January 14, 2017 maamallan 0Comment
இது ஒரு பக்க, கடந்த காலத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாத தற்கால உண்மை மட்டுமே.

25-30 வருடங்களுக்கு முன் SSC தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த காலத்தில் என்ன நடந்துகொண்டு இருந்தது என்பதையும் மத்திய அரசுப் பணியில் தென்னிந்திய பிராமணர்களின் ஆதிக்கத்தையும் அதற்குச் சற்றுப் பிந்தி கொஞ்சம் குறைவான விகிதத்தில் இடைநிலை சாதிகளின் எண்ணிக்கையையும் பற்றி வாதப் பிரதிவாதத்துக்கு அவசியமே இல்லை புள்ளிவிவரங்களே போதுமானவை.
அநேகமாக 80-90களில், தமிழகத்திலிருந்து வேலைக்கு சேர்ந்தோரின் முதல் போஸ்டிங், தகுதியின் தரவரிசையில் சற்றுப் பின்னால் இருப்போருக்கு அவர்களது சொந்த மாநிலம் கிடைக்காது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், செண்ட்ரல் எக்ஸைஸில் LDC UDC INSPECTOR போஸ்ட்டுகளில் தேர்வானவர்களில் பெரும்பாலோர் பொடியன்களாய் டெல்லியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள். அவர்கள் சில வருடங்கள் கழித்து சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்த பின், அங்கு அப்போது கிடைத்த தொடர்புகளை அவர்கள் இன்றுவரை எவ்வளவு சாதுரியமாகப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய பயில்வான்களாகி இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியவராத விஷயம். 
80-90களில் இங்கே இருக்கும் கடுமையான போட்டியில் தேர்வாவது சிரமம் என்று எண்ணிய எத்தனை பிராமணர் மற்றும் ஆதிக்க சாதியினர் மாநிலம் மாநிலமாகப் போய் இங்கிலீசில் வீக்கான வட இந்திய மாணவர்களுடன் தேர்வெழுதி எவ்வளவு ஈஸியாக வென்றார்கள் என்கிற கணக்கையும் எடுத்துப் பார்க்கவேண்டும். 
எதற்கெடுத்தாலும் தமிழன் பஜனை வேலைக்காகாது. அன்று தென்னவன் இங்கிலீஷில் செய்ததை, இன்று வடவன், இவனைப் போல் நீர்நிலை தேடி ஓடாது தன் தாய் மொழியான இந்தியில் தன் சொந்த மாநிலத்தில் செய்கிறான். இப்படித்  தேர்வெழுதி வேலையில் அமர்வது சமூக நீதியா இல்லை, இதற்கும் வடக்கு வாழ்கிறது என்கிற திராவிட எளிய வாய்பாடுதான் பதிலா.
தாம்பத்யம் கதையில் வரும் தம்பதியர் இருவரும் நிஜத்தில் திராவிட ஆதிக்க சாதியினர். அதில் மனைவி தேவர். கணவர் பிள்ளை என்று நினைவு. இருவரும் வங்கித் தேர்வில் வெற்றிபெற்று தென் மாவட்ட வங்கியொன்றில் குமாஸ்தா வேலையில் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கையில் காதல்வயப்பட்டு ஊர் துரத்துமளவுக்குப் போயிற்று. ஷில்லாங்கில் போய், செண்ட்ரல் எக்ஸைஸ் இன்ஸ்பெக்டருக்கான தேர்வெழுதி வேலைக்கு அமர்ந்தார்கள். கிழக்கிந்தியா என்பதால் பெரும்பாண்மை இங்கிலீஷில் வீக்கான STக்கள். அவர்களுடன் போட்டியிட்டதால்தான் தங்களால் சுலபமாக வெல்ல முடிந்தது என்பது அவர்களே ஒப்புக்கொண்ட நிஜம். 
அலுவலகத்தில் வன்னியப் பையனொருவன் ஐயங்கார் பென்ணைக் காதலித்து மனமுடித்து விட்ட சம்பவத்துக்காக, ஏதோ தங்கள் வீட்டில் இழவு விழுந்து விட்டதைப்போல் சுற்றியிருந்த, சில பிராமணப் பையன்கள், ‘என்ன இப்படி ஆகிவிட்டதே’ என தங்களுக்குள் மருகி அடித்த கூத்து உண்டாக்கிய கடுப்பு காரணமாகவே, இதை இப்படியே எழுதாமல், 1994ல் அப்படி ஜாதி மாற்றி எழுதினேன் என்பது வேறு விஷயம். 
இல்லையில்லை, இந்தியில் அவர்கள் எழுதுவது பிரச்சனையில்லை. எங்கள் வாதம் தமிழனுக்கும் தமிழில் எழுத வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்றால் சரிதான். ஆனால் தமிழகத் தமிழனின் இப்போதைய நிலை என்ன. தமிழ் இலக்கியத்தில், 60-70-80களைப்போல் ஏன் இப்பொது, மத்தியதர வர்க்கத்து வறுமைக் கதைகள் எழுதப்படுவதில்லை. இன்ஜினியரிங் படித்துவிட்டு, இன்ஸ்பெக்டர் போஸ்ட்டில் மத்திய அரசு வேலைக்கு நுழையும்போதே 50-60ஆயிரம் கிடைக்கும் என்றாலும் தேர்வெழுத தெலுங்கர் மலையாளிகளைப் போல் தமிழரில் எவ்வளவு பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அலுவல் நிமித்தம் நான் அடிக்கடி சென்றுவர வேண்டியிருக்கும் தமிழக அரசு அலுவலகத்தில் கட்டை சம்பளமாய் 10,000 வாங்கிக் கொண்டிருக்கும் கருப்புச் சிறுவர்களிடம் நானும் தலைப்பாடாய் அடித்துக் கொள்கிறேன், ஓய்வு நேரத்தில் செண்ட்ரல் எக்ஸைஸின் இன்ஸ்பெக்டருக்கான எக்ஸாம் எழுதத் தயாராகுங்கள் என்று. வெளிமாநிலத்துக்குப் போகவேண்டியிருக்கும் என்பதாலோ என்னவோ ஆர்வம் காட்டுவதாகவே இல்லை. உள்ளூர் பத்தாயிரத்தைவிட வெளிமாநில ஐம்பதாயிரம் குறைவாகப்படுகிறதோ என்னவோ. நாளைக்கே வெளிநாட்டுக்குப் போகத் தயார் ஆனால் அதற்கான படிப்பு வெறும் டிகிரி இல்லையே.  சாதிப் பாகுபாடற்று தமிழனின் இலக்கு ஐடி. நுழைந்த அடுத்த வருடம் அமேரிக்காவில் ஆன்சைட் ஜாப் என்பதாக அல்லவா இருக்கிறது. 
அரசுப் பணிகளில் வரும் வட இந்திய இளைஞர்களிலும் பலர் பொறியியல் படித்திருந்தாலும் பெரும்பாலும் ஐடியில் போட்டியிட முடியாதவர்களே மத்திய அரசு வேலைக்கு வருகின்றனர் என்று சொல்வது அப்படியொன்றும் அதீதமாகிவிடாது என்றே படுகிறது. 
காலச்சக்கரம் எப்போதும் நமக்கு சாதகமாக மட்டுமே சுற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒருபோதும் சமூகநீதியாகாது. 

Leave a Reply