியே விளையாடிப் பளகினதுதான் சார்
அதான் காத்தால உன்னைப் பாத்ததுமே ஃபுட்பால் பிளேயரானுகேட்டேனே
ஆமா சார் 
நான் இப்பக் கேக்கிற டிரெய்னிங் அது இல்லே
… 
எந்த நாட்ல டிரெய்னிங் எடுத்தே 
அப்படில்லாம் ஒன்னுமில்லை சார்…
சரி அப்ப என்ன கனெக்‌ஷன். அவங்க எப்படி இதுல வந்தாங்க 
பெரிய கனெக்‌ஷன்லாம் ஒன்னுமில்லை சார்…
சரி. சின்னதாவே இருக்கட்டும். என்னான்னு சொல்லு
இல்லை சார். அனாதைக் குழந்தைங்களுக்கு நிதி வேணும்னு ***கேட்டிருந்தாங்க. ரெண்டு மூனு தடவை அனுப்பி வெச்சேன். அது அஃபென்ஸாமே. அதான்… 
வாழ்க்கைல மதம் முக்கியம் தம்பி. இல்லேங்கலே ஆனா அதைவிட முக்கியம்… 
மனிதாபிமானம் 
அதான். அதேதான்.

நீ எந்த ஊரு 
பொறந்து வளந்ததெல்லாம் இங்கதான் சார் 
நான் பொறந்தது கோஷா ஆஸ்பிடல்ல. நான் கறிசாப்பிடறதால, கோஷா ஆஸ்பிடல்ல கொழந்த மாறிடிச்சோனு லைட்டா ஒரு டவுட் உண்டு எங்கக்குடும்பத்துல. கறி சாப்ட்டு பூணூல் போடாம எப்பையாச்சும் கோயிலுக்குப் போறதால எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லேனு ஆயிருமா. இல்லை நான் அயிரு இல்லேனுதான் ஆயிருமா. கோயிலுக்கும் போயிட்டு கடவுளையும் கலாய்க்க என்னாலமுடியும். உன்னால முடியாது. உங்க மதத்துல அது முடியாது. அவ்வளவுதான் வித்தியாசம். அதுக்காக, நம்ம மதத்துக்காரன்ங்கறதால, கழுத்தை அறூக்கிறவன் சொல்றதையெல்லாம் கேள்னு எந்த மதமாவுது சொல்லுதா

… 
இதப்பாரும்மா நீயா வந்ததால இதெல்லாம் பேசறேன். 
ஆமா சார் 
இதப் பாரு. கைல அழுக்குப் படாம காய் நகத்தி கழுத்தறுக்கிற பிராமின்ஸ் மலையாளீஸ்னு எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். கழுத்தை அறுக்கிறவனுக்கு இவன் என்ன ஒஸ்தினுகேட்டா எந்த விதத்துலையும் ஒஸ்தியில்லதான். ஆனா அவங்க யாரும் சட்டத்துல மாட்டறது இல்லே. எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறதுல என்ன அர்த்தமிருக்கு சொல்லு. மதத்தின் பேரால சொல்றதாலையே எதையும் கேள்வி கேக்காம கண்ணை மூடிக்கிட்டு ஏத்துக்கணுமா. கடவுளைக் கண்ண மூடி ஏத்துக்கிறதால யாருக்கும் எந்தப் பிரச்சனையுமில்லே. ஆனா சாமி பேரைச் சொல்லிக்கிட்டு ஆசாமி சொல்றதையெல்லாம் கேட்டு கண்ணை மூடிக்கிட்டுப் போக ஆரம்பிச்சா எங்க போய்ச் சேருவோம்னே சொல்ல முடியாது. இதைநான் உனக்கு மட்டும் சொல்றேன்னு நெனச்சுக்காதே. இல்லே நாம ஜெயிலுக்குப் போறோம்ங்கறதாலதான இவன் நம்மக்கிட்ட இப்படிப் பேசறான் பாத்தியானு தப்பா எடுத்துக்காதே. 
இல்ல சார் இல்ல சார்
உன்கிட்டனு இல்லே. இந்துப் பசங்ககிட்டயும் நான் இதையேதான் சொல்லுவேன். எவன் சொல்றதையும் கண்ணை மூடிக்கிட்டு நம்பாதே. யோசி. உள்ள நிறைய நேரம் கிடைக்கும். முடிஞ்சவரைக்கும் நல்லா யோசிச்சு எந்த முடிவையும் எடுக்கப் பாருங்க. 
எப்ப சார் பெய்ல் கிடைக்கும் 
தெரியாதுப்பா. மத்தவங்களாட்டம் உந்து சாதாரண கேஸில்லையே 
ஆமா சார் 
இனி எதுவும் செய்ய வழியில்லே. எதுவா இருந்தாலும் ஃபேஸ்பண்ணிதான் ஆகணும் 
கதவு திறக்கப்படுவது பக்கவாட்டில் தெரிந்தது
ஆமா சார். ரொம்ப நன்றி சார் 
திரும்பக் கைக் குலுக்கிவிட்டு உள்ளே சென்றான். என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி நன்றி சொல்லிவிட்டுப் போகிறான் என்று ஆச்சரியமாக இருந்தது.
நன்கொடை கொடுத்ததற்காக மட்டுமே அவன் மாட்டிக் கொண்டு இருப்பதாக நானும் நம்பவில்லை. மருத்துவனையில் காத்திருந்த நேரத்தில், பல்வேறு குற்றவாளிகளுக்கு இடையிலான நடத்தை வேறுபாடுகளையும் அதன் காரணமாக அவர்கள் நடத்தப்படும் விதங்களுக்கு இடையிலிருக்கும் வித்தியாசங்களையும் மதம் மனிதர்கள் என்று நாலாவித விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு இருந்ததால் உண்டாகியிருக்கக்கூடிய சிறு நல்லெண்ணத்தின் காரணமாக, அவன் என்னை முழுதாக ஏற்றுக் கொண்டு விடப் போவதுமில்லை. இது இருவருக்குமே தெரியும். எனினும் பரஸ்பரம் பேசிக்கொள்ள முடிவதும் அப்படிப் பேசிக்கொள்ள முடிவதால் உண்டான சின்ன நெருக்கமும் முக்கியம்தானே. 
பேசுவது நல்லது. தொட்டுப் பேசிக் கொள்வது இன்னும் நல்லது. தொட்டுப் பேசிக் கொள்வது மனதைத் தொடுவதற்கான முதல் அடி.

Leave a Reply