October 16, 2016 maamallan 0Comment
நேற்றிரவு ஏர்போர்ட்டில் ஏதோ பஞ்சாயத்தாக இருக்க வேண்டும். முன் தின நெடுந்தூர பைக் அலைச்சலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பியது அதிகாரியிடமிருந்து வந்த அழைப்பு. 

ரெண்டு மணிநேர வேலை. கொஞ்சம் ஆபீஸுக்குப் போகமுடியுமா.
இப்படி வினயமாகக் கேட்டாலும் போ என்கிற ஆணைதான் அது.
உங்க போன் கால்லதான் சார் எழுந்திரிக்கவே செஞ்சேன். ஹிஹி.
ஓகே ஓகே. எவ்ளோ நேரத்துல ஆபீஸ் போக முடியும். 
ஒன்னவர்ல சார். 
ஓகே. ஓகே. ரிமாண்ட் இல்லை. அரெஸ்ட் பெய்ல் புரொஸீஜர்தான். நீங்க போய் முந்தின டீமை ரிலீவ் பண்ணணும். ரெண்டு அரெஸ்ட். உங்களோட ***னும் இருப்பாரு.
ரைட் சார். 
போக முடியுமா என சொல்வதிலிருந்தே அவர் வரப்போவதில்லை என்பதை ஊகிக்க முடிந்தது. நேற்றிரவு நான் தூங்கிக்கொண்டு இருந்தபோது அந்த டீம் விழித்திருந்ததைப் போல இவரும், வலையுடன் கண்விழித்துக் காத்துக்கொண்டு இருந்திருப்பார் போலும்.
நன்றாக ’உட்கார்ந்திருக்கும்’ கதையை இன்றைக்கும் எழுத முடியுமா என்பது சந்தேகம்தான். இப்போதைக்கு ரெண்டு மணி நேர வேலை, குற்றம் சாட்டப்பட்டவன்களின் சொந்தக்காரன் வக்கீல் தோலான் துருத்தி என எவர் வேண்டுமானாலும் இதோ இதோ என இந்த ஞாயிறை ஜவ்வாக இழுத்துவிட்டுவிட முடியும் என்று உள்ளூர முனங்கிக்கொண்டபடி 7:45க்கு எழுந்தேன். 
அலுவலகம் போய், ஆச்சரியகரமாக எல்லாம் இலகுவாக ஓடி வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பினேன். 
அடையாரில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின், சற்றே உள்ளொடுங்கி இருக்கும் கேட்டின் வெளியே, ஒருவர் இடது கையால் ஒரு ஆளின் டி சர்ட்டைப் பிடித்துக் கொண்டு, மறுகையில் பற்றியிருந்த ஹெல்மெட்டால், ஆவேசமாய் மொத்திக் கொண்டிருந்தார். சாலையோரம் ஒரு பைக் சரிந்து கிடந்தது. அடிபட்டுக் கொண்டு இருந்தவனோ, தப்புதான் சார் சாரி சார் என்றபடி கெஞ்சிக் கொண்டிருந்தான். வண்டியை நடைபாதையை ஒட்டி நிறுத்திவிட்டு அருகில் சென்றேன். 
பஸ் ஸ்டாண்ட்ல, குழந்தைங்களோட ஒக்காந்திருக்கிற பொண்ணு கிட்ட போன் நம்பரா குடுக்குறே. 
இல்ல சார் நம்பர்லாம் குடுக்கலை சார். 
அடிங்… பொய்யா சொல்றே. 
இல்ல சார். 
திரும்பிப் பார்த்தவர், இவன் போன் நம்பரைக் குடுத்து போன் பண்ணுனு சொல்றான் சார் பொண்ணுகிட்ட.
யாருங்க எங்க இருக்காங்க. 
என் பொண்டாட்டி சார். அதோ அந்த பிஎஸ்என்எல் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்புல கைக்கொழந்தையோட ஒக்காந்து இருக்காங்க சார். அவங்க கிட்ட, இவன் போன் நம்பர் குடுத்து போன் பண்ணச் சொல்லி இருக்கான் சார். என்னைப் பார்த்ததும் சிட்டா பறந்துட்டான். தொரத்திக்கிட்டு வந்து புடிச்சிருக்கேன் சார்.
சுற்றிக் கூடி இருந்த அனைவரும் வாய் பிளந்தோம்.
ரோட்டில் டிராபிக் ஜாம் ஆக ஆரம்பித்து இருந்தது. அடிபட்டுக் கொண்டு இருந்தவனைப் பார்க்கக் கொஞ்சம் பெரியவனான அந்தக் கணவன் தொடர்பற்ற வார்த்தைகளைக் கூறியபடி. அவ்வப்போது அவனை ஹெல்மெட்டால் அடித்துக் கொண்டு இருந்தான்.
இருங்க போலீஸுக்கு சொல்லிடலாம் என்றபடி 100க்கு அடித்தேன். 
அடிபட்டுக் கொண்டு இருந்தவன் அடித்துக் கொண்டு இருந்தவன் காலைத் தொட்டு, மன்னிச்சி விட்டுடுங்க சார் என்றான். 
போலீஸ் கண்ட்ரோல் ரூம் சார். கால் பண்ணி இருந்தீங்களா. 
ஆமாங்க. இங்க எம்ஜிஆர் – ஜானகி காலேஜ் வாசல்ல ஈவ் டீஸிங். 
மதுரவாயலுங்களா. 
இல்லீங்க. இங்க. அடையார்ல பாலத்துக்கு முன்னாடி இருக்கே எம் ஜி ஆர் ஜானகி காலேஜ்.
ஓ அதுவா. சொல்லுங்க சார் என்னா விசயம். 
பஸ் ஸ்டாப்ல இருந்த லேடிகிட்ட எவனோ போன் பண்ணச் சொல்லி போன் நம்பர் குடுத்து இருக்கான் மேடம். 
ஆள் இருக்கானா ஓடிட்டானா
இல்லை மேடம் ஆள் மாட்டிக்கிட்டான்.
ஆளைப் புடிச்சி வெச்சிருக்கீங்களா. 
ஆமாங்க மேடம். அவங்க ஹஸ்பண்டே புடிச்சிட்டாரு. 
சரிங்க. சொல்லிடறோம். கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்துருவாங்க.
ரோடில் வேடிக்கை பார்க்க நிற்க ஆரம்பித்த டூ வீலர்கள் காரணமாய் நெரிசல் அதிகமாகி ஜெபமே ஜெயம் ஜெபக் கூடம் வரை வண்டிகள் நிற்கத் தொடங்கியிருக்க வேண்டும். பெட்ரோல் பங்க்கைத் தாண்டி டிராபிக் போலீஸ்காரர் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. 
கூடியிருந்தவர்களில் கொஞ்சம் வயதானவர் இன்னொருவரிடம் போலீஸுக்கு போன் போடு என்றார். 
இவுரு சொல்லிட்டாரு போல இருக்கே. 
என்ன இருந்தாலும் பப்ளிக்கைவிட கட்சிக்காரங்க சொன்னா வெயிட்டுதான் என்றார். 
சொல்லிட்டீங்க இல்ல சார் என்று அவருக்குச் சற்று இளையவர் என்னிடம் கேட்டார்.
ஆமாங்க சொல்லிட்டேன். அனுப்பறோம்னுட்டாங்க. 
கொஞ்சம் பிடிங்க சார் இவனை என்றான் கணவன். அவன் கையைப் பிடித்துக் கொண்டேன். படக்கென குனிந்து, கீழே கிடந்த அவனது வண்டியின் சாவியை எடுத்துப் பாண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் கணவன். நான் அவன் கையை விடவும், I ‘M SINGLE என்றெழுதியிருந்த அவனது டிசர்ட்டின் கழுத்துப் பகுதியைப் பழையபடி கொத்தாகப் பிடித்துக் கொண்டான். 
டிராபிக் போலீஸ் வந்தார். என்னாச்சு. கும்பல் கூடாத போய்க்கிட்டே இரு டிராபிக் ஜாம் ஆகுது பாரு என்று சாலையைப் பார்த்துக் கையை வீசவும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற டூ வீலர்கள், தயங்கி நகர்ந்தன. போலீஸ் வந்ததும் கணவன்  டிசர்ட்டை விட்டுவிட்டான்.
என்னாச்சு 
இப்போது, நடந்ததைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னான் கணவன். ஒய்ஃபை குழந்தைங்களோட பஸ் ஸ்டாப்ல உக்கார வெச்சிட்டு, ஓனர் ஆபீஸுக்குப் போனேன் சார். வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சி. அதுக்குள்ள எதிர் பக்கத்துலேந்து, போன் பண்ணுன்னு சைகை காட்டி இருக்கான் சார்.
போன் நம்பர்லாம் குடுக்கலீங்க சார் 
அடிங்… பொய்யா சொல்றே என்றபடி ஹெல்மெட்டை ஓங்கினான். 
போலீஸ் வந்த பெறகு அடிக்கக் கூடாது என்றார் போலீஸ்காரர். வயதானதவராக இருந்தாலும் வாட்டசாட்டமாக இருந்தார். போதாக்குறைக்கு அவர் நடைபாதை மீது வேறு நின்றுகொண்டு இருந்தார். நாங்களோ கல்லூரி கேட்டின் முன்னிருந்த சாலையுடனான சமதளத்தில் இருந்ததால் அவர் இன்னும் உயரப்பட்டுத் தெரிந்தார். அவரது சீருடையுடன் இதுவும் சேர்ந்து கொண்டதால் அவரது ஒவ்வொரு வார்த்தையும் வெயிட்டேறி இருந்தது. 
எந்த ஏரியாடா நீ 
முகப்பேர் சார் 
முகப்பேர்ல இருக்கிறவனுக்கு இங்க என்னடா வேலை 
பெயிண்டர் சார். அடையார்ல காண்ட்ராக்ட்டு விசயமா ஒரு கடைக்கு வந்தேன் சார் என்றபடி பெயிண்ட் ஷேடுகளின் கேட்லாக்கைக் காட்டினான். 
ஏண்டா உனக்குப் பொம்பளை கேக்குதா. வேணும்னா லைட்டவுஸ் பின்னாடி போவேண்டிதுதானே என தம் உடலின் நடுப்பகுதியைக் காட்டி ஏதோ சைகை செய்தார். அந்தக் கணவனிடம் தலையிலும் தடுக்கப் பார்த்ததில் கைகளிலுமாக ஹெல்மெட்டால் வாங்கிய அவ்வளவு அடிகளையும் விட போலீஸ்காரரின் அந்தச் சைகை அவனை பலமாகத் தாக்கியிருக்க வேண்டும் சுருங்கிப் போனான். 
கட்சிக்காரன் கால் என்றால் வெயிட்டு என்று சொன்னப் பெரியவர் அவனிடம் கேட்டார். 
கல்யாணம் ஆயிடுச்சா. 
கல்யாணமாயி குழந்தையெல்லாம் இருக்குங்க என்றான் அவன். 
பார்ரா. 
இதற்குள் ஒரு காக்கிச் சீருடை போலீஸ்காரர் சாலையைக் கடந்து வந்தார். எதிர்ப்புறம் போலீஸ் பெட்ரோல் வண்டி நின்றுகொண்டு இருந்தது.
வந்த போலீஸ்காரரும், நடைபாதை மேலேயே நின்றுகொண்டு, என்ன மேட்டர் என்றார். 
வெயிட்டான கட்சிக்காரரான பெரியவர் சொல்ல ஆரம்பித்தார். 
பாதிக்கப்பட்டவர் சொல்லட்டும் என்றார் டிராபிக் போலீஸ்காரர். 
இரண்டு வரி கேட்டுவிட்டு சரி அவன் வண்டி எது சாவி எங்க என்றார் காக்கிப் போலீஸ். கணவன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தான். 
ஒய்ஃப்புகிட்ட வந்து நான் பேசறதைப் பார்த்ததும்  பட்டுனு வண்டியை எடுத்துக்கிட்டு பறந்துட்டான் சார். தொரத்திக்கொட்டு வந்து மடக்கிப் பிடிச்சேன் என்றபடி பேண்ட்டை முழங்காலுக்குத் தூக்கிக் காட்டினார். முழங்காலின் முன்புறம் சின்ன ரத்த காயம் இருந்தது. 
’ஐ யாம் சிங்கில்’ இப்போது போலீஸ்காரரின் கைப்பிடியில், அக்கம் பக்கம் பார்த்தபடி டபுளாக சாலையைக் கடந்து  பெட்ரோல் வண்டியில் போய் உட்காரவைக்கப்பட்டது. பின்னாலேயே கணவனும் சென்று கார் கதவருகில் குனிந்து தலையை ஆட்டிவிட்டுத் திரும்பி வந்தான்.
ரொம்ப தேங்க்ஸ் சார் என்று என்னிடம் சொல்லிக்கொண்டவன்,  சைட் ஸ்டாண்ட் போடப்பட்டிருந்த தனது பிங்க் கலர் பெப்பை எடுத்துக்கொண்டு விருட்டெனப் பறந்தான். 
அவன் சென்ற வேகம் கொஞ்சம் அதிகம் போலப் பட்டது. எதற்கு இவ்வளவு வேகம், ஆளைப் போலீஸில் கொடுத்த பின்புதான் அவனுக்கு மனைவி குழந்தைகள் நினைவே வந்திருக்கும்போல என்று எண்ணியபடி என் பைக்கைக் கிளப்பினேன்.
அடையார் பாலம் கடந்து மேம்பாலம் அடியில் அவன் வண்டி திரும்புவது தொலைவில் தெரிந்தது. 
நேராகச் சென்று ஆவின் அருகில் இடதுபுறம் என் வீட்டுக்காய்த் திரும்ப வேண்டிய நானும் பாலத்தடியில் அவனைப் போலவே U டர்ன் எடுத்து அவனைத் தொடர்ந்தேன். ஓரளவுக்குமேல் சலையின் வளைவு காரணமாகவும் அவனது வேகம் காரணமாகவும் என் பார்வையில் இருந்து அவன் மறைந்துவிட்டிருந்தான்.
ஒரு வேளை அந்த சம்பவம் முழுக்கவே அவன் மனைவியின் அதீத கற்பிதமாக இருந்தால் என்னாவது என்கிற எண்ணம் ஒரு கணம் ஓடி மறைந்தது.
வண்டியை முடுக்கினேன். தொலைவில் நீலக் கட்டம் போட்ட சட்டையுடன் அவனும் அவனது பிங்க் கலர் வண்டியின் முன்புறம் ஏறிக்கொண்டிருந்த ஜீன்ஸ் பேண்ட் போட்ட குட்டிப் பையனும் தெரிந்தனர். அருகில் சென்று வண்டியை நிறுத்தினேன். கைக் குழந்தையை இடுப்பில் வைத்து பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த பூசியதுபோலிருந்த அவன் மனைவி துடைத்து வைத்ததைப் போலப் பளிச்சென இருந்தாள். 
பாருங்க சார் என்று அவளிடமிருந்த துண்டுப் பேப்பரை வாங்கி என்னிடம் நீட்டினான். 
வீட்டைவிட்டு எந்த வேலையா கிளம்பினமோ அந்த வேலையைப் பார்க்காம,  நடுவுல என்ன கொடுமைங்க இது என்றேன். 
என்னா பண்ணுறது. ஸ்டேசனுக்கு வரச் சொல்லியிருக்காங்க. 
இப்பப் பட்டிணப்பாக்கம் வேற போகணுமா குழந்தைக் குட்டியோட
இல்லை E4 அபிராமபுரம் போலீஸ் ஸ்டேசன் போகணும். பரவாயில்லை சார் என்ன பண்ணுறது போய்த்தான் ஆகணும். ரொம்ப தேங்க்ஸ் சார் கடைசி வரைக்கும் கூட இருந்தீங்க என்றான். 
இதெல்லாம் ஒரு விஷயமா சீக்கிரம் கிளம்புங்க பாவம் என சொல்லி கைகொடுத்துவிட்டு வீட்டை நோக்கிக் கிளம்பினேன்.  
மலர் ஹாஸ்பிடலைத் தாண்டும்போது, ரோடைக் கிராஸ் பண்ண இருந்த அந்த வயதான டிராபிக் போலீஸ்காரர், அடையாளம் கண்டுகொண்டு கையசைத்தார். வண்டியை நிறுத்தி, நிஜமாவே போன் நம்பரை பிட்டு பேப்பர்ல எழுதிக் குடுத்துருக்கான் சார் என்று காட்ட ஐபோனை எடுத்தேன். ஒரே எண்ணிலிருந்து மூன்று மிஸ்டுகால்கள் எனக் காட்டியது அது. 
போன் நம்பர் எழுதியிருந்த போட்டோவைப் பார்த்ததும் முகத்தை இறுக்கியபடி தேவடியாப் பையன் என்று சொல்லிவிட்டு சாலையைக் கடந்தார் டிராபிக் போலீஸ்காரர்.
ஆலமர வளாகத்தினருகில், அடர்ந்த நிழலில் வண்டியை ஓரம்கட்டி, வந்த எண்ணை ட்ரூ காலரில் போட்டுப் பார்த்துவிட்டு, அந்த எண்ணுக்கு அடித்தேன். 
அடையார் ஸ்டேஷன் எஸ்.ஐ பேசறேன் சார். 100க்குக் கால் பண்ணியிருந்தீங்க போல. இந்த நம்பரைக் குடுத்தாங்க. என்ன மேட்டர் சார் என்றார். 
கதைச் சுருக்கம் சொன்னேன். அப்பப் போலீஸ் வந்து கூப்டுக்கிட்டுப் போயிட்டாங்க இல்லையா என்றார். ஆமாம் எனக்கூறி நான் இன்னார் என்பதையும் கூறினேன். ஆகா நல்லது சார். எதுவா இருந்தாலும் கூப்பிடுங்க சார் என்றார். 
அம்மா ஆஸ்பித்திரியில் படுத்திருக்கும்போதும் 100 இப்படி வேலை செய்கிறதே என ஆச்சரியமாக இருந்தது. 
மேற்பார்வைக்கு என எவருமே இல்லாவிட்டாலும், எதுவொன்று தன்னால் இயங்கிக்கொண்டு இருக்கிறதோ அது மட்டுமே தன்னை எஸ்டாப்ளிஷ்மெண்ட் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று எப்போதோ சி. மோகன் சொல்லியிருந்த சொற்றொடர் நினைவுக்கு வந்தது. 
எப்போது கிளப்பினேன் என்றே தெரியவில்லை. என் மோட்டார் சைக்கிள் வீட்டை நோக்கி அதுவாகப் போய்க்கொண்டு இருந்தது.

Leave a Reply