April 28, 2011 maamallam 0Comment
நான் இன்றுவரை குடித்ததில்லை. மதுவகைகளின் வாசனைகளையும் நிறங்களையும் கூட என்னால் சொல்லிவிட முடியாது. அப்படியானால் இங்கே எனக்கு என்ன இடம்?

இது முதல் பாரா

நான் என் பெரும்பகுதி நேரத்தை குடிமேஜைகளில் செலவிட்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான நண்பர்கள் பல்லாயிரம் முறை எனக்கு மதுவை நீட்டியிருக்கிறார்கள். நான் சொல்லக்கூடியது ஒன்றுதான், ’இதுவரை குடிக்காத ஒரு பெருங்குடிகாரனிடம் நீங்கள் இந்தக் கோப்பையை நீட்டுகிறீர்கள்’.

இது பதினைந்தாவது பாரா

நமக்குள் இருக்கும் பேய் April 14th, 2011

ஆயிற்றா! நாவல் கோட்பாடு என்ற நூலையே இயற்ற வைத்த வல்லமை வாய்ந்த கன்னி நாவல் முதல் முயற்சி – எழுதும் போது பல இடங்களில் எழுத்தாளருக்கும் படைப்புக்குமான இடைவெளி இல்லாமல் ஆகிவிடும் அனுபவம் கிடைத்திருக்கும் –  தமிழின் மைல்கல்லில் சிறு பகுதியைப் பார்ப்போம். 
<”ம்ம். செரி, நாள பாப்பம்” என்றபடி எழுந்தார். சிறிதாக ஏப்பம் விட்டபடி நடந்தார்> 
மொழியும் அதன்மேல் ஒரு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய ஆளுமையும் ஏன் முக்கியமானதாக ஆகிறது?
மேற்குறிப்பிட்ட ஒற்றை வாக்கியம் ஆர் விகுதி காரணமாக நடுத்தர வயதிற்கு மேல் ஆனவர் என்பதையும், சிறிதாக ஏப்பம் விட்டபடி நடந்தார் என்பது, வயது அவர் உடல் மேல் கவிந்திருப்பதைக் காட்சியாய் வாசகனைக் காணவைக்கவும் உபயோகிக்கப்படுகிறது.
<தன் அறைக்கு வந்து கதவைச் சாத்திக் கொண்டபோது குடிக்க வேண்டும் என்ற உந்தல் ஏற்ப்ட்டது.>
<தன்> 
அவர் இளம் பிராயத்திற்குத் திரும்பினால் தவிர, அவர் ’தம்’ அறைக்கு அல்லவா வர முடியும். 
<உந்தல்> ’உந்துதல்’என்பதன் இசுபெல்லிங் மிசுடேக்கா அல்லது கேரள கலாமண்டலம் வழங்கும் தமிழ்க் கொடையா?
சுவரின் மீது (இருந்த) ஒரு பித்தானை அழுத்த, ஒரு சிறு பகுதி சுழன்று திரும்பியது.
<(இருந்த)> இல்லாமல் இருப்பதுதான் நாலுகால் பாய்ச்சல் இலக்கியமா? நடைவண்டித் தடுமாற்றத்திற்கு மொழி முன்னெடுப்பு என்கிற தோரணமா?
ஒரே வாக்கியத்தில் இரண்டு ஒரு போட்டு எழுதுவது ப்ரூஃப் மிஸ்டேக்கா? இல்லை மொழியறிவின் போதாமையா? 
<ஒரு சிறு பகுதி> இதற்குப் பெயர் மொழி ஆளுமையா? அது என்ன சிறு பகுதியில் ஒரு – ஒரு? அண்ணாச்சியின் வட்டார வழக்கு அப்படித்தான் என்று அள்ளி விட துரதிருஷ்டவசமாகப் பேச்சுவழக்கிலும் இல்லை.
<காலிக் குப்பிகளைத் தொட்டுத் தொட்டு உடைக்காத ஒரு குப்பியைத் தேடி எடுத்தார். அதை இருதடவை தலைகீழாகப் பிடித்துக் குலுக்கிவிட்டுக் கோப்பையுடன், கட்டில் அருகே இருந்த டீபாயை அணுகி, மூங்கில் நாற்காலியில் சரிந்தார்.>
அத்துனை காலி குப்பிகளை சுழல் அலமாரியில் வைத்திருக்க, திறக்காததைத் தேடி எடுக்க, அவர் என்ன ஓஸியில் வாழ்பவரா? 
அது சரி அது என்ன உடைக்காத குப்பி? சீல் உடைக்காதது என்பது தொக்கி நிற்கிறதோ?
அண்ணாச்சி எடுத்தது சரக்கு பாட்டில்தானா?
<அதை இருதடவை தலைகீழாகப் பிடித்துக் குலுக்கிவிட்டு> 
சரக்கு பாட்டிலை எவனாவது தலைகீழாகப் பிடித்துக் குலுக்குவானா? எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏதோ கர்லாக்கட்டையைக் கையில் பிடித்திருப்பது போல அல்லவா தெரிகிறது.
<குடிக்குமுன் சில நிமிடங்கள் வெற்று யோசனையில் இருப்பது அவருக்குப் பிடிக்கும்>
ஆகவே அவர் குடிகாரர். கற்றுக் குட்டி அல்லர். இந்தத் தகவலை அழுத்திச் சொல்லக் காரணம், பின்னால் வருகிறது.
<தலையை உசுப்பியபடி கோப்பையை எடுத்தார்> 
உசுப்புதல் என்பது, ஒருவர் பிறிதொருவரை உலுக்கி எழுப்புதல் அல்லது மற்றவரை சீண்டுதல். எப்படித்தான் பார்த்தாலும் தன்னைத்தானே ஒருவரால் உசுப்பிக் கொள்ள அது என்ன தன்மகரந்த சேர்க்கையா?
தலையை உலுக்குவது என்பதை உசுப்புவது என்றுதான் அந்த வட்டாரத்தில் குறிப்பிடுவார்களோ?
<கோப்பையை எடுத்தார்.> <தண்ணீர் எடுக்கவில்லை என்பது ஞபகம் வந்தது>
சரக்கை எடுத்து கர்லாக்கட்டை சுற்றியதோடு சரி. இருமல் மருந்து குடிக்கும் முன் குப்பியைக் குலுக்கிய அனுபவம் போலும். உபயோகிக்கும் முன் நன்றாகக் குலுக்கவும். குலுக்கிவிட்டார்.
என்னதான் குப்பி மேல் அப்படி ஒரு மோகமோ! குப்பி குப்பி குப்பி என எத்துனை முறை. பள்ளி ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிற விஷயம். எழுத்தின் அரிச்சுவடி, ஒரு பொருள் குறித்த ஒரே சொல்லை திரும்பத்திரும்ப  உபயோகிப்பது வாசிப்பில் சோர்வைத் தரும். அதுவுமின்றி ஆசிரியனின் சொல் வறட்சியையும் காட்டிக் கொடுக்கும்.
தமிழின் பெரும் ஆளுமையின் குடிகாரன் எப்படிக் குடிக்கிறான் என்று பார்ப்போம்.
<கோப்பையில் நீர் ஊற்றி, அதில் ஐஸ் துண்டங்களைப் போட்டார்>
ஆழ்ந்த யோசனையில் பெருவட்டர் சரக்கு ஊற்றிக் கொள்ள மறந்துவிட்டாரோ. அதெல்லாம் இல்லை. எழுத்தாளர் எப்படிக் குடிப்பாரோ அப்படியேதான் கதாபாத்திரம் பரம்பரைக் குடிகாரனாகவே இருந்தாலும் குடித்தாக வேண்டும். எழுத்தாளர் குடிக்கெதிரானவர் அல்லது அடுத்தவர் குடிப்பதைப் பார்த்ததுகூட இல்லை எனில் அண்ணாச்சி வட்டரும் அனுமார் கோயில் பட்டர் போலவே அசமந்தமாக அருந்தியாக வேண்டும் என்பது அவர் கிரகச்சாரம்.
<அவை கரைந்து, மெலிந்து, கண்ணாடிச் சில்லுகளாக மாறி, மிதப்பதைக் கண்டபடி அமர்ந்திருந்தார்.>
இதை வாசிக்கக் கூடிய எழுத்தாளனாகத் துடிக்கும் ஆர்வலர்களின் பார்வைக்கு.
<மிதப்பதைக் கண்டபடி அமர்ந்திருந்தார்.> ’கண்டபடி’ போன்ற இரண்டு பொருள் தரும் வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. என் போன்ற கொணஷ்டை வாசகனுக்கு அதெப்படி குடிக்கும் முன்பாகவே கண்டபடி அமர முடியும்? குடித்தபின்தானே கோவணமும் முண்டாசும் ’கண்டபடி’ இடம் மாறக்கூடும் எனத் தோன்றி கதையுடன் ஒன்ற முடியாமல் போக வைக்கும். மிதப்பதைப் ’பார்த்தபடி’ அமர்ந்திருந்தார் என்பது தானே சொல்ல வருவது.
இவருக்கு இருக்கிற மொழிப் புலமைக்கு,எடுத்த எடுப்பிலேயே சங்க பாஷையில் எழுதி இருக்கலாமே?  
தண்ணியடிக்கையில் முதலில் ஐஸ் துண்டங்கள் போடவும் பிறகு தண்ணீர் ஊற்றவும். அப்புறமாகவே சரக்கு பாட்டிலின் மூடியே திறக்க வேண்டும்.
<பிறகு குப்பியை எடுத்து சரித்துப் பிடித்து அடைப்பைக் கழற்றினார்.>
பாட்டிலில் அடைப்பு இருக்க அது என்ன சாக்கடையா? சரக்கு பாட்டிலைத் திறப்பது ராக்கெட் விடுவதற்கு அடுத்தபடியாக எவ்வளவு சிக்கலான அறிவியல் நுட்பங்கள் நிறைந்தது என்பதை ஒரு கோட்பாடாகவே விளக்கும் நாவல் இது என்றுகூட இப்பகுதியைப் படிப்பவருக்குத் தோன்றக்கூடும்.
<அதன் அடிப்பகுதியை உள்ளங்கையால் ஓங்கி மோதினார்.>
மோதுதல் என்கிற வார்த்தை எந்த தருணங்களில் உபயோகிப்பது பொறுத்தமாக இருக்கும்? உள்ளங்கையால் அடிக்கலாம், அறையலாம், அலம்பிக் கொள்ளுவதில் இருந்து கிளப்பிக் கொள்ளுவது ஈறாக என்னென்னவோ செய்யலாம். ஆனால் மோதுவது?
<கார்க் தெறித்தது. நுரைத்து வழிந்தது. மணம் கம்மென எழுந்தது.>
இது என்ன ஆண் பெண் திருநங்கை என எல்லாப் பிரிவும் கலந்த வினோத சரக்காய் இருக்கும் போல இருக்கிறதே!
கார்க் இருந்தால் ஷாம்பெய்ன். அல்லது ஒய்ன். 
நுரைத்து வழிந்தால் ஷாம்பெய்ன் அல்லது பீர்.
அடிப்பகுதியை ஓங்கி மோதினால் பாட்டிலே கூடக் கையைவிட்டுப் பறக்க வாய்ப்பு உண்டு ஆனால் கார்க் தெறிக்குமா? ஆசிரியர் வணக்கத்திற்குறிய கருவிலே திரு என்பதால் கார்க்கு டர் ஆகி உள்ளங்கையால் அடிப்பகுதியை மோதியதில் தெறிக்க வாய்ப்புண்டா?
<குப்பியை விளக்கருகே தூக்கித் திரவத்தைப் பார்த்தார். மஞ்சள் குப்பிக்குள் கருஞ்சிவப்பாக இருந்தது.>
பிரஸ்தாப திரவத்தின் நிறம் கருஞ்சிவப்பு. ஆகவே ஷாம்பெய்ன் பீர் இரண்டும் டெப்பாசிட் இழந்தன. இது ரம் அல்லது ஒய்னாக இருக்கலாம். பிரச்சனை என்னவெனில் எவ்வளவு குலுக்கினாலும் ரம்மோ ஒய்னோ நுரைத்து வழியுமா?
<நீரில் அதை மெதுவாக விட்டார்>
அர்க்கையாமின்னு சொல்லிண்டே விடுங்கோ. இந்து ஞான மரபில் அர்க்கையாமியின் பங்கு மகத்தானது.
<திரவம் நீரில் மெல்லப் பரவுவது தெரிந்தது. நிறத்தின் உள்ளே பனிக்கட்டிகள் கரையாமல் மிதந்தன>
சித்த மின்னாடின்னா ஐஸ் துண்டங்கள் கரைந்து, மெலிந்து, சில்லுகளாக மாறி, மிதப்பதைக் கண்டபடி அமர்ந்திருந்தார்னு ஷொன்னார் ஆச்சார்யாள். அதுக்குள்ள மறந்துட்டரோ. 
ஐஸ் துண்டங்கள் பனிக்கட்டிகளானதோட இல்லாம கரையாமல் மொதக்கறதாமே! அதுவும் நிறத்தின் உள்ளே மொதக்கறதாமே? நெறம்கறது திரவத்தோடதுன்னா. 
ஐஸ் கட்டிகள் அதுக்குள்ள இருந்தான்னா <நிறத்தின் உள்ளே பனிக்கட்டிகள்> தெரியும். ஆனா விஞ்ஞானபூர்வமா திரவத்துக்கு உள்ளே பனிக்கட்டி மிதக்க முடியாதே! திரவத்துக்கு மேலன்னா ஐஸ் மொதக்கும். இது மெய்ஞானமோன்னோ! எதுதான் சாத்யமில்லை இமயமலை கூட விபூதி மலையா மொதக்காதோ?
<வாயருகே கோப்பையைத் தூக்கி ஒரு துளி உறிஞ்சினார்.>
ஸிப் பண்ணினார்ங்கறதை <ஒரு துளி உறிஞ்சினார்>னு மொழிபெயர்த்துட்டரோ.
<மூச்சு வழியாக அதன் எரிதலை வெளித் தள்ளினார்.> 
எக்ஸ்ப்ரெஷனெல்லாம் பாத்தா சாராயம் வார்னிஷ் ரேஞ்சுலன்னா இருக்கு.
<வயிறு கும்மென்று மேலெழுந்தது> 
என்னது ஒரு துளி உறிஞ்சினதுக்கேவா?
<ஒரே உறிஞ்சில் கோப்பையைக் காலி செய்துவிட்டு, ஏப்பம் விட்டார்.>
கோப்பையை எடுத்துக் கவுத்துக்குனார்ங்கறதையும் உறிஞ்சினார்ன்னேத்தான் ஸொல்வியா நைனா? இஷ்ட்ராவெல்லாங் கூடக் கண்ணுக்குத் தெரியிற ரேஞ்சுல இம்மாந் நேச்சரா எய்த நம்ம நைனாவ வுட்டா தமில்ல ஆருமே கெடியாதுன்றத்து எம்மாத்தரம் ட்ரூ இல்லே?
சரக்கோட ஆப்டர் எபெக்டை இன்னாமா எய்தறாரு பாரு வாஜ்ஜாரு!
<இன்னொரு கோப்பையை ஊற்றிக் கையிலெடுத்தபடி, தொலை பேசியை அணுகி, சுழட்டும் போதுதான் விரல்கள் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்>
இன்னாபா ஸொம்மா எதுங்கிட்டப் போனாலு இந்தாளு அண்கி அண்கீங்குராரு? அப்போ டீபாயை அணுகி இப்போ தொலைபேசியை அணுகி. வக்கப்பிலரிய இன்னா வக்கப் பிரின்னு நென்ச்சிக்ணாரா?
ஒர் லார்ஜ் உள்ள போய்க்கிது இன்னோன்னி எதுர்ல குந்திக்கிணுக்குது. அப்பாலிகா 
ஏக் தம் டெலிபோன்ல நான் ஷ்டாப் கான்வர்ஸேசன் ஓடுது அது முடிக்க ஸொல்லோ
<பெருவட்டர் மீதி விஸ்கியையும் விழுங்கினார். முகம் வியர்த்து விட்டது.>
ஸெகண்ட் லார்ஜு சொம்மாத்தானக் குந்திகிணு இருந்த்ச்சி. கான்வர்சேஸன் எடையிலக் கூட பேசிக்கிணே சரக்கை உற்ஞ்சுல. தம்மாங் குட்சி மிச்சம் வெச்சாதான மீதி. குடிகவே குடிகாமெ மீதிய எப்பிடி விய்ங்கினாராம்? புல்லாத்தான உள்ளார உட்டாருன்னுல்ல எய்தனும். கான்சண்ட்ரேஸன் ஒன்லி ஆன் மெய்ன் மேட்டர்ஸ். அண்ணாச்சிகளின் எய்ச்சி வீய்ச்சிண்ட்டா அல்லாரும் அத்தையேப் புட்சிகுவாங்கோ. ஆகா சரித்ர நிகய்ச்சி இன்னாவா கலையாய்க்கிதென்னு சேத்து சேத்து பட்சிகுவாங்கோ. 
குப்பியத் தூக்கி வெளக்குலப் பாத்தப்போ கர்ஞ்செவ்ப்பா இர்ந்தத்து கலர் மாறி மஞ்சளாயிட்ச்சா இல்ல விஸ்கி வட்டார்த்துக்கு வட்டாரம் வட்டார வயக்காட்டம் கலரும் மாற்மா?
மாங்காய்ப் பாலுண்டு 
மலைமேல் இருப்போர்க்கு
தேங்காய்ப்பால் ஏதுக்கடி – குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி
– குதம்பைச் சித்தர்.
(- மலைபோல் என்றும் பாடம்.)
குண்டலினி ஸித்திக்கப் பெற்ற எழுத்தாளர்கள் குடிக்காமலேயே உளற முடியும் என்பதைத்தான் அந்தக் காலத்திலேயே குதம்பைச் சித்தர் சொல்லிச் சென்று இருக்கிறார் போலும்.
ஆரம்ப எழுத்தாளர்களுக்கு: 
அனுபவத்தை எழுதுங்கள். அனுபவித்ததை எழுதுங்கள். அனுபவமே இல்லாததை பேரனுபவம் போல ஒரு போதும் பம்மாத்து பண்னாதீர்கள்.
அனுபவத்திற்காக மாறுவேஷமெல்லாம் போட்டு, காடு மலை நாடு நதி என்று நாயாய்த் திரிய வேண்டிய அவசியமே இல்லை.
தி.ஜானகிராமன் காட்டிய எளிய வழி போதுமானது.
எல்லா எழுத்தாளர்களிடமும் வழக்கமாய்க் கேட்கப்படும் கேள்வி தி.ஜாவிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் எந்த அலம்பலும் இல்லாதது.
நீங்கள் எப்படி கதை எழுதுகிறீர்கள்?
கண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்கிறேன்.

Leave a Reply