February 22, 2011 maamallan 1Comment
இன்று காலை அழியாச்சுடர்கள் தளத்தில் படுகை என்கிற ஜெயமோகனின் சிறுகதை வலையேற்றப்பட்டது. இந்தக் கதையை விட இது சிறுபத்திரிகையொன்றில் வெளியானத்தும் அதன் பின்புலமும் இன்னும் சுவாரசியமானவை. அவை கடைசியில். இப்போது கதை. இதுவரை நீங்கள் இந்தக் கதையை வாசிக்கவில்லை என்றாலோ அல்லது வாசித்து வெகுகாலம் ஆகிவிட்டது என்றாலோ தயவு செய்து இப்போது படியுங்கள். அப்புறம் என் கட்டுரையைப் படியுங்கள். அது தான் ஒரு படைப்பாளிக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச தார்மீக முக்கியத்துவம்.
படுகை (1987)- ஜெயமோகன் 
கதையைப் படித்து முடித்துவிட்டீர்கள் அல்லவா? எப்படி இருக்கிறது?
தலையைச் சுற்றிக் கிறங்க அடிக்கிறதா? சபாஷ். 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தவருக்கு, 1987ல் 25 வயது. அந்த வயதிற்கு மொழி பின்னி விளையாடுகிறது என்பது பெரும் ஆச்சரியமில்லையா? அதுவும் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவருக்கு இதைச் சாதனை என்றே சொல்ல வேண்டும் இல்லையா?
கதை எதைப்பற்றியது?
பேச்சிப் பாறையில் அணை கட்டுவதைப் பற்றியது. 
அணை எப்போது கட்டப்பட்டது? 
The reservoir was formed by the construction of the Pechiparai Dam, which was built across the River Kodayar about a mile below the confluence of the tributaries Kallar, Chittar and Kuttiyar. It was built during the period 1897 – 1906 by the European Engineer, Mr Minchin, during the reign of the Travancore Maharaja Moolam Thirunal
ஓ ஜெயமோகன் அவதரிப்பதற்குக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பான வரலாற்று நிகழ்வு. இப்படி எல்லாம் சரித்திரத்துடன் சரஸமாடி கற்பனித்து உற்பவிக்க அவரை விட்டால் யார் இருக்கிறார்கள் தமிழ் இலக்கியத்தில். சுஜாதாவாலேயே புகழப்பட்ட கதை என்றால் சும்மாவா? 
சரி கதை என்ன. 
அணை கட்டப்படுவது.
சரிய்யா அணை கட்டப்படுவது என்பது ஒரு நிகழ்ச்சி. அதில் கதை எங்கேய்யா இருக்கிறது?
அதான் அனைகட்டப்படுகிறது என்பது தானே கதை.
அடேய் அருந்ததி ராய் மாதிரியான குருவி மண்டையா! சொல்றதை நிதானமாக் கேளு! டேய் மொதல்ல கதை எங்க ஆரம்பிக்கிது?
வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோற்சிற்பம் போல உடம்பு அவருக்கு. எண்பதிலும் முறுக்கம் தளராமைக்குக் காரணம் கள்ளே என்பார். பனை ஓலைகள் உரசும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் இரவுகளில், இலை நிழல்கள் நிலவொளிமீது விரிந்து அசையும் களத்து மே ட்டில், அவர் பெயருடனேயே நினைவில் உதிக்கும் அந்த வினோத பாணியில் கால் மடக்கி அமர்ந்து, முன்னும் பின்னும் அசைந்தாடி, உடும்புத்தோல் உடுகை மூன்று விரல்களால் மீட்டி, எங்களூரின் எழுபது வருடக் கதையைப் பாடுவார்.
அடேய் இந்த டகால்டி வேலைதானே வேணாம்ங்கறது. சரி சிங்கிங்கிறவன் என்னான்னு சொல்லி சிங்கி அடிக்கிறான்?
கதைய சொல்லுராரு அண்ணே! அவுரு கதை எப்புடிச் சொல்லுவாருங்கறதைப் பத்தி டிச்க்ரிப்ச்சன் அண்ணே!
என்னாது?
டிச்க்ரிப்ச்சன். டிச்க்ரிப்ச்சன்.
சரி. அவுரு யாரு? 
பறையரு. அதான் அவுரு சம்சாரம் கூப்புடுது இல்லே! 
உசுப்புவாள். “வல்ல காரியம் உண்டுமா, இஞ்ச வந்து கெடக்கியதுக்கு ? பனியோ தீனமோ வந்தெங்கி ஆருக்கு நட்டம் ? இனி நான் காணட்டு. பிலேய் சிங்கி, பறப்பயலுக்க ஒறக்கத்தைப் பாரு. பிலேய் . . .” என்று கத்துவாள்.


எங்க இருக்காரு?
பேச்சிப்பாறையிங்கிற மலையில இருக்காருண்ணே!
நாட்டு வாசியின் வாசம் கூடப் படாத பேச்சியின் ராச்சியம் அது. பிரம்மபுத்திரி பேச்சி மலைக்கு அரசி. ஆருக்கும் அடங்காத பேச்சியை அடக்க வந்தவன்தான் செம்பன்துரை. 
டேய் ஒண்ணா மலையின்னு சொல்லு இல்லே அந்த மலையில வாழறவங்களை மலைஜாதி பழங்குடிகள்னு சொல்லு. ஷெட்யூல்ட் க்ளாஸ்ஸுக்கும் ஷெட்யூல்ட் ட்ரைபுக்கும் கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்டை மாத்தற டகால்டி வேலை செஞ்சே மவனே கம்பி எண்ணணும்.
ஆமா பொல்லாததக் கண்டுபிடிச்சீங்க. என்னண்ணே சாதியோடு புழங்கறவரு ஜெயமோகன். அவருக்குத் தெரியாததா? இதப்பாருங்க சாதி பற்றி மீண்டும்னு யூன்வ்ர்ச்சிடிக்கே சொல்லிக் குடுக்றாரு பாருங்க 

நாகரீக மனிதன் இனக்குழு அடையாளங்களை மறப்பது எப்படி ஒரு மிக அடிப்படையான தேவையாக இருக்கிறதோ, அதைப் போலவே நேர்மையாக ஒரு மனிதன் மதத்தையும் அது குறித்த தன்னுணர்வையும் மறக்க வேண்டியது தேவைகளின் நீட்சியாகும். சாதி சமூகத்தில் உள்ளீடு செய்யப்படும் ஒரு புறக்காரணியாக இருந்து, பொது மனிதனின் உளவியலாக மாறுகிற அறிவியலை மறைமுகமாக இயக்குவது மதம். மதம் குறித்த புரிதலை வடிவமைக்கப்பட்ட கருத்தியலின் தாக்கமாக உணர முடியாதவர்களால் சாதியுடன் புழங்குதல் குறித்தும், வாழ்வது குறித்தும் சரியான பாதையில் சிந்திக்க இயலாது. அது உங்களுக்கும் பொருந்தும் என்று நான் நம்புமிடத்தில் தான் இந்தக் கடிதத்தின் முதல் எழுத்துப் பிறந்தது.
டேய் இவன் என்னடா சொல்றான். ஜாதி வேணூங்கறானா இல்ல வேணாங்கறானா! அது போவ இந்தக் கட்டுரைல ஈவேரான்னு வருதே அது யார்ரா?
இது கூடத் தெரியாம இருக்கீங்க. தமில்நாட்லப் பச்சப் புல்லுகூடச் சொல்லும்ண்ணே! ப்பூ நீங்க இவ்ளோ வெத்து டப்பாவாண்ணே! ஈவெரான்னா பெரியாரு.
அப்ப அந்தக் கோமணக் கொண்டையன் அத்தச் சொல்ல வேண்டீது தானேடா? 
இல்லண்ணே அவர் கொள்கைப் பிடிப்புள்ளவரு. யாரையும் பட்டப் பேர்ல கூப்புட மாட்டாருண்ணே!
இன்னாடாக் கொள்ளு கையி… அப்பப் பெரியார் பேரை ஈவெரா (ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் ) அப்பிடின்னு ஒழுங்கா எளுத வேண்டீதுதானேடா? அது என்னா எப்பப்பாத்தாலும் ஈவேரா ஈவேரான்னு எளுதறான் அந்த நரச்ச மண்டையன்.
அண்ணே என்னைய என்ன வேணாலும் சொல்லுங்க என் குருவை…
வாடி நீ குருன்னு சொன்னா வாயிளிச்சி வாங்கிக்கிவான். ஏன் வாயில இன்னா வெச்சிருக்கான் என்னை குருன்னு கூப்புடாதே ராவுகாலம் எமகண்டம்னு கூப்புடுன்னு சொல்ல வேண்டீதுதானே. இல்லாட்டி ஜெயமோகன்னு பேரவெச்சிக் கூப்புடுன்னு சொல்லலாமில்ல. மானக்கெட்ட பெருசுங்க. அந்த ரிடையர்டு வாத்தியாரம்மா போயி இந்த சுள்ளானக் குரு குருங்குது அதையும் குறுகுறுப்பே இல்லாம ஏத்துக்குறான். பெரியாரைப் பெரியார்னு சொல்ல மட்டும் வாய் வலிக்கிதோ இந்து ஞான்பரப்பாவுக்கு. நீ அவுத்துப் போட்டு ஆடினாலும் எளக்கியம். அடுத்தவன் வேட்டிகட்டிகிட்டுப் போனாலும் வக்கணை. மூடக் கெடுக்காதடா! மேல மேல…
சிங்கி சொல்ற எழுபது வருஷத்துக் கதையில பேச்சி மலை அமைதியா இருக்கறப்போ செம்மன்துரை வறான்.
யார்ராவன் செம்பன்துரை செங்காமுட்டி பித்தளை தொரைனுட்டு?
அண்ணே எல்லாத்துக்கும் குத்தம் சொன்னா எப்புடின்னே மலை பாசைல செவப்பா இருக்குற வெள்ளைக்காரனைச் சொல்றாருண்ணே!
ஓ எளக்கியம் எளக்கியம். சரி அந்த புக்கக் கொஞ்சம் குடு.
பிரம்மபுத்திரி பேச்சி மலைக்கு அரசி. ஆருக்கும் அடங்காத பேச்சியை அடக்க வந்தவன்தான் செம்பன்துரை. அவன் கருப்புக்கட்டியும் கஞ்சாவும் கொடுத்து காணிக்காரர்களைத்தான் முதலில் வசப்படுத்தினான். 

அப்பிடின்னா கஞ்சாவை இந்தியாவுக்குக் கொண்டாந்து குடுத்தவன் வெள்ளைக்காரன். அப்ப கல்பகோடி வருஷமா ஆட்டிகிணுத் திரிஞ்ச சாமியார்ப் பசங்க எல்லாம் ஃபில்டர் கிங்ஸ் புடிச்சிகிணு இருந்தானுவளா? The herb was called ganjika in Sanskrit (गांजा/গাঁজা ganja in modern Indic languages).[13][14]The ancient drug soma, mentioned in the Vedas, was sometimes associated with cannabis.[15] அடேய் சட்டித்தலையா! ஒரு கேனையன் ஊதினா எச்சிச் சிலும்பிய வாங்கி ஊதி ஓஹோஹோன்னு சாமியாட ஒம்பது பேராடா?
காணிக்காரர்களைத்தான்  அப்பிடின்னு வர்ரது இதுதானா? அப்படின்னா இவங்க ST ஆச்சே? அப்பறம் ஏண்டா பறையன்னு அவனோடதில்லாத சாதிய வெச்சி அவம் பொண்டாட்டி கூபுட்றா? நாயர் பொண்டாட்டி ஊட்டுக் காரனை நம்பூதிரி நம்பூதிரினுக் கூப்புடுவாளாடா? வெளையும் பயிரோட மயிர் மொளையிலேயேத் தெரியுது. சரி அப்பறம் அப்பறம் சீக்கிரம் படி மேன்!

http://en.wikipedia.org/wiki/Amboori

ஓகே அடுத்த ரீல அவுடா கருப்பட்டித் தலையா!
காற்றுக்கும் அஞ்சாமல், காலனுக்கும் அஞ்சாமல், காடெல்லாம் சுற்றி அலைந்தான். அவன் கால்பட்ட இடமெல்லாம் பச்சை கருகி பாழாகப் போயிற்று. காட்டு மிருகங்களெல்லாம் அவனைக் கண்டு கவைக்கிடையே வால் செருகி, கும்பிப் பதறி ஓடின. பறவையெல்லாம் சிறகடித்து வானத்திலே தவித்தன. அவன் விரல் நீட்டி நில் என்றால் புலிகூட வால் நீட்டி, உடல் நெளித்து, முகம் தாழ்த்தி நின்றுவிடும். செம்பன்துரை மானுடனே அல்ல. இந்திரன் ராஜ்ஜியத்தில் இந்திராணி அரண்மனையில் காவல் நின்று வந்த கரும்பூதம். கடமையிலே தவறு வர, கடும்சாபம் பெற்று, மனித உருப்பெற்று, மந்திரவசப்பட்டு, பூலோகம் வந்தவன். மந்திரத்தால் பூதத்தைக் கும்பினியான் கட்டியாண்டான். தூக்காத சுமையெல்லாம் தூக்க வைத்தான். செய்யாத சோலி எல்லாம் செய்ய வைத்தான். பேச்சியின் திமிரடக்கி, வள்ளியைப் பெண்டாள, வரமும் வரிசையும் கொண்டு, உத்தரவும் தீட்டூரமும் பெற்று, செம்பன்துரை வந்தான் என்று சிங்கி பாடுவார்.
பரவால்லபா இங்கிலாந்து ராஜ்ஜியம். வெள்ளக்கார ராணி. மேடம் அனுப்பி வெச்ச ஆளு. உங்களை பேட் பேட்னு சொல்லி சொமை தூக்க வெச்சி எல தழன்னு துண்ணுகினு இருந்த உங்களை வேலை வங்கி டேம் கட்டவெச்சான். 
பேச்சிப் பாறையை ஒழுங்குபடுத்தி வள்ளி ஆறைத் தேக்கி அனைகட்டறதைப் பெண்டாளறதா சொல்றாரா? சோக்கான ஆளுய்யா? சூப்பர்.

அவ கெடந்த கெட என்னா ? நடந்த நட என்னா . . . பிடிச்சிக் கெட்டிப் போட்டோனே செம்பன்தொரெ! கள்ள அறுவாணிக்க ஊற்றத்த அடக்கிப் போட்டானே” என்பார் சிங்கி. கை நீட்டி சிவன்கோயில் முற்றத்தைக் காட்டி, அது வரை வெள்ளம் வரும் என்பார். “நீங்க என்னத்த கண்டிய கொச்சேமான் ? அறுதலித் தேவடியா மொவ கொஞ்ச பேருக்க தாலியவா அறுத்திருக்கா ? கொல நிண்ண வாளையையும் மண்டை பூத்த தெங்கயுமில்லியா பிளுதுகிட்டு வருவா மூடோட ? இப்பம் கண்டுதா மூதிக்க கெடப்ப ? அடிச்சுப் போட்ட சாரப்பாம்பு கணக்காட்டு. அம்பிடும் வெஷம். செம்பன் தொர வராம இருந்தானெங்கி கூறுகெட்ட தேவடியா மவ ராச்சியத்த மிளுங்கிப்போட மாட்டாளா ?” சிங்கி வாயெடுத்தால் வள்ளிக்குக் கெட்ட வார்த்தைதான். ஒரு மழைக் காலத்தில் அவள் பேய் பிடித்து ஓடியதில் சிங்கியின் அப்பனும், அம்மையும், வீடும், சிறு தோப்பும் மொத்தமாய் தேங்காய்ப்பட்டணம் கடலுக்குப் போய்விட்டன. “கண்ணில்லாத மூளி, கொலம் கெடுத்த பாவி” என்பார் சிங்கி.
யார்ரா இவன் கேனப்புண்னாக்கு எளுத்தாளன். ஆறு நதி கடல் மலை காடுன்னு இயற்கை எல்லாத்தையும் கொண்டாடறவன் இல்லையாடா எளுத்தாளன். இவன் என்னடா நான் உன்னையத் திட்றாப்புல ஆத்தைத் திட்றான். 
அண்ணே இவுரு ரொம்ப வித்தியாசமானவருண்ணே! எல்லார் மாதிரியும் கெடையாது. வெள்ளம் வந்ததுக்காவ வேதனைப் படறாருண்ணே!
ஓ பீச்சாங்கையில சோற் துண்ணுவானோ! டேய் மலஜாதிக் காரன் மனுசன் மேல அம்பு உடுவான். காட்டைக் கும்புடுவான். கோழி மெதுச்சி குஞ்சு சாவுமாடா? லெட்டர் ஆஃப் ஸியாட்டில் படிச்சிருக்கியாடா சேப்பங்கெழங்குத் தலையா? 
சொம்மா நாய் கட்சிட்ச்சி ஆயா செத்துட்சினு அழுதுகிணு இருக்கறவனாடா பழங்குடி மனுசன்? அவன் இயற்கையை எப்பிடி நேசிக்கிறவன்னு தெரியணுமா? இந்தாப் புடி. இத்தப் படி.


ஸியட்டிலின் கடிதம் (பழங்குடி நிலத்தை விலைக்குக் கேட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு)

பேச்சிப்பாறையைப் பொம்பளையின்னாரு. பொண்ணை வள்ளியாறுன்னாரு.அணைகட்ட மேற்பார்வை பார்க்க வர ஐரோப்பிய இன்ஜினியர் மின்ச்சின், செம்பன்துரை மாப்பிளையாமா? ஆனா இது கொஞ்ச லோக்கல் டேஸ்ட் மாதிரிக் கொஞ்சம் இந்திரன் தொட்டத்து முந்திரியே அல்லது சலவை நிலா பொழிகிறது ரேஞ்சில் இல்லே உருவகப்படுது. இதுக்கேக் குய்யோங் குய்யோவென ஒரே கூப்பாட்ட அலப்பறை வேறையா?

”ஒன்னியக் கெட்டிப் போட்டுத் தானெடி இந்தச் செம்பன்தொரெ போவான்” என்று பயமுறுத்தினான். பயந்துபோன வள்ளி பேச்சி மூன் சென்று நின்று புலம்பினாள். கோபம் கொண்ட பேச்சி காட்டுக்குள்ளே செம்பன் துரையை வழிமறித்தாள். யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்து, மலை மேலே கால் வைத்து, மேகத்திலே தலை வைத்து, கொடும் பல்லும், விஷ நாக்கும், கனல் கண்ணும், இடிச் சிரிப்புமாய் விஸ்வரூபம் கொண்டு நின்றாள்.

மிகு புனைவுங்கிற பேரால ஒரே லபோதிபோவென கூச்சல். அனைக் கட்டி அடங்க வைக்கும் கல்யாணத்துக்கு, அடங்க மறுக்கற ஆறு வெள்ளமாய்ச் சீறி ஊரை அழிக்கிதாம். அதிலதான் தன் குடும்பமே அழிஞ்சிதுன்னு நல்ல  வார்த்தைகள்ல இலக்கிய நயத்தோட சிங்கி திட்டினாரே.

அப்பால, இது உருவகம்.

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்து, மலை மேலே கால் வைத்து, மேகத்திலே தலை வைத்து, கொடும் பல்லும், விஷ நாக்கும், கனல் கண்ணும், இடிச் சிரிப்புமாய் விஸ்வரூபம் கொண்டு நின்றாள்.

அண்ணாத்தை என்னாத்தைப் படிக்கிறவனை கேனக்கூன்னு நெனைச்சாரா? இந்த மாதிரி நெஜத்துல நடக்காத உருவகத்துல எப்பிட்றா அப்பன் ஆத்தா சாவும். 

அணை எப்படா கட்டுவாங்க? வெள்ளத் தண்ணி வேஸ்டா போவுதேன்னுதான. சொம்மா தம்பாட்டுக்குப் போற ஆத்துலையா அணை கட்டுவான். வெள்ளம் வந்ததால ஐடியா வந்து இன்ஜினியர் வந்தா அர்த்தம் இருக்கு. இங்க இன்ஜினியர் அணைகட்ட வந்ததால வெள்ளம் வந்து ஊரை அழிக்குதாம். இதை இலக்கிய உலகின் சில்க் ஸ்மிதா வேற பாராட்டினாராம்.

புக்கக்குடுங்க பாஸ் நீங்க ஒரேடியா மட்டம் தட்டுறீங்க பாஸ்.

டேய் குச்சிமயிர்த் தலையா! இங்க என்னவோ கதை மூங்கிலாட்டம் நட்டுகிட்டு நிக்கிறாப்பலையும் நாங்க ஏதோ ஏறி மிதிச்சி மட்டந்தட்டினாப்புலையும். டேய் கதையவேக் காணம் அதைத்தானே தேடிகிட்டு இருக்கே. அப்பறம் அதை மாதிரியே சீன் காட்டாதே! ஏண்டா… 

அண்ணே…

சும்மா மூடிகிட்டுக் கேளுடா மூதேவி. மைம் பண்றதுன்னாத் தெரியுமா? மைமிங் மைமிங். இப்ப உன் எதுர்ல காபி கப்பு, ஸாஸர், அதுல காப்பி. அதுக்கு அடில டீப்பாயி. எதுர்ல நாற்காலி. அதுல உன் சீட்டு ஒக்காந்துருக்கு. நெசத்துல இது எதுவுமே இல்லை. ஆனா இருக்கறாமாதிரி நெனச்சிகிட்டு சுடச்சுட காப்பியை ஊதி ஊதிக் குடிக்கணும். எங்க செய்யி பாக்கலாம்.

அண்ணே! மொதல்ல எப்பிடின்னே ஒக்கார்றது?

அதாண்டா கற்பனைங்கறது இதுல எது ஒண்ணு தப்பானாலும் நெஜமாவே காப்பி இருந்தா மேலக் கொட்டிக் கறையாயிடும். இந்த நடிப்புதாண்டா எளுத்து. இல்லாததை இருக்கறதாக் கற்பனை பண்ணும் போது காலி கோப்பை கைல இருக்கறாப்புல தெரியக் கூடாது. சுடச்சுட காப்பி உள்ள இருக்கணும். இருக்கறா மாதிரி நடிக்கணும். அணுஅளவும் எதையும் டீப்பாய் சேரு டீப்பாய் க்ளாத்து உட்பட. கற்பணைல மனக் கண்ணுல மறக்கக் கூடாது. பத்மா சுப்பிரமணியம் டாண்ஸுல துணியக் கொடில காயப்போடுவாங்க. இல்லாத கிளிப்பைப் போடறாப்புல பாவ்லா பண்ணுவாங்க பாத்துருக்கியா? அப்பிடி இருக்கணும் நடிப்பும் எழுத்தும். நடிக்கிறேன்னு தெரியக்கூடாது. அதுக்காவ கமல்காசன் மாதிரி நான் நடிக்கிலே நடிக்கிலேன்னு சொல்லிக்கினே நடிக்கக் கூடாது. புரியுதா. ஜெயமோகன் நான் எழுதறேன் எழுதறேன்னு சொல்லிகினே எழுதற ஆளு. அதான் அந்தாளப் படிக்கிறதையே ஆஃபாக்குது.

ம.க.இ.க காரங்க அந்தக் காலத்துல ’பெல்ச்சி’ன்னு ஒரு நாடகம் போடுவாங்க. குச்சிகூடக் கையில இருக்காது ஆனாக் கண்ணு முன்னாடி குடிசை தெரியவரும். எட்டு பேரு எதுரெதுர நன்நாலா நிண்ணு ஆளுக்கு ரெண்டு கை ஒசத்தி எதுரெதிர் கை தொட்டா….

குடிசை.

உள்ள ஆளுங்க ரெண்டொரு பேர் வந்து நின்னதும் முன்னாடி இருக்கற ரெண்டு பேர்ல ஒருத்தன் கையைத் தூக்கி அடுத்தவன் இடுப்புல வெச்சி சடக்குனு சத்தம் போட்டா 

கதவை மூடி தாப்பாள்.

’பக்’குனு ஒரு சத்தம் குடுத்து முன்னாடிலேந்து ஒருத்தன் வீச, எல்லாரும் சேந்து ரொம்ப அடிக்குரல்லேந்து உஸுவுஸு உஸ்ஜ்ஸுனு சத்தம் கொடுத்து அதிகரிக்கக் கூரையாய் நின்னக் கை விரலெல்ல்லாம் மெல்ல நடுங்கத் தொடங்கி தனித்தனியா மேலையும் கீழையும் ஏறி இறங்க சட்படசடசடன்னு சத்தம் வர உள்ள இருக்கற ஆட்கள் தொவள ஆரம்பிச்சா

கீழ்வெண்மணி

அப்பிடிப் போட்றா அருவாளை. பெல்ச்சிங்கற பீகார் கிராமத்துலையும் இது மாதிரியே, தலித்துகளை வெச்சு எரிச்சாங்க, அந்தப் பேரை வெச்சி இந்தக் கதையச் சொல்ற டெக்னிக். பறையன்னு கூப்புட ஆசைப்பட்டா இப்பல்லாம் கதை எழுதி சும்மானாச்சிக்கும் ரெண்டுதபா கூப்டுப் பாத்துக்கறது ஒரு ஸ்டைலாப்போச்சி. எல்லத்துக்கும்தான் கற்பனை வேணும். அது என்னவோ கற்பனைங்கறது, கோபுரத்து சரஸ்வதி பாவாடைக்கு உள்ளதான் பத்திரமா இருக்குதுன்னு பந்தாக் காட்றானுங்க.

சர்தான் அவரு உடான்ஸையும் பாத்துடுவோம் மேலப்படி. அடங்க மறுத்து வள்ளி ஓட்றா வெள்ளைக்காரன் தொறத்தறான். என்னாடா இது புன்னகைப்படத்தை 87லதான் பாத்தாரா ஜெயமோகன்? 

ஆணையிட்டேன் நெருங்காதே… அன்னையினம் பொறுக்காதே. 
ஆத்திரத்தில் துடிக்காதே…. சாத்திரத்தை மறக்காதே.. 
தீண்டாதே…. தீண்டாதே…… 

ரேப்பு சீன்லையும் பாட்டு பாடிகிட்டு ஜெயந்தி ஓட, வில்லன் தொறத்த, கடைசில தொட்டி கீழ வுழுந்து ஒடைய, மீன் துடிச்சி சாவ. ம்னு ஒரு பெரு மூச்சு வுட்டு நம்பாளு ஓகே மேட்டர் ஓவர்னு அவுட்டாயிடுவான். 

“ஓமெடி பேச்சி, நீ பேயானா நான் பேயன். ஒனக்க ஆட்டத்தைக் கண்டு பயந்து போவேன் எண்ணு நெனச்சியா ? வளிய விட்டு மாறி நில்லுடி மூதி” என்றான்.
…………….
பிரம்மா கொடுத்த அதிகாரம் பேச்சிக்கு . பேச்சி தந்த வரம் வள்ளிக்க. வள்ளியைக் கட்டுவது பேச்சியைக் கட்டுவது. பிரம்மசாபம் செகமழிக்கும். மலையரசி பேச்சி நாடு காக்கும் தெய்வம். நோய் தீர்க்க மருந்தும் நோம்புக்ககு வாசனையும் தந்து ரட்சிப்பவள். காட்டு மிருகங்களும் காணிக்காரர்களும் அவள் பிள்ளைகள். பேச்சியின் மடி தீண்டு அன்னியன் நடமாடலாகாது. அவள் பிள்ளைகளைத் தீட்டு செய்யலாகாது. பேச்சி தாங்கமாட்டாள். அம்மை கோபம் குலமழிக்கும். ஊர் முடிக்கும். சோதிக்காதே ஓடிப் போ என்றாள். துரை மசியவில்லை. “சோலியைப் பாத்துக்கிட்டுப் போடி. நான் வள்ளியைக் கெட்டத்தான் வந்தேன். கெட்டிப் போட்டுத்தான் போவேன். ஒன்னால முடிஞ்சதைச் செய்யி” என்று சொல்லிவிட்டான்.

பேச்சி காற்றாக மாறி மழையாக மாறி சுழன்று அடித்து தன் மக்கள் மேல் அன்னியன் கை படலாகாது என யார் வீட்டுக் கூரையைப் பிய்க்கிறாள்?  இங்கிலாந்து ரானி வீட்டுதா? யாரைக் கொல்கிறாள்? அடக்கி வன்புணர  வில்லனாகத் துரத்திய செம்பன்துரையையா? இல்லை தன் மக்களை? 

அவர்கள் சோற்றுக்குக் கதியத்துப் போய் கூலியைக் கூட்டிக்கொடுக்கும் செம்பந்துரையுடன் வேலைக்குச் செல்கிறார்கள். என்ன வேலை? பேச்சியைத் தீண்டி நோண்டி குடைந்து அவள் மகளான வள்ளியை செம்பன் துரைக்கு மணமுடிக்க. யோவ் கதாசிரியர் சொன்னா கலை நங்க சொன்னா கொலையா?  

ஆமாண்ணே கொஞ்சம் ஓவராதாண்னே தெரியுது.

டேய் பட்றா…

கொரட்டி மலையின் வடக்கு வளைவில் வள்ளியைத் தடுத்து நிறுத்தத்தான் செம்பன்துரை முதலில் திட்டம் போட்டான். வள்ளி சற்று உடல் ஒடுங்கிப் போகும் இடம் அது. பேச்சியின் உடலை எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தன. வலது முலையை அரித்துக் குடைந்தன. இடது முலையில் வீக்கம். இம்சை தாளாமல் பேச்சி புரண்டாள். ஒரே தேய்ப்பு. எறும்புகளும் அவற்றின் கூடுகளும் கூளம். வள்ளி பிடியை உதறி எக்காளமிட்டபடி, சரிவில் சாடினாள். மலையிருந்த இடத்தில் கணவாய். துரை மனம் தளரவில்லை. நொய்யரிசி கையிலிருக்க எறும்புக்கென்ன பஞ்சம் ? சற்று தள்ளி மீண்டும் கட்டிப் பார்த்தான். வான்மீது பேச்சியின் யானைப்படை குவிந்தது. வெள்ளித் தந்தம் மின்ன மோதிப் புரண்டது. பூமியும் வானமும் மூட, நீர் கொட்டியது. யானை புரளும் ஓட்டம் வள்ளிக்கு. பெரும்பாம்பு போல அவள் மலைகளைச் சுற்றிப் பிணைத்துக் கொண்டு நெளிந்து துடித்தாள். இலுப்பமலை நொறுங்கி விழுந்தது. கடம்பமலை விரிசல் கண்டது. பத்து நாள் கழித்து வானம் வெளுத்தபோது கால் தடங்கள் கழுவப்பட்டுக் காடு பரிசுத்தமாய் இருந்தது. பச்சையிலைப் படப்பெங்கும் “பேச்சி”, “பேச்சி” என்று பாடின. இரை விழுங்கிய வள்ளி மெல்ல வளைந்தபடி கிடந்தாள்.
பேச்சிப்பாறையைக் கொடையறதை முலையை அரிக்கறாமாதிரின்னு எவ்ளோ அழகா வர்னிக்கிறாரு ஆத்தர். எரும்பெல்லாம் ஜனங்கள். ஓ இப்பதான் மலைக்கும் மனுஷனுக்கும் ப்ரொபோர்ஷன் சாருக்கு ஞாபகம் வந்துருக்கு போல. மலை என்கிற பேச்சி கொஞ்சம் பொறண்டாளாம் ஒரு கும்பல் மனுஷங்க செத்துட்டாங்களாம். எறும்புங்க சாவ சாவ அவங்களுக்கு மூணனா என்கிற நொய்யரிசி, ஏன் வாய்க்கரிசின்னே எழுதி இருக்கலாமே! ஓ இது யதார்த்தவாத பதார்த்தமல்ல மீ மீமீபுனைவு. 
இயற்கையை ஆள மனுஷனின் போராட்டத்தை சாமியாடியபடிச் சொல்கிறார். சாமியாடி போலவே லாஜிக் இல்லாமலும் சொல்கிறார். மேஜிக்கில் ஏது லாஜிக் எனக்கேட்பவன் மெண்டல். எங்கே எதை ஒளிக்க வேண்டும் எப்போது எங்கிருந்து மறைத்ததை எடுக்க வேண்டும் என்பது தானே கதையில் மேஜிக். இந்த அணை கட்ட இத்தனை பேர் செத்திருந்தா ரஷ்யப் புரட்சிக்கு முன்னாலேயே இந்தியா சுதந்திரம் அடஞ்சிருக்கும். ஊர் பத்தி எரிஞ்சிருக்காது?
ஆமாண்ணே அப்பல்லாம் ஜின்னாவுக்குக் கூட பாக்கிஸ்தான் ஐடியாக் கூடக் கெடையாதுண்ணே! அகண்ட பாரதமே கெடச்சிருக்கும். பாரதியும் பார்த்துட்டே செத்திருப்பான்.

அடேய் சதுரவட்டத் தலையா உனக்குக்கூட க்ரியேட்டிவிட்டி இருக்குடா!

அண்ணே என்னண்ணே ஜெயமோகன் அவரைப் புகழ்ந்துக்கற அளவுக்கு நீங்க என்னையப் புகழறீங்க. இதுபோல நாலு ஜெமோ கதைய ஆப்படிச்சா நாம தனியா ஒரு மோட்டார் கம்பெனியே வெச்சிடலாம் போல இருக்கே!

புழுமூளைத்தலையா அவசரப்படறியே! அடுத்துப் படி. அணை கட்டும் போது நடக்கவேண்டிய விஷயம் இன்னும் வரலையே! பேரணைகள் வேண்டாம்னு சுற்றுப்புறச் சூழல்காரர்களும், வரும்போது குடிகள் வாழ்நிலங்கள் ஊர்கள் எல்லாம் மூழ்குவதால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்டுவது இன்னும் எழுத்துல வரலையே படம் பூரா ஒரே டான்ஸாவே இல்லை ஓடிகிட்டு இருக்கு.  அண்ணன் ஸ்டைல்ல அந்தக் கூத்தை எப்படி ஆடறாருன்னு பார்ப்போம்.

“பிழை பொறு பேச்சி” என்று கண்ணீர் விட்டான். கொடுங்காட்டில் யாக குண்டம் கட்டி தபஸ் செய்தான். ஆடும் கிடாயும் வெட்டி அவிஸாக்கினான். கூடப் பிறந்த பூத கணங்களையெல்லாம் கூட்டி வைத்துப் பேச்சிக்குக் கொடை போட்டான். பேச்சி மசியவில்லை. கெஞ்சி அழுதான். வழிமூட்டியபோது உடைவாளை உருவிக் கழுத்தில் வைத்து துரை கர்ஜனை செய்தான். “பூதத்தலை இண்ணா பேச்சி. பிரம்மாமேல சத்தியம்! பலிய எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு.” வாளை ஓங்கிய தருணம் பேச்சி மனமிரங்கினாள். ஓமத்தீயில் உருக்கொண்டு கூத்தாடினாள். காற்றாக வந்து திசை அதிரச் சிரித்தாள். “கொண்டா, பலிகொண்டா” என்று ஆர்ப்பரித்தாள். “நரபலி கொண்டா, சூடுசேர கொண்டா” என்று ஆட்டம் போட்டாள். “எம்பிடு வேணும் ? அத மட்டும் செல்லு” என்றான் துரை. “ஆயிரத்தொண்ணு” என்றாள் பேச்சி. “அதுக்கென்ன தாறேன்” என்றான் துரை சற்றும் அயராமல். “எங்க ? எங்க ?” என்று பறந்தாள். “பன்னிமலைச் சரிவிலே ஆயிரம் குடிலிருக்கு எடுத்துக்க பேச்சி. ஆயிரமில்லடி மூதி அய்யாயிரம். எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு” என்றான் துரை. அக்கக்கா என்று காடதிரச் சிரித்தாள். “சத்தியம் பண்ணு, குடிச்ச சோரைக்க கட்டுப்படுவேன் எண்ணு சத்தியம் பண்ணு” என்றான் துரை. பேச்சி வெறி கொண்டு ஆடினாள். கூந்தலைச் சுழற்றி நிலத்தில் அறைந்து சத்தியம் செய்தாள்.

அடுத்தநாள் விடியும் முன்பே பேச்சி பசி தீர்த்தாள். ஆயிரம் குடிசைகளும் அடிவயிற்றில் அடங்கின. 

ஆமாண்ணே! இது என்னண்ணே இப்புடிப் பொஸுக்குனுப் போயிடுச்சி.

அடேய் ராக்கெட் மண்டையா! மேஜிக் லாஜிக் இதுதாண்டா! ஒரு எளுத்தாளனுக்கு எது முக்கியமாப் படும் அல்லது படணும். இந்தக் கதை எளுதின வருசம் என்னா? ஆங் 87. அப்ப மேதா பட்கர் என்னா செஞ்சிகினு இருந்தாங்கோ! 

நர்மதைப் பாதுகாப்புப் போராட்டம். http://www.narmada.org/  அண்ணே அந்தப் போராட்டம் ஆரம்பிச்சி 25 வருஷம் ஆயிடுச்சிண்ணே அப்பிடின்னா 85ல ஆரம்பிச்சிதா?

எண்னெய் சட்டித்தலையா உனக்கும் உள்ள ஏதோ இருக்குடா! அப்ப அறிவுஜீவிகள் கிட்டப் பரபரப்பா இருந்த விஷயம் இது. அதை அப்பிடியே ஒரு பேக்ட்ராப்பா வெச்சி எழுதினா எல்லாரும் நம்பளைப் பார்ப்பான்.

எந்தக் கதையிலையும் எழுத்தாளனுக்கான் இடம்னு ஒண்ணு இருக்கு. அவன் எழுதறத்துக்கான எடம். அதுக்காகதான் அந்தக் கதையே எழுதப்படுது. இதுல எழுத்தாளனோட எடம் எப்பிடி அணை கட்டினாங்க எங்கிறது இல்லே. மனித வாழ்வாதாரம் எப்பிடி அழியிது எங்கறதுதான் கதையோட உச்சமா இருக்கணும். இல்லையின்னா அணைகட்ற அரசாங்க டாக்குமெண்ட்டரியா எடுக்கறே. இயற்கியின் சீற்றம் மாதிரி விவரிப்போ விவரிப்புன்னு விவரிச்சி, கடைசில  அணை கட்டறது எவ்ளோ கஷ்டமான காரியம். செம்பன்துரை எம்மாத்த்ரம் கஷ்டப்பட்டுக் கட்டியிருக்கான்னு சொல்ல இங்க இன்னா குஜராத் பிரச்சார பிட் நோட்டீஸா இது.

ஐயையே என்னாண்ணே இது அப்ப வெத்து வார்த்தைச் சிலும்பலா? அண்ணே யோசிச்சிப் பார்த்தா எஸ்.ராமகிருஷ்ணனேத் தேவலாம் போல இருக்குண்ணே. இவ்ளோ டேமேஜிங்கா பண்றதில்லையே. அவுரு ஏதோ தாம் பாட்டுக்கும் ஏற்கெனவே யாரச்சும் எழுதிருக்காங்களான்னு பார்த்து டவுன்லோடி மேனேஜிங்!

அடேய் வாத்து முட்டைத் தலையா உட்டா என்னை வண்டு முருகனாக்கி, ரவுண்டு கட்டி அடிவாங்க வெச்சிருவே போல இருக்கே. ஒரே சமயத்துல ரெண்டு ஷோ பாக்கக்கூடாது. கைல இருக்கறக் கதையப் படி.

அன்றுமுதல் பத்துநாள் ஆடி ஆர்ப்பாட்டம் செய்து வெறி தீர்த்தாள். பத்தாம்நாள் வாக்குத் தந்தபடி வந்து துரை முன் நின்றாள். துரை அவளை இரும்பாணியில் ஆவாகனம் பண்ணி, வேங்கை மரத்தடியில் அறைந்து நிறுத்தினான். வருஷம் தோறும் கொடையும், பவுர்ணமி தோறும் பூசையும் ஏற்பாடு செய்தான். மூடோடே மஞ்சளும், மூத்த கருங்கிடாயும், வெட்டி பூசித்து வேலையைத் தொடங்கினான். வள்ளியின் கஷ்ட காலம் தொடங்கியது. பேச்சி அடங்கிய பிறகு கேட்க நாதியில்லை. கூந்தலைச் சுழற்றிப் பிடித்து மடக்கி அவள் கொட்டத்தை அடக்கினான் செம்பன்துரை.

என்னாண்ணே கதை கடைசில பில்லி சூனிய மேட்டர் மாதிரி இல்ல போயிடுச்சி.

அவசரப்படாதே! மேல

பன்றிமலைச் சரிவிலே இளவெயில் பரந்த வண்ணத்துப் பூச்சிகளின் படுகை சிங்கியின் நினைவை மெல்லிய வலிபோல உணர வைத்தது. கண் எட்டிய தூரம் வரை செடிகள் அடர்ந்து கிடந்தன. கண்களை நிரப்பித் தவிக்கச் செய்யும் நிறவிரிவாய்ப் பூக்கள். ஒரு சிறு காற்றில் மலர்க்கம்பளம் நெளியத் தொடங்கிவிடும். பறக்கும் பூக்கள் போல எங்கும் வண்ணத்துப் பூச்சிகள். நம்ப முடியாத அளவு பெரியவை. “மண்ணாத்திப் பக்கிய பிடிச்சப்பிடாது கொச்சேமான்” சிங்கி சொல்வார். “செத்து போனவியளுக்கு கண்ணாக்கும் அதொக்கெ. துடிச்சு துடிச்சு அலையுத கதிகிட்டாத்த ஆத்மாக்களாக்கும்” இமையிறகுகளை அடித்தபடி பறந்தலையும் கண்கள். திசைகளெங்கும் அவற்றின் பார்வை. நான் ராதாகிருஷ்ணன் கைகளைப் பற்றிக் கொண்டேன். “போலாம்” என்றேன். படுகையிலிருந்து வந்த பூச்சிகள் சரிவிலும் பள்ளத்தாக்கிலும் பரவியிருந்தன. நீர்ப்பரப்பில் உதிர்ந்து சுழித்தன. குடிநீரில் விழுந்து துடித்தன. பேச்சியின் உடலத் துளைத்துத் தடதடத்த யந்திரங்கள் மீதும், அவள் உயிரை நகரங்களுக்குக் கொண்டு செல்லும் கம்பிகள் மீதும் அமர்ந்து அதிர்ந்தன. சகதியில் வண்ணக் காகிதக் கிழிசல்கள் போல பரவிக் கிடந்தன. கரிய ஈரமான கூரைகளின் மீது ஒட்டியிருந்தன. பேருந்து முகப்புக் கண்ணாடியில் அறைபட்டு சரிந்தபடியே இருந்தன. காட்டின் பசிய ஈரத்தின் உள்ளேயிருந்து அவை முடிவற்று வந்து கொண்டிருந்தன.

சரி இதுல ஒரு சுவாரசியமான பஞ்சாயத்து வேற இருக்கே!

இந்தக் கதையை ஜெயமோகன் எழுதினதும் பிரசுரத்துக்குக் குடுத்த பத்திரிகை எது தெரியுமா? அன்றைய நித்ய சைதண்ய யதியாகிய சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு. ஆனால் அவர் இந்த ப் படுகைக் கதையைப் பிரசுரிக்க மறுத்தார்.

இந்தக் கதையைப் பிரசுரித்த கோவை ஞானியின் வார்த்தைகளில் படியுங்கள்.

சிற்றிதழ் இயக்கம்: நிகழ் என் அனுபவம்

நிகழில் வெளிவந்த கவிதை, சிறுகதைகள் முதலிய படைப்புகள் குறித்து இங்கே தொகுத்துச் சொல்லலாம். காலச்சுவடு இதழால் மறுக்கப்பட்ட ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதை நிகழில்தான் வெளிவந்தது (கேரளாவில் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டபொழுது ஆதிவாசிகளின் அவலம் குறித்து ஜெயமோகன் எழுதிய அருமையான கதை இது. அணைக்கட்டு முதலிய அறிவியல் ஆக்கங்களை மறுக்கக் கூடாது என்பது சு. ராவின் பார்வையாக இருந்தி ருக்கலாம். அணைக்கட்டு முதலிய நவீன ஆக்கங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலம் குறித்தது ஜெய மோகனின் பார்வை. இதில் எனக்கும் உடன்பாடு. நிகழில் இக்கதை வெளியானதை ஜெயமோகன் குறிப்பிட்டபொழுது ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று சு. ரா கூறினாராம். ஞானிக்கு இலக்கியம் தெரியாது, ஜெயமோகனுக்கும் தெரியாது. சு. ராவுக்கு மட்டுமே தெரியும்.) ஜெயமோகனின் போதி என்ற சிறுகதையும் நிகழில் வெளியாயிற்று. ஒரிசாவில் ஏவுகணை ஆய்வுக்கான தளங்களுக்காக மக்களிடமிருந்து நிலம் அபகரிக்கப்பட்டபோது மக்கள் போராடினர். இந்தப் போராட்டம் குறித்து, கே. சி. லட்சுமி நாராயணன் மலையாளத்தில் எழுதிய கட்டுரையைத் தமிழில் ஜெயமோகன் நிகழுக்குத் தந்தார். இந்தியாவின் நீதி சாஸ்திரம் பற்றிய ஆனந்தின் ஆய்வையும் இதழுக்குத் தந்தார். இம்முறையில் ஜெயமோகன் நிகழுக்குப் பெரிதும் ஒத்துழைத்தார். 

இன்றுவரை இது ஜெயமோகனின் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

அவரது அடுத்த புகழ்பெற்ற படைப்பை வாசிக்கக் காத்திருக்கிறேன். சென்ஷி ஸ்டார்ட் டைப்பிங்!

One thought on “அடித்தது ஸிக்ஸர்தான் ஆனால் பெளண்ட்ரிக்குப் பறந்தது பந்தா ஸ்டம்பா – ஜெமோவின் படுகை

  1. கடவுளுக்கு நன்றி, நல்ல வேளை, நீங்கள் மயில் கழுத்து, ராமர் பச்சை, கிளிப் பச்சை பார்டர் பட்டுப் புடவை கதை எல்லாம் படிக்க வில்லை.

    இருந்தும் இந்த வரி அருமை -நொய்யரிசி கையிலிருக்க எறும்புக்கென்ன பஞ்சம்
    அங்காடி தெருவில் வந்த வசனம்- எச்சுக் கையை உதறினா நூறு காக்காய் வரும்

Leave a Reply