September 27, 2016 maamallan 0Comment
இன்று மதியத்தைத் தாண்டி 4 மணி வாக்கில் கைபேசியில் அழைத்த பெண்மணி கூறினார், என்ன அநியாயம் நடக்கிறது எனப் பாருங்கள் என்றார். 

விடியற்காலை 4 மணிக்கே அலாரம் வைத்தெழுந்து 5 மணிக்குக் குழுமியாக வேண்டியபடியான வேலை இன்று. எங்கள் வேலையில்தான், எந்த ஊரிலோ இருக்கும் தென்னை மரத்தில் ஓடிய தேள் பிடிபட்டால் அது குடியிருக்கும் சூக்கும பொந்து வேறு ஏதோ ஒரு ஊரிலிருக்கும் பனைமரத்தில் அல்லவா இருந்துகொண்டிருக்கும். ஒரு வழியாய் வேலை முடிந்தாலும் இன்னும் பல மைல்கள் தாண்டிய பிறகுதான் நகரத்து உணவு என்கிற நிலையில், இருந்த கொஞ்சநஞ்ச சக்தியைத் திரட்டி என்ன விஷயம் என்றேன் அவரிடம். 
எவனோ ஒரு ஓலா டிரைவர் எதோ ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டான் என்று, இன்றைய நாளிதழில் வெளியான செய்தியை வைத்துக் கொண்டு நீங்கள் செய்த நல்ல காரியத்தை, எல்லோருமாய்ச் சேர்ந்துத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். 
‘அந்த’ ஓலா டிரைவர் அப்பாவி. உழைத்த கூலியைக் கேட்டதை அநியாயமாக பிளேட்டைத் திருப்பிப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டானே அநியாயமாக தண்டிக்கப்பட்டதற்காக ஒரு அப்பாவி கிரிமினல் ஆகிவிடக் கூடாதே என்றுதானே நீங்கள் நிதி திரட்டிக் கொடுத்தீர்கள். அதே போல, இவனுக்கும் நிதி திரட்டிக் கொடுங்கள் என்று, அந்த ஓலா டிரைவருக்கு உதவிய அனைவரையும் இழித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்றார். 
உடனடியாகத் தோன்றியது, இழித்துப் பேசிவிட்டுத்தான் போகட்டுமே என்பதுதான். 
என் மீது சாட்டப்பட்ட புகாரின் பேரில் காவல் துறைக்குச் செல்ல வேண்டி வந்த சமயத்தில், ஒரு உயர் அதிகாரி கூறியதுதான் நினைவுக்கு வந்தது. 
பொதுவாக இந்த சீண்டல்கள் எல்லாமே, உங்களை எப்படியாவது தூண்டி, ஏதாவது தப்பித்தவறி நிகழ்ந்துவிட்டால் அதற்கு உங்களைப் பொறுப்பாக்கிப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இதற்கு நீங்கள் ஒருபோதும் இரையாகிவிடாதீர்கள். உங்கள் நலம் விரும்பி என்கிற முறையில் இதைச் சொல்கிறேன் என்றார்.
பிராமண வீடுகளில், வேலயற்ற கிழடு கட்டைகளின் சண்டை பெரும்பாலும் இப்படியாகத்தான் இருக்கும். ஏதாவதொன்றுக்கு எதாவதொன்றை எதாவதொன்று வெகண்டையாய்ச் சொல்லும். அதற்கு மற்றது ஜாடையாய் எதையாவது சொல்லும். அருகிலிருந்து பார்ப்போருக்குக் கூட இது ஏதோ தொலைதூரத்தில் நடப்பது போலத் தோன்றும். கொஞ்சம் கொஞ்சமாய் நேரமாக ஆக, சண்டை வலுத்து, உரக்கும் போது, அருகில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உறைக்கத் தொடங்கும். இந்தச் சண்டைகள் பெரும்பாலும் இறுதியில் கிழவியின் கண் கசக்கலில் வெற்றிகரமாய் முடியும். 
இதுதான் ஃபேஸ்புக்கிலும் நடக்கிறது என்பது, நன்றாக கவனித்துப் பார்ப்போருக்குத் தெரியும். அதுவும் இந்த அக்கப்போர்களின் வீராங்கனைகள், பிராமணப் பெண்ணீய ஆப் பாயில்களாக இருந்தால், குரங்கு பிடித்த பாம்பாக, தேய்த்து தேய்த்து தன் கை முழங்கை முட்டி வரை தேய்ந்து போயிருப்பதைக் கூட உணராமல் கையில் சிக்கிய பாம்பை தேய்த்தே அழித்துவிட வேண்டும் என்கிற ஆத்திரத்தில் ஈடுபட்டிருக்கும்கள்.
அந்த ஓலா ஓட்டுநருக்கு, 2.43 லட்சம் திரண்டதால் விழுந்தது சாதாரண அடியல்ல. விளம்பர வெறிகொண்ட ஒவ்வொரு ஜன்மத்தின் மீதும் விழுந்த அடி. தாங்களே உண்மை என்று ஸ்தாபிக்க நினைத்து, தங்கள் பலத்தை நிரூபிக்கக் கிடைந்த ஆகச் சிறந்த வாய்ப்பாகக் கருதி, ஜெயிலுக்கு அனுப்பி வெற்றிக் கொடி நாட்டி வைத்தால், அவனுக்கு இவர்கள் வாழ்வு கொடுத்துத் தூக்கி நிறுத்தி, நம்மை செல்லாக் காசாக ஆக்கிவிட்டார்களே என்கிற, போலிப் பெண்ணீயத்தின் ஈகோவின் மீது விழுந்த சம்மட்டி அடியை அவ்வளவு சுலபத்தில் தாங்கிக்கொள்ள முடியுமா அவர்களால். அதுதான் போலீஸ் ஸ்டேஷனுக்கு என்னை இழுத்து அவமானப்படுத்திவிடப் பார்த்தது. 
”பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் மானம் – அவமானம் பார்க்கக் கூடாது” என்கிற பெரியாரின் மேற்கோள் தெரிய வருவதற்கு முன்னாலிருந்தே, எனக்குச் சரியெனப் பட்டதற்காக எந்த அவமானத்தையும் ஏற்கத் தயாராக இருந்தவன் நான். 
விமலாதித்த மாமல்லனாக நான் எழுதியவற்றின் மீதான புகாரின் முதல் வரியே இன்ன அலுவலகத்தில் இன்ன பதவி வகிக்கும் இவன் என இருப்பது என்ன நியாயம் என்பது அந்த ஆண்டவளுக்கே வெளிச்சம். போலீஸில் புகார் கொடுத்தால் என் வேலைக்கு உலை வைக்க முடியுமா என்று முயன்று பார்ப்பது உயர் ரக பெண்ணீய அறம் போலும். 
நான் VRS  கொடுத்தவனாகவோ அல்லது 60 வயதுக்கு வந்து ஓய்வு பெற்றவனாகவோ இருந்தால் புகாரை இப்படித் தொடங்கி இருப்பார்களா. அப்போது என்னை ஒரு எழுத்தாளனாகவோ அல்லது குறைந்தபட்சம் ஒரு குடிமகனாவோதானே எதிர்கொண்டாக வேண்டும். பிரச்சனை யாருக்கும் யாருக்கும். விளம்பர வெறிக்கு பலியானவனுக்கு உதவ வந்தவன் எழுத்தாளனா அரசு ஊழியனா. இந்த விவகாரத்தில் அரசு ஊழியன் எங்கிருந்து வருகிறான். எனக்கு எப்படியாவது பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். எழுத்தாளனாக எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அந்த ஓலா டிரைவரைப் போலவே என்னையும் உள்ளே தள்ள முடிந்தால் என் வேலையைக் காலி பண்ணிவிடலாம் என்கிற நப்பாசையின் பாற்பட்ட அற்பத்தனமன்றி இது வேறு என்ன. 
அப்பன் செத்து கருணை அடிப்படையில் கிடைத்த வேலையை, ஆறே மாதத்தில் தூக்கியெறிந்து, 22 வயதில் காவியுடுத்து வெளியேறியவன். அடுத்தமுறை அடுத்த மாதத்திலேயே லாஸ் ஆப் பேயில் கிளம்பியவன். முதல் முறை என்னைப் போக விடாமல் தடுத்தாட்கொண்டவர் அப்போது நிலக்கோட்டையில் இருந்த வண்ணதாசன். இரண்டவது முறை முட்டிக்கொண்டு நின்ற இடம் சுந்தர பீடம். இரண்டு முறையும் வேலை போகவில்லை. வேலையைப் போக்கிக்கொள்ள என்னவெல்லாம் உண்டோ அத்தனைக் காரியங்களையும் இந்த 34 வருடங்களில் பலமுறை நானே முயற்சித்தும் பத்தில் இருக்கும் சூரியன் வேலை கூட டைவர்ஸ் ஆகாதவண்ணம் பார்த்துக் கொள்கிறான். அது ஜாதக விசேஷம். அதற்கு நானென்ன பண்ண.
எல்லா மதத்தவர்களும் இருக்கும் பொது இடமான அரசு அலுவலகத்தில் புட்டபர்த்தி சாய் பாபாவின் பஜனையை நடத்தக் கூடாது என்பதற்காகத் தனி ஒருவனாக, 1992ல் அன்றைய செண்ட்ரல் எக்ஸைஸ் கலெக்டராக இருந்த பெண்மணியின் பிடிவாதத்தை எதிர்த்துப் போராடினேன். இதை இன்று இந்த வாதத்துக்காகச் சொல்லவில்லை. தீக்குள் விரலை வைத்தால்… என்று Sunday, April 24, 2011 அன்றே எழுதி வைத்திருக்கிறேன். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதெல்லாம் சரி, இதில் எங்கிருந்து வந்தது மான அவமானம் என்கிறீர்களா. 
சாய் பாபா பஜனை நிறுத்தப்பட்டபின் ஒரு நாள், கூறினார் ஒரு நண்பர். அந்தப் போராட்டத்தில் தார்மீகமாய் என்னை ஆதரித்த, என் முகத்துக்கெதிரில் பாராட்டிய என் பிராமணரல்லாத நண்பர்கள் என் பின்னே என்ன பேசினார்கள் என்று. 
அந்த நண்பரிடம் நான் கூறினேன்.
நான் அவர்களுக்காகப் போராடவில்லை. அவர்கள் பாராட்டுகிறார்கள் என்று பூரித்துப் போயும் போராடவில்லை. மேலதிகாரிகள் என் மீது அதிருப்தி அடைவார்களே என்று கவலைப்பட்டுக்கொண்டு போராடாமலும் இருக்கவில்லை. அவர்கள் செய்வது சரியில்லை என்று எனக்குப் பட்டது. அதை எதிர்த்துப் போராடுவதே சரியெனப் பட்டது. எனவே போராடினேன். அதிகாரத்தின் அதிஉயர் மட்ட ஆதரவுடன் நடந்த பஜனையை நிறுத்தினேன். உண்மையில் நான் யார் என்பதை இப்படித் தன்னந்தனியனாய் நின்று, வாழ்க்கையில் போராடிப் போராடியே கண்டடைகிறேன். உண்மையில் இதை நான் யாருக்காகவும் செய்யவில்லை. எனவே யார் என்ன பேசினாலும் என்னை எவ்வளவு இழித்துரைத்தாலும், இழிந்தோர் இழிப்பு எனக்கு மெடல் என நினைத்துப் போய்க்கொண்டே இருப்பேன் என்றேன். 
இப்போதுதான் தெரிகிறது மத்திம வயது உடலில் இருக்கும் கிழட்டு மனங்களின் எதிர்பார்ப்பு என்னவென்று.
இத்தனை நாட்களும், தங்களை நிரூபித்துக் கொள்ளவும் என்னைப் பொய்யன் என்று ஆக்கவும், ஏதாவது ’அசம்பாவித சம்பவம்’ நடக்காதா என்று இந்த ஆப் பாயில்கள் எல்லாம், வன்மத்தோடும் காழ்ப்போடும் காத்துக்கொண்டு இருந்திருக்கின்றன போலும்.
மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியறுத்தால் போதும் எனத் திருப்திப் படும் சீரியல் மாமியார்களைப் போல இருப்பார்கள் போலும் இவர்கள். இவனைப் பொய்யனாக்க எவள் ரேப் பண்ணப்பட்டாலும் பரவாயில்லை என்பதுதான் எவ்வளவு உயர்ந்த பெண்ணீய லட்சியம். 
ஒரு டிரைவர், உழைத்த கூலியைக் கேட்டதால் உண்டான வாய்த் தகறாருக்கு, அவனை அநியாயமாக ஜெயிலுக்கு அனுப்பியதைப் போய் ஆதரித்தோமே என்கிற குற்ற உணர்ச்சி துளிகூட இல்லாமல், இப்ப என்ன ஆச்சு பாத்தியா என்று எனக்கு வவ்வவ்வே காட்டுகிறார்களாம் தாங்களே சரி என்று சரித்திரம் நிரூபித்து விட்டதாக.
நாங்கள் நிதி திரட்டி மறு வாழ்வு கொடுத்த ‘அந்த’ ஓட்டுநரா இந்தத் தப்பான காரியத்தில் இறங்கினான். அப்படிச் செய்திருந்தால் அல்லவா, இவனைப் போய் ஆதரித்தீர்களே என்று எங்கள் முகத்தில் கரியைப் பூசுவதோ அல்லது அறைவதோ சரியானதாக இருக்கும். இங்கேக் குற்றமிழைத்தவன் அவனல்ல எவனோ ஒருவன் என்கிறபோது எங்கள் செயல் எப்படி தவறானதாகும். 
ஜெயிலில் என்ன நடந்திருக்கும் என்று கொஞ்சமாவது கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா உங்கள் கொசு மூளையால்.
எந்தத் தவறும் செய்யாத நாம், இப்படி உள்ளே இருக்க நேர்ந்துவிட்டதே என்கிற புழுக்கத்தை வேதனையை, சிறையில் இருந்த அந்தப் பதினாறு நாட்களும் உன்னால் எப்படி சமாளிக்க முடிந்தது என்று ஒரு முறை கைபேசியில் கேட்டேன். 
உள்ள எத்தினியோ பேர் என்னென்னவோ சொன்னானுங்க சார். நீ தப்பே பண்ணலைனா, வெளிய போனதும் அந்த அம்மாள சும்மா விடக்கூடாதுனு என்னென்னவோ சொன்னானுங்க சார். நாந்தான் நமக்குக் காப்பாத்த அம்மாவும் தம்பியும் இருக்காங்க, அவங்க நாம சொன்னதை சரியா காதுல வாங்கிக்காம தப்பா நெனச்சி இப்படி செஞ்சிட்டாங்கன்னு நெனச்சிக்கிட்டு, எவன் சொன்னதையும் காதுல வாங்கிக்காம கம்முனு இருந்துட்டேன். 
எல்லோருக்கும் சுலபமாகக் கைவந்துவிடக்கூடிய மனநிலையல்ல இது. ஒன்றுமில்லாத உங்களின் வெற்று வெங்காய ஈகோ அடி வாங்கியதையே உங்களால் தாங்கிக் கொள்ள முடியாமல், எந்த ஓலா டிரைவராவது யாரையாவது ரேப் பண்ணமாட்டானா, நாமே சரி நாம் சொன்னதே சரி என எம்பி எம்பிக் குதிக்கலாமே எனத் தயாராய்ப் பிணந்தின்னிக் கழுகுகள் போலக் காத்துக் கொண்டு இருக்கிறீர்களே. 
இதற்குப் பேசாமல் ஏர்வாடிக்குப் போய், என் கையோ காலோ அல்லது என் உடலின் ஒரு பக்கமோ விழுந்துவிடும்படியாக, ஒரு திறமையான மாந்த்ரீகராகத் தேடி, எனக்கு சூனியம் வைத்து விடுங்கள். அப்படியாவது உங்கள் ஆன்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும். என்னை எழுதவிடாமல் செய்வதற்கு, போலீஸில் புகார் கொடுப்பதைவிட எஃபெக்டிவான வழி இதுதான். ஆல் தி பெஸ்ட்.

Leave a Reply