October 23, 2016 maamallan 0Comment
இன்று மதியம் 3:12க்கு ஐபோனில் ஓர் அழைப்பு வந்தது. தான் இன்னார் பேசுவதாக சுய அறிமுகம். முழுப்பெயரைக் கூறி, அவர்தானா என உறுதிசெய்துகொண்டேன். பிறகு அவருக்கேன் செலவு பாவம் என்று என் ஓஸி ஜியோ போனிலிருந்து நானே அழைத்தேன். இதற்கு மேல் அதை விவரிக்கத் தொடங்கினால், அடையாளம் வெளிப்பட்டு சொந்த வீட்டிலேயே அவருக்கு சோற்றுக்கேத் திண்டாட்டமாகிவிடும் எனவே இத்தோடு நிறுத்திக் கொள்வோம். 

என்னுடனான தொடர்பு வெளிப்படையாய்த் தெரியவந்தால், ஆப் பாயில்களிடம் அவருக்கிருக்கும் கனவான் பிம்பத்துக்குக் குந்தகம் விளையும் என்பதால் இங்கே சொல்லப்போகிற விசயத்தை அவரால் ஃபேஸ்புக்கில் எழுதமுடியவில்லை என்பதை அவரே கூறிவிட்டார். நான் சென்றபின் எழுதுகிற அஞ்சலிக் குறிப்பில் எப்படியும் இதைப் பற்றி தைரியமாக எழுதிவிடுவர் என்றே நம்புகிறேன்.
அவர் போன் செய்தது என்னவோ என் தவறைத் திருத்தத்தான். நோபல் பரிசை சார்த்தர்தான் மறுத்தார் ஐன்ஸ்டீன் மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டார் என்பதை எனக்கு உரைக்கத்தான். அதாவது ஐன்ஸ்டீனுக்குக் கொடுக்கப்பட்ட நோபல் பரிசு கால தாமதமான ஒன்று, போகவும் தமது உச்சத்துக்காகக் கொடுக்கப்படாமல் வேறொரு காரணத்துக்காகக் கொடுக்கப்பட்டது என்கிற குமைச்சல் காரணமாக, அவர் நேரில் போய் பரிசை வாங்கவில்லை. பரிசுத் தொகை அவரைத் தேடி வந்தது. எனவே அவர் நோபல் பரிசை மறுத்ததாகச் சொல்ல முடியாது. 
இதில் தொடங்கிய பேச்சு இப்படி அப்படியாக இழுத்துக்கொண்டே போகத் தொடங்கி மூன்று 30 நிமிட ஜியோ கால்களாக நீண்டது. 
கொஞ்ச நாள் முன்பு, அதாவது விளம்பர வெறிக்கு பலியான அந்த ஓலா ஓட்டுநர், புதிய காருக்கு முன்பணம் கட்டப்பட்டிருந்த நேரம் நமது நண்பர் சென்னைக்கு வந்திருக்கிறார். ஓலா ஊர்தியொன்றில் பயணம் செய்திருக்கிறார். அந்த ஓட்டுநரிடம் ஃபேஸ்புக் – ஓலா விவகாரம் பற்றிக் கூறத் தொடங்கியிருக்கிறார். உடனே அந்த ஓட்டுநர், மெதுவாகப் போ என கஸ்டமர் சொன்னால் மெல்ல ஓட்டியிருக்க வேண்டியதுதானே என்று கூறியுள்ளார். இல்லை முழு கதையையும் கேள் என்று இவர் சொல்லி இருக்கிறார். கதை முடிவில் அந்த ஓட்டுநர் கைதாகி புழல் சிறையில் 16 நாட்கள் இருக்கவேண்டி வந்ததைக் கூறியிருக்கிறார். இந்த ஓட்டுநரால் அதை நம்பவே முடியவில்லை. என்னது இதற்காக அந்த டிரைவர் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்ததா என்று இரண்டு மூன்று முறை கேட்டிருக்கிறார். அதன் பிறகு நமது நணபர் கிளைமாக்ஸை சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு சில தினங்கள் முன்பாக அந்த ஓட்டுநரின் மறுவாழ்வுக்காக இணையத்தில் திரட்டப்பட்ட ஏறக்குறைய இரண்டரை லட்ச நிதியை முன்பணமாக செலுத்தி புதிய காரை புக் பண்ணியிருக்கிறார் என்பதைச் சொல்லி இருக்கிறார். 
அதன் பிறகு கொஞ்ச நேரத்துக்கு இந்த ஓட்டுநரிடமிருந்து பேச்சே இல்லை. கதை முடிந்து விட்டதால் நமது நண்பரும் அமைதியாக இருந்திருக்கிறார். திடீரென இந்த ஓட்டுநர் அவரு பேர் என்ன சார். அவுரு அட்ரஸ் கிடைக்குமா சார் என்று கேட்டிருக்கிறார். அவர் பேரு நரசிம்மன் அட்ரஸ் தெரியாது என்று கூறியிருக்கிறார் இவர். இரண்டு மூன்றுமுறை திரும்பத்திரும்ப முகவரி கேட்டிருக்கிறார். இவருக்கு ஏரியாவும் குடியிருப்பின் பெயரும் தெரியும் என்றாலும் தெரியாது என்று கூறியிருக்கிறார். அவர் முகவரியைத் தெரிந்து கொள்வதில் உனக்கென்னப்பா இவ்வளவு ஆர்வம் என்று கேட்டேன் என்று சொல்லிவிட்டு, அவன் என்ன சொன்னான் என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது, சொன்னால் நீங்கள் நம்பக் கூட மாட்டீர்கள் மாமல்லன் என்று மர்மத்தைக் கூட்டினார். 
நானும் ஒரு டிரைவர் சார், அவரை நேர்ல பார்த்துக் கால்ல விழணும் சார். அதுக்காகதான் கேட்டேன் என்றான் என்றார். 
நான் சிரித்தேன். இதே காரணத்துக்காகவே, அந்த ஓட்டுநர் எவ்வளவு கெஞ்சியும் நான் அவரை இன்றுவரை நேரில் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறேன் என்றேன். 
என்னது நீங்கள் இன்னும் அவரை சந்திக்கவே இல்லையா என்றார் நண்பர். ஆமாம் எல்லாம் போனில்தான் என்றேன்.
ஜெயிலுக்குப் போவது என்பது எவருக்கும் சாதாரண விஷயமில்லை, அனுப்பிய மற்றும் அனுப்புவதை – தங்களை தர்ம தேவதைகளாகவும் தேவன்களாகவும் பாவித்துக் கொள்ளும் நுண்ணுணர்வற்ற ஜென்மங்களைத் தவிர என்றேன். அந்த விஷயத்தில், அந்த ஓட்டுநர் நிரபராதி என்பதற்கான என்னுடைய அடிப்படை நம்பிக்கை, போலீஸ்காரர் சொன்ன அந்த ஒரே ஒரு வாக்கியம்தான். இந்து பத்திரிகையில் வந்துவிட்டது என்பதால் உண்டான மேலிடத்து அழுத்தம் காரணமாக, மனமில்லாது கைது செய்ய வேண்டி வந்தது என்று கைது செய்த போலீஸே கூறியதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும் என்றேன். 
பத்து நாளைக்கொருமுறை அந்த ஓட்டுநர் போன் செய்து கிராமத்துல இருக்கிற மாமா சொல்றாரு மயிலாப்பூர் டீச்சர் மாமா சொல்றாரு உங்களை நேர்ல சந்திக்கணும்னு என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். நான் ஏதாவது ஒரு சால்ஜாப்பு சொல்லி அதைத் தவிர்த்துவிடுகிறேன். 
சமீபத்தில் பேசியபோது கேட்டேன், என்னப்பா எப்படிப் போகுது. சிரமம் இல்லாம டியூ கட்ட முடியுதா. வீட்டுக்கு ஏதாவது மிஞ்சுதா என்று. 
மாசத்துல எல்லா நாளும் வண்டி ஓட்டினா எப்படியும் எல்லா செலவும் போக 45-50 ஆயிரம் கிடைக்கிது சார். டியூ 17,500/- போக மீதி வீட்டுக்குதான் சார் என்றார். 
சம்பளத்துக்கு ஓட்டிக்கிட்டு இருந்தப்ப டெய்லி என்ன கிடைச்சிக்கிட்டு இருந்துது. 
600 – 700 ரூபா கிடைக்கும் சார். 
மாதம் 18-20 ஆயிரம் சம்பாதித்துக் கொண்டு இருந்ததில் இருந்து, 30 ஆயிரம் பக்கமாக சம்பளம் உயர்ந்திருப்பது பெரிய விஷயம்தான் ஆனால் அதை விடப் பெரிய விஷயம் அந்தக் கார் அவருடையது என்பது. இதைவிடவும் பெரிய விஷயம் இன்னும் முப்பத்து சொச்சம் மாதங்களில், டியூ கட்டத் தேவையில்லை என்பதால் அவரது சம்பளம் 50 ஆயிரம் ஆக உயர்ந்துவிடும் என்பதுதான். 
நாம் செய்திருப்பது உண்மையிலேயே மிக நல்ல காரியம் நண்பர்களே. எனக்கே அது இப்போதுதான் தோன்றுகிறது. குறிப்பாக இன்று போனில் பேசிய நண்பர் கூறிய சம்பவத்துக்குப் பிறகுதான்  உறைக்கத் தொடங்கிறது.

Leave a Reply